TNPSC Thervupettagam

யார் குற்றம் ?| பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்திற்கான காரணம்

October 4 , 2019 1921 days 925 0
  • இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பிகார் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் வடக்கு பிகாரிலுள்ள 13 மாவட்டங்கள் வெள்ளத்தின் சீற்றத்தை எதிர்கொண்டன என்றால், இப்போது தலைநகர் பாட்னா உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.
  • பிகார் மாநிலத் துணை முதல்வரையும் குடும்பத்தினரையும் மீட்புப் பணியினர் படகுகளில் காப்பாற்றிப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடகமும், மகாராஷ்டிரமும்
  • கடந்த மாதங்களில் கர்நாடகமும், மகாராஷ்டிரமும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன என்றால், செப்டம்பர் மாதத்தில் பிகாரும், உத்தரப் பிரதேசமும் வெள்ளத்தின் பாதிப்பில் சிக்கித் தவிக்கின்றன.
  • கடந்த ஆண்டு கேரள மாநிலமும், 2015-இல் சென்னை நகரும் சுற்றுப்புறங்களும் இதேபோல வெள்ளத்தில் மூழ்கிப் பேரிழப்பையும், அழிவையும் எதிர்கொண்டன.
  • ஜூன் மாதத்தில் வழக்கத்தைவிட 32.8% குறைவான மழைப் பொழிவு காணப்பட்டது. அதனால் 2002, 2004, 2009, 2015, 2016 போல இந்த ஆண்டு எல் நினோ ஆண்டாக இருக்கக்கூடும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர்.
  • மேலே குறிப்பிட்ட ஆண்டுகளில் எல்லாம் பூமத்திய ரேகைக்குக் கிழக்கே பசிபிக் மகா சமுத்திரத்தில் அதிகரித்த வெப்பம் காரணமாக, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் இந்தியா பாதிக்கப்பட்டிருக்கிறது. மழைப் பொழிவு குறைந்து வறட்சி நிலவியிருக்கிறது.
எல் நினோ சூழல்
  • பசிபிக் கடலில் எல் நினோ சூழல் காணப்படுவதாக சர்வதேச பருவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் 2019-இல் வறட்சி நிச்சயம் என்றுதான் கருதப்பட்டது.
  • கடுமையான கோடைக்குப் பின்னால், எல் நினோ தாக்கத்தால் பருவமழைப் பொழிவும் குறைந்து காணப்பட்டால், மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் நரேந்திர மோடி அரசு கடுமையான உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வை எதிர்கொள்ள நேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
  • திடீரென்று நிலைமை தலைகீழாக மாறியது. ஜூன் மாதம் வழக்கத்தைவிட 32.8% மழைப் பொழிவு குறைவாக  இருந்ததுபோய், ஜூலை மாதத்தில் வழக்கத்தைவிட  4.6% அதிகமான மழைப் பொழிவு பதிவாகியது.
  • ஆகஸ்ட் மாதத்தில் அது மேலும் அதிகரித்து வழக்கத்தைவிட 15.3% அதிகமான மழை பதிவாகியது. செப்டம்பர் மாதத்தில் அதுவே வழக்கத்தைவிட 44.6% அதிகரித்தது என்பது மட்டுமல்ல, கடந்த 102 ஆண்டுகளில் மிக அதிகமான மழைப் பொழிவைச் சந்தித்த செப்டம்பர் மாதம் என்கிற வரலாறும் படைத்துவிட்டது.
  • அறுவடைக்குத் தயாராக இருக்கும் அல்லது கடைசிக் கட்ட வளர்ச்சியில் இருக்கும் காரிஃப் பயிர்கள் பெருமளவு பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன.
  • அதிக அளவு மழையால் பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை இன்னும் நின்றபாடில்லை.
  • அதிகரித்த மழைப் பொழிவும், அதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளும் ஒருபுறத்தில் இருந்தாலும், அதில் சிறிது ஆறுதலும் இல்லாமல் இல்லை. இந்த ஆண்டு மழைப் பொழிவால் பெரிய அளவில் நிலத்தடி நீர் சமன் செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் அது. 
  • இந்தியாவின் முக்கியமான 107 நீர்த் தேக்கங்கள் தங்களது கொள்ளளவில் 86.6% நிறைந்து காணப்படுகின்றன.
  • கடந்த பத்தாண்டுகளில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் அவை 71.8%தான் சராசரியாக நிறைந்திருக்கின்றன. அதனால், காரிஃப் பயிர்கள் அழிந்து பாதிக்கப்பட்டாலும், ராபி பருவத்தில் அதிகரித்த மகசூல் ஏற்பட்டு, அந்த இழப்பு ஈடுசெய்யப்படும்.
  • மிக அதிகமான மழையும், அதனால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இன்னொருபுறம், நீண்ட கோடையும் வறட்சியும் வழக்கமாகியிருக்கின்றன.
  • பருவமழை வந்துவிட்டால் இப்போது பாட்னாவிலும், முன்பு மும்பை, கேரளம், சென்னையிலும் ஏற்பட்டதுபோல நகர்ப்புறங்கள் வெள்ளத்தில் மூழ்கிப் பேரழிவைச் சந்திப்பது என்பது வழக்கமாகிவிட்டது.
பருவநிலை மாற்றம்
  • இதற்கெல்லாம் பருவநிலை மாற்றம் மட்டுமே காரணம் என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள முடியாது. முறையான நகர்ப்புறத் திட்டமிடல் இல்லாமல் இருப்பதும், போதுமான அளவிலான கழிவுநீர், வெள்ளநீர் வடிகால்களை அமைக்காமல் இருப்பதும், நீர் நிலைகளைப் பாதுகாக்காமல் இருப்பதும் மிக முக்கியமான காரணங்கள் என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டியும்கூட நமது நிர்வாக இயந்திரம் அசைந்து கொடுப்பதாக இல்லை, ஆட்சியாளர்களும் கவலைப்படுவதாக இல்லை.
  • நமது நகராட்சி அமைப்புகள், அரசு நிலங்கள் குறித்த பதிவுகளை வைத்திருப்பதுபோல, நீர்நிலைகள் குறித்த பதிவுகளை ஏற்படுத்தாமல் இருக்கின்றன. நகராட்சிச் சட்டங்கள் அது குறித்துக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டிருக்கவில்லை.
  • அதைப் பயன்படுத்தி, நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சென்னையிலேயே எடுத்துக்கொண்டால், கூவத்தின் இருபுறமும் உள்ள கடந்த அரைநூற்றாண்டு கால ஆக்கிரமிப்புகளை அகற்றும் துணிவு யாருக்குமே கிடையாது.
  • வெள்ளப் பெருக்கிற்கான காரணம் எல்லாருக்குமே தெரியும். அதைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதும் தெரியும்.
  • ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும், கோடிக்கணக்கான உடைமை இழப்புகளும் தொடர்ந்தும்கூட இது குறித்துத் திட்டமிடலோ, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அணுகுமுறையோ இல்லாமல் இருக்கும் நிலையில், இயற்கையிடம் இரு கரம் கூப்பி மன்றாடுவதைத் தவிர இந்தப் பிரச்னைக்கு வேறு வழியொன்றும் தோன்றவில்லை.

நன்றி: தினமணி (04-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories