TNPSC Thervupettagam

ரத்த அழுத்தம்: அலட்சியம் ஆபத்தில் முடியும்

August 6 , 2023 395 days 277 0
  • ரத்தக்கொதிப்பு என்பது நம்மை அமைதியாகக் கொல்லும் ஒரு நோய். உலகளவில் நிகழும் 40 முதல் 60 வயதுக்கு உள்பட்டவர்களின் மரணத்தில் 60 சதவீதத்துக்கு அதுவே காரணமாக உள்ளது. முக்கியமாக, 27 சதவீத இதய நோய்கள் ரத்தக் கொதிப்பினால்தான் ஏற்படுகின்றன. ரத்தக் கொதிப்பின் ஆபத்தை உணர்த்த இதைவிட வேறு தரவுகள் தேவையில்லை.

ரத்த அழுத்தம்

  • ரத்த அழுத்தம் என்பது, ரத்தக் குழாய்களின் உள்சுவரின் மீது அதனுள் ஓடும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம். இந்த ரத்த அழுத்த இயல்பு நிலையில் அல்லது வரம்பில் இருப்பது உடலின் ஆரோக்கியத்துக்கும் உடல் உறுப்புகளுக்கும் முக்கியம். ரத்தத்தின் சரியான அழுத்தமே, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை ரத்தத்தை முழுமையாக எடுத்துச்செல்லும். ரத்த அழுத்தம் இயல்புநிலையை மீறினால், உடலின் பகுதிகளுக்கு ரத்தம் செல்வது தடைப்படும் அல்லது குறையும். உடலில் ரத்தம் செல்லாத அல்லது தடைப்பட்ட பகுதி அழுகி, அழிந்துவிடும். இறுதியில் அது நம்மைப் பேராபத்தில் நிறுத்திவிடும்.

வகை

  • ரத்த அழுத்தத்தில் சிஸ்டாலிக், டயஸ்டாலிக் என்று இரண்டு வகை உள்ளன. சிஸ்டாலிக் என்பது இதயம் ரத்தத்தை வெளித்தள்ளும் அழுத்தம். டயஸ்டாலிக் என்பது இதயம் ரத்தத்தை உள்ளிழுக்கும் அழுத்தம். சிஸ்டாலிக் அதிகமாக இருக்கும்; டயஸ்டாலிக் குறைவாக இருக்கும். ரத்த அழுத்தமானது 120/80 என இருந்தால் அது இயல்புநிலை. இதில் 120 என்பது சிஸ்டாலிக், 80 என்பது டயஸ்டாலிக்.
  • இந்த இயல்புநிலை, வயதைப் பொறுத்து மாறுதலுக்கு உள்ளாகிறது. உதாரணத்துக்கு, 10 முதல் 19 வயதுக்கு உள்பட்ட இளம் வயதினருக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 120 முதல் 136 வரையிலும், டயஸ்டாலிக் அழுத்தம் 82 முதல் 86 வரையிலும் இருப்பது இயல்புநிலையாகவே கருதப்படும்.

ஐந்து வகை வரம்புகள்

  • ரத்த அழுத்த வரம்புகளை அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஐந்தாக வகைப்படுத்தியுள்ளது. அவை:

இயல்புநிலை

  • இந்நிலையில் ரத்த அழுத்தம் 120/80 என இருக்கும். இந்நிலையில் இருப்பவர்கள் சீரான உணவு முறையைப் பின்பற்றுவது, தினமும் வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்வது உள்ளிட்ட இதயத்துக்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களின் மூலம் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாக்கலாம்.

அதிகரித்த நிலை

  • இந்த நிலையில் சிஸ்டாலிக் அழுத்தம் 120 முதல் 129க்குள்ளும், டயஸ்டாலிக் அழுத்தம் 90க்கு மேல் தொடர்ந்து நீடிக்கும். இந்த நிலையில் இருப்பவர்கள் முறையான சிகிச்சை பெறாவிட்டால் அவர்களுக்கு ரத்தக் கொதிப்பு ஏற்படும் சாத்தியம் மிக அதிகம்.

ரத்தக் கொதிப்பு நிலை 1

  • இந்த நிலையில் சிஸ்டாலிக் அழுத்தம் 130 முதல் 139க்குள்ளும், டயஸ்டாலிக் அழுத்தம் 90க்கு மேல் இருக்கும். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களையும், ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பர். இதயநோய்களும் பக்கவாதமும் ஏற்படும் ஆபத்து இவர்களுக்கு உண்டு.

ரத்தக்கொதிப்பு நிலை 2

  • இந்த நிலையில் ரத்த அழுத்தம் 140 / 90 க்கு அதிகமாகத் தொடர்ந்து நீடிக்கும். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களும் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளும் அவசியம் தேவை. இசிஜி எக்கோ பரிசோதனைகளை ஒவ்வொரு ஆண்டும் செய்துக் கொள்வதும் நல்லது.

உயர் ரத்த அழுத்த நிலை

  • இந்த நிலையில் இருப்பவர்களுக்கு உடனடி மருத்துவ கண்காணிப்பு தேவை. இவர்களின் ரத்த அழுத்தம் திடீரென்று 180/120க்கு மேலாகச் செல்லும். இந்நிலையில் உடல் உறுப்புகள் சேதமடையும் ஆபத்து உண்டு. நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், முதுகு வலி, மதமதப்பு, அதீதத் தளர்ச்சி, பேசுவதில் சிரமம், பார்வைக் கோளாறு போன்றவை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது பெரும் ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.
  • உயர் ரத்த அழுத்தத்தில் முதன்மை அல்லது அத்தியாவசிய உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம் என இரண்டு வகை உள்ளன. முதன்மை உயர் ரத்த அழுத்தம் ஒரு நபரின் வயதோடு தொடர்புடையது. இதற்கு என அறியப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை.
  • இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு அட்ரீனல் சுரப்பி கட்டிகள், சிறுநீரக நோய், தைராய்டு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம். உணவுமுறை, குறைவான உடல் இயக்கம், குடிப்பழக்கம், புகைபிடித்தல் உள்ளிட்ட வாழ்க்கை முறை காரணிகளும் இதை ஏற்படுத்தலாம். இருமல், சளி மருந்துகள், சில வலி நிவாரணிகள், கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றாலும்கூட இந்தப் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உண்டு.

எந்த எண் மிகவும் முக்கியமானது?

  • பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாக சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு, பெரிய தமனிகளின் விறைப்புத் தன்மையின் காரணமாக வயதுக்கு ஏற்ப சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் சீராக உயர்கிறது. இதன் காரணமாக ரத்தக் கட்டிகள், இதய நோய்கள், வாஸ்குலர் நோய்கள் போன்றவை உருவாகும் சாத்தியம் அதிகரிக்கிறது. இருப்பினும், உயர் ரத்த அழுத்தத்தைக் கண்டறிய அதிகரித்த சிஸ்டாலிக் அல்லது டயஸ்டாலிக் ரத்த அழுத்த அளவீடுகள் பயன்படுத்தப்படலாம்.

என்ன ஆபத்துகள் ஏற்படக்கூடும்?

  • மாரடைப்பு அல்லது பக்கவாதம்
  • இதயம் செயலிழப்பது
  • ரத்தத் தமனி விரிவடைதல்
  • சிறுநீரகக் கோளாறுகள்
  • பார்வைக் கோளாறுகள்
  • மெட்டபோலிக் சிண்ட்ரோம்
  • சிந்தனையில் தடுமாற்றம்
  • டிமென்ஷியா

காரணிகள்:

  • புகைபிடித்தல்
  • உடல்பருமன்
  • அதிக அளவிலான உப்பு (குழம்பில் 5 கிராம் மட்டுமே)
  • குடிப்பழக்கம்
  • உடல் செயல்பாடு குறைவு
  • மன அழுத்தம்
  • சிறுநீரக நோய்கள்
  • நீரிழிவு நோய்
  • மரபுவழி காரணங்கள்

நன்றி: தி இந்து (06 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories