TNPSC Thervupettagam

ரயில் நிலையங்களில் சுத்தம், சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கலாமே?

December 13 , 2024 36 days 80 0

ரயில் நிலையங்களில் சுத்தம், சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கலாமே?

  • ரயில்வே வாரியம் சுதந்திரமாக செயல்படும் வகையில் சட்டத் திருத்த மசோதா ஒன்று மக்களவையில் முன்மொழியப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க அம்சமாக அமைந்துள்ளது. இந்த மசோதாவின்மீது பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே, தங்களது மாநிலத்தில் ரயில் நிலையங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரையடுத்து பேசிய திமுக எம்பி கனிமொழியும் ரயில்வே வாரியத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளை சேர்ந்த பெண் எம்பி-க்கள் தெரிவித்துள்ள இந்த பாராட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள ரயில்வே வாரியம், இதுபோன்ற வார்த்தைகள் ரயில்வே வாரியம் மேலும் சிறப்பாக செயல்பட உத்வேகம் அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் ஆண்டுக்கு 673 கோடி பேர் ரயில்களில் பயணிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 5 சதவீதம் உயர்ந்தவண்ணம் உள்ளது. கடந்த நவம்பர் 4-ம் தேதி இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3 கோடி பேர் நாடு முழுவதும் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்த அளவுக்கு இந்திய மக்களின் போக்குவரத்தில் தலையாய அங்கமாக திகழும் ரயில்வே துறையின் உச்சபட்ச அமைப்பாக உள்ள ரயில்வே வாரியத்துக்கு மத்திய அரசு சுதந்திரம் அளிக்க முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ரயில் பயணிகளுக்கு என்னென்ன வசதிகளை செய்துதர முடியுமோ அத்தனை வசதிகளையும் ரயில்வே வாரியம் செய்துதர முயற்சிக்க வேண்டும். அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும்போது, நாட்டின் மக்கள்தொகை பெருக்கம், ரயில் பயணிகளின் அடர்த்தியை மனதில் வைத்து திட்டங்களை தீட்ட வேண்டும்.
  • ரயில் நிலையங்களில் ரயில் நின்றவுடன் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் ஏறுகின்றனர்; இறங்குகின்றனர். அந்த எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் படிக்கட்டுகள், புதிதாக ஏற்படுத்தப்படும் ‘லிப்ட்‘ மற்றும் நகரும் படிக்கட்டுகள் இருப்பதில்லை. 100 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள்தொகையை கணக்கில்கொண்டு கட்டப்பட்ட அடிப்படை வசதிகளே இன்றைக்கும் தொடர்கின்றன. ஒரே நேரத்தில் 50, 100 பேர் ‘லிப்ட்’ வசதியை பயன்படுத்த நினைக்கும்போது, 4 பேர், 5 பேர் செல்லும் வகையில் வசதிகளை ஏற்படுத்துவது காலத்துக்கு பொருத்தமற்றதாக அமைகிறது. நாட்டின் மக்கள்தொகை 142 கோடியை கடந்து செல்லும் நிலையில், அதற்கேற்ப பெரிய பெரிய கட்டமைப்புகளை உருவாக்குவதே பொருத்தமாக இருக்கும். அதேபோல, ரயில் நிலையங்களில் தண்டவாளங்களில் குப்பைகளை வீசி எறிவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுத்தம், சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளித்து 24 மணி நேரமும் 3 ‘ஷிப்ட்’களில் ரயில் நிலையங்களை சுத்தம் செய்யும் வகையில் பணியாளர் களை நியமிக்க வேண்டும். இதன்மூலம் மிகப்பெரிய துறையான ரயில்வே துறையில் எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்; சுகாதாரமும் மேம்படும்.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories