TNPSC Thervupettagam

மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடும் நரேந்திர நாயக்

January 25 , 2024 215 days 254 0
  • உண்மையான ஆன்மிகம், பொருள் பொதிந்த இறை நம்பிக்கை, உடலையும் உறவுகளையும் வலுவாக்கும் வழிபாடுகள் ஒருபுறம். நேர் எதிராக வேண்டாத சில மூட நம்பிக்கைகளுக்கும் மேற்கண்டவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாத மக்களைப் பயன்படுத்தி தங்கள் பிழைப்பை நடத்தும் சில போலிச் சாமியார்களால்தான் மதங்கள் மீதான அவநம்பிக்கையும் விமரிசனமும் அவ்வப்போது மேலெழுகிறது.
  • இந்த போலிச் சாமியார்களை நம்பி உயிரையும், உடைமைகளையும், நிம்மதியையும் சிலர் இழக்கும் செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் காணவும் முடிகிறது. இந்நிலையில், போலிச் சாமியார்கள், போலி அறிவியலாளர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவதையே தன் வாழ்க்கையின் முக்கியக் கடமையாகக் கொண்டு செயல்பட்டுவருகிறார் பேராசிரியர் நரேந்திர நாயக்.
  • இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, ‘மாயமில்லை, மந்திரமில்லைநிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். ‘இந்தியப் பகுத்தறிவு கழகத்தின் தலைவராகவும் செயல்பட்டுவருகிறார். 72 வயதிலும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் பணிகளில் மிகுந்த ஆர்வத்தோடு இயங்கி வருகிறார் நரேந்திர நாயக்.
  • இந்தியாவில் மட்டுமன்றி, இந்தியர்கள் வசிக்கும் நார்வே, ஸ்வீடன், ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, நேபாளம், இலங்கை, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் இவரின் சேவை தேவைப்படுவதால், அயல்நாடுகளிலும் சேவையைத் தன் கடமையாக ஆற்றிவருகிறார். பழநியில் உள்ள ஒரு பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக நரேந்திர நாயக் வந்தபோது எடுத்த நேர்காணல்.

கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருக்கு, மக்களிடம் சென்று ‘மந்திரமா, தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தும் எண்ணம் எப்படி வந்தது

  • 1974இல் இலங்கையிலிருந்து பேராசிரியர் கோவூர் இந்தியாவுக்கு வந்து, ‘டிவைன் மிராக்கிள் எக்ஸ்போஷர்என்கிற பெயரில் போலிச் சாமியார்கள் செய்யும் மாயாஜால வித்தைகளைச் செய்து காட்டினார். அவருடைய நிகழ்ச்சிக்கு மக்களிடம் ஆதரவு அதிகமாக இருந்தது. ஆனால், அவர் இதை எப்படிச் செய்தார் என்று மக்களிடம் விளக்கம் கொடுக்கவில்லை.
  • நான் அதைச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். தனி நபருக்கு இந்த வித்தைகளைச் சொல்லிக் கொடுக்க மாட்டேன். அமைப்பாக வந்தால் கற்றுத் தருகிறேன் என்றார். ‘தக்ஷிண் கன்னடா பகுத்தறிவுக் கழகத்தை உருவாக்கினேன். கோவையைச் சேர்ந்த பிரேமானந்தாவிடம் மந்திர தந்திர வித்தைகளைக் கற்றுக்கொண்டேன்.
  • பேராசிரியர் பணியோடு, நாடு முழுவதும் சென்றுமந்திரமா, தந்திரமாநிகழ்ச்சிகளை நடத்தி, மக்களுக்கு விழிப்புணர்வைக் கொடுக்க ஆரம்பித்தேன். 2006ஆம் ஆண்டு ஆந்திராவில் புதையலுக்காக ஒரு குழந்தை நரபலி கொடுக்கப்பட்ட செய்திதான் என்னைப் பேராசிரியர் பணியிலிருந்து விலக வைத்து, முழு நேரமும் மக்கள் பணியில் ஈடுபட வைத்தது.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் மூடநம்பிக்கைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்

  • இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து மாநிலங்களிலும் மூடநம்பிக்கை களைப் பின்பற்றுபவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சில மாநிலங்களைச் சொல்ல இயலவில்லை.
  • வட இந்திய மாநிலங்களில் பின்பற்றும் மூடநம்பிக்கைகளைப் போல் தென்னிந்திய மாநிலங்களில் பின்பற்றப்படுவதில்லை. தென்னிந்திய மாநிலங்களைப் போல் வட இந்திய மாநிலங்களில் மூடநம்பிக்கை களைப் பின்பற்றப்படுவதில்லை. ஆனால், அனைவரும் மூடநம்பிக்கைகளில் மூழ்கித்தான் இருக்கிறார்கள்.

உங்கள் நிகழ்ச்சிகள் மூலம் முன்பிருந்ததைவிட மூடநம்பிக்கை களைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா

  • நான் நடத்தும் நிகழ்ச்சிகளைக் காண மக்கள் ஆர்வமாக வருவது உண்மைதான். ஆனால், அவர்களில் 80 சதவீத மக்கள் மூடநம்பிக்கைகளைக் கைவிடமாட்டார்கள். காலம் காலமாக நம்பிவரும் ஒரு விஷயத்தை மாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. நம்மால் பத்து சதவீதம் பேர் மாறினாலே நல்லதுதான். அவர்களில் சிலர் தாங்களும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பணி செய்ய வருகிறோம் என்று முன்வருகிறார்கள். நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மூடநம்பிக்கைகளை முழுவதுமாக ஒழிக்க முடியுமா

  • காலத்தால் சில மூடநம்பிக்கைகளை மக்கள் கைவிட்டாலும் புதிது புதிதாக மூடநம்பிக்கைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அதனால் எனக்கு எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கிறது. சில மூடநம்பிக்கைகள் மந்திர தந்திரத்தால் பரப்பப்படுகின்றன. சில மூடநம்பிக்கைகள் போலி அறிவியலால் பரப்பப்படுகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்புமிட் மைண்ட் ரீடிங்என்று கண்ணைக் கட்டிக்கொண்டு, கால்களால் வண்ணங்களைச் சொல்வது, கண்ணைக் கட்டிக்கொண்டு படிப்பது போன்ற செயல்கள் அதிகரித்தன.
  • அவற்றுக்கான பயிற்சி மையங்களும் தோன்றின. நாடு முழுவதும் சென்று, அவற்றுக்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபித்தேன்.இப்போது அது குறைந்திருக்கிறது. அதேபோல நான் மந்திர தந்திர வித்தைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் செயல்பட்டதன் விளைவாகவே இன்றைய போலிச் சாமியார்கள் அவற்றை அதிகம் செய்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். மூடநம்பிக்கைகளில் இருந்து மக்கள் முற்றிலுமாக வெளிவர இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்.

இந்திய அறிவியல் கூட்டமைப்புகளில் உங்களின் பங்களிப்பு எப்படி இருக்கிறது

  • 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்னை அழைத்தது. அவர்களுக்கு மந்திரமா, தந்திரமா பயிற்சிகளையும் வழங்கினேன். பிறகு அவர்களே தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளைச் செய்து வருகிறார்கள். இந்திய அறிவியல் கூட்டமைப்பின் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் என் பங்களிப்பைச் செலுத்தி வந்திருக்கிறேன்.

உங்கள் நிகழ்ச்சிகளில் அறிவியலையும் தந்திரத்தையும் எப்படித் தனித்துக் காட்டுகிறீர்கள்

  • கொதிக்கும் எண்ணெய்யில் பொரியும் அப்பளத்தை வெறுங்கையால் எடுப்பது, காற்றில் விபூதி, சங்கிலியை வரவழைப்பது போன்ற பல வித்தைகளையும் செய்வேன். கொதிக்கும் எண்ணெய்யில் அப்ப ளத்தை வெறுங்கையால் எடுப்பது அறிவியல். காற்றில் விபூதியும் சங்கிலியும் வரவழைப்பது தந்திரம்.
  • மக்களிடம் நெருங்கிச் சென்று பணி யாற்றும் உங்களுக்கு, மொழி ஒரு தடையாக இல்லையா? - எனக்கு கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்பட 9 மொழிகள் தெரியும் என்பதால், மக்களிடம் உரையாட எனக்கு எந்தத் தடையும் இருந்ததில்லை.

உங்கள் சமூகப்பணி வாழ்க்கையில் எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறீர்களா

  • கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கெளரி லங்கேஷ் போன்று என் மீதும் இரண்டு முறை தாக்குதல் நடந்து, தப்பியிருக்கிறேன். அதற்குப் பிறகு எனக்கு ஒரு பாதுகாவலர் வழங்கப்பட்டார். கடந்த ஆண்டு அது திரும்பப் பெறப்பட்டது.

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான உங்கள் நடவடிக்கைகளில் மன நிறைவு தந்த செயல் என்று எதைச் சொல்வீர்கள்

  • பக்தியும் மூடநம்பிக்கைகளையும் கொண்டிருந்த என் அம்மா, காலப்போக்கில் தன் கருத்துகளை மாற்றிக்கொண்டார். தான் இறந்த பிறகு எந்தவிதச் சடங்கு களையும் செய்ய வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார். இதை நான் முக்கியமான மாற்றமாகக் கருதுகிறேன்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories