TNPSC Thervupettagam

'ரிக் - இந்திர - காந்தாரா கோட்பாடு'ம் தென்கிழக்கு நாடுகளில் ஆரிய பரவலும்!

September 28 , 2024 60 days 173 0

'ரிக் - இந்திர - காந்தாரா கோட்பாடு'ம் தென்கிழக்கு நாடுகளில் ஆரிய பரவலும்!

  • 'ரிக் - இந்திர - காந்தாரா கோட்பாடு'ம் தென்கிழக்கு நாடுகளில் ஆரிய பரவலும் பற்றிய புதிய, வியக்க வைக்கும் தரவுகளைத் தருகிறார் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலரான ஆர். பாலகிருஷ்ணன்.
  • 'ரிக்- இந்திர - காந்தாரா வளாகக் கோட்பாடு (R.I.G Complex- Rig- Indra- Gandhara) என்ற பெயரில் இடப்பெயராய்வியல் குறித்த முக்கிய ஆய்வறிக்கை ஒன்றை அண்மையில் சென்னையில் பண்பாட்டு ஆய்வாளர் பக்தவச்சல பாரதி தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்கில் சமர்ப்பித்துப் பேசினார்.
  • சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இந்த ஆய்வறிக்கை மிக முக்கியமான ஒன்றாகும்.
  • 2010-ல் அஸ்கோ பர்போலா தலைமையில் உலகச் செம்மொழி மாநாட்டில் வெளியிடப்பட்ட 'கொற்கை வஞ்சி தொண்டி' (KVT Complex) எனும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாட்டின் மூலம் இந்திய வரலாற்றின் திசையைத் தலைகீழாக மாற்றிய பண்பாட்டு ஆய்வாளர் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆர். பாலகிருஷ்ணன் அளித்த மற்றுமொரு சிறப்பு வாய்ந்த ஆய்வறிக்கை இது.
  • ஆரியர்களின் பரவல் குறித்த இந்த கோட்பாட்டில் இந்தியாவின் பழங்கால வேதம் என்று சொல்லப்படும் ரிக் வேதத்தையும், வேத இலக்கியங்களையும், இரு பெரும் புராணங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றையும் கையில் எடுத்துக்கொண்டு அவற்றில் உள்ள பெயர்களைத் தொகுத்து பெயர்க் களஞ்சியம் உருவாக்கியுள்ளார்.
  • அதைக் கொண்டு இடப்பெயராய்வியல் முறையில் இதே பெயர்கள் இந்தியாவிலும், இந்தியாவிற்கு மேற்கு மற்றும் வட மேற்கில் உள்ள நாடுகளிலும், தென்கிழக்கில் உள்ள நாடுகளிலும் எப்படி கொத்துக்கொத்தாக இடம்பெற்றிருக்கின்றன என்பதை நிறுவுகிறார்.
  • எவ்வாறு கொற்கை வஞ்சி தொண்டி வளாக கோட்பாட்டை (KVT Complex) நிறுவுவதற்கு சங்க இலக்கியங்களில் உள்ள பெயர்களை தொகுத்துப் பெயர்க்களஞ்சியமாக மாற்றி, ஒருங்கிணைந்த இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில், எப்படி சங்க இலக்கியங்களில் இருக்கக் கூடிய பெயர்கள் கொத்துக்கொத்தாக இடப்பெயர்களாக விளங்குகின்றன என்பதை ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தோடு சுட்டிக்காட்டி அதன் மூலம் இடப்பெயர்வு எங்கிருந்து, எங்கு நிகழ்ந்திருக்கின்றன என்பதை நிறுவினாரோ அதேபோல் இந்தியாவில் எவ்வாறு கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி பரவி அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவி இருக்கின்றன என்பதையும் ஒரு வரைபடமாக வழங்கியிருக்கிறார்.
  • மக்கள் இடம்பெயரும்போது மலைகளையும் காடுகளையும் இடங்களையும் எடுத்துச் செல்ல முடியாது. மாறாக மலைகளின் பெயர்களையும் இடங்களின் பெயர்களையும் ஆறுகளின் பெயர்களையும் எடுத்துக்கொண்டு நகருகிறார்கள். அப்படித்தான் இதுவும் என்கிறார்.
  • ஆரியர்களின் புலப்பெயர்வு எங்கிருந்து எங்கு நகர்ந்திருக்க முடியும் என்பதை அவர்கள் குடியேறிய பகுதிகளில் உள்ள பெயர்களின் அடிப்படையில் தீர்மானம் செய்கிறார்.
  • அஜர்பைஜானில் தொடங்கி துருக்கி, சிரியா, ஈரான், இராக், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் ராமாயணம், மகாபாரதம் மற்றும் வேத இலக்கியங்களில் இருக்கக் கூடிய குடிகள், அரசர்கள், குலங்கள், வம்சங்கள் போன்றவற்றின் பெயர்கள் கொத்துக்கொத்தாக இருப்பதை ஜிஐஎஸ் மூலம் ஆதாரப்பூர்வமாக எடுத்து நிரூபித்திருக்கிறார்.
  • இந்தோனேசியாவின் விமான சேவைக்கு கருடா என்று பெயர் இருப்பதற்கும், மந்தார மலையை வாசுகி பாம்பால் கடையும் வரைபடம் அங்குள்ள விமான நிலையத்தில் இருப்பதற்கும் காரணம் கேட்கிறார். எப்படி ஒரு பிராமணிய மரபு இஸ்லாமிய மரபாக மாறியதற்கான எடுத்துக்காட்டாக இந்தோனேசியா இருக்கிறது என்பதை விவரிக்கிறார்.
  • தாய்லாந்தில் அரசர்களின் பெயர்கள் ராமா1, ராமா2 என்று தொடர்வதற்கான காரணத்தைக் கேட்கிறார். வியத்நாமில் அங்கோர்வாட் எனும் உலகிலேயே பெரிய இந்துக் கோயில் இருப்பதையும் அங்கு புராணங்கள் வடிக்கப்பட்டிருப்பதும் இன்னும் சொல்லப்போனால் அதில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே தோண்டி எடுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்.
  • இடப்பெயர்கள் என்பது வெறும் இடப்பெயர்கள் மட்டுமல்ல. அது ஒரு உறைந்து போன வரலாறு என்கிறார்.
  • ரிக் வேதத்தில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் இந்திரன் எனும் பெயரையும், காந்தர்வர்களின் நிலமாக குறிப்பிடப்படும் காந்தாரா எனும் பெயர்கள் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள நாடுகளிலும் கிழக்காசிய நாடுகளிலும் இருப்பதற்கான காரணத்தை இந்த கோட்பாட்டின் மூலம் நிறுவுகிறார்.
  • மேற்கிலிருந்து வடமேற்கு மற்றும் தென்கிழக்காக பரவிய இடப்பெயர் ஆதாரங்களை, எடுத்துக்காட்டாக குந்தி எனும் பெயர் ஈரானிலும் பாஞ்சாலி மற்றும் கணேஷா என்ற பெயர் துர்க்மேனிஸ்தான், பாகிஸ்தானிலும் மற்றும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் மீண்டும் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.
  • இங்கு வியாசருக்கு மகாபாரதத்தை கணேஷ் கனவில் வந்து எழுத வைத்ததாக சொல்லப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார். ஆப்கானிஸ்தானில் கல்கி, பாஞ்சாலி என்ற பெயர்கள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளதையும் கேள்வி எழுப்புகிறார்.
  • இந்தியாவின் வடமேற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மகாபாரத பெயர் இடம்பெற்றதை சுட்டிக்காட்டி, டோனி ஜோசப்பின் ஆதி இந்தியர்கள் நூலில் அவர் சுட்டியுள்ள ஆரிய பரவல் வரைபடத்தோடு இது ஒத்துப்போவதையும் மேலும் தற்காலத்தில் நிரூபிக்கப்பட்ட மக்கள் பரவுதல் தொடர்பான மரபியல் ஆய்வுகளோடு (ஸ்பென்சர் வெல்ஸ்) ஒத்துப் போவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

ராமாயண பெயர் ஒப்பீடு

  • ராமாயணத்தில் உள்ள பெயர்கள் இடப்பெயர்களாக துருக்கி, இராக், ஈரான், துர்க்மேனிஸ்தான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் கிர்கிஸ்தான் போன்ற இடங்களில் இருப்பதையும் சங்க இலக்கியத்தில் மிலேச்சர்கள் என்று குறிப்பிட்ட இடப்பெயர் மிலேச்சா என்ற பெயரில் ஈரானில் இருப்பதையும், நரமாமிசம் உண்ணும் மனிதர்கள் என ராமாயணம் சுட்டுவதைக் குறிப்பிடுகிறார்.
  • கிர்கிஸ்தானில் உள்ள கிஷ்கிந்தா, மார்க்கண்டேயா என்ற இடப்பெயர்களும் ஆப்கானிஸ்தானில் மார்க்கண்டேய என்ற பெயர் உள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்.
  • ஒவ்வொரு வருடமும் ராம்லீலா நிகழ்வின் போது ராவணனை எரிக்கும் அந்த சடங்குகளுக்கு குண்ட் இன மக்கள் எதிர்ப்பு காட்டி போராட்டம் செய்வதைத் தொடர்புபடுத்துகிறார்.
  • ராமாயணத்தில் உள்ள முனிவர்களின் பெயர்கள் கவாஸ், அகஸ்தியா, வால்மீகி, அகஸ்திக் என்ற பெயர்கள் ஈரான் இராக்கிலும், வாசுக் (வாசுகி பாம்பு), காளகேயா கிர்கிஸ்தானில் இடம்பெற்றிருப்பதையும் அதன் (latitude/ longitude) ஆதாரங்களோடு சுட்டுகிறார்.
  • வேதம், சங்கம் செழித்திருந்த பகுதிக்கு நகர்ந்தபோதிலும் சங்கம் அழிந்து விடாமல் நிலைத்து நின்ற அதன் நிலைத்த தன்மையை சிலாகிக்கிறார். வேதகால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குலப்பெயர்கள் ஈரானில் இருப்பதையும் அங்கு அசுர குலமே ஹீரோவாகவும் தேவர்கள் வில்லனாகவும் இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
  • காசி என்ற பெயர் இந்தியாவிற்கு வெளியே நிறைய இடப்பெயர்களாக இருப்பதையும் காந்தாரி, பாஞ்சாலி போன்ற பெயர்கள் ஆப்கானிஸ்தானில் இராக்கில் இடம்பெற்று இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
  • வேதகால இலக்கியங்களில் உள்ள கால்நடைகளின் பெயர்களான பசு ஈரானிலும் பாகிஸ்தானில் கவ், பசு என்றும் கிர்கிஸ்தானில் கோ என்றும் மீண்டும் மீண்டும் இடப்பெயர்களாக இடம் பெற்றிருப்பதையும் கேள்வி எழுப்புகிறார்.

வேதகால நதிகள்

  • ராமன் மூழ்கி உயிர்விட்டதாகச் சொல்லப்படும் சராயு என்ற நதியின் பெயர் இராக்கிலும் இருப்பதைச் சொல்லி வியப்பூட்டுகிறார். வேதத்தில் உள்ள பிரதேசங்களான லோக், தேசா, ராஜ், ராஸ்ட்ரா என்ற பெயர்கள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருப்பதும் வேதத்தில் உள்ள இனங்களான சத்ரியன், பிராமன், வைசிய, சண்டாள என்ற பெயர்கள் இடம் பெற்றிருப்பதையும் அவர் சுட்டுகிறார்.
  • நிறைவாக ரிக் - இந்திர -காந்தாரா கருத்தியலின்படி மூன்றிலும் உள்ள இடப்பெயர்கள் ஒன்றாக ஒரே இடத்தில் இருக்கும் ஆதாரங்களை ஜிஐஎஸ் உதவியோடு சுட்டிக்காட்டுகிறார். ரிக் எனும் பெயர் அதிகமாக உள்ள முதல் 50 இடங்களைச் சுட்டிக்காட்டுகிறார். சரஸ்வதி நதி அதன் பெயரோடு இடம்பெயர்ந்த இடங்களையும் வரைபடமாக சுட்டுகிறார்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக இன்னும் நீங்கள் சமாதானம் ஆகவில்லையா? என்று கேட்டுவிட்டு அவர் வீசும் அடுத்த குண்டுதான் அரசர்கள், வம்சங்கள், இனக்குழுக்களின் பெயர்கள் இடப்பெயர்களாக மல்லா, சக்கியா, போரஸ், மகதா, நந்தா, அசோக், சந்திரகுப்தா, மௌரியா, கனிஷ்கா, காரவேலா, சாதவாகனா, குப்தா என்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் போன்ற இடங்களில் இருப்பதை சுட்டிக்காட்டி, காரவேலா தொடர்புடைய கத்திக்கும்பா கல்வெட்டு “திரமிளா சங்காத்த” என்று தென்புலத்துடன் உள்ள தொடர்புகளைச் சொன்ன கல்வெட்டு பெயரோடு இருப்பதையும், மேலும் ஹர்ஷா, சாளுக்கிய, ராஷ்டிரகூட என்ற பெயர்கள் இருப்பதையும் வெளியிட்டு வியப்பில் உறைய வைத்தார்.
  • அவருக்கே உரித்தான பகடியுடன் புலிகேசி எனும் பெயர் இருப்பதை நகைச்சுவையாக சுட்டிக் காட்டினாலும் எதையும் எளிதாகக் கடந்துவிடும் ஆதாரமல்ல என அங்கு முன்வைத்தது.
  • இறுதியாக ஆந்திரத்தில் பன்னி நதி எப்படி சமஸ்கிருத மொழி மிகுந்த பகுதிக்கு பாயும் போது வராகமாக மாறியது என்பதையும், மறைக்காடு எப்படி வேதாரண்யமாக மாறியது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
  • ரிக் இந்திர காந்தாரா வளாக கோட்பாடோ (RIG complex) கொற்கை வஞ்சி தொண்டி வளாக கோட்பாடோ (KVT Complex) மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்லிக் கொண்டிருப்பது கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர் “ - என்பதைத்தான்.
  • வெறுப்பையும் இனங்களுக்கு இடையிலான வேறுபாடுகளையும் கூட்டி அரசியல் செய்வதற்கான களம் இதுவல்ல என்பதையும் வலியுறுத்துவதாக இருந்தது அவருடைய ஆய்வறிக்கை.
  • மொத்தத்தில் உலக வரைபடத்தோடு இந்த கருத்தியலை உற்றுப் பார்க்கையில் மேற்குப் பகுதியில் மற்றும் வடமேற்கு பகுதியில் இருந்து பரவிய ஆரிய பரவல் அங்கிருந்து எவ்வாறு தென்கிழக்கு நாடுகளுக்கு பரவியது என்பதையும் சுட்டுகிறது.
  • இந்த ஆய்வு இடப்பெயராய்வியல் முறையில் நிகழ்ந்தாலும் இன்று உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மரபியல் சார்ந்த ஆய்வுகளோடும் பெரிதும் ஒத்துப்போவதுதான் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

நன்றி: தினமணி (27 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories