மூன்றாவது இமை
- உன்னிப்பாகக் கவனிக்கும் ஒருவரை, ‘அவரின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது’ என்கிறோம். ஆனால், அனைத்துப் பறவைகளும் கூர்மையான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. பறவைகள் பறப்பதற்கும் இரையைக் கண்டறிவதற்கும் துல்லியமான பார்வை அவசியமானது. மிகப் பெரிய பறவையான நெருப்புக்கோழி பெரிய கண்களைக் கொண்டுள்ளது.
- இது மனிதக்கண்களைவிட இரண்டு மடங்கு பெரியது. யானையின் கண்களுடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் பெரியது. ஒரு மனிதரின் எடையைப்போல் எட்டில் ஒரு பங்கு இருக்கும் கழுகு, மனிதக் கண்ணின் அளவை ஒத்த கண்களைக் கொண்டிருக்கிறது.
- மனிதனைவிட நான்கிலிருந்து ஐந்து மடங்கு கூரிய பார்வைத் திறன் கழுகுக்கு இருக்கிறது. 5 அடி தூரத்தில் நமக்குத் தெளிவாகத் தெரிவதை 20 அடி தூரத்திலிருந்து கழுகினால் பார்க்க இயலும். அதனால்தான் பல அடி உயரத்தில் அது பறந்துகொண்டு இருந்தாலும், இரை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்து எளிதாகப் பிடித்துவிடுகிறது.
- நம் கண்களால் காண முடியாத புறஊதாக் கதிர்களையும்ம் பறவைகளால் பார்க்க முடியும். வெறும் கண்களால் பார்க்கும்போது ஒரே மாதிரி தோன்றும் பூக்கள், புறஊதா அலைநீளத்தில் பார்க்கும்போது வெவ்வேறு பகுதிகளில் வேறுபடுவதைக் காணலாம். இது பூக்களை அறிந்துகொள்ளப் பறவைகளுக்கு உதவுவதோடு, பூவின் எந்தப் பகுதியில் உணவு கிடைக்கும் என்பதையும் கண்டறிய உதவுகிறது.
- குறிப்பிட்ட புறஊதாக் கதிர்களை வெளியிடும் பழங்கள், கொட்டைகள் போன்றவற்றை எளிதில் கண்டறிய புறஊதா அலைநீளத்தில் பார்க்கும் திறன் உதவுகிறது. மரத்தில் காய்களும் பழங்களும் இருந்தாலும் பழங்கள் வெளியிடும் புறஊதாக் கதிர்கள் மூலம் அவற்றை எளிதாகப் பறவைகள் கண்டுகொள்கின்றன. தன் இரையின் நடமாட்டம் இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் இந்தப் பார்வைத் திறன் பறவைகளுக்கு உதவுகிறது.
- நீரில் வேட்டையாடும் மீன்கொத்தி, பறந்து கொண்டிருக்கும்போதே தண்ணீரில் எங்கே மீன் இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். வேகமாகச் சென்று தண்ணீருக்குள் மூழ்கும்போது கண் திறந்த நிலையிலேயே இருக்க வேண்டும். தண்ணீரில் மோதுவதால் கண்ணுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது. தண்ணீருக்குள் இறங்கி மீன் எந்த இடத்தில் இருக்கிறது, எப்படி நகர்கிறது என்று தெரிந்தால்தான் அதைப் பிடிக்க முடியும். பின்னர் மீனைத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டும்.
- ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்துக்குச் செல்லும்போது தன் நேர்க்கோட்டுப் பாதையை விட்டு விலகிச் செல்வதை ‘ஒளிவிலகல்’ என்கிறோம். கண்ணின் ஒளிவிலகலும் நீரின் ஒளிவிலகலும் ஒன்றுபோல் இருப்பதால் தண்ணீருக்குள் செல்லும்போது மனிதர்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. கண்களின் அமைப்பை மாற்றிக்கொள்வதன் மூலம், பறவைகள் இந்த ஒளிவிலகல் அளவை மாற்றி, நீரிலும் தெளிவாகப் பார்க்கின்றன.
- மனிதர்கள் போன்று அல்லாமல் பறவையின் கண்கள் மூன்றாவது இமையைக் கொண்டுள்ளன. இது கண்களைப் பாதுகாக்கவும், ஈரத்தன்மையைக் காக்கவும் உதவுகிறது. குறிப்பாகப் பறவைகள் நீந்தும்போது நீருக்குள் இருப்பவற்றைப் பார்ப்பதற்கு இமைகள் உதவுகின்றன. கண்ணாடி போட்டுக்கொண்டு மனிதர்கள் நீந்துவதுபோல், இந்த மூன்றாவது இமை பறவைகளைக் காக்கிறது. தண்ணீரில் மட்டும் அல்லாமல் வேகமாகப் பறக்கும் பறவைகளுக்கும் கண்ணைக் காப்பதற்கு இது உதவுகிறது.
- விட்டுவிட்டு ஒளிரும் அல்லது வேகமாக நகரும் ஒரு பொருளை மனிதக் கண்களால் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே பார்க்க முடியும். ஒருமுறை மறைந்து அடுத்த முறை வருவதற்கு இடையேயான தூரம் குறைந்துகொண்டே செல்லும்போது, ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அசையாமல் இருப்பதுபோல் தோன்றும். இந்தத் திறன் மனிதர்களைவிடப் பறவைகளுக்கு அதிகமாக இருக்கிறது. அதனால்தான் பறந்துகொண்டிருக்கும்போது வேகமாக அசையும் பொருள்களையும் அவற்றால் துல்லியமாகக் கண்டுகொள்ள முடிகிறது.
- பைனாகுலர் பார்வை என்பது ‘இரு கண் நோக்குப் பார்வை.’ ஒரு கண்ணால் மட்டும் பார்க்கும்போது ஒரு பொருளின் முப்பரிமாணப் பிம்பத்தை நம்மால் உணர முடியாது. ஒரே பொருளை இரண்டு கண்களாலும் பார்த்தால்தான் அதன் முப்பரிமாணத் தன்மையையும் துல்லியமான நுணுக்கங்களையும் அறியமுடியும்.
- பறவைகளின் வகைக்கு ஏற்ப கண் அமைப்பும், அவற்றின் பார்வைத் திறனும் மாறுகின்றன. வேட்டையாடும் பறவைகளுக்குத் தன் இரை எங்கே இருக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கழுகு, ஆந்தை போன்ற பறவைகள் இது போன்ற பைனாகுலர் பார்வையை அதிகமாகக் கொண்டுள்ளன.
- அதே நேரத்தில் வேட்டையாடும் பறவைகளுக்கு இரையாகி விடாமல் இருப்பதற்குச் சிறிய பறவைகள் எந்நேரமும் தங்களைச் சுற்றி ஏதாவது வருகிறதா என்பதைப் பார்க்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. அவற்றுக்குக் கண்கள் தலையின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும். அதனால் கிட்டத்தட்ட 360 டிகிரிக்கு அவற்றால் பார்க்க இயலும். ஆனால், தனித்தனி கண்களால் பார்க்க இயல்வதால் இரண்டு இரண்டு உருவங்களாகத் தெரியும். புறா, சிட்டுக்குருவி போன்ற பறவைகள் இது போன்ற கண் அமைப்புகளைக் கொண்டுள்ளன.
- இரவில் வேட்டையாடும் பறவைகளுக்குக் கண்களின் எடையுடன் உடல் எடையை ஒப்பிட்டால், பகலில் வேட்டையாடும் பறவைகளைவிடச் சற்று அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் பல வண்ணங்களைப் பிரித்து அறியக்கூடிய திறமை பகலில் வேட்டையாடும் பறவைகளுக்குத்தான் இருக்கிறது. இரவு பறவைகள் பார்வைத்திறனுடன் ஒலி, வாசனை போன்றவற்றைப் பயன்படுத்தி உணவைக் கண்டறிகின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 01 – 2025)