- கடவுளர், புராணக் கதாபாத்திரங்கள், வரலாற்றுக்கு முற்பட்ட இடங்கள், நிகழ்வுகள் ஆகியனவும் தொன்ம மதிப்புடையவை. அப்படியொரு நிலத்தைத்தான் புதுமைப்பித்தன் ‘கபாடபுரம்’ என்ற சிறுகதையாக எழுதியுள்ளார். புதுமைப்பித்தன் தொன்மத்தைப் புனைவாக்குவதில் தேர்ந்தவர். ‘ஆற்றங்கரைப் பிள்ளையார்’ என்ற அவரது முதல் சிறுகதையே ‘பிள்ளையார்’ என்ற தொன்மத்தைக் குறியீடாக்கி எழுதப்பட்டதுதான்.
- ‘புதிய நந்தன்’, ‘புதிய கந்த புராணம்’, ‘அன்று இரவு’, ‘அகலிகை’, ‘சாபவிமோசனம்’, ‘வேதாளம் சொன்ன கதை’ போன்ற பல கதைகளில் புதுமைப்பித்தன் தொன்மத்தை நவீன வாசிப்புக்கு உட்படுத்தி எழுதியிருக்கிறார். கபாடபுரம் தொன்ம மதிப்புடைய நிலம். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், ராமாயணம், இறையனார் களவியலுரை ஆகிய ஆக்கங்களில் கபாடபுரம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
- ‘வடிவேல் எறிந்த வான்பகை பொறாது/பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்/குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள’ (காடுகாண் காதை) என்ற சிலப்பதிகாரத்தின் மூன்று அடிகளைத்தான் புதுமைப்பித்தன் ‘கபாடபுரம்’ புனைவாக விரித்து எழுதியுள்ளார். இந்தக் கபாடபுரத்தில்தான் இரண்டாம் தமிழ்ச் சங்கம் செயல்பட்டிருக்கிறது. பாண்டியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த நிலம் கடல் சீற்றத்தால் அழிந்துபோனது.
- இந்த நிலப்பரப்பின் வழியாகத்தான் பஃறுளியாறும் குமரியாறும் ஓடின.இந்த நிலத்தை நிர்மாணித்தவன் வேலெறிந்த பாண்டியன்.இந்தத் தகவல்கள் தாம் புதுமைப்பித்தன் இந்தப் புனைவுக்காக எடுத்துக்கொண்ட கச்சாப் பொருள்கள்.
- கபாடபுரம் வளமான நகரம். ‘நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும்போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களைக் கொண்ட ஒரு நகரத்தைக் காண்பீர்கள்’ என்று வானரப் படையிடம் சுக்ரீவன் சொல்கிறான். இந்தக் கபாடபுரம் அழிந்துபோனதற்கான காரணத்தைப் புதுமைப்பித்தன் இக்கதையினூடாக விளக்க முயன்றிருக்கிறார். கூட்டு நனவிலி மனதில் அனைவருக்கும் கபாடபுரம் என்ற நிலம் சேகரமாகியுள்ளது.
- படைப்பாளர் இந்த நிலம் குறித்துச்சிந்தித்துக்கொண்டே இருக்கும்போது, அவரது அடிநிலை மனதிலிருந்து ஒரு கனவாக இந்நிலம் விரிகிறது. அகக்காட்சியில் புதுமைப்பித்தன் உணர்ந்த இந்த நிலத்தை அனைவருக்குமான புனைவாக மாற்றுகிறார். அதற்காகக் கன்னி, கடவுள், உருவமில்லாத ஓர் ஆள், சித்தர் எனச் சில கதாபாத்திரங்களை உருவாக்கிக்கொள்கிறார். நனவிலி மனதிலிருந்து இக்கதை சொல்லப்படுவதால் தர்க்கம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.
- கடற்கரை ஓரமுள்ள ஒரு கோயிலுக்குள் அகப்பட்டுக்கொள்ளும் ‘நான்’ என்ற தன்னிலைக்கு இரவில் ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவு ‘கபாடபுரம்’ என்ற தொன்ம நிலத்திற்கு அவனை அழைத்துச்செல்கிறது. பொது ஆண்டுக்கு முன்பு 6804 முதல் 3105 வரை கபாடபுரம் எனும் நிலப்பகுதி இருந்ததாகச்சொல்லப்படுகிறது.
- நிகழ்காலத்தில் தொடங்கும் புனைவு தொல் பழங்காலத்தின் நிலத்தைத் திறந்து காட்டுகிறது. தன்னிலையின் கனவில் நடப்பதெல்லாம் அமானுஷ்யம். நிகழ்கால மனிதனுக்கும் தொன்மத்திற்கும் இடையிலான உரையாடலாகப் புனைவு நீள்கிறது. புனைவு சித்தலோகத்திற்கு நகர்ந்து அங்கும் ஓர் உரையாடலை நிகழ்த்துகிறது.
- காலத்தின் யாத்திரையில் பயணம் செய்யும் தன்னிலை இறுதியில் குமரிக்கோடு கடல்கொண்ட தருணத்திற்குள் நுழைகிறது. குமரிக்கோடு கடல்கொண்டதற்குத் தர்க்கபூர்வமான காரணத்தைச்சொல்ல புதுமைப்பித்தன் முயன்றிருக்கிறார். ஒற்றைக் கண்ணுள்ள கர்ப்பேந்திரம் ஒன்று யானையைக் கிழித்துத் தின்றுகொண்டிருக்கிறது. கர்ப்பேந்திரம் என்ற விலங்கு டைனசோராகஇருக்கலாம்.
- அந்நேரத்தில், குமரிக்கோடு கனிந்து புகைந்துகொண்டிருக்கிறது. கன்னியைப் பலியிட அழைத்துச் செல்கிறார்கள். இந்தக் கன்னிதான் பிறகு காவல் தெய்வமாகிறாள். பாண்டியன் பின்னால் செல்கிறான். கன்னியை விரும்பும் இளைஞன் கர்ப்பேந்திரத்தை வேல்கொண்டு தாக்குகிறான். அது எரிமலையின் உச்சிக்குச் சென்று பாதாளத்தில் விழுகிறது. நிமலன் நெற்றிக் கண்ணைத் திறக்கிறான். கபாடபுரம் கடல்கொண்டநகரமாகிறது.
- நாட்டார் வழக்காற்றியல், உளவியல், மானுடவியல் எனப் பல்வேறு கோட்பாடுகள் சார்ந்து இக்கதையின்மீது வாசிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இது ஒரு மிகைப்புனைவு. நிமலன் என்ற சிவபெருமான் தொன்மத்துடன் புதுமைப்பித்தன் இக்கதையை இணைத்துள்ளார். நெற்றிக்கண், நந்தி, சித்தர், பிறைச் சந்திரன், கங்கை, கருநாகம் என்று சிவபெருமானை நினைவூட்டும் படிமங்களைப் புதுமைப்பித்தன் புனைவுமுழுக்க உருவாக்கிக்கொண்டே செல்கிறார்.
- சிவபெருமானின் கோபம்தான் கபாடபுரம் கடல்கொண்டதற்குக் காரணம் என்பது தொன்ம வாசிப்பு. அதற்கு இப்புனைவு இடமளிக்கிறது. சிலப்பதிகாரத்தின் மூன்று வரி செய்யுளை வைத்துக்கொண்டு புதுமைப்பித்தன் இக்கதையை நவீன வாசிப்புக்கு உட்படுத்தியிருக்கிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 04 – 2024)