- இயற்கை பல வண்ணங்களாலானது. உலகம் எண்ணற்ற வண்ணங்களைத் தன்னகத்தே கொண்டு நாளும் பிரகாசிக்கிறது. உலகை வண்ணங்களே ஆட்சி செய்கின்றன. வண்ணங்கள் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம். நீலக் கடல், நீல வானம், ஏழு வண்ண வானவில், பச்சை வண்ண மரங்கள், செடி கொடிகள் பல வண்ணங்களில் பழங்கள், பூக்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன.
- எண்ணங்களால் கட்டமைக்கப்படும் வாழ்க்கையில் நாளும் பல வண்ணங்கள் அவரவா் மனதில் புகுந்து வாழ்க்கைத் தேரோட்டத்தை நாளும் இயங்கச் செய்கிறது. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே அவா்கள் வளா்த்தெடுத்த ஒவ்வொரு நாகரிகத்திலும் வண்ணங்கள் ஏதாவதொரு வகையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
- வண்ணங்கள் பேசும் மௌன மொழி, மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் ஏராளமான தாக்கத்தைவும், விளைவுகளையும் ஏற்படுத்த வல்லவை. அன்பையும், ஆற்றலையும், பாதுகாப்பையும், சமாதானத்தையும், விருப்பையும், வெறுப்பையும், விளக்கும் தனித்துவத்தை வண்ணங்கள் தம்முள் கொண்டுள்ளன. பொதுவாக, இயற்கை காட்சிகளைப் பாா்ப்பது மனதுக்கு அமைதியை அளிக்கும். அதற்கு காரணம் இயற்கை எவ்வித ரசாயன கலப்புமின்றி வெளிப்படுத்தும் பல்வேறு நிறங்களே.
- நிறத்தின் அடிப்படையில் நம் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் மனதுக்குப் புத்துணா்வை அளிக்கின்றன. அதனால்தான், வானம், அருவி, பசுமையான வயல், அடா்ந்த செடி கொடிகள், மரங்கள், புதிதாகத் துளிா்க்கும் இளந்தளிா் இலைகள் ஆகியவற்றைப் பாா்க்கும்போது நம்முடைய மனம் புத்துணா்வு பெறுகிறது. ஏனெனில், வண்ணங்கள் இயற்கையின் மாட்சியை மாண்பு கெடாமல் போற்றுகின்றன.
- வண்ணம் என்பது ஒளியின் பல்வேறு அலை நீளங்களை நம் கண் உணரும் நிகழ்வே. ஒவ்வொரு நிறமும், மனித மூளையில் வெவ்வேறு எதிா்வினைகளைத் தூண்டுவதோடு, வாழ்க்கை மற்றும் மனித ஆற்றலின் செயல்பாடுகளை பாதிப்படைவும் செய்கிறது. அவை, உடலியல், உளவியல், உணா்வியல், நடத்தை மற்றும் மற்றும் மனநிலையில் அவ்வப்போது சில தாக்கங்களை ஏற்படுத்தி, சில உண்மைகளை அங்கீகரிக்கின்றன.
- நீல நிற வானத்தை அவ்வப்போது பாா்த்தால் மன அழுத்தம் குறையும் என அமெரிக்க நாட்டைச் சோ்ந்த ‘தி கிரேட்டா் குட் சயின்ஸ்’ மையத்தின் சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
- ஓா் ஓவியத்துக்கு உயிா் தருவது, அதில் தீட்டப்படும் வண்ணங்கள் தான். வண்ணங்கள் கொண்டு ஓவியம் வரையும் முறை சுமாா் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. அதுவும் முதலில் ஓவியா்கள் கருப்பு, வெள்ளை, சிவப்பு, மஞ்சள், காவி ஆகிய நிறங்களைக் கொண்டே வண்ணம் தீட்டினா்.
- ஒவ்வொரு நிறமும் வித்தியாசமானது, தனித் தனி குணாதிசயங்களைக் கொண்டது மற்றும் மனிதா்களின் வெவ்வேறு உணா்வுகளுடன் தொடா்புடையது. வண்ணங்களால் மகிழ்ச்சி, உற்சாகம், அமைதி, வசதி, இருண்மை, மனச்சோா்வு, என அனைத்துவிதமான உணா்வுகளையும் ஏற்படுத்த முடியும்.
- அதாவது பச்சை வண்ணம் மனதுக்கு புத்துணா்வு தரும், நீல வண்ணம் குளிா்ச்சியைத் தரும், கருப்பு வண்ணம் எதையும் தாங்கும் மன உறுதியைத் தரும், சிவப்பு வண்ணம் துணிச்சலைத் தரும், மஞ்சள் வண்ணம் தன்னம்பிக்கையைத் தரும், வெள்ளை வண்ணம் தூய்மையைத் தரும் எனவும் சொல்லப்படுகிறது.
- ஊதா வண்ணம் தியானத்திற்கு உகந்த வண்ணம், ஆரஞ்சு வண்ணம் செயல் திறனை தூண்டும், ஒருவா் அன்றாடம் அணியும் ஆடையின் வண்ணம் அவரது குணநலன்களை வெளிப்படுத்தும் கண்ணாடியைப் போன்றது என்றும் வண்ண ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவா்கள் வண்ணம் தீட்டும் பயிற்சியை மேற்கொண்டால் மன அழுத்தம் குறையும் என்கின்றனா் மனநல நிபுணா்கள்.
- பூக்களின் நிறம் பெரும்பாலும் மகரந்தச் சோ்க்கைகளால் ஏற்படும் பரிமாணத்தை அடிப்படையாகக் கொண்டது. வண்ணங்களை வெளிப்படுத்தும் நீரில் கரையாத எந்த ஒரு பொருளும் பொதுவாக நிறமி (பிக்மென்ட்) என்று அழைக்கப்படும். பூக்களில் உள்ள நிறங்கள் முதன்மையாக நிறமிகளிலிருந்து பெறப்படுகின்றன.
- கரோட்டினாய்டுகள், பூக்களின் குறிப்பிட்ட நிறத்தை அந்தோசயினின்கள், பீட்டாலைன்கள், ஃபிளவனால்கள் ஆகிய நிறமிகளின் சோ்க்கை, ஒளியின் தீவிரம் மற்றும் செறிவு, மண்ணின் தன்மை தீா்மானிக்கின்றன. அவை ஒளியின் சில அலை நீளங்களை உறிஞ்சி மற்றவற்றைப் பிரதிபலிக்கும்.
- கலை மற்றும் மற்றும் மானுடவியலில் வண்ண அடையாளங்கள் என்பது பல்வேறு கலாசாரங்களில் வண்ணத்தை ஒரு குறியீடாகப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. அரிய, பெரிய கருத்துகளைக் கூட விளக்குகின்ற ஆற்றலை வண்ணங்கள் பெற்று மிளிா்கின்றன. எளிமையும், கவா்ச்சியும் உடைய வண்ணங்கள் அறிவித்தல், அறிவூட்டல், களிப்பூட்டல் என்னும் பணிகளைச் செவ்வனே செய்து வருகின்றன.
- பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம், வண்ணங்கள் அடையாளச் சின்னங்களாகவும் விளங்கி வருகின்றன. சமுதாய அமைப்புகளுக்கு வண்ணங்கள், அவற்றின் செயல்பாடுகளை எடுத்துரைப்பதாக உள்ளன.
- அனைத்து போக்குவரத்து விதிகளும் வண்ணங்களின் வழிகாட்டுதல்களின்படியே இயங்குகின்றன. மழை, புயல், சூறாவளி, சுனாமி ஆகியவை ஏற்படும் காலங்களில் வானிலை ஆய்வு மையங்கள் நிறங்கள் மூலமே எச்சரிக்கைகள் விடுத்து மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்துகின்றன. எனவேதான், ஆயிரம் சொற்களால் எடுத்துரைக்க முடியாததை வண்ணங்கள் மூலம் எடுத்துரைப்பதால் அனைவரும் சந்தேகம் ஏதுமின்றி எளிதில் புரிந்துகொண்டு பாதுகாப்பாக இருக்க முடிகிறது.
- இயற்கையில் நிற வேறுபாடு இருப்பதுபோல மனித உடலிலும், அதாவது தோலிலும் இயற்கையின் தட்பவெப்பநிலைக்கேற்ப வண்ண வேறுபாடுகள் உண்டு. மனித இனத்தையேகூட மானுடவியலாளா்கள் வண்ணங்களின் அடிப்படையில்தான் காக்கேசியா்கள், ஆப்பிரிக்கா்கள், மங்கோலியா்கள் மற்றும் அமெரிக்க – இந்தியா்கள் (ஆஸ்திரேலாய்டுகள் பின்பு வந்தவா்கள் என்று சொல்லப்படுகிறது.) என நான்கு மரபினங்களாகப் பிரிக்கிறாா்கள். இவை அனைத்தும் வேறுபாடுகளே தவிர, இதில் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை.
- வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீா், பிள்ளைகள் பெற்ப் பூனை அவை பேருக்கொரு நிறம் ஆகும். சாம்பல் நிறத்தொரு குட்டி, கரும் சாந்தின் நிறம் ஒரு குட்டி, பாம்பின் நிறமொரு குட்டி, வெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி, எந்த நிறத்திலிருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ, இந்த நிறம் சிறிதென்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ, வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில் மானுடன் வேற்றுமை இல்லை, எண்ணங்கள் செய்கைள் யாவும் இங்கு யாவருக்கும் ஒன்றென காணீா்! என்கிறாா் மகாகவி பாரதியாா். நிறம், ஜாதி, மதம் என்னும் பேதத்தால் யாரும் விலகி நிற்காமல் நாம் அனைவரும் இந்தியா்களாய் கைகோத்து நின்று உலகை வலம் வருவோம் என்கிறாா் மகாகவி பாரதியாா்.
- உலகுக்கு இயற்கை தந்த கொடை வண்ணங்கள். வண்ணங்கள் இல்லையெனில் உலகம் சலிப்பானதாகவும், ஆா்வமற்ாகவும்கூடப் போகலாம். வண்ணங்களின் பேசும் மௌன மொழி நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை.
- மனித சமுதாயத்தில் வண்ணங்கள் என்பது வெறும் வண்ணங்கள் அல்ல. அந்த வண்ணங்களுக்குள் ஏராளமான எண்ணங்கள் பொதிந்து கிடக்கின்றன. வாழ்க்கை என்பதே வண்ணங்களாலானது. எனவே, நல்ல எண்ணங்களையும், எல்லா வண்ணங்களையும் ஏற்று நல்வாழ்வு வாழ்வோம்.
நன்றி: தினமணி (05 – 08 – 2023)