TNPSC Thervupettagam

மோட்டார் வாகனத் துறை: வீழ்ச்சி விடுக்கும் எச்சரிக்கை

August 26 , 2019 1974 days 1135 0
  • இந்தியாவின் மோட்டார் வாகனத் துறையானது கடும் சரிவை எதிர்கொண்டுவருகிறது. அனைத்து வகையான வாகனங்களின் உள்நாட்டு விற்பனையும் கடந்த ஆண்டு ஜூலையைவிட தற்போது 19% குறைந்திருக்கிறது. பயணிகள் வாகனத்தின் விற்பனை 31% குறைந்திருக்கிறது. இது கடந்த 19 ஆண்டுகளில் மிகவும் குறைவான விற்பனை. கூடவே, இருசக்கர வாகனங்களின் விநியோகம் 17%, வாகனங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு விற்பனைக்கு அனுப்பும் தொழில் துறை 26% பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. இந்தியப் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அதில் மோசமான மந்தநிலை சமீபகாலமாக நிலவுவது தெரிந்தாலும், மோட்டார் வாகனத் துறையிலிருந்து கிடைக்கும் தரவுகள் அதற்கு உறுதியான சான்றாக அமைகின்றன.

பாதிப்புகள்

  • ஒன்பது மாதங்களாகத் தொடர்ந்து பயணிகள் வாகன விற்பனை சுருங்கிக்கொண்டே வருகிறது. இதனால், விற்பனையகங்கள் மூடல்; முகவர்கள், உதிரிபாக விற்பனையாளர்கள், வாகனத் தயாரிப்பாளர்கள் ஆகிய தரப்பில் தொழிலாளர்களை வேலையிலிருந்து அனுப்புதல் என்று கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கிடையே மேலும் கடுமையான பணியிழப்புகள் ஏற்படும் என்று ‘மோட்டார் வாகன முகவர்கள் சங்கம்’ எச்சரித்திருக்கிறது.
  • இப்பிரிவில் பல்லாயிரக்கணக்கானோர் ஏற்கெனவே வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்திய மோட்டார் வாகன சங்கம்’ தங்கள் துறையில் கடந்த மூன்று மாதங்களில் வேலையிழப்பு நடந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.
  • வங்கிகள் அல்லாத நிதித் துறை நிறுவனங்களில் பணத் தட்டுப்பாடு நிலவுவது, அதனால் வாகனங்கள் வாங்குவதற்குக் கடன் கொடுப்பது குறைந்திருப்பது, வாகனக் காப்பீட்டுக்கான தொகைகள் உயர்ந்திருப்பது, கார்கள், மோட்டார் வண்டிகள், ஸ்கூட்டர்கள் போன்றவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுவது ஆகியவை மோட்டார் வாகனத் துறையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகளாகக் கூறப்படுகின்றன.

விற்பனை சரிவு

  • கூடவே, கனரக வாகன விற்பனையில் ஏற்பட்டிருக்கும் சரிவு, சரக்குப் போக்குவரத்தோடும் மக்களின் நுகர்வோடும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். வாகன விற்பனையின் எண்ணிக்கை வீழ்ச்சியானது ஒட்டுமொத்த பொருளாதார சுணக்கத்துக்கான அறிகுறியாகவும் பார்க்கப்பட வேண்டும்.
  • அடுத்து வரும் காலம் என்பது நிச்சயமாக மோட்டார் வாகனத் துறைக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, நுகர்வோர் நம்பிக்கை கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் இந்திய நுகர்வோரின் நம்பிக்கை குறைந்திருப்பது தெரியவருகிறது. 63.8% பேர் எச்சரிக்கையோடும் நிதானமாகவும்தான் செலவழிப்போம் என்று கூறியிருக்கின்றனர்.

இந்த நிலை

  • இதே நிலையோ அல்லது இதைவிட மோசமான நிலையோ இன்னும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கும் என்று அந்தக் கருத்துக்கணிப்பிலிருந்து தெரியவருகிறது. 2018-ல் இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு 37.3% ஆக இருந்தது. மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பது அந்தத் துறையை மட்டுமே சார்ந்ததல்ல; ஒட்டுமொத்த பொருளாதார நிலையின் பிரதிபலிப்பு. உடனடியாக உரிய கொள்கை முடிவுகள் எட்டப்படவில்லை என்றால் பிரச்சினை பூதாகரமாக வெடிக்க வாய்ப்பிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை(26-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories