TNPSC Thervupettagam

மொபைல்போன் தயாரிப்பில் உலகின் மையமாக உருவெடுக்கும் இந்தியா

May 29 , 2023 595 days 368 0
  • ஆசிய அளவில் 2000-களின் முற்பகுதியில் மொபைல் போன்கள், இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு என அனைத்து தொழில் நடவடிக்கைகளிலும் சீனா ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், தற்போது பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மக்கள்தொகை, தேவை ஆகியவை இந்தியாவுக்கு சாதகமான அம்சங்களாக மாறியுள்ள நிலையில் தொழில் வளர்ச்சியில் இந்தியா சீனாவுக்கு சவால் விடும் அளவுக்கு உருமாற்றம் பெற்றுள்ளது.
  • உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது என்றால் அதில் முதன்மையான காரணங்களுள் ஒன்றாக மொபைல்போன் தயாரிப்பு தொழில் உள்ளது. விநியோகம் என்ற நிலையிலிருந்து மாறி தற்பேது உருவாக்கம் என்ற நிலையை நோக்கி இந்தியா முன்னேறியுள்ளது. ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் என்பதின் அடிப்படையில் சுயசார்பு இந்தியாவை அடைய ஏராளமான சலுகைகளை தொழில் துறைக்கு அரசு வழங்கி வருகிறது.
  • இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சி அடைய உலகெங்கிலும் உள்ள தொழில் நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன.
  • உள்நாட்டு உற்பத்தி, முதலீடுகள், ஏற்றுமதியை அதிகரிக்க 2022-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை (பிஎல்ஐ) திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் மூலம், மின்னணுப் பொருட்கள் உற்பத்தி திட்டங்களில் ரூ.4,700 கோடிக்கும் அதிகமான முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
  • கடந்த காலங்களில் 80% மொபைல்போன்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், இன்று 99.9% போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் மொபைல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரித்துள்ளது. 2014-க்கு முன்பாக இந்தியாவில் மொபைல்போன் தயாரிப்புக்காக 2 ஆலைகள் மட்டுமே இருந்தன. ஆனால், 2021-க்குப் பிறகு 200-க்கும் மேற்பட்ட உற்பத்தி அலகுகளை மொபைல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கியுள்ளன.
  • உலகின் முன்னணி மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் விருப்பத்திற்கு உகந்த இடமாக இந்தியா மாறியுள்ளது. சாம்சங் நிறுவனம் உலகின்மிகப்பெரிய ஆலையை இந்தியாவில் தொடங்கியதேஇதற்கு சான்று. ஆப்பிள் போன்ற மிக அதிக விலைஉடைய மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது உற்பத்தி அலகுகளை மாற்றியமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
  • ஓப்போ, விவோ, ஷாவ்மி, லாவா போன்ற விலை குறைந்த மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது ஆலைகளை இந்தியாவில் அமைத்துள்ளன.
  • சீனாவைச் சேர்ந்த ஷாவ்மி நிறுவன தலைமை அதிகாரியின் கூற்றுப்படி, இந்தியாவில் விற்கப்படும் அந்நிறுவனத்தின் மொபைல்போன்களில் 99% இந்தியாவில் தயாரிக்கப் பட்டவையாகும்.
  • இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு மொபைல்களை அசெம்பிளிங் செய்யும் வசதி மட்டுமே இருந்தது. அப்போது ஏற்றுமதி என்பது எட்டாக் கனவாகவே இருந்தது. 2015-16-ல் மொபைல் போன் ஏற்றுமதி என்பது ஏறக்குறைய பூஜ்ய நிலைக்கு அருகில்தான் இருந்தது. இந்தியாவின் வலுவான கொள்கைகள் மற்றும் உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.45 ஆயிரம் கோடியாக இருந்த மொபைல்போன் ஏற்றுமதி கடந்த 2022-23 நிதியாண்டில் ரூ.90,000 கோடியாக அதிகரித்து 2 மடங்கு வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது.
  • 2025-26-ம் ஆண்டுக்குள் மொபைல்போன் உற்பத்தியை 126 பில்லியன் டாலர் (ரூ.10 லட்சம் கோடி) அளவிற்கு அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் இந்தியா தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இங்கிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல்போன்களை பயன்படுத்துகின்றன. உலகநாடுகள் இந்தியாவை நம்பிக்கையின் அடையாளமாக பார்ப்பதற்கான சமிஞ்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
  • உள்நாட்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதற்கு மொபைல்போன் தயாரிப்பு பெரிதும் கைகொடுத்துள்ளது. குறிப்பாக, சாம்சங், பாக்ஸ்கான், ரைசிஸ் ஸ்டார், விஸ்ட்ரான், பெகட்ரான் போன்ற நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான நேரடி வேலைவாய்ப்புகளையும், 6 லட்சத்துக்கும் அதிகமான மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படுவதற்கு பிஎல்ஐ திட்டம் சிறந்த சான்றாக பார்க்கப்படுகிறது.
  • தற்போதைய நிலையில் மொபைல்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சீனா பெரும்பங்கை கொண்டுள்ளபோதிலும் உலக கண்ணோட்டத்தில் அதன் எதிர்கால செயல்பாடு என்பது நிச்சயமில்லாத நிலையில்தான் உள்ளது. ஆனால், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உட்பட பல நாடுகளில் இயங்கி வரும் முன்னணி நிறுவனங்களின் கணிப்புகள் இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி பிரகாசமாக இருக்கும் என கூறுகின்றன. இந்த வாய்ப்பை இந்தியா தவறவிடக் கூடாது.

நன்றி: தி இந்து (29 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories