- மனித உடலில் மென்திசுக்கள் அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளன. நம் உடம்பில் உள்ள கடினமான எலும்புகளைத் தவிர, கையால் தொட்டால் மிருதுவாக உள்ள அனைத்துத் திசுக்களும் மென்திசுக்களாகும். உடலுக்கு மென்திசுக்கள் மிருதுத்தன்மையைத் தருவதோடு பாதுகாப்பையும் தருகின்றன. உதாரணத்துக்கு, நாம் தரையில் அமரும்போது எலும்புகளை நேரடியாகத் தரையோடு மோதவிடாமல் நம் புட்டத்தில் உள்ள தசைகள் தடுத்து, நாம் அமரும்போது பஞ்சு போன்று அமைந்து அமர்வதை எளிதாக்குகின்றது.
- அதேபோல் நாற்காலியில் அமர்ந்து கைகளைப் பக்கவாட்டில் வைக்கும்போது முன் கைத்தசைகள் மிருதுத்தன்மையைத் தந்து, இருக்கையில் நீண்ட நேரம் கையை நீட்டி வைத்திருப்பதை, எளிதாக்கிக் கொடுக்கின்றன. திரையரங்குகளில் மூன்று மணி நேரம் அமர்ந்து படம் பார்கும்போது நமக்கு நெருடல் ஏற்படாத சௌகரியத்தை இந்த மென்திசுக்கள் கொடுக்கின்றன.
காயங்களைத் தடுக்கும்
- நம் உடம்பில் பல்வேறு மிருதுவான திசுக்கள் உள்ளன. உடல் இயக்கங்களில் ஈடுபடும் தசை, உடலைப் பாதுகாக்கும் தோல் பகுதி, அதற்குக் கீழ் உள்ள மென்மையான சவ்வுப் படலம், இரண்டு மூட்டுகளுக்கு இடையே உள்ள சவ்வு அதாவது எலும்புகளின் இயக்கங்களை முறைப்படுத்தி மூட்டுகளைக் சரியாக இயங்க வைக்கும் சவ்வு (லிகமென்ட்), தசைகளை எலும்புகளோடு இணைக்கும் தசை நாண்கள், நரம்புகள், ரத்தக் குழாய்கள், கொழுப்புப் படலங்கள் என மிருதுவான திசுக்கள் நிறைய உள்ளன. இந்த மிருதுவான திசுக்கள் பல நேரம் நம்மைப் பாதுகாப்பதோடு உராய்வால் ஏற்படும் காயங்களைத் தடுக்கிறது. நாம் சில நேரம் உடம்பின் நீர்த்தன்மையைச் சமநிலையில் வைக்கத் தவறும்போதும் இந்த மிருதுவான திசுக்களில் காயங்கள் ஏற்படுகின்றன.
- பொதுவாக இந்தக் காயங்கள் நரம்பைக் கடினமாகத் தாக்கிப் பெரும் பாதிப்பை உண்டாக்குவதில்லை. இருப்பினும் உள்காயங்கள் சில நேரம் கடுமையான காயங்களை ஏற்படுத்தி கடுமையான வலியை உண்டாக்கும்போது, மருத்துவ உதவி தேவைப்படலாம். உதாரணமாகத் தசைகளில் ஏற்படும் சிறு காயங்கள் (ஸ்ட்ரெயின்) ஒரே தசையில் மீண்டும் மீண்டும் ஏற்படும்போது தசை நாண் அல்லது தசைகள் சிறிய அளவில் கிழிந்து பின்தொடையில் கடுமையான வலியும் நடக்கும்போது சிரமமும் ஏற்படலாம். அதேபோல் நாம் தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கும் பணிகளை இடைவெளியோ ஓய்வோ இல்லாமல் செய்யும்போது குதிகால்களில் உள்ள மிருதுவான சவ்வுப் படலத்தில் காயம் ஏற்பட்டு நடப்பதில் சிரமம் ஏற்படலாம். இதை ஆங்கிலத்தில் பிளான்டர் பாஸ்சிட்டிஸ் (plantar fasciitis) என்பார்கள்.
ஓய்வு அவசியம்
- உடம்பில் உள்ள இந்த மிருதுவான திசுக்கள் தொடர்ந்து ஓய்வில்லாமல் இயங்கும்போது திசுக்களில் ஏற்படும் சிறுசிறு காயங்களுக்குப் போதிய அளவு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். ஓய்வு எடுக்கத் தவறினால் காயத்தின் தீவிரம் அதிகமாகும். இருசக்கர வாகனத்தில் தினந் தோறும் பயணம் மேற்கொள்ளும் ஒருவருக்கு நாள் செல்லச் செல்ல வலியின் தீவிரம் அதிகமாகும். இதே தீவிரத்துடன் அவர் மருத்துவரைக் காணும்போது மருந்து கொடுத்து குணப்படுத்தும் நிலையிலிருந்து அறுவைசிகிச்சை செய்யும் நிலைக்குக் காயத்தின் தீவிரம் அதிகரித்திருக்கலாம். தொடர்ந்து மருத்துவச் செலவு, நேர விரயம், வலி, கடுமையான மன உளைச்சல் போன்றவை ஏற்படக்கூடும்.
- காயங்கள், திசுக்களில் ஏற்படுத்தும் அழற்சி (inflammation), கடுமையான வலி ஆகியவை உடல் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுவாக இந்தப் பாதிப்புகள் விளையாட்டு வீரர்களை அதிகமாகப் பாதித்த காலம்போய் தற்போது நடுத்தர வயது ஆண், பெண் என்று இருபாலரையும் தாக்குகின்றன. குறிப்பாகக் கடினமான வீட்டு வேலைகளைச் செய்யும் பெண்கள் நீண்ட நேரம் நின்றபடியே வேலை செய்வதால் முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, தோள் சப்பை வலி, முழங்கை மூட்டு வலி, கால் மூட்டு வலி, குதிக்கால் வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
திசுக்களில் ஏற்படும் காயங்களைச் சரிசெய்வது எப்படி
- மருத்துவரின் ஆலோசனைப்படி போதிய அளவு ஓய்வு, நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வலி தீவிரமாக இருந்தால் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்துக்கொள்ளலாம்.
- முடிந்தவரை வலி மாத்திரையைத் தவிர்த்து, பாதிக்கப்பட்ட பகுதியில் களிம்பு அல்லது வலி குறைக்கும் ஸ்பிரேக்களைப் பயன்படுத்தலாம்.
- மருத்துவர் பரிந்துரைப்படி பிசியோதெரபி சிகிச்சை தேவைப்பட்டால் மூன்று அல்லது இரண்டு நாள்கள் எடுத்துக்கொள்ளலாம்.
- காயத்தின் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து ஐஸ் கட்டி ஒத்தடம் அல்லது சுடு நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
- வலி குறைக்கும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
- மீண்டும் காயம் ஏற்படாமல் இருப்பதற்கான ஆலோசனையை பிசியோதெரபி மருத்துவரிடம் பெறலாம்.
- நீண்ட நேர உறக்கம் அவசியம்.
- வேலை கூடுதலாக இருக்கும்போது தேவையான அளவுக்கு நீர் அருந்த வேண்டும்.
- வேலையில் முழுவதுமாக மூழ்கிவிடாமல் சிறு சிறு இடைவெளியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 11 - 2023)