- இந்திய வரலாற்றை அடித்தள மக்களின் நோக்கிலிருந்து எழுத வேண்டும் என வலியுறுத்தி, வரலாறு எழுதும் முறையில் ‘விளிம்பு நிலைப் பார்வை’ (Subaltern Studies) என்னும் புதிய அணுகுமுறையை முன்வைத்த வரலாற்றறிஞர் ரணஜித் குஹா, தனது 100ஆவது வயதில் 2023 ஏப்ரல் 28 அன்று, ஆஸ்திரியா நாட்டில் வியன்னா உட்ஸ் என்னுமிடத்தில் மறைவெய்தினார்.
- தற்போதைய வங்கதேசத்தில்உள்ள பைகராகஞ்ச் மாவட்டத்தில் சித்தகதி என்னும் கிராமத்தில், 1923 மே 23 அன்று ரணஜித் குஹா பிறந்தார். அவரது தந்தை ஒரு நடுத்தர விவசாயி; அவர்களுக்குச் சுமார் 50 ஏக்கர் நிலம் இருந்தது. ஜமீன்தாரி உரிமையில் பங்கும் இருந்தது.
- குஹாவின் குடும்பம் கல்வியில் சிறந்து விளங்கியது. குஹாவின் தாத்தா வருவாய்த் துறை அதிகாரியாக இருந்தவர். தந்தை ராதிகா ரஞ்சன் குஹா வழக்கறிஞராக இருந்து, பின்னர் டாக்கா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக ஆனவர். அண்ணன் தேவ பிரசாத் குஹா பாலி மொழி அறிஞர். வாராணசியிலும் ரங்கூனிலும் நீண்ட காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். ரணஜித் குஹா ஆறாம் வகுப்பு வரை சித்தகதி கிராமத்தில் படித்தார். அவருடைய தாத்தா அவரது கல்வியின்மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அவருக்கு வங்க மொழி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்பித்தார்.
- மெட்ரிகுலேஷன் படிப்புக்காகக் கொல்கத்தாவுக்குச் சென்ற ரணஜித் குஹா, அங்கு 1938இல் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார். புகழ்பெற்ற பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்து இன்டர்மீடியட் படிப்பை முடித்தார். அங்கு படித்தபோதுதான் அவருக்கு மார்க்சியத்தோடு தொடர்பு ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
கட்சிப் பணி:
- கட்சி வேலைகள் காரணமாகப் பட்டப் படிப்பை முடிப்பதில் ஓராண்டு காலதாமதமானது. 1946இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தில் முதல் வகுப்பில் எம்.ஏ. தேர்ச்சி பெற்றார். 1942 முதல் 1956 வரை கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். 1953இல் கல்விப் பணிக்குத் திரும்பினார். கொல்கத்தாவில் உள்ள கல்லூரிகளில் அவர் பணியாற்றினார்.
- ஹங்கேரி மீது சோவியத் ஒன்றியம் படையெடுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 1956இல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகினார். மகாத்மா காந்தியைப் பற்றி புத்தகம் எழுதும் ஒரு திட்டத்துக்காக 1970-71இல் இந்தியாவுக்கு வந்த ரணஜித் குஹா, அப்போது இந்தியாவில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த மாவோயிச மாணவர் அமைப்பினர் சிலரைச் சந்தித்தார். அதன் காரணமாக விவசாயிகள் கலகம் குறித்த ஆய்வில் அவரது கவனம் திரும்பியது; ‘Elementary Aspects of Peasant Insurgency in Colonial India’ நூலை எழுதினார்.
- 1980இன் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவின் தேசியப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த அவர், அங்கேயே நீண்ட காலம் தங்கிவிட்டார். ‘ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ்’ சார்பில் வெளியிடப்பட்ட ஆறு ‘சபால்டர்ன்ஸ்டடீஸ்’ தொகுதிகளுக்கு அவர் தொகுப்பாசிரியராக இருந்தார். பின்னர் அந்தப் பணியைத் தமது நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டார்.
- வரலாற்றுப் பார்வையில் தனித்துவம்: தன்னால் உருவாக்கப்பட்ட ‘சபால்டர்ன் ஸ்டடீஸ்’ குழுவினரால், 1986-1995க்கு இடையில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து எட்டு கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, ‘சபால்டர்ன் ஸ்டடீஸ் ரீடர்’ என்னும் தலைப்பிலான தொகுப்பை 1997இல் ரணஜித் குஹா வெளியிட்டார். அந்த நூலின் முன்னுரையில், ‘பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசி இரண்டு தசாப்தங்களில் அறிவுரீதியாக முதிர்ச்சி பெற்ற ஒரு தலைமுறையினர், ‘நள்ளிரவுக் குழந்தைகள்’ என அழைக்கப்பட்ட 1947க்குப் பிறகு பிறந்த தலைமுறையினரை, இந்திய அரசியலில் மிகப்பெரிய குழப்பங்கள் நிகழ்ந்த 1970களில் சந்தித்தபோது பல மாயைகள் தகர்ந்தன.
- குறிப்பாகச் சொன்னால், ‘நக்ஸல்பாரி (கிராமத்தில் ஏற்பட்ட விவசாயிகளின்) எழுச்சிக்கும் அவசரநிலைக் காலம் முடிவு பெற்றதற்கும் இடைப்பட்ட ஆண்டுகள்’ அத்தகைய மாயைகளை உடைத்தன. அதன் விளைவுகளில்ஒன்றுதான் ‘சபால்டர்ன் ஸ்டடீஸ் ஆய்வுக் குழு’ஆகும்’ என ரணஜித் குஹா குறிப்பிட்டிருப்பது, அந்த ஆய்வு முறையின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.
- சுதந்திர இந்தியாவைப் பற்றிய மிகப் பெரிய நம்பிக்கையைக் கொண்டிருந்த - 1930களிலும் 40களிலும் இளைஞர்களாக இருந்த - தலைமுறையினர், அதிகார மாற்றம் நிகழ்ந்ததற்குப் பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். காலனிய காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருந்த தேசியவாதம், சுதந்திரம் அடைந்த பிறகு மங்கிப்போனது.
- 1947க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இப்படி நினைவு கூரத்தக்க எதுவும் இல்லை. ஆனால், சுதந்திர நாட்டில் பிறந்த அவர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பினார்கள். பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததைக் கண்ட அவர்கள், தமது நம்பிக்கைகள் பொய்த்துப்போனதாக உணர்ந்தார்கள். 1970களின் நிகழ்வுகளை இந்தப் பின்னணியிலிருந்தே புரிந்துகொள்ள வேண்டும் என்று ரணஜித் குஹா வலியுறுத்தினார்.
- இவற்றை அவநம்பிக்கை கொண்ட இளைஞர்களுக்கும் அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்களாக மட்டுமே வரலாறு பதிவுசெய்துவந்தது. அதை மாற்றி, அதன் உள்ளார்ந்த தர்க்கத்தை எடுத்துரைப்பதன் தேவையை ‘சபால்டர்ன் ஸ்டடீஸ்’ குழுவினர் உணர்ந்தனர். அதனால்தான் அவர்களது ஆய்வுகள் காலனியக் கால ஆட்சி மற்றும் அதைத் தொடர்ந்து சுதந்திர இந்தியாவின் அரசாங்கத்தில் நடந்த நிகழ்வுகள் என வரலாற்றை வேறு விதமாக அணுக முயன்றன.
தடைசெய்யப்பட்ட உரையாடல்:
- ஐரோப்பிய நாடுகளில் வரலாறு பற்றிய படிப்பு நிறுவனமயமானதையும், அதற்கான பாடநூல்கள் உருவாக்கப்பட்டு வகுப்பறைகளில் அவை போதிக்கப்பட்டதையும், அச்சுத் தொழில்நுட்பத்தின் காரணமாக அது எவ்வாறு பரவியது என்பதையும், வரலாறு பற்றிய கல்வியை நிறுவனமாக மாற்றுவது என்பது கல்வி வட்டாரத்தில் அரசுக்கு ஒரு நிலையான அடித்தளத்தை அமைப்பதாகவும், அதன்வழி ஆதிக்கத்தைக் கட்டமைப்பதாகவும் இருந்தது என்பதையும் ரணஜித் குஹா விளக்கினார்.
- இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட வரலாறு பற்றிய கல்வியும் பெருமளவில் நிறுவனமயம் ஆக்கப்பட்டதாகவே இருந்தது. ஆனால், இங்கிலாந்தில் அது நிகழ்ந்ததற்கும் இங்கே நிகழ்ந்ததற்கும் முரண்பாடு இருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
காலத்தின் தேவை:
- ‘இந்திய வரலாறு எழுதியல் என்பது மேலைநாட்டுக் கல்வியினால் உருவானதாகும். அதைப் பராமரித்த இந்திய அறிவுஜீவிகள் உலக வரலாற்றைப் பற்றிப் புரிந்துகொள்வதற்குப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தார்கள். அதனால், இந்திய வரலாற்றைக் காலனிய அரசின் வரலாறாக மட்டுமே பார்த்த அதிகாரபூர்வமான அணுகுமுறையோடு அவர்களால் ஒத்துப்போக முடிந்தது.
- ஆனால், உண்மையான இந்திய வரலாற்றை எழுத விரும்புகிறவர்கள் அரசாங்கத்தின் அந்தக் குரலோடு ஒத்துப்போக முடியாது. ஏனென்றால், அது நமது கடந்த காலத்துக்கும் நமக்கும் இடையில் நடைபெறும் உரையாடலைத் தடை செய்கிறது’ எனச் சுட்டிக்காட்டிய ரணஜித் குஹா, ‘குடிமைச் சமூகத்தின் எண்ணற்ற குரல்களைக் கேட்டு, அவற்றோடு உரையாடுவதன் மூலம்தான் கடந்த காலத்தோடு நாம் சரியான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அந்தக் குரல்கள் உரத்து முழங்காதவையாக, சன்னமானவையாக இருக்கும். ஆனால் அவற்றைத்தான் நாம் கவனிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
- ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களின் அணுகுமுறையைமறுத்து சுயமான வரலாற்றை எழுதுவதாகச் சொல்லிக்கொள்ளும் மத்திய அரசு, வரலாற்றுப் பாடநூல்களைப் பெரும்பான்மைவாதப் பார்வையில் மாற்றி எழுதிவருகிறது. அதற்குக் கொஞ்சமும் குறையாமல் தமிழ்நாட்டின் வெகுசன வெளியைச் சோழப் பேரரசின் பெருமிதப் பேச்சுகள் மூழ்கடித்துக்கொண்டிருக்கின்றன.
- இந்தச் சூழலில், வரலாற்றை மக்கள் நோக்கிலிருந்து எழுதுவதற்கு ரணஜித் குஹாவின் வரலாறு எழுதியல் முறைதான் சரியானதாகும். அதைச் செய்வதே அவருக்குப் பொருத்தமான அஞ்சலியாகவும் இருக்கும்.
நன்றி: தி இந்து (02 – 05 – 2023)