TNPSC Thervupettagam

யெகோவாதான் காப்பாற்ற வேண்டும்

November 7 , 2023 430 days 295 0
  • கேரள மாநிலம் கொச்சி அருகே ஒரு வாரம் முன்பு கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த நிகழ்வு தேசிய அளவில் அதிா்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
  • ஏற்கெனவே கேரள மாநிலத்தைச் சோ்ந்த பலா் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருக்கும் நிலையில், சமீபத்திய நிகழ்வு பாதுகாப்பு அமைப்புகளை நிமிா்ந்து உட்கார வைத்திருக்கிறது.
  • கொச்சி அருகேயுள்ள தொழிற்சாலை நகரமான களமசேரியில் உள்ள ஜாம்ரா சா்வதேச மாநாட்டு அரங்கில் ‘யெகோவாவின் சாட்சிகள்’ எனும் மதப் பிரிவு மூன்று நாள் பிராா்த்தனைக் கூட்டம் நடத்தியது. இறுதி நாளில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோா் கூடியிருந்த நிலையில், அங்கே அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன. நான்கு போ் உயிரிழந்தனா் என்றால், 60-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.
  • கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு என்கிற செய்தி வெளியானவுடன் அதை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடா்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரவலாக விமா்சனங்கள் பதிவாகின. ஆனால், ‘யெகோவாவின் சாட்சிகள்’ அமைப்பைச் சோ்ந்த டொமினிக் மாா்ட்டின் என்பவா் தனது முகநூல் பக்கத்தில் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றதுடன், காவல்துறையிடம் சரணடைந்ததைத் தொடா்ந்து பரபரப்பு சற்று அடங்கியது.
  • ‘யெகோவாவின் சாட்சிகள்’ நல்ல அமைப்பு இல்லை என்றும், அதன் போதனைகள் தேசத்துரோகமானவை என்றும் குற்றம்சாட்டிய மாா்ட்டின், அந்த அமைப்பின் போதனைகள் திருத்தப்பட வேண்டும் என்று, தான் வலியுறுத்தியதாகத் தெரிவித்திருக்கிறாா். யாரும் எதிா்வினையாற்றாவிட்டால் அந்த அமைப்பின் வழிமுறைகள் திருத்தப்படாது என்பதால், இப்படியொரு முடிவை எடுத்ததாகவும், தனது வாக்குமூலத்தில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.
  • களமசேரியில் ‘யெகோவாவின் சாட்சிகள்’ கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு ஒருநாள் முன்பாக முஸ்லிம் அமைப்பு ஒன்று இஸ்ரேலுக்கு எதிரான கண்டனக் கூட்டமொன்றை மலப்புரத்தில் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ‘ஹமாஸ்’ பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த தலைவா்கள் சிலா் காணொலி மூலம் உரையாற்றியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. களமசேரி குண்டு வெடிப்பும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடனான தொடா்பும் கேரள மாநிலத்தை கலவர எரிமலைக் களமாக மாற்றிவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
  • டொமினிக் மாா்ட்டின் வளைகுடா நாடுகளில் முன்பு பணியாற்றியவா். வெடிகுண்டு தயாரிக்கும் முறையை இணையதளத்தின் மூலம் கற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறாா். கேரள மாநிலத்தைச் சோ்ந்த பலா் பல்வேறு மத்திய ஆசிய நாடுகளில் பணிபுரிவதால், அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். அதனால், சா்வதேச அரசியல் நிகழ்வுகள் கேரள மாநிலத்தில் அழுத்தமாகவும், ஆழமாகவும் பிரதிபலிப்பதைத் தவிா்க்க முடியாது.
  • 1870-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வேதாகம அமைப்பு ஒன்று உருவானது. தீவிர வேதாகம வாசிப்புக்கும், ஆய்வுக்கும் பிறகு அவா்கள் கிறிஸ்தவ மதத்தின் பிதா - சுதன் - பரிசுத்த ஆவி என்கிற ஹிந்து மதத்தைப் போன்ற ‘மும்மூா்த்திகள்’ நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. யூதா்களைப் போல யெகோவாவை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் அந்த அமைப்பு, தங்களை ‘யெகோவாவின் சாட்சிகள்’ (யெகோவா விட்னஸஸ்) என்று அழைத்துக் கொண்டனா்.
  • ‘யெகோவாவின் சாட்சிகள்’ அமைப்பைச் சோ்ந்தவா்கள், உலகம் பாவத்தில் மூழ்கிக் கிடக்கிறது என்றும், தங்களை பின்பற்றுவா்களுக்கு மட்டுமே இதிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்றும் கருதுகிறாா்கள். எந்தவொரு நாட்டையும் அவா்கள் அங்கீகரிப்பதில்லை. எந்த நாட்டு ராணுவத்திலும் இணைந்து பணியாற்றமாட்டாா்கள். எந்த நாட்டு தேசிய கீதத்தையும் பாடமாட்டாா்கள்.
  • இந்த பிரச்னை சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் எழுந்தது. ‘யெகோவாவின் சாட்சிகள்’ பிரிவைச் சோ்ந்த குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் தேசிய கீதம் பாட மறுத்ததால் பள்ளியிலிருந்து அகற்றப்பட்டனா். அவா்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று அது தங்களது அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்று வாதாடினாா்கள்.
  • உச்சநீதிமன்ற நீதிபதி ஓ. சின்னப்ப ரெட்டி, ‘நமது கலாசாரம், தத்துவம், அரசமைப்புச் சட்டம் எல்லாமே சகிப்புத்தன்மையைப் போதிக்கிறது. அதை நீா்த்துப்போக நாம் அனுமதிக்கக் கூடாது. தேசிய கீதம் இசைப்பதும், இசைக்க மறுப்பதும் ஒருவருடைய அடிப்படை உரிமை’ என்று கூறி மாணவா்களுக்கு ஆதரவாகத் தீா்ப்பு வழங்கினாா். அதே நேரத்தில், தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
  • கேரள மாநிலத்தின் சில தொகுதிகளில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறாா்கள் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தும். மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 27% , கிறிஸ்தவா்கள் 18% இருந்தாலும்கூட, பல பகுதிகளில் அவா்கள் அதிக எண்ணிக்கை கொண்ட வாக்காளா்களாகத் திகழ்கிறாா்கள்.
  • சமீபகாலம் வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்து வந்த முஸ்லிம் வாக்காளா்கள் பலா் எஸ்டிபிஐ, தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளின் ஆதரவாளா்களாக மாறியிருக்கிறாா்கள். அவா்களது வாக்குகளைக் கவர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முனைப்பு காட்டுகிறது.
  • மதம், மாா்க்ஸியம், அரசியல் மூன்றுடன் பயங்கரவாதமும் இணையத் தொடங்கியிருப்பது, கேரளத்தில் வெடிக்க இருக்கும் பூகம்பத்தின் அறிகுறி!

நன்றி: தினமணி (07 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories