TNPSC Thervupettagam

ராம் ஜேத்மலானி: நாடறிந்த வழக்கறிஞர்!

September 10 , 2019 1945 days 1170 0
  • நாம் வாழும் காலத்தில் வழக்கறிஞர் என்றதும் உடனடியாக நினைவுக்கு வருகிற பெயர்களில் ஒருவராக இருந்தார் ராம் ஜேத்மலானி. தற்போதைய பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் தனது 18 வயதில் வழக்கறிஞரானவர். அவரது பள்ளி நாட்களில் ‘டபுள் பிரமோஷன்’ எனப்படும் நடைமுறை இருந்ததால், 13 வகுப்பிலேயே மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றிபெற்று 17 வயதிலேயே சட்டப் படிப்பை முடித்துவிட்டார். அப்போது வழக்கறிஞராவதற்குக் குறைந்தபட்ச வயது 21. எனவே, சிறப்புத் தீர்மானம் போட்டு அவரை வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொள்ள அனுமதித்தார்கள்.
  • இளம் வயதிலேயே பம்பாய் மாநகர நீதிமன்றத்தில் நீதிபதியாக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விருப்பம் இருந்தாலும் நலம்விரும்பிகளின் ஆலோசனைப்படி அந்த அழைப்பை மறுத்துவிட்டார். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அதற்குக் காரணம் கேட்டபோது ராம் ஜேத்மலானி சொன்ன பதில், ‘நான் அந்த அளவுக்கு மதிக்கத்தக்கவன் அல்ல’. வழக்கறிஞர் என்ற அடையாளத்தை மட்டுமே விரும்பிய அவர் 75 ஆண்டுகளுக்கும் மேல் அத்துறையில் பணியாற்றியிருக்கிறார். இத்தனை நீண்ட கால வழக்கறிஞர் அனுபவம் என்பது வேறு எவருக்கும் வாய்க்காத ஒன்று. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும் அகில இந்திய பார் கவுன்சில் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். சர்வதேச வழக்கறிஞர் சங்கத்திலும் அவர் உறுப்பினராகப் பதவி வகித்திருக்கிறார்.

திறந்திருக்கும் அலுவலகக் கதவுகள்

  • தீபக் மிஸ்ரா உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது நடந்த பாராட்டு விழாவில் திடுதிடுப்பென்று தனது பணி ஓய்வை அறிவித்தார் ஜேத்மலானி. நீதிபதி பணிகளுக்கு ஓய்வு உண்டு. வழக்கறிஞர்கள் தான் வாழும் காலம் வரை பணியாற்ற முடியும். என்றாலும், ராம் ஜேத்மலானி ஓய்வுபெறுவதாக அறிவித்தபோது 94 வயதில் அடியெடுத்துவைத்திருந்தார்.
  • வழக்கறிஞர் தொழிலிலிருந்து ஓய்வுபெற்றாலும் தொழில் பழக விரும்பும் வழக்கறிஞர்களுக்குத் தனது அலுவலகக் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும், அவர்களுக்கு வாய்ப்புள்ள எல்லா வகைகளிலும் உதவுவதற்குத் தயாராக இருக்கிறேன் என்றார். இளம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்று பிரபல்யத்தைப் பெறுவது என்பது ஏழு கடல்கள், ஏழு மலைகளைக் கடக்கும் சாகசம். ராம் ஜேத்மலானியும் அந்தத் தடைகளையெல்லாம் தாண்டித்தான் நாடறிந்த வழக்கறிஞராகப் பெயரெடுத்தார். பணி ஓய்வை அறிவித்த அந்த நேரத்தில், தனது பயிற்சிக் கால அனுபவங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். ‘அது ஒன்றும் ரோஜா படுக்கையாக இல்லை. சில சமயங்களில் படுக்கை இருக்கும், ரோஜாக்கள் இருக்காது; சில நேரங்களில் ரோஜாக்கள் இருக்கும், படுக்கை இருக்காது.’ பிற்பாடு வழக்குக்கு ஒரு நாளைக்கு ரூ. 25 லட்சம் வரை வாங்குபவராகச் சொல்லப்பட்ட அவர் நடத்திய முதல் வழக்குக்கு ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்றார் என்றொரு கதை வெகு பிரபலம்.
  • ராம் ஜேத்மலானி தான் வழக்கறிஞர் தொழிலிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்தது இது இரண்டாவது தடவை. 14 ஆண்டுகளுக்கு முன்பு ‘இனி புதிய வழக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என்று தனது அலுவலகத்தில் அறிவிப்புப் பலகை வைத்தார். ஆனால், ஜெசிகா லால் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மனு சர்மாவுக்காகத் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

ஊழல் எதிர்ப்பு முழக்கம்

  • வழக்கறிஞர் தொழிலிலிருந்து ஓய்வுபெற்றாரேயொழிய, பொதுவாழ்வில் மேலும் தீவிரமாக ஈடுபடப்போவதாகவே அறிவித்தார். ஊழல் எதிர்ப்பு அவரது முழக்கமாக இருந்தது. ஊழலைக் களைய நீதித் துறையும் வழக்கறிஞர்களும் ஒன்றாகக் கைகோக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தார். நாட்டை ஆண்ட கட்சியும் ஆளுகிற கட்சியும் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டதாக, வெளிப்படையாக விமர்சிக்கவும் செய்தார். வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கப்படுவதை எதிர்த்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் அவர். ஊழல் எதிர்ப்பை முன்னிறுத்தியே 2014 தேர்தலில் மோடியை அவர் ஆதரித்தார். பிற்பாடு அதன் காரணமாகவே அந்த ஆதரவை விலக்கிக்கொள்ளவும் செய்தார்.
  • வழக்கு மன்றங்களிலும் சட்டம் இயற்றும் அவைகளிலும் ஒருசேரப் பிரகாசித்த அரிதான வழக்கறிஞர்களில் ராம் ஜேத்மலானியும் ஒருவர். பாஜக தொடங்கப்பட்ட காலத்திலேயே அதன் உறுப்பினராக இருந்தவர். இரண்டு முறை பாஜக சார்பில் மும்பையிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் சட்டம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவிவகித்தார். 2004-ல் வாஜ்பாயை எதிர்த்து லக்னௌ தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 2010-ல் மீண்டும் பாஜகவில் இணைந்தார். மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016-ல் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினராகத் தொடர்ந்தார்.
  • நீதிபதிகளை நியமிக்கத் தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அரசாங்கப் பிரதிநிதியாகப் பிரதமர் அல்லது சட்ட அமைச்சர், எதிர்க்கட்சி பிரதிநிதி மற்றும் சட்டக் கல்வித் துறையில் தகுதிவாய்ந்த அறிஞர் ஒருவரும் இடம்பெற வேண்டும்’ என்று வலியுறுத்தினார். நீதிபதிகளே கூடி நீதிபதிகளை நியமிக்கிற முறையைக் கடுமையாக கண்டிக்கவும் செய்தார். நீதிபதிகள் நியமனத்துக்குத் தனி ஆணையம் வேண்டும். ஆனால், அது பிரதமரும் சட்ட அமைச்சரும் மட்டுமே கொண்டதாக இருந்தால் அந்த ஆணையத்தை எதிர்ப்பவனாகவும் நான் இருப்பேன் என்றார். இங்கிலாந்தில் இருப்பதைப் போன்று மூத்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாகப் பதவியேற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுக்கும் வழக்கத்தை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார். மூத்த வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் தனது வாதத் திறமையைக் காட்டலாம், ஆனால் அது ஒருபோதும் நீதிபதியாவதற்கான தகுதியாக இல்லை என்பதுதானே இன்றைய இந்திய யதார்த்தம்.

உண்மையை உரக்கச் சொல்பவர்

  • பதவி உயர்வு அடிப்படையில் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது சரியானது அல்ல என்பது ராம் ஜேத்மலானியின் உறுதியான கருத்து. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வழக்கு நடத்திய அனுபவமே இல்லாதவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுவரும் நடைமுறையை எதிர்த்து முழங்க ராம் ஜேத்மலானி போன்ற ஒரு உண்மையை உரக்கச் சொல்லும் ஒருவரால் மட்டுமே முடியும். தூக்கு தண்டனைக்கு எதிராகவும் தொடர்ந்து தன்னுடைய கருத்துகளை வலியுறுத்திவந்தார் அவர்.
  • பிரசித்த பெற்ற வழக்கறிஞர்கள் தோற்க வாய்ப்புள்ள வழக்குகளை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவார்கள். ராம் ஜேத்மலானி விதிவிலக்காகவே இருந்தார். கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவருக்கும் தனது தரப்பில் சொல்வதற்கு நியாயம் இருக்கும், அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இயற்கை நீதி. அந்த நியாயத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதே ஒரு மூத்த வழக்கறிஞரின் கடமை. ராம் ஜேத்மலானி தனது கடமையைச் செய்யத் தயங்கியவர் இல்லை. ராம் ஜேத்மலானியின் முக்கால் நூற்றாண்டு சட்டத் துறை அனுபவத்தை ஒற்றை வாக்கியமாக சுருக்கினால், ‘சந்தேகத்தின் பலனைக் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வழங்கியே ஆக வேண்டும், அதுவே நீதி’.

நன்றி: இந்து தமிழ் திசை (10-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories