- சுதந்திர இந்தியாவின் வரலாறு குறுங்குழுவாத அடிப்படையில் நடந்த வன்முறை மோதல்களால் நிரம்பியுள்ளது.
- பரவலாக இந்த மோதல்கள் இரண்டு வகைகளாக இருந்தன.
- முதலாவது, 1950கள் மற்றும் 1960களில் நாகா மற்றும் மிசோ மலைப் பகுதிகளிலும், 1980கள் மற்றும் 1990களில் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் நடந்ததைப் போன்று பிரிவினை அல்லது சுதந்திரம் கோரும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகள் ஆகும்.
- இரண்டாவது, ஒரு குறிப்பிட்ட இந்திய மாநிலத்திலோ அல்லது ஒன்றிய பிரதேசத்திலோ நடக்கும் பெரும்பான்மையிய வன்முறை. உதாரணமாக, 1984இல் டெல்லியில் சீக்கியர்களுக்கும், 2002இல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கும் எதிரான இந்துக் கும்பல்களால் நடத்தப்பட்ட படுகொலைகளையும், 1989-90இல் காஷ்மீரில் இஸ்லாமிய ஜிஹாதிகள் தலைமையில் பண்டிட்களுக்கு எதிராக நடந்த இனச் சுத்திகரிப்பு வன்முறைகளையும் குறிப்பிடலாம்.
நேற்றும் இன்றும் மணிப்பூர்
- கடந்த காலத்தில், மணிப்பூர் மாநிலம் மோதலின் முதல் வடிவத்தைக் கண்டது. அங்கே ஆயுதம் ஏந்திய மெய்தி கிளர்ச்சியாளர்கள் தங்களுக்கு ஒரு தேசத்தைக் கோரினர், ஆயுதம் ஏந்திய நாகாக்கள் இன்னொருபுறம் நாகாக்கள் வசிக்கும் தொடர்ச்சியான மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஒரு தேசத்தை உருவாக்க முயன்றனர்.
- ஆனால், தற்போதைய மோதல் மாநிலத்துக்கு உள்ளேயே அதன் இரண்டு இனக் குழுக்களான மெய்தி மற்றும் குக்கிகளுக்கு இடையில் நடக்கிறது. இதில் எந்தத் தரப்பினரும் இந்தியாவில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் எனக் கோரவில்லை.
- இன்று மணிப்பூரில் நடக்கும் இனக் குழுக்களுக்கு இடையிலான மோதலைக் கடந்த காலத்தில் மற்ற இந்திய மாநிலங்களில் நடந்த இதே போன்ற மோதல்களுடன் ஒப்பிடுவதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.
- மணிப்பூரில் இரு தரப்புகளிலும் உள்ள போராளிகளிடம் ஆயுதங்கள் அதிகமாக இருக்கின்றன. மத்திய இந்தியாவின் நக்ஸலைட்டுகள் அல்லது வட இந்தியாவின் கொள்ளையர்கள் காவல் நிலையங்களை அவ்வப்போது தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையிட்டு செல்வதோடு நாம் இதை ஒப்பிடலாம் என்றாலும், சமீபத்தில் மணிப்பூரில் காவல் துறை ஆயுதக் களஞ்சியங்கள் பரவலாகக் கொள்ளையடிக்கப் படுவது போல இந்திய வரலாற்றில் வேறு எப்போதும் நடந்ததில்லை.
- காஷ்மீரில் ஆயுதம் ஏந்திய ஜிஹாதிகளை நாம் பார்த்திருக்கிறோம். குஜராத்தில் இந்துத்துவ அடிப்படைவாதிகள் வாள்களாலும், பெட்ரோல் குண்டுகளாலும் முஸ்லிம்களையோ அல்லது டெல்லியில் சீக்கியர்களையோ தாக்குவதைப் பார்த்திருக்கிறோம். இருப்பினும், இன்று மணிப்பூரில் காண்பது வேறானது; மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் இங்கே பயங்கர ஆயுதங்களுடன் உள்ளனர்; இது வன்முறையின் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
- அடுத்த முக்கிய வேறுபாடு, மோதலை உருவாக்கிய பிரச்சினை தீவிர பிராந்திய முரண்பாட்டுடன் தொடர்புடையதாக இருப்பதாகும். 2023 மே மாதத்துக்கு முன், மணிப்பூரின் மலைப் பிரதேச மாவட்டங்களில் மெய்திகளின் எண்ணிக்கையும், கீழே பள்ளத்தாக்கில் குக்கிகளின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது. ஆனால், இப்போது ஒவ்வொரு பிராந்தியத்திலும் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை முற்றாக ஒழித்துக்கட்ட முயல்கின்றனர்.
- அகமதாபாத் போன்ற நகரங்களில் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே கடுமையான மற்றும் ஆழ்ந்த குடியிருப்புப் பிரிவினை உள்ளது என்பது உண்மைதான் என்றாலும், மணிப்பூரில் உள்ள பிரிவினையானது புவியியல் மற்றும் சமூக அர்த்தத்தில் மிகவும் பரந்து பட்டதாகவும், தீவிரமானதாகவும் இருக்கிறது.
- குஜராத்தில், தீவிரவாத இந்துக்கள் முஸ்லீம்களை நிரந்தரமாக அடிபணிந்த நிலையில் வைத்திருக்க விரும்புகிறார்கள்; மணிப்பூரிலோ, மெய்தி மற்றும் குக்கிகள் ஒருவரையொருவர் மீண்டும் பார்க்கக்கூட விரும்பவில்லை.
குஜராத் சாயல்
- சில குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளும் உள்ளன: முதலாவதாக, 2002இல் குஜராத்தில் நடந்ததைப் போலவே, 2023இல் மணிப்பூரில் காட்டுமிராண்டித்தனமாக நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள். இரண்டாவதாக, இரு மாநிலங்களிலும், பொதுவாக அரசியல் நிறுவனங்கள், குறிப்பாக முதல்வர், பெரும்பான்மை சமூகத்தின் பக்கம் தன்னை அடையாளப் படுத்திக் கொள்வது நடக்கிறது.
- மணிப்பூரில், மொத்த மக்கள்தொகையில் 53% மெய்தி இனத்தவர்; 16% குக்கி இனத்தவர்; 24% நாகா இனத்தவர் உள்ளனர். குஜராத்தில், இந்துக்கள் 88%, முஸ்லிம்கள் 10%. பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை விகிதம் முதல் நிகழ்வில் தோராயமாக 3.3:1 ஆகவும், இரண்டாவது நிகழ்வில் தோராயமாக 8.8:1 ஆகவும் இருக்கிறது.
- மணிப்பூரில் 2002இல் குஜராத்தில் நடந்ததுபோல வன்முறை ஏன் ஒருதலைப்பட்சமாக இல்லை என்பதையும் இங்கே நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்: வன்முறையின் தீவிரம், கொள்ளையடிக்கப்பட்டாலும் வாங்கப்பட்டாலும் சரி, நவீன ஆயுதங்கள் அதிக அளவில் கிடைப்பதோடு தொடர்புகொண்டுள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையிலான உறவு குஜராத்தைப் போல சமச்சீரற்றதாக இருக்கவில்லை, இருப்பினும் அது ஏற்றத்தாழ்வாகவே உள்ளது.
- பள்ளிச் சிறுவர்களுக்கு இடையேயான எந்தச் சண்டையிலும், ஒவ்வொருவரும் தம் பக்கம் எட்டு பேர் இருப்பதில் மகிழ்ச்சியடைவார்கள், ஆனால் குறைந்தபட்சம் மூன்று பேரையாவது வைத்திருப்பதில் திருப்தி அடைவார்கள். போட்டி கும்பல்கள், போட்டி கட்சி உறுப்பினர்கள் மற்றும் போட்டி இனங்களுக்கும் இது பொருந்தும். முக்கியமாக, மணிப்பூரில் மக்கள் தொகையில் மெய்திகளின் ஒப்பீட்டளவிலான மேலாதிக்கம் அரசியல் அதிகாரமாக மாறுகிறது.
- மணிப்பூரில் ஒரு மெய்தி சமூகத்தவர்தான் முதல்வராக எப்போதும் வருகிறார். குக்கி அல்லது நாகா அமைச்சர்களைவிட அதிகமான எண்ணிக்கையில் மெய்தி அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கே முக்கியமான இலாகாக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன.
மெய்தி பின்புலம்
- தற்போதைய முதல்வர் ஒரு மெய்தி. அது மட்டுமின்றி தனது இன அடையாளத்தை நிலைநாட்டுவதற்கு அவர் தயங்காதவர். பிரச்சினைகள் தொடங்கி மூன்று மாதங்களில் அவர் பல வெளிப்படையான பாகுபாடான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். பள்ளத்தாக்கு பகுதியில் குக்கிகள் யாரும் நுழைய முடியாத நிலையையும், மலைப் பகுதிகளிலிருந்து மெய்திகள் விலகி இருக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தி மாநிலப் பிரிவினைக்கு அவர் மறைமுகமாக ஒப்புதல் அளித்துள்ளார்.
- சட்டம் - ஒழுங்கு என்பது மாநில அதிகாரப் பட்டியலில் உள்ளது, ஆனாலும், அரசு ஆயுதக் கிடங்குகள் சூறையாடப்படுவதையோ, அப்பாவி குடிமக்கள் கொல்லப்படுவதையோ, பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதையோ தடுப்பதற்கு முதல்வர் விரும்பவில்லை அல்லது அவரால் தடுக்க முடியவில்லை.
- கடந்த பல தசாப்தங்களாக பஞ்சாப், காஷ்மீர் மற்றும் குஜராத்தில் மதவெறி வன்முறைகளால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் சரியாக ஆறவில்லை. மணிப்பூரில் உள்ள நிலையோ இன்னும் இருண்டது. இனக் கலவரமானது அரசின் சமூகக் கட்டமைப்பிற்கும் அரசியல் ஒருமைப்பாட்டிற்கும் ஆழமான மற்றும் மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அதன் விளைவுகள் மற்ற மாநிலங்களிலும் உணரப்படுகின்றன, குறிப்பாக மிசோரம்- அங்கு குக்கிகள் அடைக்கலம் தேடுகிறார்கள், மெய்திகள் தப்பி ஓடும்படி மிரட்டப்படுகிறார்கள். வன்முறை மற்றும் துன்பங்கள் எவ்வளவு கொடூரமானவை, அதைத் தடுக்க முடியாத மணிப்பூர் முதல்வர் ஏன் இன்னும் பதவியில் இருக்கிறார்?
- இந்தக் கேள்வியைக் கேட்பது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மட்டுமல்ல; நம் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் தேடும் ஒவ்வொரு குடிமகனும் அதைத்தான் கேட்கிறார். சில வாரங்களுக்கு முன்பே முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனாலும் பாஜக மற்றும் ஒன்றிய அரசில் உள்ள அவரது எஜமானர்களின் ஒப்புதலுடன் அவர் தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறார்.
ஆளும் இரட்டையர்கள்
- பிரேன் சிங் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், தாங்கள் தவறு செய்திருப்பதை ஒப்புக்கொள்ள மோடி ஆட்சி முற்றிலும் மறுப்பதே ஆகும். அதிகாரபூர்வமான அவர்களுடைய பதிவுகள் எப்போதும் குற்றமற்றதாகவே காட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
- பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பொருளாதாரச் சேதங்கள், கோவிட் காலத்தில் திட்டமிடப் படாத ஊரடங்குகளால் ஏற்பட்ட சமூகப் பாதிப்புகள், இந்தியா உரிமை கோரும் ஆயிரக் கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்சினை - இந்தத் தோல்விகள் அனைத்தும் கொள்கை அல்லது பதவியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை.
- பாஜகவின் ‘ஆளும் இரட்டையர்கள்’ ஒரு முதல்வரை அவர் தேர்தல் நேரச் சுமை என்று நினைத்தால், இடையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால், பிரேன் சிங்கை இப்போது நீக்குவது, அவரும் அவரது கட்சியும் நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதை ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும் என்று எண்ணுகிறார்கள். அது மட்டுமின்றி, பாஜக புதிய முதல்வரை நியமித்தால், மத்திய உள்துறை அமைச்சரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழலாம். என் பார்வையில், அது ஒரு நியாயமான கோரிக்கையும்கூட. உள்துறை அமைச்சர் மணிப்பூருக்கு ஒருமுறை பயணம் மேற்கொண்டார். ஆனால், அவர் நிலைமையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் பிரதமருடன் நெருக்கமாக இருப்பதால், அவரைப் பாதுகாக்க அவரது கட்சி எல்லாவற்றையும் செய்யும்.
- இறுதியாக, ஒருவேளை மிக முக்கியமாக, மணிப்பூரின் தற்போதைய முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டால், 2002 கலவரத்திற்குப் பிறகு குஜராத் முதல்வரை பதவி நீக்கம் செய்யத் தவறிய பாஜகவின் தோல்வி குறித்து மீண்டும் சங்கடமான கேள்விகள் அதனால் எழும்பக்கூடும்.
நன்றி: அருஞ்சொல் (25 – 07 – 2023)