- கோவை தனியார் பொறியியல் கல்லூரியின் தங்கும் விடுதியில், முதலாம் ஆண்டு மாணவர், மூத்த மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, தலைமுடி மழிக்கப்பட்டு ‘ராகிங்’ செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு மாணவர் ஒருவர் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்து மூன்று மாத கால இடைவெளியில், மீண்டும் ஒரு கொடுமை நடந்திருப்பது, இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் நிலவும் போதாமைகளை வெளிப்படுத்துகிறது.
- கல்வி நிறுவனத்தில் புதிதாகச் சேரும் இளம் மாணவர்களை மூத்த மாணவர்கள் சீண்டுவது, அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவது, இயல்புக்கு மாறான செயல்களைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது உள்ளிட்டவை ‘ராகிங்’ என்பதன் வகைப்பாட்டுக்குள் அடங்குகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ‘ராகிங் தடுப்புப் பிரிவு’ வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, 2021இல் மட்டும் நாடு முழுவதும் 511 ராகிங் கொடுமைகள் பதிவாகியிருக்கின்றன. 35.1% மாணவர்கள் சிறிய அளவிலாவது ராகிங்கை எதிர்கொண்டிருக்கின்றனர். 4.1% பேர் கடுமையான ராகிங் கொடுமைக்கு ஆளாகியிருக்கின்றனர்.
- 1990களில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்த காலத்தில், ராகிங் கொடுமையும் அதிகரித்தது - குறிப்பாக, தென் மாநிலங்களில். இந்தியாவிலேயே, ராகிங்குக்கு எதிராகச் சட்டம் கொண்டுவந்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான் (1997). இதன் பின்னர், 2001இல் நாடு முழுவதும் ராகிங்கைத் தடை செய்தது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றம் நியமித்த ஆர்.கே.ராகவன் குழு 2007இல் சமர்ப்பித்த அறிக்கையானது, ராகிங் என்பது மனநோய்க்கூறு கொண்ட நடத்தை என்று குறிப்பிட்டது; கூடவே, ராகிங் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டிருந்தாலும், அது நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியது.
- 2009இல், தர்மசாலாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் ராகிங் செய்யப்பட்டதால், தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ராகிங்குக்கு எதிரான சட்டத்தை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநில அரசுகள் மட்டுமல்ல, பல அரசுக் கல்வி நிறுவனங்களும் ராகிங்குக்கு எதிராகத் தனிச் சட்டவிதிகளைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பின்னரும் ராகிங் தொடர்வதுதான் வேதனை.
- ராகிங்கில் ஈடுபடும் மூத்த மாணவர்கள், அதன் மூலம் இளைய மாணவர்களின் தயக்கத்தைப் போக்கி, கல்வியையும் வாழ்க்கையையும் இயல்பாக எதிர்கொள்ள உதவுவதாகக் கருதிக்கொள்வதும் உண்டு. ஆனால், ராகிங்கில் ஈடுபடுபவர்கள், இளம் மாணவர்களிடம் தங்கள் அதிகாரத்தை வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை என்பதற்கான உதாரணம்தான், கோவை தனியார் கல்லூரி சம்பவம். ராகிங் சீண்டலுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் மனதளவில் பெரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். அது அவர்களின் கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- பொதுச் சமூகத்தில், ராகிங் குறித்த புரிதலின்மை நிலவுகிறது. பெரும் அதிர்வை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கும்வரை, ராகிங் குறித்த புகார்களை, வேதனைகளைப் பெரும்பாலான கல்வி நிலையங்களும் இயல்பாகக் கடந்துவிடுகின்றன. திரைப்படங்களில் ராகிங் தொடர்பான காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகளாகவே உருவாக்கப்படுவது அந்த இயல்பாக்கத்தை மேலும் விரிவுபடுத்துகிறது. இப்படியான சம்பவங்கள் மீண்டும் நிகழ அனுமதிக்கக் கூடாது. ராகிங் குறித்த புகார்களுக்குச் செவிமடுக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும், கல்வி நிறுவன நிர்வாகங்களும் முழு மனதுடன் முன்வந்தால் மட்டுமே இந்த அவலத்தை அடியோடு அகற்ற முடியும்!
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 11 – 2023)