TNPSC Thervupettagam

ராஜஸ்தான் முன்னேறுகிறது குஜராத் பின்தங்குகிறது

March 21 , 2024 301 days 238 0
  • பிரதமர் நரேந்திர மோடி சொல்வதை ஏற்பதாக இருந்தால், எல்லா அம்சங்களிலும் குஜராத் மட்டுமே ஒரு முன்மாதிரி மாநிலம். மக்களவைக்கு நடந்த 2014 பொதுத் தேர்தலில் நாடு முழுவதிலுமேகுஜராத் மாதிரிஎன்பது பிரச்சாரத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய நிர்வாக நடைமுறை குஜராத்தில் வெற்றிகரமாகச் செயல்படுவதாகக் கூறப்பட்டது.
  • மாநிலங்களின் வளர்ச்சி மாதிரியை மதிப்பிடுவது மிகவும் சிக்கலானது. எனவே, மிகவும் எளிமையான, எளிதில் பதில் பெறக்கூடிய ஒரு கேள்வி: குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதிலும், சேர்ந்தவர்களைத் தொடர்ந்து படிக்க வைப்பதிலும் மாநிலம் எந்த அளவுக்கு வெற்றிகரமாகச் செயல்படுகிறது? குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தருவதுதான் எந்தச் சமூகத்துக்கும் மிகப் பெரிய நீண்ட கால வளர்ச்சி அடையாளமாகத் தொடர்கிறது. நன்கு படித்த சமூகம்தான் மேலும் மேலும் செல்வ வளத்தைப் பெருக்குகிறது.
  • கற்றவர்கள் நல்ல வேலைக்குச் செல்கிறார்கள், தொழில்வியாபாரத்தை மேலும் பெரிதாக்குகிறார்கள். அவர்களால் புதிதாகபெரிதாக நன்கு சிந்திக்க முடிகிறது, ஆக ஏற்கெனவே செய்ததைவிட மதிப்புமிக்க வேலைகளுக்கு உயர்ந்துகொண்டே இருக்கின்றனர். இப்படிப் படித்தவர்கள் அடையும் தனிப்பட்ட முன்னேற்றம், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பையும் (ஜிஎஸ்டிபி) உயர்த்துகிறது. கல்வி என்பது தன்னளவில் மிகவும் நல்லது; அதைப் பணம் சம்பாதிக்கும் கருவியாகத்தான் சமூகம் பார்க்கிறது என்றாலும், எதிர்கால வளர்ச்சி எப்படியாக இருக்கும் என்று கணிக்க கல்வி வளர்ச்சிப் பெரிதும் பயன்படுகிறது.
  • குஜராத்தின் இன்றைய நிலையை ஆராய்ந்தால், பிரதமர் மோடி பெருமைப்படும்படியாக அதுமுன்மாதிரிமாநிலமாக இல்லை. பக்கத்து மாநிலமான மகாராஷ்டிரத்தைவிட கல்வியில் மோசமாக இருக்கிறது என்பதுடன், ராஜஸ்தானைவிட பின்தங்கிவருகிறது என்பது குறிப்பிடப்பட வேண்டியது. மத்திய பிரதேசத்துக்கு சமமாக இருக்கிறது என்று வேண்டுமானால் கூறிவிடலாம்.

ஒப்பிடுவது எளிதல்ல

  • ஏதேனும் ஓர் அம்சத்தில் வெவ்வேறு மாநில அரசுகளை ஒப்பிட்டு, இது நன்றாக இருக்கிறதுஅது சரியில்லை என்று முடிவுக்கு வருவது சரியல்ல, அது நேர்மாறான பலனையே தரும். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு துறையில் வளர்ச்சி காண்பது வெவ்வேறு காலகட்டங்களாக இருந்து வருகிறது. எனவே, ஏதேனும் ஒரு துறையில் ஒவ்வொரு மாநிலமும் அடைந்த வளர்ச்சியை ஒப்பிடுவதால் அதிகம் தெரிந்துகொண்டுவிடவும் முடியாது. அதற்குப் பதிலாக ஒரு மாநிலம், தானே உருவாக்கிக்கொண்ட அடிப்படை முன்மாதிரியில் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதைப் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
  • இன்னொரு பிரச்சினை என்னவென்றால், அரசுகளின் கொள்கைகள் அமலுக்கு வந்து பலன் அளிக்க சிலபல ஆண்டுகள் பிடிக்கும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும் பருவத்துக்கேற்ப மாநிலங்கள் வளர்ச்சி அடையாது. தேர்தல் பருவ சுழற்சிகளுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாமல்தான் மாநிலங்கள் வளர்கின்றன. எனவே, ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை இன்னொரு மாநிலத்துடன் ஒப்பிடுவது இயலாததாகவும் இருக்கிறது.
  • சில வேளைகளில், முந்தைய அரசு எடுத்த கொள்கை முடிவுகளாலும் அவற்றை அமல்படுத்திய விதத்தாலும், அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு அதன் பயனை அறுவடை செய்வதும் நடக்கிறது. எனவே, ஒரு அரசு அல்லது கட்சி வெற்றி கண்டுவிட்டது, சாதனை படைத்துள்ளது என்று அறிவிப்பதற்கு முன்னால், இவற்றையெல்லாமும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
  • பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடல் என்பது, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அம்சங்களுக்கும் வெளியே இருக்கும் பலவற்றாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. முதலீட்டுக்கான சூழ்நிலையானது தேசிய அளவில் மட்டுமல்லாமல் - உலக அளவில் நிலவும் வணிகச் சுழலையும் பொருத்தது. மாநில அரசு சிறப்பான நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி, முதலீட்டாளர்கள் வரும் காலம்வரை காத்திருந்து அவற்றைப் பெற்ற உடனே செயல்படுத்துவதன் மூலம் மட்டுமே பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட முடியும்.

கல்வி நல்ல உரைகல்

  • இந்த வகையில், கல்வித் துறையின் வளர்ச்சி, முதலீடு, செயல்பாடு ஆகியவற்றை ஆராய்வது நல்லது. தொடக்கப் பள்ளிக் கல்வியை முடித்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அடுத்து மேல்நிலைக் கல்வி வரை இடை நில்லாமல் தொடர வேண்டும். அப்படி மாணவர்கள் மேல்நிலைக் கல்வி வரை (பிளஸ் டூ) தொடர்வது (ஜிஇஆர்- Gross enrolment ratio) நல்ல நிர்வாகத்துக்கு அடையாளம். மாநில அரசின் நீண்ட கால கல்விக் கொள்கை, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றின் விளைவுதான் ஜிஇஆர். பத்தாவது வகுப்பு வரை படித்தவர்கள் பிளஸ் டூ படித்து முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் போதும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசின் ஆட்சியின் ஐந்தாண்டு காலத்துக்குள் இது அளவிடக்கூடியதுதான். இதில் வெற்றி காண, நீண்ட காலம் காத்திருக்கவும் தேவையில்லை.
  • எனவே, நன்கு வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் தங்களுடைய அடித்தளத்தை இந்த அம்சத்தில் ஒன்றுபோல வைத்திருக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து மேல்நிலைக் கல்வி வரை படித்து முடிப்பதில் மாநிலங்களுக்கிடையே வேறுபாடுகள் இருக்கக்கூடும். வறிய நிலையிலும் வளர்ச்சி இல்லாமலும் இருக்கும் மாநிலங்களில் இந்த அடித்தளம் கீழ்நிலையில் இருக்கும்.
  • இதை ஒப்பிடும்போது, சில மாநிலங்களில் எதிர்பார்ப்புக்கேற்ப வளர்ச்சி தெரிகிறது, ஆனால் சில மாநிலங்கள் விஷயத்திலோ அதிர்ச்சியே ஏற்படுகிறது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலங்கானா, பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம், இமாச்சல பிரதேசம் ஆகியவற்றில் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருந்தாலும் அவர்கள் மேல்நிலை வகுப்புவரை படித்து முடிப்பதில் வேறுபாடுகள் இருக்கின்றன.
  • இமாச்சல பிரதேசம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப், கேரளம் ஆகியவை பிற மாநிலங்களைவிட நன்கு செயல்பட்டுள்ளன. மிக உயர்ந்த அடித்தளமுள்ள இம்மாநிலங்கள் படிப்பை முடிக்கும் விஷயத்திலும் ஆக்கப்பூர்வமான முடிவுகளையே காட்டுகின்றன. மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களும் இப்போதைய தேசியப் போக்குக்கு ஏற்ப பள்ளியிறுதி வகுப்பில் அதிக மாணவர்களைத் தக்கவைப்பதில் வெற்றி காண்கின்றன. தெலங்கானா, கர்நாடகம் வளர்ச்சி பெற்ற சக மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மோசமாக பின்தங்குகின்றன. இப்போதைக்கு அதிகமில்லை என்றாலும் எதிர்காலம் குறித்து அவ்விரு மாநிலங்களும் கவலைப்பட வேண்டும்.
  • மொத்த வருமானத்தில் குறைவாகவும் மக்கள் தொகையில் அதிகமாகவும் உள்ள உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் ஆகியவை எதிர்பார்த்தபடியே, மேல்நிலைக் கல்வியில் மாணவர்கள் அப்படியே தொடர்வதில் பின்தங்கியே இருக்கின்றன. பிஹார் இதில் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது. முன்னர் அது ஏற்படுத்தி வைத்த அடிப்படையைவிட இப்போது கீழே போய்க்கொண்டிருக்கிறது. மத்திய பிரதேசமும் உத்தர பிரதேசமும் முன்பைவிட நன்றாகச் செயல்படுகின்றன. மாணவர்கள் படிப்பைக் கைவிடுவதைத் தடுப்பதில் வெற்றி காண்கின்றன. கல்வியில் முன்னேறிய மாநிலங்களுக்கு இணையாக மிகச் சில ஆண்டுகளில் அவை முன்னேற வாய்ப்புகள் இருக்கின்றன.

வியப்பும் சோகமும் தருவன

  • ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் செயல்பாடு மிகவும் வியப்பாக இருக்கிறது. இவை இரண்டும் வறிய மாநிலங்கள், சமூகபொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்கள். ‘பிமாருஎன்ற ஏளன அடைமொழிக்குள் சிக்கிய பின்தங்கிய மாநிலங்கள். மத்திய பிரதேசத்திலிருந்து 2000வது ஆண்டில் பிரிக்கப்பட்டதுதான் சத்தீஸ்கர். கல்வி வளர்ச்சியில் இவற்றின் அடிப்படை புள்ளிகளும் மேம்பட்டுள்ளன, மாணவர்கள் மேல்நிலைக் கல்வியைப் படித்து முடிக்கும் சதவீதமும் உயர்ந்துவருகிறது.
  • குஜராத்தின் நிலைமைதான் மிகவும் கவலை அளிக்கிறது. இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் குஜராத், கல்வியில் ராஜஸ்தானைவிட பின்தங்கிக்கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் எப்படி குஜராத்தை முந்தியது, குஜராத் எப்படி மகாராஷ்டிரம்தமிழ்நாட்டுக்கு இணையாக முன்னேறாமல்பிமாருமாநிலங்களை நெருங்குகிறது? ராஜஸ்தான், குஜராத் மாநில நிதிநிலை அறிக்கைகள் (பட்ஜெட்) இதற்கான விடையைத் தருகிறது. கடந்த பத்தாண்டுகளாக கல்விக்கான ஒதுக்கீட்டில் தேசிய சராசரியைவிடக் குறைவாகவே ஒதுக்குகிறது குஜராத். ராஜஸ்தானோ தேசிய சராசரியைவிட அதிகமாக ஒதுக்குகிறது.
  • கல்வித் துறைக்கு அதிக நிதியை ஒதுக்குவதால் மட்டுமே மேல்நிலை வகுப்புவரை மாணவர்கள் தொடர்ந்து படித்துவிட மாட்டார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அப்படிப் படிக்க அதுவும் ஒரு அவசியமான முதலீடாகும். குழந்தைகள் உடல் அளவில் ஆரோக்கியமாக இருந்தால்தான் பள்ளிக்கூடத்துக்கு வருவார்கள் என்பது அடுத்து முக்கியமானது. பள்ளிக்கூடம் சென்று படிப்பதால் தங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மாணவர்கள் நினைக்க வேண்டும், பள்ளிக்கூட படிப்பு எதிர்காலத்தில் நல்ல பயனைத் தரும் என்று பெற்றோர்களும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
  • இவையெல்லாம் இணைந்தால்தான் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சேரும் எண்ணிக்கையும் அவர்கள் தொடர்ந்து பிளஸ்டூ வரை படித்து முடிப்பதும் சாத்தியமாகும். ஜிஇஆர் மூலம் இதைத்தான் தெரிந்துகொள்கிறோம். பணக்கார மாநிலமாக இருந்தாலும் குஜராத்தின் பெற்றோர்களில் கணிசமானவர்கள், மேல்நிலை வகுப்புவரை மாணவர்கள் படிப்பது அவசியம் என்று கருத மறுக்கிறார்கள் என்பது வியப்பான செய்தி. ராஜஸ்தானும் சத்தீஸ்கரும் வறிய மாநிலங்கள் என்றாலும் மாநில நிதி அறிக்கையில் கல்விக்கு அதிகம் ஒதுக்கீடு செய்து மாணவர்களைப் படிக்க வைக்கிறார்கள் என்பது உண்மை. இது பிற வறிய மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். கடுமையாக முயற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதற்கு இவை நல்ல உதாரணம்.
  • ஒன்றிய அரசும் இதிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். மாநிலங்களின் நிலைமை வேறுபட்டது, சிக்கலானது. செல்வத்திலும் கல்வி வளர்ச்சியிலும் சிறந்து விளங்கும் மாநிலத்தின் செயல்பாடு, இவ்விரண்டிலும் கீழ் நிலையில் இருக்கும் மாநிலத்தைவிட முற்றிலும் வேறுபட்ட சமூகபொருளாதார சூழ்நிலைகளைக் கொண்டது. ஒரு மாநிலம் செய்யும் முதலீடும் ஒதுக்கீடும் தரும் பலன் இன்னொரு மாநிலத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. இமாசலம், கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய வளர்ந்த மாநிலங்கள் இனி புதிய பள்ளிக்கூடங்களைத் திறக்கவும் கட்டவும் மாணவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரவழைக்கவும் அதிகம் செலவிட வேண்டியதில்லை.
  • மாணவர்கள் உயர்கல்வி பெறவும் அதிக ஊக்குவிப்புகள் இந்த மாநிலங்களுக்குத் தேவையில்லை. குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பிஹார் ஆகிய மாநிலங்களில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேருவதும் படிப்பைத் தொடர்வதும் பிரச்சினைகளாகவே இருக்கின்றன. எனவே, வெவ்வேறு வகை மாநிலங்களுக்கு வெவ்வேறு வகை கல்விக் கொள்கையும் அணுகுமுறையும் தேவைப்படுகிறது. கல்வியில் பின்தங்கிய மாநிலங்கள் கற்றுக்கொள்ள, ராஜஸ்தான் நல்ல முன்மாதிரியாகத் திகழ்கிறது.

நன்றி: அருஞ்சொல் (21 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories