பாச்சில் மேற்றளி கோயில்
- தமிழ்க் கல்வெட்டுக்களில் எண்ணிக்கையிலும் தரவுகளைப் புதையலாய்க் கொண்டிருப்பதிலும் முதனிலையில் உள்ளவை சோழர் காலக் கல்வெட்டுகளே. வரலாற்றறிஞர்கள் பலர் அவற்றிலிருந்து அகழ்ந்தளித்திருக்கும் பன்முகப் பதிவுகளையும் தாண்டி, அவை அடைகாக்கும் வரலாற்றுச் செய்திகள் பலவாகும். அவற்றுள் ஒன்றுதான் முதல் ராஜராஜர் காலத்தே நிகழ்ந்த பணியாளர் ஊதியக் குறைப்பு.
- சோழர் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை பெருகினாற் போலவே, அவற்றின் நடைமுறைகளும் பெருகின. வழிபாடு, படையலுக்கென ஏராளமான நிலத் தொகுதிகளும் பொன், வெள்ளி, காசு, கால்நடை முதலியனவும் வழங்கப்பெற்றன. இறைத் திருமேனிகளை அழகுபடுத்தவும் அவற்றுக்குப் பெருமை சேர்க்கவும் விலை மதிப்பற்ற அணிகலன்கள் வந்தடைந்தன. வரவு மிகுதியான நிலையில் நிதியம், நகைகளைக் காக்கக் கருவூலங்களும் அவற்றிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவசியமாயின. கோயிலின் வரவு செலவுக்கேற்ப வழிபாட்டு நடைமுறைகள் விரிவடையவே, பணியாளர் பட்டியலும் நீண்டது. முதல் ராஜராஜர் காலத்தே தஞ்சாவூர் ராஜராஜீசுவரத்தில் 400 தளிப்பெண்டுகள் பணியில் இருந்தனர். இவர்கள் தவிர, 36 வகையான தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த 217 தொழில் செய்தவர்களைக் கோயில் புரந்தது. அவர்களுள் 138 பேர் ஆடல், இசையுடன் தொடர்புடைய நுண்கலைஞர்கள்.
- ராஜராஜீசுவரம் அளவிற்கு இல்லையென்றாலும் பல கோயில்களில் இத்தகு பணியாளர்கள் பெருமளவில் இருந்தனர். பணியமர்த்தப்பட்டபோதே அவர்களுக்கான ஊதியம் நிலப்பங்காக அறிவிக்கப்பெற்றது. செய்யும் தொழிலுக்கேற்ப அப்பங்கின் அளவு அமைந்ததை ராஜராஜீசுவரத் தளிச்சேரிக் கல்வெட்டால் அறிய முடிகிறது. ஒரு பணிக்கென உறுதிசெய்யப்பெற்ற நிலப்பங்கு, கோயில் தேவைக்கேற்ப வேறு பணிக்கு மாற்றப்படுவதையும், சில நேரங்களில் அதே பணியில் புதியவர்கள் நுழையும்போது பங்கின் அளவு மாறுதலுக்கு உள்ளாவதையும் கல்வெட்டுகள் இனிதே உணர்த்துகின்றன.
திருச்சியில் ஊதியக் குறைப்பு
- ஆனால், ஒருவர் பணியில் அமரும்போது முடிவாகும் நிலப்பங்கு, அவர் பணியில் இருக்கும்போதே கோயிலின் புதிய தேவைகளுக்காகக் குறைக்கப்படுவது அரிதினும் அரிதான நிகழ்வாகும். முதல் ராஜராஜர் காலத்தில் இத்தகு ஊதியக் குறைப்பு சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பாச்சில் மேற்றளி, பாச்சில் அவனீசுவரம், திருவாசி மாற்றுரை வரதீசுவரர் ஆகிய மூன்று கோயில்களில் நிகழ்ந்துள்ளது. இதை நிகழ்த்தியவர் நாடு வகை செய்யும் பணியிலிருந்த ஆவணமுடையான் மார்த்தாண்டன் உத்தமன் என்ற அரசு அலுவலர். இவரை, ‘இராஜராஜரின் பணிமகன்’ என்கிறது கல்வெட்டு.
- பணிக்கான நிலப்பங்குகளைக் குறைக்கும் முன், பங்கிலிருந்து கிடைக்கும் நெல் அளவு, அதில் பணியாளர் குடும்பத்திற்கு எந்த அளவு போதுமானது என்பதையெல்லாம் அவர்களிடமே கேட்டு ஆராய்ந்தே உத்தமன் ஊதியத்தைக் குறைத்ததை, ‘உண்டு வருகின்ற பங்கு வினவி, பங்கில் இவர்களுக்குப் பற்றும்படி நிறுத்தி (கூடுதலாக உள்ளதை) வாங்கி’ எனும் கல்வெட்டுத் தொடர் நிறுவுகிறது. இந்த ஊதியக் குறைப்பில் தொழில் சார்ந்த பாகுபாடு இல்லாமையையும் அறிய முடிகிறது.
- ‘ஏன் இந்தத் திடீர் ஊதியக் குறைப்பு’ என்ற வினாவுக்கு ஒவ்வொரு கோயிலும் ஒரு விடை வைத்திருந்தது. அவனீசுவரத்தில் இப்படிக் குறைக்கப்பட்ட பங்குகள் வழியே கோயிலுக்கு 300 கலம் நெல் கிடைத்தது. அதில் 120 கலம் மாதந்தோறும் முதல் ராஜராஜரின் பிறந்த நட்சத்திரமான சதயத்தன்று இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்ய ஒதுக்கப்பெற்றது. எஞ்சிய 180 கலம் அவர் தமக்கை குந்தவையார் பிறந்த நட்சத்திரமான அவிட்டத்தன்று இறைவனுக்குத் திங்கள்தோறும் சிறப்பு வழிபாடு செய்யவும் அக்கொண்டாட்டத்தின்போது கோயிலில் 60 பேருக்கு உணவிடவும் பயன்பட்டது.
- பாச்சில் மேற்றளியில் நடந்த ஊதியக் குறைப்பால் வரவான 909 கலம் நெல் மேற்றளி ஊரில் முதல் ராஜராஜரின் ஜனநாதன் எனும் விருதுப் பெயரேற்று அமைந்திருந்த சாலையில், நாள்தோறும் 30 பிராமணர்களுக்கு உணவிட உதவியது. திருவாசியில் ஊதியக் குறைப்பால் பெறப்பட்ட 142 கலம் நெல், அக்கோயிலில் இருந்த உலாத் திருமேனியான ராஜராஜவிடங்கரின் பெயரில் வரவு வைக்கப்பெற்று, அத்திருமேனிக்கு நாளும் ஒரு சந்தி வழிபாடு, படையல் அமைக்கத் துணையானது.
எண்ணெய்ச் செலவையும் குறைத்த உத்தமன்
- இந்த ஊதியக் குறைப்புக் கல்வெட்டுகளால் இம்மூன்று கோயில்களிலும் பணியாற்றிய தொழிலர், கலைஞர் சிலரை அறிய முடிவதுடன், இங்கு பயன்பாட்டிலிருந்த இசைக் கருவிகளின் பட்டியலும் கிடைக்கிறது. அவனீசுவரத்திலும் திருவாசியிலும் மெராவியம், குழல் முதலிய கருவிகளை இசைத்தவர்களும் நட்டுவரும், கணக்கரும் பணியாற்ற, அவனீசுவரத்திலும் மேற்றளியிலும் சோதிடரும் மெய்மட்டு உள்ளிட்ட கருவிக் கலைஞர்களும் பணியில் இருந்தனர். காளம், செயகண்டிகை, கரடிகை முதலிய இசைக் கருவிகளை இயக்கியோர் மேற்றளியில் வாழ, வண்ணக்கர், நாவிசர், தச்சர், பரிசாரகர் முதலிய தொழிலர்கள் திருவாசியில் உழைத்தனர். மேற்றளியிலும் திருவாசியிலும் காவிதி என்ற பெயருடன் விளங்கிய கணக்கர்களையும் அவனீசுவரத்திலும் மேற்றளியிலும் இருந்து வழிபாடு நிகழ்த்தியவர்களையும் அடையாளப்படுத்தும் இக்கல்வெட்டு, மூன்று கோயில்களிலும் இருந்தவர்களாக மட்பாண்டம் வனையும் வேட்கோவர்களைத்தான் முன்நிறுத்துகிறது.
- இப்பணியாளர்கள், கலைஞர்களின் ஊதியத்தில் உச்சமாக இரண்டு பங்கும் கீழாக அரைக்கால் பங்கும் குறைக்கப்பட்டது. இரண்டு பங்கு இழப்புப் பெற்றவர்கள் மேற்றளிக் கருவிக் கலைஞர்கள். ஒன்றரைப் பங்கை இழந்தவர்களும் மேற்றளியினரே. அவனீசுவரத்து நட்டுவரும் ஆசாரியரும் தலைக்கு ஒரு பங்கு இழக்க, அரைப் பங்கு இழப்பை மூன்று கோயில் பணியாளர்களில் பலர் சந்தித்தனர். மூன்று கோயில்களில் மிகையான குறைப்பு நேர்ந்ததும் மேற்றளியில்தான். அங்கு பதினாறு பங்குகள் நீக்கப்பட்டன. மிகக் குறைவான பங்கிழப்பைப் பார்த்தது திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில். அங்கு உச்சக் குறைப்பே அரைப் பங்குதான். ராஜராஜீசுவரத் தளிச்சேரிக் கல்வெட்டுப்படி, ஒரு பங்கு என்பது 100-120 கலம் நெல் விளைவு தந்த ஒரு வேலி நிலமாகும்.
- ஊதியக் குறைப்பை உழைப்போருக்கு நிகழ்த்தினாற் போல, இம்மூன்று கோயில்களிலும் ஒளிர்ந்த விளக்குகளுக்கான எண்ணெய்ச் செலவையும் உத்தமன் குறைத்துள்ளார். மேற்றளி விளக்குச் செலவில் அரைப் பங்கும், அவனீசுவரத்து எண்ணெய்ச் செலவில் கால் பங்கும் குறைத்த உத்தமன், திருவாசிக் கோயில் விளக்குகளை மட்டும் தொடவில்லை. அது மட்டுமன்று, இம்மூன்று கோயில்களிலும் பணியாற்றிய தேவரடியார், தளிப்பெண்டுகள், கூத்திகள், தலைக்கோலியர் ஊதியத்திலும் அவர் கைவைக்கவில்லை. சொல்லப்போனால், இந்த மூன்று கோயில்களுமே சோழர் காலத்து ஆடற்கலையை உயர்த்திப்பிடித்த பெண் கலைஞர்களின் வாழிடங்களாக விளங்கிய பெருமைக்குரியவை.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 06 – 2024)