TNPSC Thervupettagam

ரஷ்யா - உக்ரைன் போர்: முடிவுக்கு வருவது எப்போது

February 23 , 2024 185 days 173 0
  • உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், போர் முடிவதற்கான அறிகுறியே தென்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.
  • சோவியத் ஒன்றியம் தகர்ந்த பிறகு, தனி நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 2014இலிருந்தே மோதல்கள் நிகழ்ந்துவந்தன. அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதாலும் மேற்கத்திய நாடுகளின் ராணுவப் பாதுகாப்புக்கான நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயல்வதாலும் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறிவந்தார்.
  • இந்நிலையில், 2022 பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது அதிகாரபூர்வ போரைத் தொடங்கிய ரஷ்யா, உக்ரைனின் சில முக்கிய நகரங்களைக் கைப்பற்றியது. அணு ஆயுத பலம் வாய்ந்த பெரிய நாடான ரஷ்யாவின் தாக்குதலுக்குச் சிறிய நாடான உக்ரைன் எளிதில் அடிபணிந்துவிடும் என்றே அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்துவருகிறது.
  • நினைத்த வேகத்தில் ரஷ்யாவால் உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற முடியவில்லை. ராணுவரீதியிலான இழப்புகளையும் போரில் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளையும் சந்தித்தது. ஆனாலும் அவற்றிலிருந்து மீண்டு, உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றும் இலக்கை நோக்கிப் பயணிக்கிறது ரஷ்யா.
  • உக்ரைன் ராணுவத்துடனான நான்கு மாதப் போராட்டத்துக்குப் பிறகு, கிழக்கு உக்ரைனில் உள்ள அவ்திவ்காவை ரஷ்யா கைப்பற்றியிருக்கிறது. 2023 மே மாதம் பாக்முக்த் நகரத்தைக் கைப்பற்றியதற்குப் பிறகு, இந்தப் போரில் ரஷ்யா அடைந்துள்ள முக்கிய வெற்றியாக இது கருதப்படுகிறது.
  • 2014இலிருந்தே அவ்திவ்கா போர்களைச் சந்தித்துள்ளது. இதனால், அந்நகரத்தில் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உக்ரைன் செய்திருந்தது. அவற்றையெல்லாம் தகர்த்து அவ்திவ்காவை ரஷ்யா கைப்பற்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உக்ரைனின் பிற முக்கிய நகரங்களைக் கைப்பற்றுவதற்கு எளிய பாதை அமைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
  • ரஷ்யாவின் மக்கள்தொகை (14 கோடி) உக்ரைனைவிட மிக அதிகம். ராணுவ வீரர்களின் எண்ணிக்கையிலும் ஆயுத பலத்திலும் ரஷ்யாவுடன் உக்ரைன் போட்டிபோட முடியவில்லை. “வெகு தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக்கூடிய ஆயுதங்கள் ரஷ்யாவிடம் நிறைய உள்ளன. எங்களிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை” என்று மியூனிக்கில் நடைபெற்ற பாதுகாப்புக் கொள்கைக்கான மாநாட்டில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி முறையிட்டிருக்கிறார்.
  • உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இருந்தாலும் ஆயுதம் வழங்குவது முதன்மையாக அமெரிக்காதான். உக்ரைனுக்கான உதவியை உள்ளடக்கிய அமெரிக்காவின் அந்நிய நிதியுதவித் திட்டத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
  • 2024 அதிபர் தேர்தலில் அக்கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடவிருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் போருக்கு அமெரிக்கா உதவுவதை எதிர்த்துவருவது குறிப்பிடத்தக்கது. டிசம்பரில் நடக்கவிருக்கும் ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் எளிதாக வென்றுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, உக்ரைனின் சவால்கள் அதிகரிக்கக்கூடும்.
  • போரில் ரஷ்யாவின் கை ஓங்கியிருந்தாலும் அதுவும் நிறைய இழப்புகளைச் சந்தித்துள்ளது. ஒருவேளை உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றிவிட்டாலும், அது புதினின் வெற்றியாக இருக்குமே அன்றி, ரஷ்யாவின் வெற்றியாக இருக்காது. ரஷ்யா, உக்ரைன், நேட்டோ நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்க முன்வந்தால் மட்டுமே போரையும் உயிரிழப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories