- ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வருடமும் தனது முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை பொருத்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை மத்திய அரசுக்கு டிவிடெண்டாக வழங்குகிறது. இதன்படி, 2023-24 ஆண்டுக்கான டிவிடெண்டாக ரூ.2.1 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 141 சதவீதம் அதிகம். 2022-23 நிதி ஆண்டுக்கான டிவிடெண்டாக ரூ.87,416 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியது.
எப்படி வருவாய் வருகிறது?
- மத்திய, மாநில அரசுகளுக்கான கடன் மேலாண்மை நடவடிக்கைகள், வங்கி மற்றும் வங்கிசாரா நிதி அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள், வெளிநாட்டு மத்திய வங்கிகளில் டெபாசிட் செய்தல், அந்நிய செலாவணி சொத்துகளை வாங்குதல், குறுகிய கால கடன் வழங்குதல் உள்ளிட்டவை மூலம் ரிசர்வ் வங்கி வருமானம் ஈட்டுகிறது. தனது செயல்பாடுகளுக்கான செலவுகள் போக மீதமுள்ள உபரியை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்கும்.
- 2021-22-ல் ரிசர்வ் வங்கியின் வருமானம் ரூ.1.6 லட்சம் கோடி. 2022-23 -ல் அது ரூ.2.35 லட்சம் கோடியாக உயர்ந்தது. 2023-24-ல் அது ரூ.2.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
- வங்கிகளுக்கு வழங்கிய கடனுக்கான வட்டி, தொடர்ந்து ஏறி வரும் தங்கத்தின் விலை, அந்நிய செலாவணி சந்தையில் 153 பில்லியன் டாலர்களுக்கு இந்த நிதியாண்டில் பத்திரங்களை விற்றதன் மூலம் கிடைத்த வருமானம் ஆகிய காரணங்களால் ரிசர்வ் வங்கியின் இருப்பு தற்போது வலுவாகியுள்ளது. இந்நிலையில், 2022-23-ம் ஆண்டுக்கு வழங்கப்பட்டதைவிட 141 சதவீதம் அதிகமாக டிவிடெண்ட் வழங்குகிறது.
ரிசர்வ் வங்கியின் செலவு
- புதிய கரன்சி நோட்டுகளை அச்சடித்தல், ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள், வங்கிகளுக்கு தர வேண்டிய கமிஷன், கடன் மற்றும் டெபாசிட்டுகளுக்கு கொடுக்க வேண்டிய வட்டி, நஷ்ட ஈடுகள் என பல்வேறு செலவுகளை ரிசர்வ் வங்கி செய்ய வேண்டி உள்ளது.
- மேலும் கடன் நிலுவை, சொத்துகள் தேய்மானம் மற்றும் சில சட்டபூர்வமான தேவைகளை பூர்த்தி செய்த பிறகுதான் ரிசர்வ் வங்கி தனது லாபத்தை மதிப்பிடும்.
- ரூபாய் மதிப்பு குறைதல், ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ஆகும் செலவு, டாலர் கையிருப்புகளின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் மற்றும் முதலீடுகள் ஆகியவையே ரிசர்வ் வங்கியின் லாபத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
- எதிர்பாராத இடர்களையும் நிதி அமைப்பில் ஏற்படும் நெருக்கடிகளையும் சமாளிப்பதற்கு போதிய மூலதனத்தை தனது இருப்பாக ரிசர்வ் வங்கி வைத்திருக்க வேண்டும். நிதி அமைப்பில் ஏற்படும் இடர்களுக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியின் மூலதன இருப்புக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது வருடந்தோறும் கணக்கிடப்படும்.
- தற்போது ரூ.2.1 லட்சம் கோடியை டிவிடெண்டாக வழங்கினாலும் எதிர்பாராத இடர்களை சமாளிக்க தேவைப்படும் நிதி இருப்பின் அளவை 6%லிருந்து 6.5% ஆக ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.
பொருளாதார மூலதன கட்டமைப்பு
- ரிசர்வ் வங்கியின் மூலதன இருப்புக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகை மற்றும் மத்திய அரசுக்கு மாற்றப்பட வேண்டிய உபரித்தொகை ஆகியவற்றை தீர்மானிப்பதற்கு பொருளாதார மூலதன கட்டமைப்பை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தி உள்ளது.
- பொருளாதார மூலதன கட்டமைப்பு தொடர்பாக பல்வேறு கமிட்டிகளை மத்திய அரசு கடந்த காலங்களில் நியமித்திருந்தாலும் 2018-ம் ஆண்டு பொருளாதார மூலதன கட்டமைப்பை மதிப்பீடு செய்து பொருத்தமான உபரி பகிர்வு கொள்கையை உருவாக்க பிமல் ஜலான் தலைமையிலான கமிட்டியை ரிசர்வ் வங்கி அமைத்தது.
- ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பாய்வு செய்யும் வகையில் பிமல் ஜலான் கமிட்டியின் பரிந்துரைகளை 2019 -ம் ஆண்டு முதல் புதிய பொருளாதார மூலதன கட்டமைப்பாக அறிவித்தது ரிசர்வ் வங்கி.
- அசாதாரண சூழ்நிலைகளில் மட்டும் மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடெண்டுகளை வழங்க அனுமதி, எதிர்பாரா செலவுக்கான நிதி அளவினை ரிசர்வ் வங்கியின் பொருளாதார மூலதனத்தில் 5.5 முதல் 6.5% வரை நிர்ணயித்தல் ஆகிய பரிந்துரைகளை இந்தக் கமிட்டி வழங்கியது. இதை ஏற்றுக் கொண்டதன் மூலம் இடர்களை சமாளிப்பதற்கும் அரசுக்கு உபரி நிதியை வழங்குவதற்கும் இடையில் சமநிலை அவசியம் என்பதை ரிசர்வ் வங்கி வெளிப்படுத்தியது.
மத்திய அரசுக்கு பலன்
- வரும் நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறையை 5.1 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதற்கு ரிசர்வ் வங்கி வழங்கிய உபரித்தொகை உதவியாக இருக்கும்,
- மேலும், இந்தத் தொகை சாலைகள் ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யவும் மூலதனச் செலவுகளை கூடுதலாக மேற்கொள்ளவும் மத்திய அரசுக்கு உதவுகிறது.
- உபரித்தொகையானது அரசாங்கம் சந்தையில் வாங்கும் கடன்களையும் வட்டி செலவையும் குறைக்க உதவும். அரசின் வட்டி செலவும் குறையும். வரி வருமானத்தில் குறைவு ஏற்பட்டால் அரசு இந்த உபரியை கொண்டு நிதி நிலையை சமாளிக்க முடியும்.
- பொது சொத்துகள் விற்பனை, பொதுத்துறை நிறுவனங்களின் டிவிடெண்டுகள், ரிசர்வ் வங்கியின் உபரித்தொகை ஆகியவற்றை அரசாங்கம் எதிர்பார்த்து இருக்காமல் நிதி நிலையை மேம்படுத்த கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளிலும் கார்ப்பரேட்டுக்கு தரும் வரிச் சலுகைகளை குறைப்பதிலும் கவனம் செலுத்தி வரி ஜிடிபி விகிதத்தை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 06 – 2024)