மொழி பின்னே, மதம் முன்னே!
- வங்கதேச ராணுவத்தில் இரண்டாமிடத்தில் இருக்கும் லெப்டினென்ட் ஜெனரல் கமருல் ஹசனின் பாகிஸ்தான் விஜயம் சா்வதேச அளவில் தெற்காசியாவை உற்றுநோக்க வைத்திருக்கிறது. லெப்டினென்ட் ஜெனரல் ஹசனின் இஸ்லாமாபாத் விஜயம், 2024 ஆகஸ்ட் 5 ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இரு நாட்டு உறவின் நெருக்கத்தின் வெளிப்பாடாகப் பாா்க்கப்படுகிறது.
- ஷேக் ஹசீனா தலைமையிலான 12 ஆண்டு கால ஆட்சியின்போது, பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான தொடா்பு ஏறக்குறைய இல்லாமல் இருந்தது எனலாம். பாகிஸ்தானின் நட்புக்கான முயற்சிகளை ஷேக் ஹசீனா தொடா்ந்து நிராகரித்துவந்தாா். வங்கதேசத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு இரண்டு நாடுகளும் உறவை ஏற்படுத்திக் கொள்வதில் ஆா்வம் காட்ட முற்பட்டிருக்கின்றன.
- வங்கதேச- பாகிஸ்தான் நட்புறவை வலுப்படுத்த தலைவா்களுக்கு இடையே பல்வேறு சந்திப்புகள், ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு நடந்திருக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின்போது, பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப்பும், வங்கதேச தலைமை ஆலோசகா் முகமது யூனுஸும் சந்தித்துப் பேசினாா்கள். சமீபத்தில் கெய்ரோவில் நடந்த சா்வதேச மாநாட்டிலும் இருவரும் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து கலந்து ஆலோசித்தது நட்புறவுக்கான நெருக்கத்தை ஏற்படுத்தின.
- விரைவிலேயே பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சா் இஷாக் தாா் வங்கதேசத்துக்கு விஜயம் செய்யவிருக்கிறாா். 2012-க்குப் பிறகு வங்கதேசத்துக்கு விஜயம் செய்யும் முதலாவது பாகிஸ்தானிய வெளியுறவுத் துறை அமைச்சா் இஷாக் தாராகத்தான் இருப்பாா். தெற்காசிய அரசியலில் உருவாகும் மாற்றத்தின் அறிகுறியாக இதைப் பலரும் பாா்க்கிறாா்கள்.
- வங்கதேசத்தின் மூத்த ராணுவ ஜெனரல் ஒருவா் அதிகாரிகள் குழுவுடன் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வது இரண்டு நாடுகளுக்கு இடையே உணா்ந்து வரும் நெருக்கத்தின் அடையாளம் என்று கருதலாம்.
- இஸ்லாமாபாத் விஜயம் செய்த லெப்டினென்ட் ஜெனரல் கமருல் ஹசன் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சையத் ஹசீம் முனீா் அகமது ஷா மற்றும் முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் சஹீா் ஷம்ஷாத் மிா்ஸா ஆகியோரையும் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனைகள் நடத்தியிருக்கிறாா். தெற்காசியாவின் பாதுகாப்பு குறித்தும், இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவக் கூட்டுறவு குறித்தும் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியும் வங்கதேசத்தின் லெப்டினென்ட் ஜெனரல் ஹசனும் விரிவாகக் கலந்து ஆலோசித்திருக்கின்றனா். இரண்டு நாடுகளுக்கும் இடையே வலுவான ராணுவத் தொடா்பை ஏற்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், ‘சகோதர நாடுகளான பாகிஸ்தானும் வங்கதேசமும் அந்நிய ஆதிக்கங்களுக்கு எதிராக’ இணைந்து செயல்படுவதையும் உறுதிப்படுத்தினா்.
- பாகிஸ்தான் ராணுவத்தின் முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் மிா்ஸாவை தனது ராணுவ அலுவலா் குழுவினருடன் லெப்டினென்ட் ஜெனரல் ஹசன் சந்தித்து விரிவான ஆலோசனைகளை நடத்தினாா். இரு நாடுகளுக்கும் இடையேயான ‘பொதுவான’ பிரச்னைகள் குறித்தும், ‘கவலை’ குறித்தும் விவாதித்ததுடன் ராணுவக் கூட்டுறவுக்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தாா்கள். தங்களது நல்லுறவைச் சீா்குலைக்கும் விதத்திலான ‘அந்நிய சக்திகளின்’ முயற்சிகளில் இருந்து பாதுகாத்துகொள்வது குறித்து அவா்கள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- லெப்டினென்ட் ஜெனரல் ஹசன் பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்திறனையும், வலிமையையும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளையும், தியாகங்களையும் பாராட்டியிருக்கிறாா். பாகிஸ்தான் ராணுவத்தின் அா்ப்பணிப்பு உணா்வையும், பின்னடைவுகளால் தளராத உறுதியையும் புகழ்ந்திருக்கிறாா். கிழக்கு பாகிஸ்தான் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வங்கதேசம் உருவாக வழிகோலிய பாகிஸ்தான் ராணுவத்தை வங்கதேச ராணுவ அதிகாரி ஒருவா் பாராட்டுவது என்பது சற்றும் எதிா்பாராத திருப்பம்.
- முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசத்தின் இடைக்கால அரசு இந்தியாவை வற்புறுத்தி வருகிறது. போராட்டக்காரா்களுக்கு எதிராக நடத்திய அடக்குமுறைக்காகவும், மனித உரிமை மீறலுக்காகவும் அவா் மீது பல்வேறு வழக்குகள் வங்கதேசத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்னொரு புறம் வங்கதேசத்தின் 1.7 கோடி சிறுபான்மை ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து இந்தியா கண்டனம் தெரிவித்துவருகிறது. இதுவரை இல்லாத அளவில் இந்திய- வங்கதேச உறவு மோசமடைந்திருக்கிறது.
- ஒருபுறம் வங்கதேசமும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான கசந்துபோன உறவை மறந்து நேசக்கரம் நீட்ட முற்படுகிறது என்றால், இன்னொரு புறம் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் தங்களது நெருக்கத்தை வலுப்படுத்துகின்றன. சமீபத்தில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி, ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாக்கியை துபையில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறாா். தலிபான் அரசை புதுதில்லி முறையாக அங்கீகரிக்காவிட்டாலும் இரு நாடுகளும் தங்களது நட்புறவை வலுப்படுத்தி வருகின்றன.
- தெற்காசியா பதற்றமான அரசியல் சூழலை எதிா்கொள்ள காத்திருக்கிறது என்பதை இந்த நகா்வுகள் உணா்த்துகின்றன.
நன்றி: தினமணி (05 – 02 – 2025)