TNPSC Thervupettagam

யார் நமக்கு வழிகாட்டி

August 7 , 2023 394 days 541 0
  • நாளுக்கு நாள் சமூக ஊடகங்கள் கணக்கற்றுப் பெருகிக் கொண்டிருக்க அவற்றுள் இருந்து நல்ல செய்திகளைத் தேர்ந்து தெளிவது மலையைக் கெல்லி எலியைப் பிடிக்கும் கதையாக இருக்கிறது. சில நாள்களுக்கு முன் சமூக வலைதளத்தில் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பதத்துக்கு அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தார் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மலேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர். 
  • அவர், "எல்லா ஊரும் என்னுடைய ஊரே, எல்லா மக்களும் எனக்கு உறவினர்களே என்று இதற்கு மேலோட்டமாக பொருள் சொல்லலாம். ஆனால், எல்லா ஊரும் என்னுடையது என்று ஏற்பதற்கு என்ன தேவை என்பதையும் இந்த வரிகள் சொல்கின்றன. எந்த ஊரும் என்னுடையது என்பதற்கு நமக்கு பரந்த மனம் இருக்க வேண்டும். அதே போல எல்லா மக்களும் என்னுடைய உறவினர்கள் என்றால் அதற்கு புரிதலும் இணக்கமாக வாழ்வதற்கான மனப்பான்மையும் வேண்டும். இந்த மனநிலை சாத்தியப்படாவிட்டால் யாவரையும் உறவினராக ஏற்க முடியுமா? 
  • நம்முடைய ரத்த உறவுகளை அரவணைத்துக் கொள்வதற்கே மிகுந்த பொறுமையும் சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுக்கும் மனமும் தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் மக்களை நம்முடைய உறவினர் என்று கூறுவதானால் அதற்கு மக்களின் மனதோடு அவர்களின் விருப்பங்கள், கலாசாரம், நம்பிக்கைகள் என அனைத்தையும் புரிந்து கொண்டு அதனை அப்படியே ஏற்று நாமும் அவர்களின் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும். அத்தகைய உள்ளம் கொண்டவர்களாக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதைப் பறைசாற்றுவதே இந்த புறநானூற்று வாசகங்கள். 
  • தமிழரின் மாண்பை உணர்த்த இந்த வாசகங்களே ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருவதற்கான காரணம் அதன் பொருள் ஆழம் தான். தமிழர்கள் உலகின் எந்த மூலை முடுக்கில் வாழ்ந்தாலும் அவர்களுக்குள் இத்தகைய விசாலமான மனம் இருக்க வேண்டும். அதுவே நமது அடையாளம் ஆகும்' என்று விளக்கமளித்தார். 
  • அற்புதமான தெளிவான விளக்கம். இந்தக் கருத்தின் ஆழம் உணர்ந்ததால்தான் ஐ.நா. சபையில் இந்தியாவின் பெருமையாக இந்த வாசகங்கள் வைக்கப்பட்டன. இதனைப் புரிந்து கொள்வதற்கே அடிப்படையில் மனம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். 
  • பேராசிரியர் எதன்பொருட்டு இத்தகைய விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்ற அரசியலுக்குள் நாம் செல்ல வேண்டியது இல்லை. என்றாலும் அரசியல் தமிழர் பண்பாட்டிலிருந்து நம்மை திசை திருப்பி விடாமல் விழிப்புணர்வோடு எதனையும் அணுக வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. 

"யாதும் ஊரே யாவரும் கேளிர்; 

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் 

    அவற்றோரன்ன' 

  • என்று சொல்லப் பட்டிருக்கிறது.
  • அதன்படி அவரவருக்கான மரியாதை, புகழ், பழி அனைத்தையும் அவரவரே வகுத்துக் கொள்கிறார்கள். ஆனால், தமிழர்களின் அடையாளம் பற்றிய கவலையில் நமக்கு அக்கறை இருக்கிறது. தமிழர் கடலோடிகளாக உலகம் முழுவதையும் சுற்றி வந்தவர்கள். உலகெங்கிலுமிருந்து வந்தாரை வாழவைத்தவர்களும் கூட. பாரத தேசத்திலும் இமயம் வரை சென்றவர்கள். ஆக, தமிழர் எப்போதும் ஒரு எல்லைக்குள் குறுகிக் கிடந்தவர்கள் அல்லர்.
  • இதே பாடலின் இறுதியில்

"நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் 

முறைவழிப் படூஉ மென்பது திறவோர்

காட்சியிற் தெளிந்தன மாகலின் மாட்சியிற்

பெரியோரை வியத்தலு மிலமே

சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே'

  • என்று கூறப்பட்டுள்ளது. 
  • அதாவது, "நீரின் போக்கில் தெப்பம் மிதந்து செல்வதைப் போல உலகின் உயிர்கள் எல்லாம் ஊழின் வழியே பயணிக்கும் என்று பெரியோர் கூறியிருப்பதைப் படித்துத் தெளிந்த காரணத்தால் பெரியோர் என்று எவரையும் கொண்டாடுவதுமில்லை; சிறியோர் என்று எவரையும் இகழ்தலும் இல்லை' என்று சொல்லப்பட்டிருக்கிறது. 
  • இந்த சமதர்மம்தான் தமிழரின் பெருமை. வேறுபாடு காண அவசியம் இல்லை என்ற ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள். அதே நேரத்தில் ஊழ் எனும் விதியின் வழியே வாழ்க்கை நகர்கிறது என்ற சிந்தனைத் தெளிவும் தமிழருக்கு இருந்தமையைப் புரிந்து கொள்கிறோம். ஊழ் போன்ற தத்துவ விவாதங்களும் கருத்துகளும் எந்த அளவுக்கு மொழிக்கு வளம் சேர்த்தனவோ அதே அளவுக்கு சமயமும் இடம் பெற்றிருக்கிறது. 
  • தமிழின் சிறந்த இலக்கியங்களெல்லாம் நம் முன்னோர் யார் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. இலக்கியத்தின் அடிப்படைகளை நாம் பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் கற்றுக் கொடுத்திருந்தாலே அவர்கள் நமது அடையாளத்தை உணர்ந்து அரவணைக்கும் மனப்பான்மை கொண்டவர்களாக வளர்ந்திருப்பர். 
  • ஆனால், அத்தகைய சூழல் நம்முடைய இளம் தலைமுறையினருக்கு இல்லை என்பதே உண்மை. தமிழின் தனிச்சிறப்புக்கள் யாதென்று தெரிந்து கொள்ள இலக்கியங்களை உற்று நோக்கத் தொடங்கினால் தமிழ் இலக்கியங்களில் பிரிக்க முடியாததாக இறை, சமயம் ஆகியன இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். 
  • சமயத்தை ஒதுக்கி விட்டால் தமிழ் இலக்கியங்களில் ஏதும் எஞ்சியிருக்க வாய்ப்பில்லை எனும் அளவுக்கு தமிழால் சமயமும் சமயத்தால் தமிழும் வளர்ந்திருக்கின்றன. தமிழ் இலக்கியம் படித்திருந்தால் மட்டுமே இதனை நாம் புரிந்து கொள்ள இயலும். 
  • ஒவ்வொரு தனிமனிதரையும் "அரசியல்படுத்தல்' என்பதை விடவும் அவசியமானது "அடையாளத்தை தெளிந்து நடத்தல்'. சமய இலக்கியங்கள் எதைப் பேசுகின்றன? அவையும் சமத்துவத்தை பேசுகின்றன. பெரியபுரணம் போன்றதொரு சமய இலக்கியம் தமிழின் தனிச் சிறப்பு. 
  • பெரிய புராணத்தில் மூவரை "ஐயர்' (உயர்ந்தோர்) என்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். ஒருவர், காட்டில் வேடுவரான கண்ணப்ப நாயனார், மற்றவர் குயவரான திருநீலகண்ட நாயனார், மூன்றாமவர் நந்தனார் என்றழைக்கப்படும் திருநாளைப் போவார் நாயனார். இதிலிருந்தே சிறியோர், பெரியோர் என்று நாம் எவரையும் பிரித்துப் பார்ப்பது வழக்கமில்லை, அவரவர் பண்பே அவரவருக்கான இடத்தைத் தீர்மானிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 
  • தமிழரின் அறம் அவர்களது வாழ்வியலாக இருந்தது. அதிலே 

"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி'

  • என்று ஒளவை பாடியிருக்கிறார். கொடுப்பவர் உயர்ந்தோர், கொடுக்க விரும்பாதவர் இழிந்தோர் என்பதைத் தவிர வேறு பாகுபாடு ஒன்றும் கிடையாது என்கிறார். 
  • இன்றைக்கு நம்மிடையே அரசியல் செய்ய முற்படுவோர் பிரிவினையை, ஏற்றத்தாழ்வைப் பேசுகின்றனர். தமிழர் அறம் தெரியாமல் தமிழராக ஒன்றுபடுவது எங்ஙனம்? தமிழரின் மொழியும் சமயமும் அறமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இதனைக் கூட அறிந்து கொள்ளாதவர்களை நம்பி தமிழ்ச்சமுதாயம் பயணிக்குமேயானால் விளைவு என்னவாகும்? 
  • தமிழர் வாழ்வு எப்போது நிலைக்கும்? எப்படி இருந்தால் நிலைக்கும் என்று நமக்கு மகாகவி பாரதியார் வழிகாட்டுகிறார். "தேசிய கீதங்கள்' வரிசையில், "தமிழ்ச் சாதி' என்ற தலைப்பில் தமிழும் தமிழ்ச் சமூகமும் நிலைத்திருக்க வழி சொல்கின்றார்.

"விதியே விதியே தமிழச் சாதியை

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ'

என்று விதியிடம் வினவுகிறார். 

"தன்மையும் தனது தருமமும் மாயாது

என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்

வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ'

  • என்று ஆதங்கத்தோடு கேட்கும் பாரதியார், சிலப்பதிகாரமும், திருக்குறளும், எல்லையில்லாத பரம்பொருளை கம்பர் பாடியிருக்கும் விதமும் நம்மிடம் இருக்கும் வரை தமிழ்ச் சாதிக்கு அழிவில்லை, அது அமரத்துவம் கொண்டதாக விளங்கும் என்று தான் நம்புவதாகக் கூறுகிறார். 
  • ஆக, இந்த மூன்று இலக்கியங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த மூன்று இலக்கியங்களுள் இரண்டு சமயம் சார்ந்தவை. சிலப்பதிகாரம் சமயச் செய்திகளை நம்பிக்கைகளை மிக விரிவாகவும் நுட்பமாகவும் பேசும் நூல். கம்பராமாயணம் இதிகாசக் கதையை அறத்தொடு வாழும் வழியாக முன்வைக்கும் நூல். திருக்குறள் வாழ்வியல் அறத்தைப் பேசும் நூல். இம்மூன்று நூல்களும் கற்கும் தமிழர் தடம் மாறமாட்டார்கள். எத்துணைத் துன்பம் வரினும் தமிழர் நிலைத்து வாழ்வர் என்று சொல்கிறார். 
  • தொடர்ந்து பல கேள்விகளை விதியின் முன் வைக்கும் பாரதி,

நமது மூதாதையர் நயமுறக் காட்டிய

ஒழுக்கமும் நடையும் கிரியையும் 

        கொள்கையும்

ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே

தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு'

  • என்று நம் முன்னோர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி வாழ்ந்தால் போதும் என உற்ற வழியையும் காட்டுகிறார்.
  • தமிழர் அறம், சமயம் இரண்டும் ஒன்றே. அதனை மனதில் கொண்டு தமிழராக பல திசை நாடுகளுக்கும் சென்று தமிழர் மேன்மையை நிலைநிறுத்துவோரை பின்பற்றலாம். அதனை விடுத்து அரசியல் செய்ய முற்படும்போது விளைவு மாறானதாகவே இருக்கும். 
  • நமக்கு வழிகாட்டுவோர் நமது முன்னோரின் கருத்துக்களை படித்தவராகவும் அதனை ஏற்றுப் போற்றி அதன் வழி நடப்பவராகவும் இருத்தல் வேண்டும். அதனை தமிழ்ச் சமூகம் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே பன்னெடுங்காலமாக உயிர்ப்புடன் வேரூன்றி நிற்கும் இச்சமூகம் நின்று நிலைக்க உதவும். 
  • உலகுக்கு வழிகாட்டும் திறத்துடன் தமிழும் தமிழரும் வாழ்வாங்கு வாழ கசடற தமிழ் கற்கும் தலைமுறை உருவாக வேண்டும்.

நன்றி: தினமணி (07  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories