TNPSC Thervupettagam

யார் என்ன எப்படி? - ஆர்சிஈபி ஒப்பந்தம்: இந்தியா நடந்துகொண்ட விதம் சரியா?

November 8 , 2019 1893 days 954 0

ஆர்சிஈபி என்றால் என்ன?

  • நவம்பர் 3-ம் தேதி ஆசியான்-இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்துக்குச் சென்றார். அங்கு பிராந்திய ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கூட்டுறவு (ஆர்சிஈபி) ஒப்பந்தத்தில் இந்தியா தன்னை இணைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
  • ஆனால், அந்த ஒப்பந்தத்தில் இந்தியா தன்னை இணைத்துக்கொள்ளாது என்று நவம்பர் 4 அன்று மோடி அறிவித்துவிட்டார். இதையடுத்து, ஆர்சிஈபி என்பது பெரும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
  • ஆர்சிஈபி என்பது 16 ஆசிய-பசிபிக் நாடுகளுக்கிடையிலான தடையற்ற பொருளாதார ஒப்பந்தமாகும். இதன் அடிப்படையில், இந்த நாடுகளுக்கிடையில் வர்த்தக இறக்குமதிகளுக்குக் குறைந்த வரி விதிக்கப்படும், அல்லது வரியே விதிக்கப்படாது. இதனால், இந்த நாடுகளுக்கிடையில் தடையற்ற வர்த்தகம் சாத்தியமாகும்.
  • ஆர்சிஈபியின் மையமாக ஆசியான் இருக்கும். இது இந்தோனேஷியா, கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, மியான்மர், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு. இதனுடன் ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா, தென்கொரியா, நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய ஆறு பங்காளர்கள் இணைந்துகொள்ளும் என்ற நிலையில், இந்தியா இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது.

ஆர்சிஈபி உருவானது எப்படி?

  • ஆர்சிஈபியின் உருவாக்கத்துக்குப் பிரதானமான காரணம் சீனாதான். 2012-ல் பசிபிக் கடந்த வர்த்தக ஒப்பந்தத்தில் சீனாவை அமெரிக்கா விலக்கியது. இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற சீனாவின் முன்னெடுப்புதான் ஆர்சிஈபி.
  • ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு பசிபிக் கடந்த வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் விலகிக்கொண்டது வேறு விஷயம். ஆனால், சீன இறக்குமதிக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்ட அதிக வரிகள், தடை போன்றவை சீனாவை ஆர்சிஈபி நோக்கி மேலும் தள்ளியது.

ஆர்சிஈபி-ஐ இந்தியா எப்படிப் பார்க்கிறது?

  • இந்தியப் பொருளாதாரத் துறைக்கு ஆர்சிஈபி பலத்த அடியை ஏற்படுத்தும் என்றே பார்க்கப்படுகிறது. தடையற்ற வர்த்தகம் என்றால் சீன இறக்குமதிகள்தான் இந்திய வர்த்தகத்தை ஆக்கிரமித்திருக்கும். அது மட்டுமல்லாமல், தொழில் துறையில் சீனா, ஜப்பான், தென்கொரியாவுடன் போட்டிபோட முடியாமல் பெரும் சரிவு ஏற்படும். முக்கியமாக, இந்தியாவின் பால் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்படைவார்கள்.
  • ஏனென்றால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவின் பால் துறை மிகவும் வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளது. அவர்களுடன் இந்தியா போட்டிபோட முடியவே முடியாது. பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் சரிவுக்குள்ளாகியிருக்கும் இந்தியப் பொருளாதாரம், ஆர்சிஈபியால் பலத்த பாதிப்படையும் என்று கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவான வாதங்கள் என்னென்ன?

  • இந்த ஒப்பந்தத்தில் சேர்ந்துகொள்வதால் வர்த்தகம் பெருமளவில் பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், நிறைய பொருட்கள் உற்பத்தி செய்யப்படும், அதற்கான தேவையும் அதிகரிக்கும் என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
  • ஆனால், அதெல்லாம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நாடுகளில் வளர்ந்த நாடுகளாக இருப்பவற்றுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்றும், பின்தங்கிய நாடுகள் பெரும் பாதிப்படையும் என்றும் ஒப்பந்தத்துக்கு எதிரான குரல்கள் வாதத்தை முன்வைக்கின்றன.
  • இப்போது இந்தியா விலகிக்கொண்டாலும் பிற்காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் சேர்ந்துகொள்ள வாய்ப்புகள் இருப்பதாகவே களநோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories