TNPSC Thervupettagam

யுனெஸ்கோவில் ரிக் வேதமும் திருக்குறளும்

April 27 , 2023 626 days 468 0
  • பண்பாடும் நாகரிகமும் சம காலத் தேவைக்கான கடந்த காலச் சூட்டில்தான் எப்போதும் உயிர் வாழ்கின்றன. காலத்தின் தேவைக்குப் பயன்படாதவை காணாமல் போய்விடும். பல பண்பாடுகள் குறிப்பிட்ட மதத்திற்கும் மக்களுக்கும் நலமும் வளமும் தருவதாக ஒரு காலத்தில் இருந்தன என்பதற்காக இப்போதும் அவர்களால் கொண்டாடப்படுவதாக இருக்கின்றன. ஆனால் திருக்குறள் இப்போதைய தேவைக்கும் பயன்படும் சிந்தனைகளைக் கொண்டதாக இருக்கிறது. இக்காலத் தேவை என்பது உலகப் பொது நலனைக் கருதும் பண்பாடு ஆகும்.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக அமைதிக்காகவும் நிலையான வளர்ச்சிக்காகவும் மனித உரிமைக்காகவும், நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு, உறவு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றுக்காகவும் உருவானது யுனெஸ்கோ. இது அறிவுசார் ஒத்துழைப்புக்கான உலகளாவிய அமைப்பாகும். இதன் தலைமையகம் பாரீசில் உள்ளது.
  • இது, கல்வி, அறிவியல் மானுடவியல், பண்பாடு, தகவல் தொடர்பு ஆகிய ஐந்து துறைகளைத் தனது பணிக்களமாகக் கொண்டு ஆய்வுத் திட்டங்களை ஆதரித்து, நிதி உதவி செய்து, ஊக்கப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஊடகச் சுதந்திரத்தைக் காப்பாற்றுதல், பண்பாட்டுத் தடயங்களையும் வரலாற்றையும் பாதுகாத்தல், பன்முகப் பண்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
  • இதில் உலகிலேயே மக்கள்தொகையில் முதல் இடத்திற்கு இப்போது வந்துள்ள இந்தியா உட்பட 193 நாடுகளின் உறுப்பினர்களும் 12 இணை உறுப்பினர்களும் அரசு, அரசு சாரா, தனியார்துறை சார்ந்தவர்களும் உள்ளனர். இதற்கென்று உறுப்பு நாடுகளும் இணை உறுப்பினர்களும் கொண்ட பொதுக்குழு உள்ளது.
  • நிதி நிலை மற்றும் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுத் திட்டங்கள் தொடர்பாக ஆண்டுக்கு இருமுறை கூடி விவாதித்து முடிவெடுக்கும் நிருவாகக் குழு ஒன்று இருக்கிறது. தலைமை இயக்குநர் ஒருவர் இருக்கிறார். இவர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கென்று உலகளாவிய ஆலோசனைக்குழு ஒன்று உள்ளது.
  • நைல் நதி அணையால் மூழ்க இருந்த எகிப்தின் பண்பாட்டு இடங்களைக் காப்பாற்ற முன்வந்த யுனெஸ்கோவுக்குப் பண்பாட்டு இடங்கள் நான்கினை எகிப்து நன்கொடையாக வழங்கியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உலகம் முழுதும் உள்ள பண்பாட்டுப் பெருமையும் பழமையும் கொண்ட சின்னங்களையும் இடங்களையும் யுனெஸ்கோ பாதுகாக்கத் தொடங்கியிருக்கிறது.
  • தொடக்கத்தில் (1978) பட்டியலில் இருந்தவை 12. இப்போது (2021) 1,154 உள்ளன. பட்டியலில் 57 இடம் பிடித்து, இத்தாலி முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா, தஞ்சாவூர் பெரிய கோயிலோடு 40 எண்ணிக்கையில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஆக்ராவும் அஜந்தாவும் இந்தியாவின் முதல் இரண்டு இடங்களாக இருக்கின்றன.
  • மேலும் உலக மாநகரங்களில், இலக்கியம், கைவினை, நாட்டுப்புறக் கலைகள், திரைப்படம், ஊடகக் கலைகள் , இசை, அமைதி ஆகியவற்றைப் போற்றிப் பாதுகத்துப் படைப்பாற்றலை வளர்க்கும் மாநகரைத் தேர்ந்தெடுத்து யுனெஸ்கோ அறிவித்து வருகிறது.
  • இலக்கிய நிகழ்ச்சிகள், இலக்கியத் திருவிழாக்கள், நூலகப் பயன்பாடு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இலக்கியப் பகிர்வுகள், தரமான புத்தக வெளியீடுகள், மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு, மரபு மற்றும் நவீனத் தொழில்நுட்பம் கொண்ட இலக்கியப் படைப்புகள் உருவாதல், கவிதை விழாக்கள், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், நாடகம் மற்றும் இசை விழாக்கள், புத்தக விழாக்கள் ஆகியவை நடைபெறுவதைக் கொண்டு இலக்கிய மாநகரங்களை யுனெஸ்கோ அறிவிக்கிறது. மேற்கண்ட தகுதிகளைக் கொண்டதாக இப்போது சென்னை மாநகரமும் இருக்கிறது.
  • இதுவரை உலக அளவில் ஆறு கண்டங்களில் உள்ள இருபத்தெட்டு நாடுகளைச் சேர்ந்த 42 மாநகரங்களை யுனெஸ்கோ இலக்கிய மாநகரங்களாக அறிவித்துள்ளது. ஐரோப்பாவில் மட்டும் 24 மாநகரங்கள் உள்ளன. இந்திய மாநகரம் ஏதும் அதில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. யுனெஸ்கோ அறிவித்த முதல் இலக்கிய மாநகரம், ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க். இது உலகப் புத்தக விழாவிற்குப் புகழ்பெற்ற மாநகரம் ஆகும்.
  • அண்மையில் கேரள அரசு உள்ளாட்சித்துறை வழியாக யுனெஸ்கோவுக்கு விண்ணப்பித்துள்ளது. அதில் அமைதி மாநகராகத் திருவனந்தபுரத்தையும் பல்லுயிர் காப்பு மாநகராகக் கொல்லத்தையும் வடிவமைப்புக் கலை மாநகராகக் கொச்சியையும் கற்றல் மாநகராகத் திரிசூரையும் கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலை மாநகராகக் கண்ணூரையும் அறிவிக்கக் கேட்டுக்கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசு, திருக்குறளுக்கு யுனெஸ்கோ அங்கிகாரம் பெறச் சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்திருக்கிறது. யுனெஸ்கோ செயற்பாடுகளில் இதுபோன்ற நிகழ்வு இதற்கும் முன்னர் ரிக் வேதச் சுவடிகளுக்கு நடந்திருக்கிறது.
  • யுனெஸ்கோ 2007-ஆம் ஆண்டில் ரிக் வேதச் சுவடிகளை உலகின் மிக முக்கியமான ஆவணமாக அங்கீகரித்துள்ளது. உலகப் பாரம்பரியமிக்க நினைவுகளின் பதிவேட்டில் (மெமரி ஆஃப் தி வேர்ல்ட் ரிஜிஸ்டர்) பட்டியலிட்டுள்ளது.
  • உலகின் உன்னத விழுமியங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் இந்தப் பதிவேட்டுமுறை யுனெஸ்கோவால் உருவாக்கப்பட்டிருக்கிறது. யுனெஸ்கோ, ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரங்களுக்கான சிறப்பான அமைப்பாகும்.
  • இதற்கென்று உலகளாவிய ஆலோசனைக்குழு ஒன்றுள்ளது. அது, தென்னாப்பிரிக்காவில் கூடி, "தி ஸ்டோரி ஆஃப் தி கெல்லி கேங் (1906), தி விஸார்ட் ஆஃப் ஓஸ் (1939) ஆகிய திரைப்படக் கையெழுத்துச் சுவடிகள், தி கன்விக்ட் ரெக்கார்ட்ஸ் ஆஃப் ஆஸ்திரேலியா (1788-1868), நெல்சன் மண்டேலாவின் வழக்கு ஆவணங்கள், ரிக் வேதச் சுவடிகள் ஆகிய 38 பதிவுகளைப் பட்டியலில் சேர்க்க முடிவெடுத்திருக்கிறது.
  • ரிக் வேதச்சுவடிகள் 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனினும் ரிக் வேதம், வேதங்களில் பழமையானதென்றும் அது மூவாயிரம் ஆண்டு தொன்மை உடையது என்றும் வழிவழியாக வாய்மொழியாக வந்துகொண்டிருப்பதென்றும் இந்துக்களின் வேதம் என்றும் மனித குல வரலாற்றின் முதல் இலக்கிய ஆவணம் என்றும் இந்தியா மட்டுமின்றி தெற்காசியா, தென்கிழக்காசியா, மத்திய ஆசியாவின் சில பகுதிகளில் பரவியிருக்கும் ஆரிய கலாசாரத்தின் ஆதார வாயிலாக உள்ளது என்றும் உலகின் தொன்மையான கருவூலம் என்றும் பட்டியலில் ரிக் வேதம் சேர்க்கப்பட்டதற்கான காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
  • புணேயில் உள்ள பண்டார்க்கர் ஆய்வு நிறுவனத்தில் உள்ள 28,000 சுவடிகளிலிருந்து ரிக் வேதச் சுவடிகள் 30 பட்டியலிடப்பட்டுள்ளன. அவை மாக்ஸ் முல்லர் முதலாகப் பலர் ஆய்வுக்குப் பயன்படுத்திய சுவடிகள். அவற்றுள் ஒரு சுவடி பிர்ச் எனும் மரப்பட்டையில் "ஷாரதா' எனும் எழுத்திலும் மற்ற 29 சுவடிகள் தேவநாகரியிலும் எழுதப்பட்ட தாள் சுவடிகளாகவும் உள்ளன.
  • "ஷாரதா' எழுத்து கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. குப்த எழுத்திலிருந்து வந்திருக்கும் தேவநாகரி போன்றது. காஷ்மீரி மொழிக்கான எழுத்தாக அது உள்ளது. காஷ்மீர் பண்டிதர்களின் பழக்க வழக்கம், பண்பாடு குறித்து "ஷாரதா' எழுத்தில் உள்ள வடமொழிச் சுவடிகள் நிறைய உள்ளன. அச்சுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர இந்த எழுத்து 2012-இல் யூனிகோடில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • ரிக் வேதச் சுவடிகளை யுனெஸ்கோ கவனத்திற்கு எடுத்துச் சென்றவர்கள் இருவர். ஒருவர் தேசிய சுவடிகள் ஆணைய (நேஷனல் மிஷன் ஃபார் மானுஸ்கிரிப்ட்ஸ்) இயக்குநர் சுதா கோபாலகிருஷ்ணன். இன்னொருவர் பண்டார்க்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் மதிப்புறு செயலரும் ஓய்வு பெற்ற வடமொழி மற்றும் பாலிமொழிப் பேராசிரியருமான எம்.ஜி. தட்பலே.
  • இப்போது தமிழ்நாடு அரசு, திருக்குறளுக்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் 19.3.2022 அன்று தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில் "திருக்குறளுக்கு ஐக்கிய நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ) அங்கீகாரம் பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தமிழறிஞர்கள், திருக்குறளைப் பலமொழிகளில் மொழிபெயர்த்தவர்கள், உரையாசிரியர்கள் ஆகியோர் பங்கேற்கும் வகையில் பிரான்சு நாட்டின் பாரீசு நகரில் உள்ள யுனெஸ்கோ விழா அரங்கத்தில், பாரிசு பன்னாட்டு உயர்கல்வி நிறுவனத்துடன் இணைந்து இரு நாட்கள் திருக்குறள் மாநாடு நடத்தப்படும். இதற்கெனத் தொடராச் செலவினமாக ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கப்படும்' என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார்.
  • திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க, இதற்கும் முன்பு சட்டப்பேரவையில் தீர்மானம் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று பாரதியார் திருக்குறளை உலகப் பொதுமறையாகவே அறிவித்திருக்கிறார்.
  • திருவள்ளுவருக்குக் கோயில் இருக்கிறது; கோட்டம் இருக்கிறது; உரை இருக்கிறது; ஓவியம் இருக்கிறது; சிலை இருக்கிறது. எனினும் திருக்குறளின் தேவையையும் பெருமையையும் உலகம் இன்னும் கூடுதலாக உணரத்தக்க வகையில் இப்போது முதலமைச்சரின் முன்னெடுப்பு அமைந்திருக்கிறது.
  • திருக்குறள் நூல் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தேவைப்படுகிற குறட்பாக்களைக் கொண்டு இருக்கிறது. செம்மொழி மாநாட்டின்போது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது இலக்குரையாக இருந்தது. வெறுப்பு அரசியல், பருவ கால மயக்கங்களிலும் மாறுதல்களிலும் ஏற்படும் சுற்றுச்சூழல் நிலைமைகள், உள் நாட்டிலும் நாடுகடந்தும் வெடிக்கும் மத வன்முறைகள், எல்லை ஆக்கிரமிப்புகள், ஏவுகணைகள் என்று உயிரினங்களை அச்சுறுத்தும் இன்றைய நிலையில் முன் எப்போதையும் விடத் திருக்குறள் உலகுக்குத் தேவைப்படுகிறது.
  • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய திருக்குறள், உலகப் பொது நலன் சார்ந்த நூலாக இருக்கிறது. அது, தமிழில் இருக்கிறது என்பது தமிழுக்குப் பெருமையாகும். அன்பு, அருள், இன்னா செய்யாமை, நட்பு, வாய்மை, மெய்யுணர்வு, பல்லுயிர் பாதுகாப்பு, இல்வாழ்க்கை என்று "வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்' எப்படி என்பதற்கான வழிகாட்டியாகவும் ஒரு குறிப்பிட்ட சமயச் சார்பற்றதாகவும் அது இருக்கிறது.
  • எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் திருவள்ளுவருக்கு இயல்பு என்று பரிமேலழகர் கூறுகிறார் ( திருக்குறள் 322 உரை)
  • சான்றாக "அன்பின் வழியது உயிர்நிலை' என்ற வள்ளுவரின் வாக்கில் மனித உயிர்கள் மட்டுமில்லை, பூமியில் உள்ள எல்லா உயிர்களின் வாழ்க்கைக்கும் அன்பு தேவை என்பதைக் கண்டுகொள்ள முடிகிறது. மனிதகுல உயிர்நிலை சுற்றுச்சூழல் உட்பட மற்ற உயிர்களின் வாழ்க்கையோடு பிணிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு மனித குலத்தின் அன்பில்தான் மற்ற உயிர்களின் நிலைப்பாடும் உள்ளது என்பதைத் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
  • இது ஒரு சாதிக்கோ, மதத்திற்கோ, நாட்டுக்கோ மட்டுமாக இல்லாமல் உலக அமைதிக்கான குரலாகவும் "சமயக் கணக்கர் தம் மதிவழி கூறாது' உலகியல் கூறும் நூலாகவும் "பொருளும் இன்பமும் அறத்து வழிப்படுக' என்று அறிவுறுத்தும் நூலாகவும் இருக்கிறது.
  • இவற்றையெல்லாம் உலக நாடுகள் உணர "யுனெஸ்கோவில் திருக்குறள்' வழிதிறக்கட்டும்.

நன்றி: தினமணி (27 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories