TNPSC Thervupettagam

மேட்டிமை குடிகளுக்கு மட்டுமானதா இடஒதுக்கீடு?

September 8 , 2024 130 days 161 0

மேட்டிமை குடிகளுக்கு மட்டுமானதா இடஒதுக்கீடு?

  • கலியன் தாழ்த்தப்பட்டவர். தொழில் வெட்டியான் வேலை. சாவின்போது பறை அடித்தல். பாடை கட்டுதல். பண்ணை வேலை செய்தல். பாவாடை, கலியன் மகன். அதே வேலைகளைத் தொடர்ந்தார். மூக்குத்தி, கலியன் பெயரன். மூன்றாவது தலைமுறை. ஆரம்பக் கல்வி முடித்தார். மீண்டும் அதே வேலைகளைத் தொடர்கிறார். என் கிராமத்தில் ஊரும் சேரியும் பிரிந்துகிடக்கின்றது. தனித்தனி கோயில்கள், மயானங்கள், குடிநீர் தொட்டிகள், வாழ்விடங்கள்.
  • கார்த்திக் தாழ்த்தப்பட்டவர். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். விவேகானந்தன், கார்த்திக் மகன். இந்திய ஆட்சிப் பணியில் அமர்ந்தார். செந்தில்குமார், கார்த்திக் பெயரன், மருத்துவம் படித்துக்கொண்டுள்ளார். சென்னையில் வசிக்கின்றனர். இங்கே ஊரும் சேரியும் பிரிந்துகிடக்கவில்லை. பொதுக் கோயில், மயானங்கள், குடிநீர் வசதிகள், வாழ்விடங்கள்.
  • அம்பேத்கர் கூறியதுபோல் கிராமங்கள் இன்றும் அறியாமையிலும் பழம்பெருமையிலும் சாதியத்தின் குகைகளாக உள்ளன. நகர்புறங்களில் கல்விக்கும் அரசு வேலைக்கும் தொழில்முனைவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இங்கு கிடைக்கும் சமூக மரியாதை கிராமங்களில் இல்லை. இந்த வேறுபாடுகள் மற்ற சாதிகளுக்கும் பொருந்தும். இந்த வேறுபாட்டினைக் களைய வேண்டியது அரசின் கடமையாகும்.
  • சான்றுகளின் அடிப்படையில் ஒரே சாதிக்குள் பின்தங்கியவர்களும் ஒது(டு)க்கப்பட்டவர்களும் உள்ளனர். இன்று ஒரே சாதிக்குள், வசதியானவர்களும் நகரவாசிகளும் (மேட்டிமை குடிகள்) அந்தந்தச் சாதிக்கான இடஒதுக்கீட்டுப் பயன்களைத் தொடர்ந்து பெறுகின்றனர். இது பட்டியலினத்திற்கு மட்டுமல்லாமல், மற்ற இடைநிலை சாதிக்குள்ளேயும் இந்தச் சுரண்டல் நடைபெறுகின்றது.
  • கலியன் - கார்த்திக், இரண்டு குடும்பங்களும் பட்டியலினத்தவர். இன்றைய இடஒதுக்கீடு முறையில் கலியன் சந்ததியினருக்கு எப்பொழுது கல்வியும் வேலை வாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் சமூக சமமதிப்பும் கிடைக்கும்?

துணை வகைப்பாடு

  • ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினை ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரித்து உள்இடஒதுக்கீட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இது தலித்துகளைப் பிரித்தாலும் சூழ்ச்சி என்று, உச்ச நீதிமன்றத்தில் (சின்னையா) வழக்கு தொடரப்பட்டது. இதற்கு முன்பு பஞ்சாப், ஹரியாணாவில் 1975இல் சமர், வால்மீகி, மசாபி தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு வழங்கப்பட்ட உள் இடஒதுக்கீடும் விசாரணையில் இருந்துவந்தது. இதற்கான சான்றுகளை எல்லாம் ஆய்வுசெய்து, பட்டியல் இனத்தவரை துணை வகைப்படுத்தலாம் (Sub-categorization) என்று தற்போது உச்ச நீதிமன்றம் 2024 ஆகஸ்ட் 1இல் தீர்ப்பளித்தது. இதனை ஆதரித்தும் எதிர்த்தும் பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் விவாதிக்கின்றன.
  • இந்திய அரசமைப்புச் சட்டம் 14வது பிரிவின்படி, பிற்படுத்தப்பட்டோர் (Backward Classes) வகுப்பில் பட்டியலினத்தோர், பழங்குடியினர், மற்ற பின்தங்கிய வகுப்பினர் (Other Backward Classes) என்ற துணை வகைபாடு உள்ளது. இந்தப் பிரிவின்படி, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பது சமநிலையில் இருப்பவர்களுக்குப் பொருந்தும். ‘சட்டத்தின் சம பாதுகாப்பு’ என்பது சட்டங்கள் சமமானவர்களிடையே சமமாக நிர்வகிக்கப்பட வேண்டும்.
  • இங்கு ஒரே பிரிவில் / குழுவில் கல்வி, சமூக ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ளவர்களைச் சரியான முறையில் வகைப்படுத்தும் அதிகாரம் அரசிற்கு உள்ளது. இதன் அடிப்படையில் துணை வகைப்பாடு என்பது சமத்துவத்தின் அம்சமாகும். எனவே, அரசு சமமற்றவர்களைத் துணை வகைப்படுத்தலாம். இங்கு ‘சம வாய்ப்பு’ முக்கியத்துவம் பெறுகின்றது என்று தலைமை நீதிபதி இந்தத் தீர்ப்பில் கூறியுள்ளார்கள்.

பட்டியலினம்

  • பட்டியலினத்தவர்கள் ‘ஒரே மாதிரியான குழு’வைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகக் குடியரசுத் தலைவரின் பட்டியலில் (1950) வைக்கப்பட்டுள்ளதாக சின்னையா தீர்ப்பில் கூறப்பட்டது. அந்தப் பட்டியலில் வைக்கப்பட்ட காரணத்திற்காக மட்டுமே, அவர்கள் ஒரே மாதிரியான குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கருத முடியாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
  • சான்றுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் பட்டியல் இனத்தவர்கள் பன்முகத்தன்மை கொண்ட குழுவைச் சேர்ந்தவர்கள். இக்குழுவில் சிலர் பின்தங்கியும் பலர் ஒடுக்கப்பட்டும் சிலர் முன்னேறியும் உள்ளார்கள். எனவே, இந்தத் தீர்ப்பின் முக்கிய கேள்வி பட்டியல் இனத்தவர் ‘ஒரே மாதிரியான குழு’வைச் சேர்ந்தவர்களா? இல்லையா? என்பது மட்டுமே. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 341இன்படி, பட்டியல் இனத்தவர் ‘ஒரே மாதிரியான குழுவைச் சேர்ந்தவர்’ என்றாலும் அதில் பல்வேறு இனங்களும் குழுக்களும் வகுப்புகளும் சமூகங்களும் உள்ளன.
  • “பட்டியலினம் என்பது பல வகைப்பட்ட சாதிகளையும் இனங்களையும் பழங்குடியினையும் சமூகங்களையும் கொண்டது. இது இந்து சாதிகளை மட்டும் உள்ளடக்கியது இல்லை” என்று முன்னாள் நீதிபதி கிருஷ்ண ஐயர் கூறியுள்ளார்.
  • பட்டியலினம் கல்வி, வேலைவாய்ப்புகளில் நேர்மறை பயன்களைப் பெறுவதற்காக இந்திய அரசமைப்புச் சட்டம் 341வது பிரிவில் குடியரசுத் தலைவரால் வைக்கப்பட்டது. ஆனால், அது ‘ஒரே மாதிரியான குழு’ என்றோ அதனைத் துணை வகைப்படுத்த முடியாது என்றோ கூறவில்லை. எனவே பட்டியலினத்தில், ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்போது துணை வகைப்படுத்தலாம். மேலும் துணை வகைப்படுத்துதல் என்பது ஒரு சாதியை, குடியரசுத் தலைவர் பட்டியலில் (சட்டப் பிரிவு 342) கொண்டுவருவதற்கோ அல்லது வெளியேற்றுவதற்கான வழிமுறை இல்லை என்கிறது இத்தீர்ப்பு.
  • பட்டியலினத்தில் சாதியை மாற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்தில் மட்டுமே உள்ளது. மேலும் பட்டியலினத்தவரில் பின்தங்கியர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது குடியரசுத் தலைவரின் பட்டியலை மாற்றுவதாக அமையாது. மேலும் இத்தீர்ப்பின்படி, மாநிலங்கள் பட்டியலினத்தைத் துணை வகைப்படுத்தலாம்.

இந்தத் தீர்ப்பு சொல்வது என்ன?

  • இந்தத் தீர்ப்பின்படி, பட்டியலினம் ‘ஒரே மாதிரியான குழு’ இல்லை என்று முடிவாகியுள்ளது. எனவே, அரமைப்புச் சட்டம் பிரிவு 15(4)படி, சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம். எனவே, துணை வகைப்படுத்துதல் இதன் அடிப்படையில் அமைகிறது. ஒரே குழுக்கள் துணை வகைப்படுத்தும்போது பின்தங்கிய நிலையையும் போதிய பிரதிநிதித்துவமின்மையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இதற்குச் சான்றுகள் அவசியம் தேவை.
  • சமூகத்தில் பின்தங்கிய குழுவிற்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இதன் மூலம் பட்டியலினத்திற்குள்ளேயே முன்னுரிமை வழங்கலாம். ஒருவேளை அதற்குத் தகுதியானவர்கள் இல்லை என்றால், அந்த இடங்கள் பட்டியலினத்திற்குள்ளேயே நிரப்பப்பட வேண்டும். இதன் மூலம் அனைவருக்கும் சம நீதி வழங்க முடியும். அதேவேளையில், பட்டியலினத்திற்கு க்ரீமிலேயர் கோட்பாடு தேவை என்று எங்கும் கூறவில்லை.
  • இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் வர்ணங்களும் பின் சாதிகளும் தோற்றுவிக்கப்பட்டன. அந்தச் சாதிகள் படிநிலை அமைப்புகளாக உள்ளன. முற்பட்ட சாதி, தாழ்ந்த சாதி என்றும் ஒன்றின் கீழ் ஒன்றாக உள்ளது. இது சமூகத்தில் படிநிலை சமத்துவமின்மையை (Graded inequality) உருவாக்கியுள்ளது. இது நிரந்தர சமூக சமத்துவமின்மைக்கு வழிசெய்துள்ளது.
  • இந்தப் படிநிலை பிரிவு என்பது இன்று ஒவ்வொரு சாதிக்குள்ளும் வளர்ந்துவருகின்றது. ஒரே சாதிக்குள் ஒரே சமூக மதிப்பும் சமமான கல்வியும் வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் இல்லை. ஒவ்வொரு சாதிக்குள்ளேயும் பல உள்பிரிவுகள் உள்ளன. இன்று பல திருமணங்கள் அந்த உள்பிரிவுகளுக்கு இடையே மட்டும் நடைபெறுகின்றது. “ஒரே சாதி / இனக்குழுக்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்கள் (Endogamous marriage) சாதியின் கட்டமைப்பை வலுப்படுத்தியது” என்றார் அம்பேத்கர். அந்த முறை ஒவ்வொரு சாதியின் உள்பிரிவுகளுக்கு இடையே நடைபெறுகின்றன. இன்று கலியன் - கார்த்திக் குடும்பங்களும் ஒன்றாக மதிக்கப்படுவதில்லை.
  • இது இந்தியாவில் மட்டுமே உள்ள சமூக நோயாகும். மற்ற நாடுகளில், சமநிலையற்ற சமூகங்களில் ஒருவருக்கு நன்மையும் மற்றவர்களுக்கு தீமையும் இருப்பதால் (வெள்ளை-கருப்பினப் பாகுபாடுகள்), ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஒன்றுசேர்ந்து அதனை எதிர்த்துப் போராடி வெற்றிபெறுகின்றனர். இதில் சுரண்டுபவரும் சுரண்டப்படுபவரும் வெவ்வேறு இனத்தினர். ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு சாதி அமைப்பும் ஒருவரைச் சுரண்டுவதற்கும் மற்றொருவரால் சுரண்டப்படுவதற்கும் வாய்ப்பளித்துள்ளது. இது தனக்கு மேலேயும் தனக்கு கீழேயும் ஒவ்வொரு சாதியை உருவாக்கியுள்ளது. இந்தப் படிநிலை சாதி அமைப்புகளில், அனைத்து சாதிகளுக்கும் நன்மையும் தீமையும் இரண்டற கலந்திருப்பதால் இடைநிலை சாதிகள் அதனை முழுமையாக எதிர்ப்பதில்லை. இது சமூகத்தை தொடர்ந்து பிரித்துவைத்துள்ளது.

ஒவ்வொரு சாதிக்குள்ளும் மேட்டிமை

  • பட்டியலினத்தவர், இடைநிலை சாதிகள், முன்னேறிய வகுப்பினர் என்று பொதுவாக கண்டறியப்பட்டாலும் அந்தந்தச் சாதிக்குள் சமமான சமூக மதிப்பும், கல்வி அரசு வேலைவாய்ப்புகளில் சமபங்கீடும் இல்லை. இதனால் ஒவ்வொரு சாதிக்குள்ளும் ஒரு மேட்டிமை பிரிவும் அதே சாதிக்குள் ஒரு கீழ்நிலை பிரிவும் உள்ளது. இந்தப் படிநிலை படுத்தப்பட்ட சாதிய சமூக அமைப்பு மேலே உள்ளவரை உயர்வாகவும் கீழே உள்ளவரை தாழ்வாகவும் வைத்துள்ளது.
  • எனவே, நேர்மையான சமபங்கு அனைவருக்கும் வேண்டும். சமத்துவமும் (Equality) சமபங்கும் (Equity) வெவ்வேறானவை. பட்டியலினத்தவரை மற்ற வகுப்பினருடன் ஒப்பிட்டு ஒரே குழுவாக கருதியது சமத்துவக் கோட்பாடாகும். அந்த ஒரே குழுக்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைய முற்படுவது சமபங்கு கோட்பாடாகும்.
  • சமத்துவத்திற்கும் சமபங்கிற்கும் உள்ள வேறுபாட்டினை அறிவது முக்கியமானதாகும். அனைவருக்கும் சம வாய்ப்புகளையும் வளங்களையும் வழங்குவது சமத்துவம். தனிநபர் அல்லது குழுவின் நிலையைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான வாய்ப்புகளையும் வளங்களையும் பாரபட்சமின்றி பகிர்ந்தளிப்பது சமபங்காகும். சமபங்கு என்பது நேர்மை, நீதியின் அடிப்படையில் உருவான கருத்தியலாகும். சமத்துவம் என்பது ஆண், பெண், குழந்தைகள், பெரியோர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான / ஒரே மாதிரியான காலணியை வழங்குவதாகும். சமபங்கு என்பது அவரவர்களின் கால்களின் அளவிற்கேற்ப காலணி வழங்குவதாகும்.
  • சமபங்கு ஏற்றத்தாழ்வுகளைத் துல்லியமாக கருத்தில்கொண்டு, அதற்கான தடைகளை நிவர்த்திசெய்து, சம வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வரலாற்றுக் குறைபாடுகளை சரிசெய்வதற்கும் பன்முகத்தன்மையினை அதிகரிக்கவும் பிறப்பின் அடிப்படையில் பிரிந்துகிடக்கும் சமூகத்தை மேலே கொணர்வதற்கும் நீதி நேர்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோட்பாடாகும். சமத்துவம் என்பது சமமான தொடக்கப் புள்ளியாக இவை அனைத்தையும் கருதுகிறது.

சமத்துவமும் சமபங்கீடும்

  • இதுவரை வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு, வரலாற்றுரீதியாக, கல்வியிலும் சமூகத்திலும் பின்தங்கியவர்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் வழங்கப்பட்டதாகும். ஆனால், இந்த நூற்றாண்டில் அவர்களுக்கு உள்ளேயே, அதாவது ஒரே சாதிக்குள்ளேயே கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மாபெரும் ஏற்றத்தாழ்வுகள் உண்டாக்கப்பட்டுள்ளன. அந்த ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறிந்து சமன்செய்துபார்க்க வேண்டியது அரசின் கடமையாகும்.
  • இன்று உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களிலும் இந்திய, மாநில அரசின் உயர்பதவிகளிலும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டுக்காக போராடுவது என்பது சமத்துவத்திற்கு மட்டுமல்ல. சமபங்கீடுக்காகவும்தான். இருப்பினும் இன்னும் சில துறைகளில் சமபங்கீட்டினை இந்நாடு அனைவருக்கும் வழங்கவில்லை அதற்கான போராட்டமும் தொடர்கின்றது.
  • அம்பேத்கரின் கூற்றுப்படி ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பது ஒரு மதிப்பீட்டினை வழங்கலாம். இது சமத்துவத்திற்கானது. அதுவே, சமூக கல்வி, பொருளாதாரத்தில் ஒருவருக்கு ஒரே மதிப்பு என்று இருப்பதில்லை. இது எவ்வளவு நாள் தொடரும் என்றும் தெரியவில்லை. இதற்காக சமபங்கீடு அவசியம்.
  • வரலாற்று ஏற்றத்தாழ்வுகளைச் சமன்செய்து அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சிக்காக இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இது பல்வேறு சாதிகளில் உள்ளவர்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் பெறுவதற்கு வழிவகைசெய்தது. ஆனால், அது ஒவ்வொரு சாதிக்குள்ளும் உள்ளவர்களுக்குச் சமூக மதிப்பும் சமகல்வியும் வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் கிடைக்க வழிவகை செய்யவில்லை.
  • எனவே, தாழ்த்தப்பட்டோர் பிரிவில், கல்விலும் அரசு வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியர் சமூகத்துக்கு தமிழ்நாடு அரசு 3% உள்இடஒதுக்கீடு வழங்கியது. அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5% மருத்துவத்தில் இடஒதுக்கீடு வழங்கியது என்பதுவும் ஒரு துணை வகைப்பாட்டின் அடிப்படையிலேயே ஆகும்.
  • இந்தப் புரிதல் மட்டுமே சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள வேறுபாடுகளைக் களைவதற்கான வழியாகும். இல்லையெனில், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த வேறுபாடுகள் அதிகரிக்கும். குறைவதற்கான வழி இல்லை.

மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீடு

  • இன்றைய நிலையில் பல்வேறு சாதிக்களுக்குமான, சமமின்மையைச் சரிசெய்யும்போது, ஒவ்வொரு சாதிக்குள்ளேயும் உருவாகியுள்ள சமமின்மையைச் சரிசெய்ய வேண்டும். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண், பறையர் சமூக ஆணை திருமணம் செய்ய மறுத்ததால், அந்த ஆணின் பெற்றோர் அந்தப் பெண்ணைக் கொன்றனர்.
  • படிநிலை சாதி வேறுபாடுகள் ஒவ்வொரு சாதிக்குள்ளும் இருப்பதாக சந்திரன் (2012), சமூக ஆய்வாளர் கூறுகிறார். இது பிராமண சமூகத்தில் ஆரம்பித்து பிள்ளைமார், தேவர், வன்னியர், முதலியார், பட்டியலினத்தவர், பழங்குடியினர் என அனைத்து சாதியிலும் உள்ளது. எனவே, ஒவ்வொரு சாதிக்குள்ளும் விளிம்புநிலையில் உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உள்இடஒதுக்கீடு கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் வழங்க வேண்டும்.
  • இடஒதுக்கீடு ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகைக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும். அது நிர்வாக முறையில் சாத்தியமற்றதாகத் தோன்றலாம். ஆனால், கொள்கையின் அடிப்படையில் அதுவே நிரந்தர சமத்துவத்தை அடைவதற்கான வழியை உண்டாக்கும். இந்தத் துணை வகைப்படுத்துதல் (Sub-Categorization) / உள்இடஒதுக்கீடு (Sub-reservation)/ ஒருமுறை மட்டுமே இடஒதுக்கீடு (Reservation only for the first generation) / முன்னுரிமை (Prioritization) மட்டுமே விளிம்புநிலையில் இருக்கும் சாமானியனையும் மேலே கொண்டுவருவதற்கான வழிமுறையாகும். எனவேதான், இடஒதுக்கீடு என்பது 100% இருக்க வேண்டும் என்றார் பெரியார்.
  • இந்தத் தீர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் பிரிவில் ‘க்ரீமி லேய’ரை உருவாக்கும் என்று எதிர்ப்பாளர்களும் அதே பிரிவில் மிகவும் பின்தங்கியவர்களை மேலே கொண்டுவருவதற்கு வழிசெய்யும் என்று ஆதரவாளர்களும் கூறுகின்றனர். கிரீமிலேயரும், துணை வகைப்படுத்துதலும் (உள்இடஒதுக்கீடும் அல்லது முன்னுரிமையும்) ஒன்றென வாதாட முடியாது. கிரீமிலேயர் என்பது முழுவதுமாக அப்பிரிவிலிருந்து கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் பயன்பெறுவதைத் தடைசெய்துவிடுகிறது. துணை வகைப்படுத்துதல் அவ்வாறு செய்வதில்லை. மேலும் பட்டியல் இனத்தவருக்கு கிரீமிலேயர் என்பது ‘கொள்கை முடிவு’ ஆக ஏற்காது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

வரவேற்புக்குரிய தீர்ப்பு

  • இடஒதுக்கீடு என்பது சமபங்கீட்டின் அடிப்படையில் உருவான கருத்தியலாகும். அதன் அடிப்படையிலேயே உலகெங்கும் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கு நேர்மறையான பாகுபாடுகளும் இடஒதுக்கீடுகளும் வழங்கப்படுகின்றன. நோய்களுக்கு ஏற்ப மருந்தளித்தல் / சிகிச்சை அளித்தல் என்பது சமபங்காகும். அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்தினை / சிகிச்சையிணை வழங்க முடியாது.
  • உண்மையான சமூகநீதி என்பது சமபங்கீட்டின் மூலமே அமையும். இது வீட்டில் மெலிந்த குழந்தைக்கு வழங்கப்படும் அதிக உணவிலிருந்து, நாட்டின் பல்வேறு வளங்களையும் அதிகாரத்தையும் வேலைவாய்ப்புகளையும் சமமாகப் பங்கிடுவதில், தன் கருத்தியலை முன்வைக்கிறது. அம்பேத்கரின் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது சாதிகளுக்கு இடையே உள்ள படிநிலை வேறுபாடுகளைப் பற்றிப் பேசியது. ஆனால், இன்றைய நிலையில் ஒவ்வொரு சாதிக்குள்ளும் இந்தப் படிநிலை வேறுபாடுகள் உருவாகியுள்ளன.
  • இந்த வகைப்படுத்தப்பட்ட சமமின்மையைக் களையாமல், சமத்துவம் தானாக அமையும் என்பது, ‘கடல் வற்றி கொக்கு கருவாடு திங்க ஆசைப்பட்டது’ போன்றதாகும். அவைகளைக் களைய வேண்டியது இன்றைய நூற்றாண்டின் கட்டாயம். இன்று ஒரே சாதிக்குள் கீழ்நிலையில் இருப்பவனை மேலே கொணர்வதற்கு தற்போது அரசிடம் எவ்விதமான வழிமுறையும் இல்லை.
  • இதன் அடிப்படையில் இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.

நன்றி: அருஞ்சொல் (08 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories