- மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, மார்ச் 1-ஆம் தேதி முதல் 60 வயதிற்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
- இதுவரை இந்தியாவில் 1,23,66,633 முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல்கட்ட, இரண்டாவது கட்ட தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குப் பின்விளைவுகள் இல்லை என்பது வரவேற்புக்குரிய செய்தி.
- அங்கொன்றும் இங்கொன்றுமாக சில எதிர்வினைகள் காணப்படுவதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. எந்தவொரு மருந்தோ, தடுப்பூசியோ அனைவருக்குமே ஒவ்வாமை இல்லாததாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யும்.
- உலகிலுள்ள வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட, தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும், தடுப்பூசித் திட்டத்தை நடைமுறைப்படுத்து வதிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்பதை உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளே வியப்புடன் பார்க்கின்றன.
- அண்டை நாடுகளுக்கும், தடுப்பூசி தேவைப்படும் வளர்ச்சி பெறும் நாடுகளுக்கும் நம்மால் உதவ முடிகிறது என்பது அதைவிடப் பெருமிதத்துக்குரிய செயல்.
- ஒருபுறம் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றாலும், இன்னொருபுறம் செயல்படுத்தப்படும் வேகம் குறைவாக இருக்கிறது. இரண்டாவது அலை கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்குகிறதோ என்கிற அச்சத்தை சில மாநிலங்கள் ஏற்படுத்துகின்றன.
- உலகிலுள்ள பல நாடுகளில் கொவைட் 19 தீநுண்மியின் புதிய அவதாரங்கள் தென்படுகின்றன என்கிற செய்தியின் பின்னணியில், தற்போது காணப்படும் நோய்த்தொற்று அதிகரிப்பு மிகப் பெரிய அச்சுறுத்தல்.
- செப்டம்பர் 16, 2020-இல் கொவைட் 19 நோய்த்தொற்றின் உச்சகட்டம் எட்டப்பட்டது. அன்று 98,000 புதிய நோயாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து, கடந்த வாரம் 12,000-ஐ எட்டியது. இப்போது மீண்டும் தினசரி பாதிப்பு அகில இந்திய அளவில் அதிகரித்து வருகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்தி.
- மகாராஷ்டிரம், பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த வாரம் முதல் கொவைட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- கேரளத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த வாரம் சற்று குறைந்திருக்கிறது என்பது சிறியதொரு ஆறுதல். தேசிய அளவில் கேரளத்தின் பங்கு ஏறத்தாழ 50% தினசரி பாதிப்பாக இருந்ததிலிருந்து, கடந்த வாரம் 33%-ஆகக் குறைந்திருக்கிறது.
- பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தேசிய அளவிலான தினசரி சராசரி பாதிப்பு 11,000-ஆக இருந்தது, கடந்த வாரம் 12,900-ஆக அதிகரித்திருக்கிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் மகாராஷ்டிரம்.
- கடந்த மூன்று வாரங்களாக மகாராஷ்டிரத்தில் சராசரி பாதிப்பு தினசரி 3,000-க்கும் கீழே இருந்தது போய், கடந்த வாரம் அதாவது பிப்ரவரி 21-ஆம் தேதி 7,000-ஆக அதிகரித்திருக்கிறது.
- மகாராஷ்டிரம் மீண்டும் தேசிய அளவில் மிக அதிகமான பாதிப்பை எதிர்கொள்ளும் மாநிலமாக மாறியிருக்கிறது.
- பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் எண்ணிக்கை அளவில் கொவைட் 19 தினசரி பாதிப்பு அதிகமில்லை என்றாலும், விகிதாச்சார அளவில் பார்த்தால் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. அந்த மாநிலங்களில் இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பை அந்த அதிகரிப்பு சுட்டிக்காட்டுகிறது.
- சராசரி பாதிப்பு தினசரி குறைந்து வந்ததும், தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டதும் நோய்த்தொற்று முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்படும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது. தீபாவளியில் தொடங்கி பண்டிகை நாள்களும் கடுமையான குளிர்காலமும் நோய்த்தொற்றை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சம் பொய்த்தபோது, கொவைட் 19 விரைவிலேயே அடங்கிவிடும் என்கிற எதிர்பார்ப்பு துளிர்த்தது.
- பொது முடக்கம் அகற்றப்பட்டதும், தடைகளும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதும், எல்லைகள் திறந்துவிடப்பட்டு மாநிலங்களுக்கு இடையேயான பயணங்கள் அனுமதிக்கப்பட்டதும் நோய்த்தொற்று பாதிப்பை அதிகரித்துவிடவில்லை.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய அளவில் நடத்திய மூன்றாவது ஆய்வின்படி, டிசம்பர் 17, 2020-க்கும் - ஜனவரி 8, 2021-க்கும் இடையே இந்திய மக்கள்தொகையில் 21.5% மட்டுமே கொவைட் 19 பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தெரியவந்திருக்கிறது.
- அதன் அடிப்படையில் பார்க்கும்போது, இந்திய மக்களில் பெரும்பான்மையினர் நோய்த்தொற்றுக்கு ஆளாகவில்லை. நோய்த்தொற்று அதிகரிக்கவும் இல்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்படாதவர்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி இருந்திருக்கிறது என்பதுதான் அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
- இப்போது மீண்டும் நோய்தொற்றுப் பரவல் சில மாநிலங்களில் அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய திருப்பம்.
- பாதிக்கப்படாதவர்கள் பாதிக்கப்படலாம், பாதிக்கப்பட்டவர்களும்கூட கொவைட் 19-இன் புதிய அவதாரங்களின் தாக்குதலுக்கு ஆளாகலாம். அதனால், அதிவிரைவாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதும், தற்காப்பு நடவடிக்கைகள் சற்றும் தளராமல் கவனமாக இருப்பதும் அவசியம். மெத்தனம் விபரீதத்தில் முடியும்.
நன்றி: தினமணி (25-02-2021)