- ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் ஐந்தாவது முறையாக அந்நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் விளாடிமிர் புடின். மார்ச் 18 அன்று வெளியான தேர்தல் முடிவுகள், உக்ரைன் போர் விஷயத்தில் புடினுக்கு ரஷ்ய மக்களின் பெருவாரியான ஆதரவு இருப்பதாக, அவர் பெருமையுடன் பறைசாற்றிக்கொள்ளவே வழிவகுத்திருக்கிறது. அதேவேளையில், முழுக்க முழுக்க புடின் அரசின் கட்டுப்பாட்டிலேயே நடத்தப்பட்ட இந்தத் தேர்தல், ரஷ்யாவில் ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
- இந்தத் தேர்தலில், ரஷ்ய அரசின் தலைமைப் பீடமான கிரெம்ளின் அனுமதித்த வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டார்கள். அரசின் கொள்கைகளை விமர்சித்தவர்கள், பல்வேறு காரணங்களின் பேரில் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்கப்பட்டனர். முன்னதாக, தேர்தலை ஒட்டி உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை விமர்சிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- இப்படியான சூழலில் புடின் மீண்டும் அதிபராவார் என்பது தேர்தல் தொடங்குவதற்கு முன்பே எதிர்பார்க்கப்பட்டதுதான். அவர் பெறப்போகும் வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதுதான் விடை தெரிய வேண்டிய கேள்வியாக இருந்தது. மார்ச் 15 முதல் 17 வரை நடைபெற்ற தேர்தலில் 77.4% வாக்காளர்கள் வாக்களித்தனர். புடின் 87.8% வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நிகோலே கரிடோனோவ் 4.31% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
- 71 வயதாகும் புடின் 2000இல் முதல் முறையாக ரஷ்யாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இடையில் 2008இலிருந்து 2012வரை பிரதமராக இருந்த காலம் தவிர, மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரே அதிபராகத் தொடர்கிறார்.
- 1990களில் சோவியத் ஒன்றியம் உடைந்ததற்குப் பின்பு, சிதறுண்டிருந்த ரஷ்யாவையும் அதன் செல்வாக்கையும் புத்தாயிரத்தின் தொடக்க ஆண்டுகளில் உலக வல்லாதிக்கச் சக்தியாக மறுகட்டமைப்பு செய்த பெருமை அவரையே சேரும். சோவியத் ஆட்சியில் கம்யூனிசத்துக்கு மாற்றாக ஆசாரவாத கிறிஸ்துவ மதிப்பீடுகளில் மையம்கொண்ட அரசை அவர் நிறுவினார்.
- ரஷ்யாவின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இடையே நிலவிவந்த பூசல்களையும் யுத்தங்களையும் அவர் முடிவுக்குக் கொண்டுவந்தார். பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ரஷ்யாவின் நிலைத்தன்மையை உறுதிசெய்தார். இது போன்ற நடவடிக்கைகளால் ரஷ்யர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக அவர் திகழ்கிறார்.
- அதே நேரம், ரஷ்ய அரசை ராணுவமயமும் சர்வாதிகாரமும் நிறைந்த இயந்திரமாகக் கட்டமைத்ததும் புடின்தான். மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை என்னும் பெயரில் அண்டை நாடுகளின் மீதும் ரஷ்யாவின் முழுமையான ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்.
- 2014இல் உக்ரைனின் கிரிமியாவை இணைத்தது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர், உக்ரைன் மீதான போரை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறார். அவருடைய அரசியல் எதிரிகளான போர்ஸிஸ் நெம்ஸ்டோவ், அலெக்ஸ் நவால்னி ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்தனர். ரஷ்ய ஊடகங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- இந்தத் தேர்தல் நடத்தப்பட்ட விதத்தை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விமர்சித்திருக்கின்றன. இந்தத் தேர்தல் முடிவை வைத்து உக்ரைன் போரிலும், சர்வதேச அரசியலிலும் மேலும் மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கவலை. புடினின் அடுத்தடுத்த நகர்வுகளைப் பொறுத்தே சூழல் எந்தத் திசையில் திரும்பும் எனத் தெரியவரும்!
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 03 – 2024)