- மொழிப் பாடத் தேர்வுகளை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதாதது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. ‘கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின்னர், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது’ என்கிற செய்தி அவ்வளவு மகிழ்வளித்தது. அதற்கு எதிர்மாறான ஒரு மனநிலையை இந்தச் செய்தி உருவாக்கிவருகிறது.
- மேல்நிலைப் பள்ளியின் இரண்டாம் ஆண்டுப் பொதுத் தேர்வு ( 2) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தேர்வின் தேர்ச்சிதான் கல்லூரிக் கல்வி பயில்வதற்கான வாயில். அது மட்டுமல்ல, ஒரு மாணவரின் பதினோரு ஆண்டு கால உழைப்பின் பலனை அடையும் தேர்வு இது.
- பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கான சேர்க்கைக்கு, இந்தத் தேர்வுகளின் 60% மதிப்பெண் தேர்ச்சிதான் அடிப்படையாக அமைகிறது. இப்படிப் பார்த்தால்தான் மேல்நிலை இரண்டாம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு மாணவர்களின் கல்விப் பயணத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர முடியும்.
- அலட்சியம் வேண்டாம்: மேல்நிலை இரண்டாம் ஆண்டுத் தேர்வுக்கு ஒரு மாணவர், முதலாம் ஆண்டின் இறுதியிலிருந்தே தயாராகத் தொடங்கியிருப்பார். குறைந்தது பதினைந்து மாத கால உழைப்புக்குப் பின் தேர்வு அறைக்கு வருகிறார்.
- அந்த மாணவர் ஐந்து பாடங்கள் படிக்கிறார் எனில், ஒவ்வொரு பாடத்துக்கும் நூறு மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதுவார். அவர் எழுதும் இந்தத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 100க்கு 35 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி அடைய முடியும். ஒரு மாணவர் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்திருக்கிறார். ஆனால், மொழிப் பாடத்தில் 34 மதிப்பெண் மட்டுமே பெறுகிறார் எனில், அவர் அந்தத் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவார்.
- ‘எல்லாப் பாடத்திலும் நூறு மதிப்பெண் எடுத்த மாணவர், தமிழில் 34 மதிப்பெண் எடுப்பாரா?’ என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். இப்படி நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு. நூறு மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் கவனம் முழுவதும் முதன்மைப் பாடங்களாகக் கருதப்படுகிற கணிதம், அறிவியல் ஆகியவற்றின் மீதே குவிந்திருக்கிறது. இவ்வாறான பாரபட்ச மனநிலை மாணவர்களின் மனதில் விதைக்கப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. ‘தமிழ்தானே…
- படித்துவிடலாம். கணிதம் படி, அறிவியல் படி’ என்று மாணவர்களுக்கு அறிவுறுத்துகின்ற பெற்றோரும் ஆசிரியருமே அதிகம். இந்தப் போக்குதான் மாணவர்களின் உள்ளத்தில் மொழிப் பாடத்தின் மீதான கவனத்தையும், முக்கியத்துவத்தையும் திசைதிருப்பிவருகிறது.
- ‘ஆப்சென்ட்’ ஆன ஐம்பதாயிரம் பேர்: மார்ச் 13 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மொழிப் பாடத் தேர்வை எழுதுவதற்குத் தமிழ்நாடு, புதுச்சேரியில் விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவியரின் எண்ணிக்கை 8.75 லட்சம். இவர்களில், தேர்வு எழுதுவதற்கு வராமல் போனவர்களின் எண்ணிக்கை 50,704.
- இவர்களில் 49,559 மாணவ, மாணவிகளும் 1,115 தனித்தேர்வர்களும் அடங்குவர். தேர்வுக்கு வராதோர் 6% சதவீதம். மே 5 அன்று தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், தேர்வு எழுதியிருப்போரின் தேர்ச்சி நிலை என்னவாக இருக்கும் என நினைக்கவே அச்சமாக இருக்கிறது.
- நிலைக்குழுவின் பணி என்ன? தேர்வு எழுதவரும் மாணவர்கள் சிறப்பாகத் தேர்வை எழுத அறிவுறுத்துவதோடு அல்லாமல், முறைகேடுகளில் ஈடுபடுகின்ற மாணவர்களைக் கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் 4,235 நிலைக்குழுக்களையும், பறக்கும் படைகளையும் பள்ளிக் கல்வித் துறை அமைத்துக் கண்காணித்திருக்கிறது.
- தேர்வுக்கு வந்து தவறிழைப்போரின் நிலையைக் கண்காணிப்பதுதான் இக்குழுவின் பணி எனில், தேர்வுக்கு வராமல், தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களைக் கண்காணித்து, அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசெளகரியங்களைக் களைந்து, மீண்டும் தேர்வறைக்குக் கொண்டுவந்து தேர்வு எழுத வைப்பது யாருடைய பொறுப்பு?
- இந்த வருகையின்மை, தேர்வு அன்று மட்டுமே நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆண்டு முழுவதற்குமான வருகைப்பதிவேடுகளிலேயே வருகையின்மையைக் கவனித்திருக்க முடியும். அப்போதே,அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்திருக்கவும் முடியும். விதைப்பதில் கவனம் செலுத்திய அரசு, அதன் பின் பராமரிப்பில் கவனம் செலுத்தாமல், அறுவடைக்குத் தயாரானதன் விளைவுதான் இந்த வருகையின்மை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- இனி என்ன செய்யலாம்? மொழிப் பாடம்தானே என்கிற அலட்சியம் கூடாது. முதன்மைப் பாடத்துக்குத் தரப்படும் கவனத்தையும் மதிப்பையும் மொழிப் பாடத்துக்கும் அளிக்க வேண்டும். மாணவர்களின் வருகை தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டும். தொடர் விடுப்பில் இருக்கும் மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்களை அழைத்துப் பேசி வருகையின்மைக்கான காரணம் கண்டறியப்பட்டுச் சரி செய்யப்பட வேண்டும்.
- தேர்வுக் காலத்தில் நிலைக்குழு, பறக்கும் படை உள்ளிட்டவற்றை அமைப்பதுபோலவே ஆண்டு முழுவதும் மாணவர் ஒழுங்கு, வருகைப் பதிவு, காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதும் முறை, மாணவர்கள் பெறும் மதிப்பெண் என எல்லாவற்றையும் இந்தக் குழுக்கள் கண்காணிக்க வேண்டும்.
- இதுபோன்ற நடவடிக்கைகளை, அரசு - தனியார் பள்ளிகள் என்றில்லாமல் இணைந்து மேற் கொள்வதன் மூலமாகவே இது போன்ற மாணவர் வருகையின்மை, மாணவர் ஒழுங்கின்மை போன்றவற்றை எதிர்காலத்திலாவது சரிசெய்ய முடியும்.
நன்றி: தி இந்து (20 – 04 – 2023)