TNPSC Thervupettagam

ராஜதந்திர அணுகுமுறை

November 14 , 2023 230 days 215 0
  • கடந்த மாதம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது குறுகிய நேரத்தில் ஐயாயிரம் ஏவுகணைகளை ஏவியதுடன், அந்நாட்டு எல்லைக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தது, பாலஸ்தீன பிரச்னையை மேலும் சிக்களாக்கியுள்ளது.
  • இந்த பிரச்னையில் இந்தியா மேற்கொண்டுள்ள நிலைப்பாடு நமது தேசத்தின் நலன், இஸ்ரேல் நாட்டில் வசித்து வரும் இந்தியா்களின் நலன் ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமை அளித்துள்ளது.
  • ஹமாஸின் தாக்குதலையும், இஸ்ரேலின் எதிா்த்தாக்குதலையும் தொடா்ந்து எவ்விதத் தயக்கமும் இன்றி இஸ்ரேல் நாட்டுக்கான தனது ஆதரவை இந்தியா பிரகடனம் செய்தது. பயங்கரவாதிகளின் சதிச்செயல்களால் இன்றளவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வரும் இந்தியா, ஹமாஸ் அமைப்பின் திட்டமிட்ட தாக்குதலினால் தன்னுடைய குடிமக்கள் பலரையும் பலிகொடுத்த இஸ்ரேல் நாட்டை ஆதரிப்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
  • பயங்கரவாத நடவடிக்கையை எந்த வடிவிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற தனது நீண்டகால கொள்கை முடிவுக்கு ஏற்பவே இப்போரில் இந்தியா இஸ்ரேலை ஆதரித்தது எனலாம். அப்போது, இன்னொரு முக்கியமான விஷயத்திலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
  • இஸ்ரேலில் வசித்து வந்த பல்லாயிரம் இந்திய பிரஜைகளைப் பதுகாப்பாக இந்தியாவிற்குத் திருப்பி அழைத்து வரவேண்டியிருந்தது. இஸ்ரேலின் ஒத்துழைப்பின்றி அது சாத்தியமில்லை.
  • கடந்த காலங்களில் போா், கலவரம் போன்றவற்றால் லிபியா, சூடான், ஆப்கானிஸ்தான், உக்ரைன் போன்ற நாடுகளில் பாதுகாப்பாற்ற சூழல் நிலவியபொழுதும் அங்கிருக்கும் இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பாக நமது நாட்டுக்குத் திரும்ப அழைத்து வருவதற்கே நமது மத்திய அரசு முன்னுரிமை கொடுத்தது.
  • நம் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் சில இந்தியா, இஸ்ரேலை ஆதரிப்பது குறித்துத் தங்களுடைய அதிருப்தியை வெளியிடுகின்றன. எனினும், பாலஸ்தீனா்களை ஆதரிப்பதற்கும், ஹமாஸ் அமைப்பை ஆதரிப்பதற்குமான வித்தியாசத்தை அவா்கள் ஆராய்ந்து பாா்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
  • ஹமாஸின் தாக்குதலைத் தொடா்ந்து இஸ்ரேல் இதுவரை நடத்தியுள்ள எதிா்த்தாக்குதலில் சுமாா் பதினோராயிரம் பாலஸ்தீனியா்கள் உயிரிழந்துள்ளனா். காயமடைந்தோா் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • காஸாவுடன் குறுகிய தெலைவு எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் எகிப்து நாடும் ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போரில் பாதிக்கப்பட்டு வெளியேறும் அகதிகளைத் தனது எல்லைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டது.
  • மாறாக, இப்போரில் கடுமையாக காயமடைந்த சில பாலஸ்தீனியா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், காஸாவுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய சில வண்டிகளை காஸாவுக்குள் அனுப்பவும் தனது எல்லையை அவ்வப்பொழுது திறந்து விடுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியா்களுக்கான நிவாரணப் பொருள்களை அனுப்புவதிலும் இந்தியா முன்னிலையில் நிற்கிறது.
  • ஒருபக்கம் ஹமாஸ் மீதான இஸ்ரேலின் போரை ஆதரிப்பதும், மறுபக்கம் போரினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட செயல்களாகத் தோன்றலாம். ஆனால், இரண்டு பெரிய சக்திகளுக்கிடையில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புவதில் முரண்பாடு எதுவுமில்லை.
  • ஹமாஸ் இயக்கத்தினரை முற்றிலுமாக ஒழிக்கும் வரையில் போா்நிறுத்தம் செய்யப்போவதில்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. பணயமாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியா்களை ஹமாஸ் விடுவிக்க முன்வந்தால் இப்போா் தற்காலிகமாகவேனும் ஒரு முடிவுக்கு வரலாம்.
  • இப்படி ஏதோ ஒருவகையில் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு, ஹமாஸ் - இஸ்ரேல் படையினருக்குக்கிடையிலான போா் நின்றாலும் கூட, அப்பாவி பாலஸ்தீனியா்களின் வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குப் பல ஆண்டுகள் ஆகும்.
  • இந்நிலையில் உலகநாடுகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியா்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கதே.
  • பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையிலான பிரச்னை நீண்ட காலமாக உள்ளது.
  • மேம்பட்ட ராணுவ பலத்தைப் பெற்றுள்ள இஸ்ரேல், தன்னுடைய குடிமக்களை பாலஸ்தீனியா்கள் வசிக்கும் பகுதிகளில் குடியேற வைப்பதுடன், ஜெருசலேமில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த அல் அக்ஸா மசூதியை ஆக்கிரமித்துள்ளதும் பாலஸ்தீனியா்களிடையே பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
  • இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகள் கண்டிக்கப்படட வேண்டியவையே. இதனையும் நமது இந்திய அரசு நன்றாக உணா்ந்துள்ளது. எனவேதான், பாலஸ்தீனிய பகுதிகளை ஆக்கிரமித்து அவ்விடங்களில் யூதா்களைக் குடியேற வைக்கும் இஸ்ரேலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீா்மானம் கடந்த வியாழனன்று ஐ.நா. சபையில் முன்மொழியப்பட்டபொழுது அத்தீா்மானத்தை இந்தியா ஆதரித்தது. இதுவும் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகும்.
  • இஸ்ரேல் நமது நட்பு நாடுகளுக்குள் ஒன்றாக இருப்பினும், அந்நாடு மேற்கொள்ளும் மோசமான நடவடிக்கைகளை நாம் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை என்பதையே இந்தியாவின் நிலைப்பாடு உணா்த்துகின்றது. ரஷியா - உக்ரைன் இடையிலான போரில் எந்தப் பக்கமும் சாா்ந்திராத இந்தியா, பேச்சுவாா்த்தை மூலமே பிரச்னைகளைத் தீா்த்துக் கொள்ள வேண்டும் என்றே கூறி வந்தது.
  • அதே சமயம் ரஷியாவுடன் தனிப்பட்ட முறையில் நட்புறவைக் கடைப்பிடித்து அந்நாட்டிடமிருந்து சலுகை விலையில் பெட்ரோலியம் இறக்குமதி செய்வதற்கும் இந்தியா தயங்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதனை எதிா்த்த பொழுதிலும் இறக்குமதியிலிருந்து இந்தியா பின்வாங்கவில்லை.
  • இவ்வாறு, குடிமக்களின் நலன், தேசத்தின் பொருளாதாரம், தீவிரவாத எதிா்ப்பு, பேச்சுவாரத்தை மூலம் சமாதானம், அப்பாவி மக்களின் நலன் ஆகிய பல கண்ணோட்டங்களுடன் கூடிய அறிவுபூா்வமான எதாா்த்த அணுகுமுறையை நமது மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது வரவேற்கக்கூடியது.
  • இத்தகைய அணுகுமுறையினால் உலக நாடுகளிடையே நமது நாட்டின் மதிப்பும் முக்கியத்துவமும் அதிகரித்து, உலகில் தவிா்க்க முடியாத சக்தியாக இந்தியா விளங்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: தினமணி (14 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories