TNPSC Thervupettagam

யார் பொறுப்பில் ஊராட்சிச் செயலாளர்கள்

October 17 , 2023 452 days 905 0
  • கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி கிராமசபைக் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், பிள்ளையார்குளம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த முதியவரை ஊராட்சிச் செயலாளர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளித்தது. இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த ஊராட்சிச் செயலாளருக்கு முன்ஜாமீனும் கிடைத்துவிட்டது. பிள்ளையார்குளம் ஊராட்சியோ, கிராம சபையோ அவர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதுதான் இன்று நம் ஊராட்சிகளின் நிலை.

அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம்

  • ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தின் அலுவலகப் பணியை மேற்கொள்வதற்காக ஊராட்சியின் வங்கிக் கணக்கிலிருந்து ஊதியம் பெறும் முக்கியப் பணியாளர்கள் நம் ஊராட்சிச் செயலாளர்கள். புதிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் நடைமுறைக்கு வந்த காலம்தொட்டு, அதாவது, 1996ஆம் ஆண்டு முதல் செயலாளர்களை நியமிக்கும் பொறுப்பும், அவர்கள் மீதான நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்திடமே இருந்தது.
  • ஒரு நிர்வாகத்திடமிருந்து சம்பளம் வாங்கும் ஒருவர், அந்த நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதுதான் பொதுவான விதி. இந்த நடைமுறையை மாற்றி, சட்டத்திருத்தம் கொண்டுவந்தது தமிழ்நாடு அரசு. (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவுகள் 104 மற்றும் 106 இல் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தங்கள்) ஊராட்சிச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ஊராட்சியிடமிருந்து பறித்து, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (பிடிஓ) கொடுத்துள்ளது. (கிராம ஊராட்சிச் செயலர்கள் குறித்த பணி விதிகள், 2023)

விளைவுகள் மோசமாகலாம்

  • ஊராட்சிச் செயலர்களுக்குப் பணிப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும், அவர்களின் களப்பணிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்குப் பின்னாலும் அப்பஞ்சாயத்தின் செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும் ஊராட்சிச் செயலர்களின் ஒத்துழைப்பும் நிச்சயமாக இருக்கிறது.
  • கிராம ஊராட்சிகள் பலவற்றில் நாம் இதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் ஊராட்சியில் பணி செய்யும் ஒரு பணியாளர், ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல், சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு நேரடியாகத் தொடர்பு இல்லாத வட்டார வளர்ச்சி அலுவலரின் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தச் சட்டத்திருத்தத்தின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்குப் பிள்ளையார் குளம் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு. இதே நிலை தொடர்ந்தால் விளைவுகள் மோச மாகலாம்.

என்ன செய்ய வேண்டும் 

  • ஊராட்சிச் செயலர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்திருப்பதன் மூலம், ஊராட்சி நிர்வாகத்தில் தேவை இல்லாமல் மாநில அரசு தலையிடுகிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு மாவட்ட ஆட்சியரின் அல்லது ஒரு துறைச் செயலாளரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டால் தமிழ்நாடு அரசு எப்படி எதிர்வினையாற்றும்? அதே போன்றதாகத்தான் இன்றைக்கு ஊராட்சியில் ஓர் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ஊராட்சியிடமிருந்து பறித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
  • உடனடியாக இந்தச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற்று, ஊராட்சித் தலைவர், செயலாளர் அனைவரும் ஒருங்கிணைந்து வேலை செய்வதற்கான சூழலை உருவாக்க அரசு முன்வர வேண்டும். அவர்களைப் பிரித்து வைத்துவிடக் கூடாது. கிராமசபையோ, ஊராட்சி மன்றத் தீர்மானங்களோ தன்னைக் கட்டுப்படுத்தாது என்று ஓர் ஊராட்சிச் செயலாளர் நினைப்பாரேயானால், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நல்ல பெயர் வாங்கினால் போதுமானது என்று கருதுவாரேயானால், கிராம மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை; பி.டி.ஓ- வுக்குப் பதில் சொன்னால் போதுமானது என்று முடிவெடுப் பாரேயானால், பஞ்சாயத்து நிர்வாகம் கேள்விக்குறியாகிவிடும்.
  • 12,525 ஊராட்சிகள் மூலம் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய அரசு வளர்ச்சியை முடக்குகிற இந்தச் செயலில் இறங்க வேண்டுமா? ஆகவே, ஊராட்சியின் பொறுப்பிலேயே இருக்கட்டும் ஊராட்சிச் செயலாளர்கள். இனி, ஒரு பிள்ளையார்குளம் சம்பவம் தமிழ்நாட்டில் நடக்க வேண்டாம்!

நன்றி: இந்து தமிழ் திசை (17 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories