- யெஸ் பேங்க் நிறுவனத்தைச் சீரமைப்பதற்கான திட்டத்தை மின்னல் வேகத்தில் எடுத்திருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. அந்த நிறுவனம் வசூலிக்க வேண்டிய கடன்கள் தொடர்பாக, தற்காலிகத் தவணை நீட்டிப்பை அளித்த அடுத்த நாளே, அதன் பங்குகளில் 49%-ஐ பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாங்கிக்கொள்ள அனுமதித்திருக்கிறது.
யெஸ் வங்கியின் நிலை
- தற்போதைக்கு, யெஸ் பேங்கை மீட்பதற்காக பாரத ஸ்டேட் வங்கியைப் பணிப்பதைத் தவிர ரிசர்வ் வங்கிக்கு வேறு வழியில்லை. வலுவற்ற வங்கிகளை வலுவான அரசு வங்கிகளுடன் இணைக்கும் முடிவை அரசு தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. எனினும், வங்கிகள் நொடிக்கும் நிலைக்கு வந்தால் இப்படித் தலையிட்டு அவற்றை மீட்பது விரும்பத்தக்க நடவடிக்கை அல்ல.
- வங்கிகள் மீது ரிசர்வ் வங்கிக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் எப்படிப்பட்டவை, தணிக்கை முறைகள் ஏன் வலுவாக இல்லை, வங்கியின் மூத்த நிர்வாகிகள் ஏன் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் மீறுகிறார்கள் போன்ற கேள்விகள் எழுகின்றன. பாதிக்கப்பட்டுள்ள பல வங்கிகளின் பிரச்சினைகளுக்கும், யெஸ் வங்கியின் பிரச்சினைகளுக்கும் வேறுபாடுகள் ஏதுமில்லை.
- மனை வணிகத் துறையினர், மின்னுற்பத்தித் திட்டங்களில் முதலீடு செய்தோர், வங்கியல்லாத நிதி நிறுவனத்தார் ஆகியோரால் வாங்கிய கடன்களை உரிய காலத்தில் திருப்பிச்செலுத்த முடியவில்லை. பல பெருநிறுவனங்கள் வாங்கிய கடன்களைத் திருப்பிச்செலுத்த முடியாமல் திவால் சட்ட நடைமுறைகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துவிட்டன. எனவே, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் யெஸ் வங்கியின் வாராக்கடன் மதிப்பு ரூ.17,134 கோடியானது.
மூலதனத்தைத் திரட்டுதல்
- இது முந்தைய ஆறு மாத காலத்தில் இருந்ததைப் போல இரண்டு மடங்கு. பற்று-வரவைச் சமப்படுத்த மூலதனத்தை மேலும் திரட்டக்கூட வங்கி முயற்சி எடுத்தது. தொழில் துறையில் காணப்படும் மந்த நிலையால் அந்த முயற்சிக்குப் பலன் இல்லை. யெஸ் வங்கிக்கு உள்ள வாராக்கடன் சுமை விரைவில் தீரும் என்பதற்கான அறிகுறிகளும் இல்லை.
- யெஸ் வங்கியின் வாராக்கடன் அளவு அதிகரித்து வந்த நிலையில், அதை ‘நிர்வாகத்தைச் சீரமைக்கும் நடவடிக்கைக்கு’ ரிசர்வ் வங்கி ஏன் உட்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. ரிசர்வ் வங்கி தலையிடும் அளவுக்கு அதன் நிதிநிலைமை முந்தைய ஆறு மாதங்களில் அவ்வளவு மோசமடைந்திருக்கவில்லை என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. இது இன்னொரு பிரச்சினையையும் அடையாளம் காட்டுகிறது.
- வங்கிகள் தங்களுடைய இழப்பு அல்லது வாராக்கடன் அளவுகளைக் குறைத்தும், வரக்கூடிய வரவுகள் குறித்து அதிக நம்பிக்கையுடனும் அறிக்கைகள் தருகின்றன. அவற்றைப் பரிசீலிக்கும் ரிசர்வ் வங்கி, இதில் இப்போது தலையிட வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வருகிறது. ஆனால் அடுத்த மூன்று மாதங்களிலேயே வங்கியின் நிலைமை பாதாளத்துக்குச் சென்றுவிடுகிறது.
- வங்கிகளைத் தணிக்கை செய்யும் முறைகளிலேயே மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பதையே யெஸ் வங்கி நெருக்கடி எடுத்துக்காட்டுகிறது. மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் ஆலோசித்து வங்கிகள் நல்ல முறையில் செயல்பட புதிய செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (11-03-2020)