TNPSC Thervupettagam

யார் சொன்னா கேப்பீங்க

August 7 , 2023 394 days 264 0
  • பொதுவாக நீதிமன்றம் என்பதும் ‘அரசு’ என்கிற ஆளும் வர்க்கத்தைக் காக்கும் வன்முறைக் கருவியின் ஒரு பாகம் என்றுதான் வர்க்க அரசியல் பேசுவோர் கூறுவர். ஆனால், அந்த நீதிமன்றமே மத்திய-மாநில அரசுகளைக் கண்டிக்கும் அளவுக்கு நாட்டின் சமீபத்திய நிகழ்வுகள் மோசமடைந்திருக்கின்றன என்பது உண்மையில் கவலையளிக்கிறது.

நம்பிக்கை தரும் நீதிமன்றம்

  • மணிப்பூரில் மே 4 அன்று பழங்குடிப் பெண்கள் இருவர், கும்பல் வன்முறைக்கு ஆளான சம்பவம் ஜூலை 19 அன்று வெளியில் தெரிந்தது. நாடெங்கும் அச்சம்பவத்தைக் கண்டித்துக் கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.
  • இப்பின்னணியில், ஜூலை 20 அன்று உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு ஜூலை 31 அன்று வழக்கை விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி தெரிவித்த சில கருத்துகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சற்றே ஆறுதலைத் தரும் விதமாக அமைந்திருந்தன.
  • “ராஜஸ்தான், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறவில்லையா என்று கேள்வி எழுப்பி மணிப்பூர் சம்பவத்தை அரசுத் தரப்பு நியாயப்படுத்தக் கூடாது. பாதிக்கப்பட்ட இந்தப் பெண்கள் இருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் எந்த அளவுக்கு விரும்புகிறதோ, அதே அளவுக்கு இதுபோல பாதிக்கப்படும் பிற மாநிலப் பெண்களுக்கும் நீதி கிடைக்கும் ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும்” என நீதிபதி தெரிவித்துள்ள கருத்து முக்கியமானது.
  • “டெல்லியில் நடந்த நிர்பயா வழக்கு போன்றதல்ல மணிப்பூர் வழக்கு. இங்கு காவல் துறையினரே அவ்விரு பெண்களையும் வன்முறைக் கும்பலிடம் ஒப்படைத்துள்ளனர். இனக்கலவரம், மதக்கலவரங்களுக்கு மத்தியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை உருவாக வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் இன்னமும் அமைதி திரும்பாது இருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கும் நாங்கள் நீதி வழங்குவோம்” என்று நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
  • நாட்டின் அரசியல் தலைவரான பிரதமர் வாயிலிருந்து இப்படி ஒரு ஆறுதலான வார்த்தையை வரவைப்பதற்காக எதிர்க்கட்சிகள் அரசின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு மோசமான ஒரு சூழலை சுதந்திர இந்தியா இதுவரை சந்தித்ததில்லை. அவர் பேசி என்ன ஆகப்போகிறது; அவர் என்னதான் பேசிவிடப்போகிறார் என்பது அடுத்த கேள்வி.
  • தமிழ்நாட்டில் வலதுசாரி அறிஞர் ஒருவர் இந்த ஆறுதல் வார்த்தைகளைச் சொன்ன உச்ச நீதிமன்றத்தை கிண்டலடித்துக் கைதாகி, தற்போது வெளியில் வந்துள்ளார். மணிப்பூர் மக்களைப் பாதுகாப்பதைவிட செயலற்ற அரசுகளைப் பாதுகாப்பது முக்கியமாகிவிட்டது அவருக்கு.

அடுத்தடுத்த மாடல்கள்

  • ‘குஜராத் மாடல்’, ‘மணிப்பூர் மாடல்’ என்று புதுப்புது மாடல்களை சீட்டு இறக்குவதுபோல வலதுசாரிகள் இறக்கிக்கொண்டிருக்கிறார்கள். அனுமார் வாலில் வைத்த தீ ஒவ்வொரு இடமாகப் பரவுவதுபோல இவர்கள் வைக்கும் தீ, மணிப்பூரைத் தொடர்ந்து இப்போது ஹரியாணாவில் பற்றிக்கொண்டதாகப் பத்திரிகைகள் கேலிச்சித்திரம் போடுகின்றன.
  • மீண்டும் உச்ச நீதிமன்றம் ஹரியாணா கலவரங்கள் குறித்துக் கண்டனத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது. சங் பரிவாரங்களில் ஒன்றான விஷ்வ ஹிந்து பரிஷத், அம்மாநிலத்தில் ஜூலை இறுதியில் நடத்திய ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ ஊர்வலத்தின் மீது சிலர் கல்லெறிய, சங் பரிவாரங்கள் எதிர்பார்த்தபடி இஸ்லாமியர் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். செக்டார் 57இல் உள்ள அஞ்சுமான் மசூதிக்குத் தீ வைக்கப் பட்டது. அம்மசூதியின் இமாமாக இருந்த 19 வயது ஹபீஸ் சாத் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்லாமியர் கடைகள் சூறையாடப் பட்டு வருகின்றன. கலவரம் - அதாவது, இஸ்லாமியர் மீதான் அந்தத் தாக்குதல் பரவிக் கொண்டிருக்கிறது.

அரசு செல்லும் திசை

  • கலவரத்தை நடத்தியவர்கள் டெல்லியில் ஹரியாணா கலவரத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தி நம்மைப் பார்த்து நகைக்கின்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் பேரணிகளில் வன்முறை, வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளைப் போலீஸார் அனுமதிக்கக் கூடாது. வன்முறைகள் நிகழாமல் தடுக்க உத்தரப் பிரதேசம், ஹரியாணா, டெல்லி அரசுகளும் ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.
  • எல்லாம் முடிந்த பிறகு, ‘இந்தியாவின் மகள்களைக் காப்போம்’ என அகன்ற மார்பைத் தட்டி நிற்கும் மத்திய அரசு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கவலையையும் கண்டனத்தையும் கண்டு கொள்ளுமா? தமிழ்நாட்டு வலதுசாரி அறிஞரின் நக்கல் பேச்சு, பரிவாரங்களின் அரசு எத்திசையில் யோசிக்கிறது என்பதற்கான ஓர் அடையாளம்தான்.
  • இன்னும் வகுப்புவாதமயமாக்கல் நீதித் துறையில் முழுமை பெற்றுவிடவில்லை என்பது ஒன்றுதான் சாதாரண மக்களுக்கு இருக்கும் தற்காலிக விடுதலையும் ஆறுதலும். 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வகுப்புவாதம் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுள்ளது என்பதன் வெளிப்பாடுகளாகத்தான் மணிப்பூரையும் ஹரியாணாவையும் காண வேண்டும். 2002இல் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் தொடர்ச்சியாக குஜராத்தில் பந்த் அறிவித்ததும் இஸ்லாமியர்களை அழித்தொழிக்கும் இயக்கத்தை முன்னெடுத்ததும் இதே விஷ்வ ஹிந்து பரிஷத்தான் என்பது நினைவுக்கு வருகிறது.
  • பத்தாண்டுகளாகப் பதவியில் இருக்கிறீர்கள். குடியரசுத் தலைவரில் தொடங்கி பிரதமர், உள்துறை அமைச்சர், பல மாநில முதலமைச்சர்கள் எனப் பல இடங்களில் உங்கள் கட்சியினர் தான் இருக்கிறார்கள். அரசு நிறுவனங்கள், நீதிமன்றங்கள், ஊடகங்கள் எனப் பல்வேறு இடங்களில் உங்கள் அரசியல் சித்தாந்தம் ஊடுருவியிருக்கிறது.
  • எல்லாவற்றையும் தாண்டி, வலதுசாரி அரசியல் வன்முறையை மனசாட்சியுள்ள பலர் நிராகரிக்கின்றனர். பல ஏமாற்றங்களுக்கு நடுவில் நீதித் துறை கண்டனக் குரல் எழுப்புகிறது. இன்னும் யார் சொன்னால்தான் நீங்கள் கேட்பீர்கள்?

நன்றி: இந்து தமிழ் திசை (07  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories