TNPSC Thervupettagam

ராணுவத்தை உருவாக்கிய ஹமாஸ் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

October 31 , 2023 421 days 369 0
  • ஷேக் அகமது யாசின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு வரை ஹமாஸில் துப்பாக்கி கலாச்சாரம் கிடையாது. இதனை முன்பே பார்த்தோம். அதனால்தான் ஆரம்பத்தில் இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களை நம்பியது. பணம் கொடுத்தது. துப்பாக்கியைத் தாங்களே கொடுத்து, மெல்ல மெல்ல அவர்களை பிஎல்ஓ.வை எதிர்க்கும் இயக்கமாக முழு நேரப் பணி செய்ய அமர்த்தலாம் என்று நினைத்தார்கள். ஆனால் ஹமாஸ் பிஎல்ஓ.வை எதிர்ப்பதில் காட்டிய தீவிரத்தைக் கவனித்தவர்கள், ‘சுதந்தர பாலஸ்தீனம்’ என்கிற ஒற்றை இலக்கில் அவர்களுக்கு இருந்த தீவிரத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். அது பிஎல்ஓ எதிர்ப்பினும் பல மடங்கு வீரியம் கொண்டது.
  • அந்நாளில் இஸ்ரேல் உளவுத்துறையினருக்கு ஹமாஸ் விஷயத்தில் ஒரு பெரும் பிரச்சினை இருந்தது. அந்நாளில் என்றால் எழுபதுகளின் இறுதியில் இருந்து தொண்ணூறுகளின் இறுதி வரை. ஹமாஸ் என்ற ஓர் இயக்கம் காசாவில் இருக்கிறது. நல்லது. இயக்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? யார் தலைவர்? முக்கியஸ்தர்கள் யார் யார்? அலுவலகம் என்று ஏதாவது உள்ளதா? அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள், அல்லது எங்கே கூடுகிறார்கள்?
  • உண்மையில் யாருக்கும் எதுவும் தெரியாது. காசா முழுவதும் அடிக்கடி இஸ்லாமிய காங்கிரஸ் பெயரில் பொதுக் கூட்டங்கள் நடக்கும். மதச் சொற்பொழிவுகள் நடக்கும். இலவச மருத்துவ முகாம், ரத்த தான முகாம், அன்னதான முகாம் என்று ஏதோ ஒன்று எப்போதும் இருக்கும். மொசாட் உளவாளிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இந்த இஸ்லாமிய காங்கிரஸ் நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காகவே காசாவில் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.
  • என்ன பிரச்சினை என்றால், காசாவிலேயே தங்கியிருந்தும் அவர்களால் ஹமாஸின் தலைவர்கள் யாரைக் குறித்தும் எந்தத் தகவலையும் பெற முடிந்ததில்லை. ஹமாஸ் நடத்திய பொதுக் கூட்டங்களில் ஊர்ப் பெரியவர்கள் பேசுவார்கள். ஊரறிந்த மதத்தலைவர்கள் வந்து பேசுவார்கள். கல்வித்துறை சார்ந்த பல பேராசிரியர்கள் பேசுவார்கள். கூட்டம் நடக்கும் இடத்துக்குப் பக்கத்தில் வசிக்கும் பொது மக்களே ஏற்பாடுகளை அருகே இருந்து பார்த்துக் கொள்வார்கள். ஒரு வரவேற்புரைக்கு, நன்றி உரைக்குக் கூட ஹமாஸ் தலைவர், செயலாளர், பொருளாளர், பகுதிவாழ் பொறுப்பாள ரென்று ஒருவர் வரமாட்டார்.
  • இது ஷேக் அகமது யாசினின் கண்டிப்பான உத்தரவு. ‘‘நமது முகம் வெளியே தெரியக் கூடாது. நாம் யாரென்பதை நமது செயல்கள் மட்டும்தான் காட்ட வேண்டுமே தவிர, ஊரறிய நாம் வெளிப்படுவது எதிர்காலத்தில் பல சிக்கல்களை உண்டாக்கும்’’ என்ற உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டது.
  • தொண்ணூறுகளின் இறுதி வரை ஹமாஸ் தலைவர்கள் யாருடைய முகமும் பொதுவெளிக்கு வந்ததில்லை. அதாவது, பிஎல்ஓ.வின் உறுப்பு இயக்கங்களினும் ஹமாஸ் அதிக ஆபத்தானது என்று இஸ்ரேல் புரிந்து கொண்டதற்கும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகுதான் அவர்களுக்கு ஷேக் அகமது யாசினின் புகைப்படமே காணக் கிடைத்தது.
  • மொசாட், ஓர் உலகப் புகழ்பெற்ற உளவு நிறுவனம். எத்தனையோ சாகசங்களை நிகழ்த்திய அமைப்பு. ஆனாலும், ஹமாஸ் விஷயத்தில் அந்நாட்களில் அவர்களால் ஒரு துப்பும் தேடிப் பிடிக்க முடிந்ததில்லை. நூறு சதவீத மக்கள் ஆதரவு, ஓர் இயக்கத்தை எப்படி அடைகாக்கும் என்பதற்கு உலகறிந்த ஒரே உதாரணம் இதுதான்.
  • இத்தனைக்கும் 1992-ம் ஆண்டு ஹமாஸின் ராணுவம் கட்டமைக்கப் பட்டுவிட்டது. அல் காஸம் என்பது அதன் பெயர். அதற்கு முன்னால் ஷேக் அகமது யாசின் தனக்குத் தெரிந்த போர்க்கலை உத்திகளை இயக்கத்தவருக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இங்கொன்றும் அங்கொன்றுமாக டெல் அவிவிலும் இதர இஸ்ரேலிய நகரங்களிலும் துப்பாக்கி சூடுகள் நடக்கும். சிறிய அளவிலான வெடிகுண்டு வீச்சுகளும் இருந்திருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போலிசில் சிக்கிக் கொண்டு விடுவார்கள். அநேகமாக அதன் பிறகு அவர்கள் திரும்பி வந்ததில்லை.
  • ஒரு சரியான ராணுவத் தளபதி இருந்தாலொழிய இழப்புகளைத் தவிர்க்கவே முடியாது என்பது யாசினுக்குத் தெரியும். ஆனால் அப்படி ஒருவரை எங்கே சென்று தேடிப் பிடிப்பது? அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தார்.
  • ஆனால் அவர் சென்று தேடிப் பிடிக்க அவசியமில்லாமல் தானாகவே ஒருவர் வந்து சேர்ந்தார். (எந்த வருடம் என்று சரியாகத் தெரியாது. தொண்ணூறு அல்லது தொண்ணூற்று ஒன்றாக இருக்கலாம்.) அவர் பெயர் யாஹியா அயாஷ். அடிப்படையில் அவர் ஒரு எலக்ட்ரிகல் இன்ஜினீயர்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories