- “எங்கே அந்தத் தூவலைக் காணோம்?” என ம.இலெ.தங்கப்பா கேட்க, “இதோ” என்று அவர் மகள் எடுத்துவந்து தந்தார். அப்போதுதான் ‘பேனா’வின் தமிழ்ப் பெயரை முதன்முதலாகக் காதால் கேட்டேன். இடம்: புதுவை; காலம்: அக்டோபர் 1991.
- ‘தூவல்’ இன்னமும் பரவலாகவில்லை; அதற்குள் பேனாவே மறைந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது. 1827இல் கண்டுபிடிக்கப்பட்டு, 1850இல் மை ஊற்றும் பேனா பரவலானது. பேனாவின் கதை நீண்டது. விதவிதமான பேனா வரிசையில் 1947இல் பந்துமுனைப் பேனா (Ballpoint pen) பரவலானது. ஆனால், 1960 வரைகூட அது அபூர்வமான பயன்பாடுதான். இல்லையென்றால் எழுத்தாளர் கு.அழகிரிசாமி தன் நாட்குறிப்பில், ‘Changed the refill of my ballpoint pen’ (22.7.1960) என்று எழுதி வைத்திருக்க மாட்டார். என்னதான் விதவிதமாகப் பேனா வந்தாலும், சமூகம் பென்சிலை அவ்வளவு எளிதில் தொலைத்துவிடவில்லை.
பாரதியின் எழுதுகோல் எது
- இன்று அங்கீகரிக்கப்படும் ஆவணங்கள் பென்சிலால் எழுதப்படுவதில்லை. வங்கத்தில் தலைமை நீதிபதியாக இருந்த அசுதோஷ் முகர்ஜி (1864-1924) பென்சிலால் எழுதிய மத்தியஸ்த ஆவணங்கள் கொல்கத்தா தேசிய நூலகத்தில் பராமரிக்கப்படுகின்றன. அவற்றை நான் பார்த்திருக்கிறேன். அடித்தல் இல்லை; திருத்தல் இல்லை, அழித்த சுவடும் தென்படவில்லை. பேனாவைக் கொண்டு எழுதியது போன்றே தெளிவுடன் இருக்கிறது. பென்சிலில் சாதா என்றும் ‘காப்பியிங்’ என்றும் இரண்டு பெரும் பிரிவு உண்டு. நடுவில் கரித்தாள் வைத்து (வார்த்தை உபயம்: பெருஞ்சித்திரனார்) படியெடுக்கப் பயன்படுத்துவதற்கென்று ஒரு பென்சில் வகை உண்டு. அதுதான் ‘காப்பியிங்’ பென்சில். படம் வரைபவர்கள் பயன்படுத்தும் பல வண்ணப் பென்சில்கள் வேறு. 1921இல் மறைந்த பாரதியார், பேனாவைப் பயன்படுத்தினாரா என்று தெரியவில்லை. 1916இல் புதுவையில் அவருடன் பழகிய வ.ரா. அவரது தோற்றத்தை வர்ணிப்பதைப் படியுங்கள்:
- “கோட்டுப் பையில் ஒரு பெருமாள் செட்டி பென்சில் இருக்கும். பவுண்டன் பேனா அவரிடம் தரிப்பதில்லையோ என்னவோ, பவுண்டன் பேனாவில் அவர் எழுதி நான் பார்த்ததில்லை. எப்பொழுதும் பென்சில் எழுத்துதான்” (‘மகாகவி பாரதியார்’, ப. 40). பவுண்டன் பேனாவின் காப்புரிமையை இந்தியாவில் 1910இலேயே டாக்டர் ராதிகா நாத் சாகா பெற்றுவிட்டிருந்தார். வ.ரா. தான் சரியாகக் கவனிக்கவில்லையோ என்னவோ! குயில் பாட்டில் கடைசியாகக் கனவிலிருந்து நினைவுக்குத் திரும்பிய கவிஞர் விழி திறந்து பார்க்கிறார். அவரைச் சூழ்ந்திருந்தவை: “பண்டைச் சுவடி, எழுதுகோல், பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் வரிசை”. இவ்வரிசையில் ஒன்றாகச் சொல்லப்படும் எழுதுகோல் பேனாவா, பென்சிலா? அதேபோல, ‘கண்ணன் என் சீட’னில் கோபித்துக்கொண்டு சென்ற சீடன், “ஒரு கணத்தில் எங்கிருந்தோ நல் எழுதுகோல் கொணர்ந்தான்’’ என்று எழுதுகிறார். அங்கேயும் அது பென்சிலா, பேனாவா என்று அறிய முடியவில்லை. “எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்” (‘பாரதி அறுபத்தாறு’) என்ற பிரகடனத்திலும் அது பேனாவா, பென்சிலா என்று பிரித்தறிய இயலவில்லை.
பயணத்தில் பென்சில்
- “நிரூப நேயர்கள் அன்புகூர்ந்து இனி வரையும் கட்டுரைகள் மிகச் சுருக்கித் தெளிவாக இங்கியில் எழுதி அனுப்பவும்” என 1926இல் பெரியார் கேட்டுக்கொண்டார் (‘குடிஅரசு’, 9 மே 1926). இங்கியை, அதாவது மையைத் தயாரித்தது சீனாக்காரர் டியன். எனினும் அவர் ‘இந்தியா இங்க்’ என்று பெயரிட்டாராம். அதைத்தான் இங்கி (Ink) என்று பெரியார் குறிப்பிடுகிறார் இங்கே. 1932 ரஷ்யச் சுற்றுப்பயணத்தில் பெரியாருடன் சென்ற எஸ்.ராமநாதன் பென்சிலைப் பயன்படுத்தியுள்ளார். இருவரும் வெளிநாட்டில் இருந்தபோது எஸ்.ராமநாதன் சில பொருள்களைக் கேட்டுப் பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
- அதில், “கைப்பையில், பிரஷ், பேஸ்ட், சவரம் பண்ணிக்கொள்ள கத்திப் பெட்டி, சோப்பு, கடிதம் எழுத காகிதம், கவர், பென்சில், ஸ்டாம்ப் அனுப்ப வேண்டுகிறேன். அவ்விடமுள்ள என் புத்தகத்தில் பெர்னார்ட் ரஸ்ஸல் அனுப்புவது நலம்.” வெளிநாடுகளில் தனியே பயணிக்கும் அளவுக்குச் செல்வ வளமுள்ள ஒருவர், 1932இல் பென்சிலைப் பயன்படுத்தியுள்ளது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மை ஊற்றும் பேனாவை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியாது என்று என் இளமையில் கிராமத்தில் பராபரியாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். உண்மையில், இப்போது அப்படி இல்லை. எனினும் இவர்கள் பயணித்தது விமானத்தில் அல்ல, கப்பலில்தான்.
புதுமைப்பித்தனும் பென்சிலும்
- 1948 ஜூன் மாதம் புதுமைப்பித்தன் எலும்புருக்கி நோயால் காலமானார். “பூனாவைவிட்டுப் புறப் படுமுன்பே புதுமைப்பித்தன் முக்கால்வாசி காலமாகிவிட்டார். அங்கு இருக்கும்போது அவர் பேனா பிடித்து எழுதுவதற்குக்கூட வலுவின்றிப் பென்சிலால் எழுதிக்கொண்டிருந்தாராம்” என்று நண்பர்கள் சொன்னதை, கு.அழகிரிசாமி வழிமொழிகிறார். “இனி நாம் புதுமைப்பித்தனைப் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. கைகள் பென்சில் குச்சிபோல மெலிந்து வற்றியிருக்கின்றன. ஆள் எலும்புக் கூடாக இருக்கிறார்” என்று ஒரு பதிப்பாளர் புதுமைப்பித்தனைப் பற்றி கு.அழகிரிசாமியிடம் கூறியுள்ளார். பென்சில் குச்சி உவமையாகப் பயன்படுகிறது என்றால், அந்த அளவுக்குப் பரவலான பார்வையில் பென்சில் இருந்திருக்கிறது.
- “காஸ் லைட்டுக்குப் பதிலாகக் குத்துவிளக்கும், கடுதாசிக்குப் பதிலாக ஓலையும், பவுண்டன் பேனாவுக்குப் பதிலாக நாணல் தட்டுப் பேனாவும்” போன்ற பழைய கருவிகளை நவீன காலத்தில் பயன்படுத்த முடியுமா என்று பெரியார் கேட்டார் (‘குடிஅரசு’, 11.11.1934). நாணல் பேனா, கிறிஸ்து பிறப்பதற்கு முன் பயன்பட்டது. நாணல் தண்டு, சிறு மூங்கில் குச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி மையைத் தொட்டுத் தொட்டு எழுதும் வகையில் அமைந்தவை அவை. இப்போது கணினியில் தட்டச்சு செய்யும் முறை பரவலாகிவிட்டது. அதுவும் பழசாகி ‘குரலில் இருந்து பிரதி’ (Voice to text) என்ற நிலையில் வந்து நிற்கிறது எழுதுதலின் வரலாறு. மூளையின் நாக்கு என வர்ணிக்கப்பட்ட பேனா போய், நாக்கே மூளையின் நாக்காகிவிட்டது. ‘கையெழுத்து பழகு’, ‘கையெழுத்துதான் தலையெழுத்து’ என்பன பாட்டிகளின் பழைய உபதேசங்களாகிவிட்டன. ஒரு காலத்தின் வேலையை அக்காலத்தின் கருவியைக் கொண்டு செய்யாத சமூகம் தேங்கிவிடும் என்பது ஒரு ஜெர்மானியப் பழமொழி. பென்சிலிலிருந்து பேனாவுக்குத் தமிழ்ச் சமூகம் மாறிய காலம் பற்றி எழுதும்போது, இந்தக் குறிப்புகள் பயன்படலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 12 – 2023)