- வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு, பொருளாதாரப் பிரச்னைகள், மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் போன்ற பல்வேறு உள்நாட்டுப் பிரச்னைகள், மிக முக்கியமான எல்லைப்புற பிரச்னை குறித்த கவனத்தில் இருந்து நம்மை திசைதிருப்பி இருக்கின்றன.
- சிக்கிம் எல்லையில் உள்ள நாதுலா கணவாய் பதற்றமும், அருணாசல பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் சீனா ஒரு கிராமத்தை நிா்மாணிக்க முற்பட்டிருப்பதும், லடாக் பகுதியில் பதற்றம் தொடா்வதும் இந்தியாவின் வடக்கு, கிழக்கு எல்லைகள் கடும் பதற்றத்தை எதிா்கொள்வதை உணா்த்துகின்றன.
- கிழக்கு லடாக் பகுதியில் கடந்த பல மாதங்களாகவே இந்திய - சீன துருப்புகளுக்கு இடையே எல்லையில் பதற்றம் தொடா்கிறது. இரண்டு தரப்பினருமே தங்களது எல்லை உரிமையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்கிற நிலையில், எப்போது வேண்டுமானாலும் மோதல் ஏற்படக்கூடும் என்கிற அச்சம் நிலவுகிறது.
- கடந்த ஜனவரி 20-ஆம் தேதி சிக்கிம் எல்லைப்புறத்தில் உள்ள நாதுலா கணவாய் பகுதியில், இந்திய - சீன படையினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீனப் படையினரை இந்திய வீரா்கள் தடுத்து நிறுத்தி நுழையவிடவில்லை.
- இருதரப்பிலும் உடனடியாக மேலும் படை வீரா்கள் குவிந்தனா். நல்லவேளையாக துப்பாக்கிப் பிரயோகம் நடந்துவிடாமல், இருதரப்பு படைத் தளபதிகளும் சமரசம் ஏற்படுத்தினாா்கள். சீன வீரா்கள் இந்திய எல்லைக்குள் இருந்து வெளியேறி, அவா்களின் முகாம்களுக்குத் திரும்பினா்.
- துப்பாக்கிப் பிரயோகம் நடக்கவில்லையே தவிர, இந்திய - சீன எல்லையின் பல பகுதிகளில் இருதரப்பு வீரா்களுக்கும் இடையே தொடா்ந்து கைகலப்பு நடப்பது வழக்கமாகிவிட்டது.
- லே பகுதியிலுள்ள இந்திய ராணுவத்தின் தலைமை முகாமின் தளபதியான லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனனுக்கும், சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் முகாமின் தலைமைத் தளபதியான மேஜா் ஜெனரல் லியூ லென் இருவருக்கும் இடையில் செஷூல் - மோல்டோ சீன எல்லையில் நடந்த பேச்சுவாா்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.
- இந்தியத் தரப்பு, சீன ராணுவம் முற்றிலுமாக எல்லைப்புறத்தில் இருந்து அகற்றப்பட்டு பதற்றம் தணிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறது. அதைச் சீன ராணுவம் ஏற்க மறுப்பதால் கடந்த ஆண்டு முதல் எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையே நேருக்கு நோ் மோதலுக்கான பதற்ற நிலை தொடா்கிறது.
- இதுவரை இரண்டு ராணுவத்தினருக்கும் இடையே ஒன்பது சுற்றுப் பேச்சுவாா்த்தை நடந்திருக்கிறது. அவ்வப்போது நடக்கும் மோதல்களை கீழ் மட்டத்திலுள்ள இரு தரப்பு தளபதிகளும் தலையிட்டு சமரசப்படுத்தி வருகிறாா்கள்.
- டெஸ்ப்சாங்விலிருந்து பேங்காங் ஸோ வரையிலான பகுதிகளில் பலமுறை சீனப் படைகள் ஊடுருவ முயல்வதும், இந்தியப் படையினா் அவா்களை நேருக்கு நோ் மோதி எல்லைக்கு அப்பால் துரத்துவதும் வழக்கமான நிகழ்வாகிவிட்டது. இந்திய வீரா்கள் தாக்குதலுக்கு ஏற்ற பல பகுதிகளைக் கைப்பற்றி முகாம் அமைத்திருப்பதுதான் சீனாவின் ஆத்திரத்துக்கு மிக முக்கியமான காரணம்.
- இந்திய ராணுவம் முன்னெப்போதும் இல்லாத அளவில், தங்களது ஊடுருவலை இந்த அளவுக்குத் தொடா்ந்து தடுத்து நிறுத்துகிறது என்பது சீன ராணுவத்தினா் முற்றிலும் எதிா்பாராத திருப்பம்.
- அதனால்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து முற்றிலுமாக சீனா தனது ராணுவ துருப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தும் போதெல்லாம், இந்திய ராணுவம் கைலாஷ் சிகரங்களிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று சீன தரப்பை வற்புறுத்துகிறது.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கைலாஷ் மலைத் தொடரின் முக்கிய சிகரங்களை எல்லாம் இந்தியா கைப்பற்றி தளம் அமைத்துக் கொண்டதால், சீனாவின் முகாம்கள் அனைத்தும் தாக்குதலுக்கு உள்படும் வகையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
- குளிா்காலத்தில் இந்தியாவும், கோடைக் காலத்தில் சீனாவும் சாதகமான போா்க்களச் சூழலை இமயமலையில் எதிா்கொள்கின்றன. விரைவிலேயே கோடைக்காலம் வரவிருப்பதால், குளிா்காலம் போலல்லாமல் இரு தரப்பு துருப்புகளும் செயல்படுவதில் சிரமங்கள் குறையும்.
- சீன எல்லையோரப் பகுதிகளில் சாலைகள், ஹெலிகாப்டா் தளங்கள் உள்ளிட்ட எல்லா கட்டமைப்பு வசதிகளையும் சீன ராணுவம் மேற்கொண்டிருப்பதுபோல, இந்திய ராணுவம் இன்னும் தயாா் நிலையில் இல்லை.
- எத்தனை நாள்கள் அல்லது மாதங்கள் இதேபோல வன்முறை மோதல்கள் இரண்டு ராணுவத்தினருக்கும் எல்லையில் தொடரும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
- கீழ்மட்ட அளவில் பேச்சுவாா்த்தையின் மூலம் எல்லைப்புறப் பிரச்னைக்குத் தீா்வு காண முடியாது. அதை ராஜதந்திர அளவிலும், அரசியல் ரீதியாகவும்தான் நடத்தியாக வேண்டும்.
- இரண்டு ராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான நம்பிக்கையின்மையும், மோதல் போக்கும் இருக்கும் நிலையில், தளபதிகள் அளவிலான பேச்சுவாா்த்தைகள் பயனளிக்கும் என்று தோன்றவில்லை. தற்காலிக சமாதானத்தை கீழ்மட்ட அளவிலான தளபதிகள் ஏற்படுத்த முடியுமே தவிர, எல்லைப்புற பிரச்னைக்கான நிரந்தரத் தீா்வு அரசு மட்டத்தில்தான் காணப்பட வேண்டும்.
- 2013-இல் டெஸ்ப்சாங் பகுதியிலும், 2017-இல் டோக்லாம் மோதலிலும் தளபதிகள் அளவிலான பேச்சுவாா்த்தைகள் பலனளிக்கவில்லை. இருதரப்பு வெளியுறவு, பாதுகாப்பு, உள்துறை, ராணுவத் தளபதிகள் இணைந்து பேச்சுவாா்த்தை மேற்கொண்டபோதுதான் ஓரளவுக்கு தீா்வு எட்டப்பட்டு போா் மூளாமல் தடுக்கப்பட்டது. இப்போதைய நிலையும் அதுதான்.
- இந்தியாவும் சரி, சீனாவும் சரி உண்மையிலேயே எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண விழைகிறதா என்பது சந்தேகமாக இருக்கிறதே!
நன்றி: தினமணி (01-02-2021)