TNPSC Thervupettagam

ராஜ் கெளதமன்: தமிழ் தலித் எழுத்துலகின் திசைகாட்டி

November 15 , 2024 62 days 106 0

ராஜ் கெளதமன்: தமிழ் தலித் எழுத்துலகின் திசைகாட்டி

  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து, ‘சங்க இலக்கிய ஆய்வில் நவீனக் கோட்பாட்டு அணுகுமுறைகள்’ என்னும் தலைப்பில் 2010 பிப்ரவரியில் 10 நாள் பயிலரங்கம் ஒன்றை நடத்தின. அதில் ஆறாவது நாள் ‘தலித்திய அணுகுமுறை’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த வந்திருந்தார் ராஜ் கெளதமன். அப்போது அவர் புதுச்சேரி அரசினர் கல்லூரியின் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். ​முனைவர் பட்ட ஆய்வாளராக அந்தப் பயிலரங்கில் கலந்து​கொண்ட நான், அப்போதுதான் அவரை நேரில் பார்த்​தேன்.
  • அன்று அவர் ஆற்றிய உரையில், அதுவரையிலான தமிழ் ஆய்வு​களின் போக்கு​களை​யும், அவற்றின் பலன் சமகாலத்தில் கலை, இலக்கிய, அரசியல், கல்விப்பு​லங்​களில் என்னவாக மாறியிருக்​கிறது அல்லது மாற்றப்​பட்டு இருக்​கிறது என்பதையும் விளக்​கியதோடு, தமிழ் இலக்கி​யத்தை தலித் அணுகு​முறையில் அணுகவேண்டிய தேவையை​யும், அப்படிச் செய்யும்போது ஏற்படுகிற விளைவு​களையும் தலித் பண்பாட்டு உருவாக்​கத்தின் அவசியத்​தையும் முன்வைத்​தார்.
  • அதற்குப் பிறகு, அடுத்​தடுத்து வந்து​கொண்​டிருந்த அவரது நூல்களை வாசித்​துக்​கொண்​டிருந்​தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2020 ஜனவரியில் ராஜ் கெளதமனுக்கு மனோன்​மணியம் சுந்தரனார் பல்கலைக்​கழகத் தமிழ்த் துறையின் ‘திறனாய்வுச் செம்மல்’ விருது வழங்கும் நிகழ்​விலும் 2022 ஏப்ரலில் நீலம் பண்பாட்டு மையம் வழங்கிய ‘வானம் இலக்கிய விருது’ நிகழ்​விலும் அவரது ஆய்வு​களைப் பற்றி உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தது.
  • அதற்குப் பிறகு அவரோடு நெருங்கிப் பழகியது சிறிது காலம்தான் என்றாலும், அதற்குள்ளாக அவரது வாசிப்பு உலகத்​தையும் வாசிப்​ப​தற்கான புத்தகத் தேர்வையும் கண்டு ஆச்சரியப் பட்டிருக்​கிறேன். ஆங்கில நூல்களை அதிகம் வாசித்ததோடு அன்றி, பிடித்த நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் வெகு சில தமிழ்ப் பேராசிரியர்​களிலும் ராஜ் கெளதமன் முன்னவராக இருந்தார்.

ஆய்வுகள்:

  • விருதுநகர் மாவட்டம், வத்திரா​யிருப்பு புதுப்​பட்​டியைப் பிறப்​பிட​மாகக் கொண்ட ராஜ் கெளதமன், தொடக்கக் கல்வியை உள்ளூரிலும் மேல்நிலைக் கல்வியை மதுரை செயின்ட் மேரிஸ் பள்ளி​யிலும் கல்லூரிக் கல்வியைப் பாளையங்​கோட்டை தூய சவேரியார் கல்லூரி​யிலும் முடித்​தார். 1970களின் முற்பகு​தியில் படித்து​விட்டுத் தனது சொந்த ஊரில் இருந்தபடி வேலை தேடிக்​கொண்​டிருந்த காலத்​தில், அவருக்கு இடதுசாரி இயக்கங்​களோடு தொடர்பு ஏற்பட்டது.
  • அவர்களோடு இணைந்து வாசித்து விவாதிப்பது, நூலகம் செல்வது, எழுதிப் பார்ப்பது என்று பொழுதைப் போக்கிய அவர், மேலை இலக்கி​யங்களை, குறிப்பாக ரஷ்ய இலக்கி​யங்​களைத் தேடித்தேடி வாசித்தார். அதன் வழியாக அவர் மேலைநாட்டு மறுமலர்ச்சி காலத் தத்து​வங்களை உள்வாங்​கினார்.
  • இதே காலத்தில் தமிழில் ராஜ் கெளதமனுக்கு அமைந்​தது​ போலவே பலருக்கும் ஆழ்ந்த வாசிப்பு அமைந்​து​விட்​டிருந்தது. பின்னாளில் அவர்களும் பேராசிரியர்​களாக, ஆய்வாளர்​களாகத் தகவமைத்துக் கொண்டனர். அவர்களிடமெல்லாம் தமிழின் பழைய மரபுசார் விளக்க​வியல் ஆய்வு​முறையே நீட்சிப்​பட்டுக்​கொண்​டிருக்க, அவர்களில் இருந்து ராஜ் கெளதமன் வேறுபட்​டார். தமிழ் இலக்கி​யங்​களையும் பண்பாட்டுக் கட்டு​மானங்​களையும் தமிழ் மனநிலைக்கு வெளியில் நின்று விவாதித்​தார். அவருடைய ஆய்வு அணுகு​முறையின் தனித்துவமாக அதைச் சொல்ல முடியும்.
  • அவரது ஆய்வு முடிவுகள் தமிழின் பழைய கற்பிதங்​களையும் சார்புநிலை ஆய்வு​களின் அரசியல் பாசாங்​கையும் உடைத்தன. அறம், புலனடக்கம், ஈகை, கல்வி, அறிவு, துறவு, சான்றாண்மை ஆகிய சொற்களுக்கும் அவை உணர்த்தும் பொருண்​மைக்கும் சொல்லப்​பட்டு வந்த விளக்​கத்​திலிருந்து மாறுபட்ட ராஜ் கெளதமன், இச்சொற்களை ‘அதிகாரத்தின் வேலையாட்கள்’ என்றார். இது தமிழ் ஆய்வுலகம் நீண்ட காலம் நிகழ்த்​திவந்த வேர்ச்​சொற்கள் ஆய்வு​களுக்குப் பிறகு சொற்களுக்குள் நிற்கும் சொல்லப்​பட்ட, சொல்லப்படாத பொருள்களை மாற்றுப் பண்பாடு சார்ந்து புரிந்​து​கொள்​வதற்கான சூழலின் தொடக்கமாக அமைந்தது.
  • ராஜ் கெளதமன் எழுதத் தொடங்கிய காலத்தில் ‘மறுவாசிப்பு’ கலாச்​சாரம் தொடங்கி​விட்​டிருந்தது. அப்போது பெரும்​பான்​மையான ஆய்வாளர்கள் நவீன வாசிப்பின் ஒரு முறையியலாக மறுவாசிப்பைப் புரிந்து எழுதிக்​கொண்​டிருந்​தனர். ஆனால், ராஜ் கெளதமன் “மறுவாசிப்பு ‘ஒடுக்​கப்​பட்​டோரின் வாசிப்பு’ முறை, அது உலகுக்கு நவீனமல்ல. மிகப் பழையது” என்றார்.
  • உலகம் முழுக்க ஏற்கெனவே இருக்கும் எழுத்து​களையும் கலை வடிவங்​களையும் மறுவாசிப்பு செய்தவர்கள் ஒடுக்கு​கிறவர்கள் அல்ல; அவர்களால் ஒருபோதும் மறுவாசிப்பு செய்ய முடியாது. ஏனென்​றால், காலமெல்லாம் ஒருபக்கச் சார்பாகப் பெரிதுபடுத்​தப்​பட்டு வந்திருக்கும் எழுத்தும் கலையும் அவர்களால் அவர்களுக்காக உருவாக்​கப்​பட்டவை. ஒடுக்​கப்​பட்​ட​வர்களே அவற்றை மறுவாசிப்பு செய்ய முடியும் என்றார்.
  • இந்த விளக்​கத்​துக்குப் பிறகு மறுவாசிப்பு என்பதன் மீதான புரிதலே மறுவாசிப்​புக்கு உள்ளானது. இப்படித் தமிழ் ஆய்வுலகில் பல புதிய மடைமாற்​றங்களை உருவாக்​கினார். இன்றைக்குச் சங்க இலக்கியம், நவீன இலக்கியம், திறனாய்வு சார்ந்து கல்விப்பு​லங்​களில் சமர்ப்​பிக்​கப்​படும் முனைவர் பட்ட ஆய்வேடு​களில் ராஜ் கெளதமனின் ஆய்வுகள் தவறாது மேற்கோள் காட்டப்​படும் சூழல் உருவாகி​யிருக்​கிறது. அந்த அளவுக்கு இளைய தலைமுறை ஆய்வாளர்​களைத் தன் ஆய்வு​களின் பக்கம் அவர் ஈர்த்திருக்​கிறார்.
  • என்றாலும் அவரது ஆய்வுப் பங்களிப்​புக்கு அந்த வெளிச்சம் மிகக் குறைவு. அவரது மிகச் சிறந்த நூல் என ‘தலித் பண்பாடு’ நூலைச் சொல்லலாம். பிறப்பால் ஏற்படுத்​தப்பட்ட ஒடுக்​கு​முறையை எதிர்ப்​ப​தற்கான கலை இலக்கியப் பண்பாடே ‘தலித் பண்பாடு’ எனச் சொன்ன அவர், அதைத் தமிழ்ச் சூழலுக்குள் மட்டும் பொருத்திப் பார்க்​காமல், உலகம் முழுமைக்​குமாக விரித்​தார். பிறப்பால் ஒடுக்​கப்​படும் கறுப்பின, பெண்ணிய பண்பாட்டுக்குக் கூறுகளோடு இணைத்துப் பேசி, சிக்கலின் தீவிரத்தைப் பெரும்​பான்​மைக்கு உரியதாக நிறுவ வேண்டும் என்றார்.
  • உண்மை​யில், உலகத்தில் சரிபா​தியாக இருக்கும் பெண்கள், கணிசமான அளவுள்ள கறுப்​பர்கள், தலித்துகள் ஆகியோர்​களின் பிரச்​சினைகள் அடிப்​படையில் ஒற்றுமைக் கூறுகளைக் கொண்டவை. அவை பெரும்​பான்மைச் சமூகத்தின் பிரச்​சினை​களாகப் பார்க்​கப்​பட்​டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நிகழவில்லை. பெரும்​பான்மைச் சமூகம் சிறுபான்​மை​யாகச் சிதறடிக்​கப்​பட்டு, பிராந்திய ஆண்மையச் சிறுபான்மைச் சமூகம் பெரும்​பான்​மை​யாகக் கட்டமைக்​கப்​பட்டு, அதிகாரத்தில் கோலோச்சும் நிலையைச் சரியாகப் புலப்​படுத்​தினார்.
  • இந்தியாவைப் பொறுத்​தமட்டில் தலித் பண்பாட்டை மலைவாழ், இனக்குழுப் பண்பாட்டுடன் இணைந்து பிறவகைப்பட்ட தேசிய இனங்களி​லிருந்து தனித்த ஒன்றாகக் கட்டி​யெழுப்ப வேண்டும் என்கிற நிலைப்பாடு கொண்ட அவர், அதன் அடிப்​படையில் ‘தலித் பண்பாடு’ என்பது பிறப்​பால், பாலினத்தால் ஒடுக்​கப்​படுகிற யாவருக்கும் உரியது என்றார்.
  • தலித் பண்பாட்டின் முக்கியமான வேலைத் திட்டமாக - தலித்து​களிடம் தன்னம்​பிக்கையை வளர்த்தல், எதிரியின் பலவீனங்களைப் பிரச்​சாரம் செய்தல், புரட்​சிகரச் சிந்தனை, போராட்டம், பிரச்​சினை​களைச் சமூக நம்பிக்கை அடிப்​படையில் அணுகு​வதைத் தவிர்த்து, சமூக அறிவியல் அடிப்​படையில் அணுகுதல் ஆகியவற்றை முன்வைத்​தார். இது 1990களின் பிற்பகுதி முதற்​கொண்டு வெளிவந்த தமிழ் தலித் புனைவு​களுக்கும் ஆய்வு​களுக்கும் ஒரு வரையறையாக அமைந்தது.

புனைவு​களும் மொழிபெயர்ப்பு​களும்:

  • தமிழ் ஆய்விலும் புனைவிலும் ஒருசேரப் புகழ்​பெற்ற பேராசிரியர்கள் மிகச் சிலரில் ஒருவரான ராஜ் கெளதமன் ‘சிலுவைராஜ் சரித்​திரம்’, ‘காலச்​சுமை’ ஆகியவற்றைத் தன் வரலாற்றுப் புனைவாக எழுதினார். பொதுவாக, ஆய்வு​களின் மொழிநடையில் ஒரு வகையான தீவிரத்தனம் மட்டுமே வலியுறுத்​தப்​படும். ராஜ் கெளதமன் ஆய்வு​களில் தீவிரம் தூக்கலாக இருந்த அதே அளவுக்குப் பகடியும் இருந்தது. சிக்கலான பொருள் ஒன்றின் மீதான ஆய்வைச் சிரித்​துக்​கொண்டே வாசிக்​கலாம்.
  • ‘லண்டனில் சிலுவைராஜ்’ அவரது பயண அனுபவங்கள். ‘பாவாடை அவதாரம்’, ‘ராக்​கம்மா பேத்தி’, ‘பாம்​புச்​சட்டை’, ‘ஊமை நாய்க்கர்’ ஆகியன சிறுகதைகள். ‘பாலற்ற பெண்பால்’, ‘பெண்ணியம்: வரலாறும் கோட்பாடு​களும்’, ‘கிளி எழுபது’, ‘அன்பு என்னும் கலை’, ‘பாலியல் அரசியல்’ ஆகியன மொழிபெயர்ப்புகள். மேடைகளில் அதிகம் பங்கெடுக்காத ராஜ் கெளதமன் கடைசி வரை எழுத்​திலும் வாசிப்​பிலும் தீவிரத்தோடு இயங்கினார். எந்த அமைப்பு​களுக்​குள்ளும் சிக்கிக்​கொள்​ளாமல் சுயாதீன கம்பீரத்தோடு வாழ்வை முடித்​திருக்​கிறார்​.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories