- இதுவும் தேசப் பாதுகாப்போடு இணைந்த முக்கியமான விஷயம்தான்; ஆனால், பொதுவெளியில் அதற்கு உரிய கவனம் அளிக்கப்படுவதாகத் தெரியவில்லை. பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் 41 ராணுவத் தளவாடத் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிந்துவரும் 80 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், 50 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் சமீபத்தில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். “பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களாக்குவதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை” என்று பாதுகாப்புத் துறைச் செயலர் அளித்த உறுதிமொழியின் பெயரில் இந்தப் போராட்டத்தைப் பிறகு அவர்கள் தள்ளிவைப்பதாக அறிவித்திருந்தாலும், இன்னும் இது தொடர்பில் அரசு என்ன முடிவு எடுக்கும் என்ற கவலை அவர்களை விட்டுச்சென்ற பாடில்லை. இந்தக் கவலை அவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல; நம் ஒவ்வொருவரோடும் சம்பந்தப்பட்டது.
அவசியம்... ரகசியம்...
- ராணுவத் தளவாட உற்பத்தி, நாட்டுப் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானது என்பதோடு, ராணுவ ரகசியங்கள் தொடர்புடையதும்கூட. அந்நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடுகிறார் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானியான டில்லிபாபு.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் 41 ராணுவத் தளவாடத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் 17 நிறுவனங்கள், பிரிட்டிஷ் காலனியாட்சிக் காலத்திலேயே உருவாக்கப்பட்டவை. முதல் உலகப் போரிலும், இரண்டாவது உலகப் போரிலும் இந்தியாவில் உற்பத்திசெய்யப்பட்ட தளவாடங்களைத்தான் பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசு பயன்படுத்தியிருக்கிறது. உதாரணமாக, தமிழகத்தில் நீலகிரி அரவங்காட்டில் செயல்பட்டுவரும் வெடிமருந்துத் தொழிற்சாலை 1902-ல் தொடங்கப்பட்டது. ஆங்கிலேய அரசு காப்பீட்டுத் துறையில், வங்கித் துறையில், போக்குவரத்துத் துறையில் தனியாரை அனுமதித்தது. ஆனால், பாதுகாப்புத் தளவாட உற்பத்தியைத் தன்னிடமே வைத்துக்கொண்டது. அந்த அளவுக்குப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை மிக முக்கியமான துறையாக அவர்கள் பார்த்தார்கள். ஆவடி டாங்கி நிறுவனமும், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையும் விடுதலைக்குப் பின் தொடங்கப்பட்டவை.
- சமீபத்தில் ‘சந்திரயான் 2’ விண்கலம் நிலவை நோக்கி ஏவப்பட்டது. அதற்கான வெடிமருந்து எரிபொருள் நாக்பூரில் பந்த்ராவில் செயல்பட்டுவரும் ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனத்திலிருந்து பெறப்பட்டதாகும். இதற்காக ஜூலை 30, 2019 அன்று இஸ்ரோ இயக்குநர் மோகன், பந்த்ராவில் உள்ள நிறுவனத்தைப் பாராட்டி, அந்நிறுவனத்தின் பொது மேலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில், நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனமும் எரிபொருள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய மிக முக்கியமான பணிகளை மேற்கொள்கிறவை.
அதிகரிக்கும் தனியார் முதலீடு
- இந்த நிறுவனங்களை படிப்படியாகத் தனியார்மயத்தை நோக்கி நகர்த்தவே அரசு முயன்றுவருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் பாதுகாப்பு தொடர்புடைய 250 ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் தனியாரை அனுமதித்துள்ளதும் இதே அரசுதான். இந்தியப் பெருநிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் பாதுகாப்புத் துறையில் 100% முதலீட்டில் உற்பத்தியில் ஈடுபடலாம் என்ற முடிவை அரசு ஏற்கெனவே எடுத்துள்ளது. இந்த முதலீட்டு வரம்பு முன்பு 26% ஆக இருந்தது.
- மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் 49% பங்குகள் மட்டுமே அரசிடம் இருந்தால் போதும் என்றும் 51% பொதுத் துறை பங்குகளைத் தனியாருக்கு விற்பதென்றும் மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. பெரும்பான்மை பங்குகள் தனியாரிடம் சென்றால், நிர்வாக அதிகாரமும் தனியாரிடம் செல்லும். உதாரணமாக, மிகப் பெரிய மின் உற்பத்திப் பொதுத் துறை நிறுவனமான என்டிபிசியில் தற்போது 56% பங்குகள் அரசிடம் உள்ளன. இதில் மேலும் 10% பங்குகளை விற்பதென்று மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது. 46% பங்குகள் மட்டுமே அரசிடம் இருக்கும் என்றால், நிர்வாகத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள்தானே இது? அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கும் அரசு, இப்போது பாதுகாப்புத் துறையின் ராணுவத் தளவாடத் தயாரிப்பு நிறுவனங்களையும்கூடத் தனியாருக்குக் கைமாற்றிவிட முயல்கிறது. பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த நிறுவனங்களைப் பொதுத் துறை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றினால் என்ன தவறு என்ற கேள்வி எழுவது இயல்பானது. ஒருவேளை, தொழில்நிறுவனச் சட்டத்தின் கீழ் அந்த நிறுவனங்களைக் கொண்டுவந்தால், அவற்றைத் தனியார்மயப்படுத்துவது எளிதானது. அரசின் நோக்கம் அதுதான் என்றாலும், அதை வெளிப்படையாக ஒருபோதும் சொல்லாது.
ஊழியர்கள் சுட்டும் அச்சங்கள்
- தனியார்மயத்தை நோக்கி இந்த ஆலைகளை அரசு நகர்த்துவதன் பின்னணியில் பல பின்னோக்கங்கள் இருக்கலாம் என்று ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவற்றில் பிரதானமான ஒன்று, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் 41 ராணுவத் தளவாடத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொழிற்கூடங்களுக்குச் சொந்தமாக 17.3 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலங்களின் இன்றைய மதிப்பு கணக்கில் அடங்காதது. இவற்றையும் சேர்த்து குறிவைத்துதான் இந்த முடிவு என்ற ஊழியர்களின் சந்தேகத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. இத்தகைய நகர்வுகளுக்கு ஏற்கெனவே நிறைய முன்னுதாரணங்கள் உண்டு.
- வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் நேரடியாக இருந்த தொலைபேசி துறை விஎஸ்என்எல், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய மூன்று கார்ப்பரேட் நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது. அவற்றில் விஎஸ்என்எல், டாடா குழுமத்திடம் விற்கப்பட்டது. தற்போது பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் பிஎஸ்என்எல் தள்ளாடுகிறது. இத்தகைய பாதிப்புகள் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 41 நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் சேர்த்துதான் அந்நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினார்கள்.
- கடந்த 70 ஆண்டுகளில் காணாத அளவுக்குத் தற்போது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறோம் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அரசின் தவறான கொள்கை முடிவுகள், அது செல்லும் பாதை சரியில்லை என்பதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு இந்தியா எதிர்கொண்டுவரும் அந்த நெருக்கடி. பொதுத் துறை நிறுவனங்கள் என்பவை அரசுக்கு அதன் கைப்பிடியில் பொருளாதாரம்சார் சில வல்லமைகளை வழங்கக் கூடியதும்; முன்னுதாரண நிர்வாகத்துக்கான வாய்ப்பும் ஆகும். அதிலும் பாதுகாப்புத் துறைசார் பொதுத் துறை நிறுவனங்கள் கூடுதல் முக்கியத்துவம் மிக்கவை. கடந்த காலத் தவறுகளுக்கு அரசு முகங்கொடுக்க வேண்டிய நாட்கள் இவை. மறுபரிசீலனையின்றி தன் போக்கை அரசு தொடர்வது பேரபாயத்தில் கொண்டுபோய்விடும்!
நன்றி: இந்து தமிழ் திசை(03-09-2019)