TNPSC Thervupettagam

ரெட்டிட்’டிடம் கேளுங்கள்

December 16 , 2024 25 days 64 0

ரெட்டிட்’டிடம் கேளுங்கள்

‘ரெட்டிட்’டிடம் கேளுங்கள்:

  • செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நுட்பத்தைக் கொண்டு சாட்பாட் பாணியில் கேள்விக்குப் பதில் அளிக்கும் சேவையைச் சமூக வலைதள சேவையான ‘ரெட்டிட்’டும் அறிமுகம் செய்துள்ளது. ‘ரெட்டிட் ஆன்சர்ஸ்’ எனும் இந்தச் சேவை வாயிலாகப் பயனாளிகள் இனி நேரடியாகக் கேள்வி கேட்டு ‘ரெட்டிட்’டிடம் பதிலைப் பெறலாம். இணைய விவாதக் குழு வகையைச் சேர்ந்த ‘ரெட்டிட்’ முன்னணி சமூக வலைதள சேவைகளில் ஒன்றாக விளங்குகிறது. ‘ரெட்டிட்’ விவாதக் குழுக்கள், ‘சப் ரெட்டிட்’ எனச் சொல்லப்படும் துணை விவாதக் குழுக்கள் இணையத்தில் மிகவும் பிரபலம்.
  • ‘ரெட்டிட்’ தளத்தில் எண்ணற்ற தலைப்புகளில் விவாதங்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்கும். இவற்றில் பயனுள்ள தகவல்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் பெறலாம். எந்தத் தலைப்பிலான தகவல்களைத் தேடியும் ‘ரெட்டிட்’டில் நுழையலாம். விரும்பிய குழுவில் பங்கேற்கலாம் அல்லது கருத்துகளைப் படிக்கலாம்.
  • இப்போது, இந்தக் குழுக்களில் உள்ள தகவல்களை, சாட்ஜிபிடியிடம் கேட்பது போலவே கேள்வியாகக் கேட்டு பதில் பெறும் சேவையாக ‘ரெட்டிட் ஆன்சர்ஸ்’ அறிமுகம் ஆகியுள்ளது. ‘ரெட்டிட்’ விவாதங்களிலிருந்து தகவல்களைப் பதிலாக அளிக்கும். பதில் பெறுவது தவிர தொடர்புடைய விவாதங்களையும் அணுகலாம். முதல் கட்டமாக அமெரிக்கப் பயனாளிகளுக்கு அறிமுகமாகி உலக அளவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. https://redditinc.com/blog/introducing-reddit-answers

என்ன பரிசு வாங்கலாம்?

  • இ-காமர்ஸ் தளங்கள் பொருள்களை வாங்குவதை எளிதாக்கி இருந்தாலும், அன்புக்கு உரியவர்களுக்குப் பரிசளிக்க விரும்பும்போது, எந்தப் பரிசு பொருத்தமாக இருக்கும் எனத் தேர்வு செய்வது சிக்கலானதுதான். இதற்காக நண்பர்களிடம் கேட்கலாம், இணையத்தில் தேடலாம். இன்னும் பலவிதங்களில் முயலலாம். இந்தத் தேடலை எளிமையாக்கும் வகையில் டிரீம்கிஃப்ட் (https://dreamgift.ai/) சேவை அறிமுகம் ஆகியுள்ளது.
  • எந்தத் தேவைக்கு, யாருக்கான பரிசுப்பொருள் தேவை என இந்தத் தளத்தில் கேள்வி வடிவில் தெரிவித்தால், பொருத்தமான பரிசைப் பரிந்துரைக்கிறது. ஜிபிடி அடிப்படையில் செயல்படும் சேவை இது. இதில் பல்வேறு தலைப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட பரிசுகளையும் பார்க்கலாம். பரிசுப்பொருள் தேடலுக்கான ஏஐ உதவியாளர் என இந்தச் சேவை வர்ணிக்கப்பட்டாலும், இதன் பின்னே இருக்கும் வணிக நோக்கத்தை மறந்துவிடக் கூடாது.

சாட்ஜிபிடி வீடியோ:

  • சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, எழுத்து மூலம் வீடியோ உருவாக்கச் சேவையானச் சோராவைப் பொதுப் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. சாட்ஜிபிடியிடம் எழுத்து வடிவில் பதில் பெறுவதுபோல, இந்தச் சேவையில் எழுத்து வடிவில் தேவையைக் குறிப்பிட்டு 20 விநாடி வீடியோவை உருவாக்கிக் கொள்ளலாம். சில மாதங்களுக்கு முன்பு இந்தச் சேவை முன்னோட்டமாக வெளியிடப்பட்ட நிலையில், சாட்ஜிபிடி கட்டண சந்தாதாரர்களுக்கு இப்போது அறிமுகம் ஆகியுள்ளது.
  • இந்தச் சேவை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டண உறுப்பினர்கள் சோரா (Sora.com) தளத்தில் தனியே இந்தச் சேவையை அணுகலாம். இதனிடையே, எக்ஸ் நிறுவனம், தனது கிராக் (Grok) ஏஐ சாட்பாட்டைக் கட்டண சேவையிலிருந்து அனைவருக்கமான சேவையாக அறிமுகம் செய்துள்ளது. கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம் என்றாலும், குறிப்பிட்ட அளவில்தான் அணுகலாம் எனும் கட்டுப்பாடு இருக்கிறது.

மின்னஞ்சலைச் சொல்லாதீர்!

  • சைபர் பாதுகாப்பு என வரும்போது, பயனாளிகள் சின்ன சின்ன விஷயங்களில் கூடக் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் சைபர் பாதுகாப்பு வல்லுநரான கிறிஸ்டோபர் பேட்ரிக் ஹாகின்ஸ். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றில் பொருள்களை வாங்கும்போது, கருத்தறிவதற்காக மின்னஞ்சல் முகவரி கேட்கப்படும்போது, அருகில் தாக்காளர்களும் இருந்து மின்னஞ்சல் முகவரியை ஒட்டுக்கேட்டு தவறாகப் பயன்படுத்தலாம் என்கிறார்.
  • இதேபோல, பொது இடங்களில் நாம் திறன்பேசியில் மூழ்கி இருக்கும்போது எட்டிப்பார்ப்பவர்களுக்கு நம்மைப் பற்றி பல தகவல்கள் தெரிய வரலாம், அவை தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்கிறார்.

எல்லாமே அச்சிடலாம்!

  • கிரவுட் ஃபண்டிங் எனச் சொல்லப்படும் திரள்நிதித் தளமான கிக்ஸ்டார்ட்டர் வெற்றிக்கதைகளின் பட்டியலில், ‘எலிகூவின் ஆரஞ்ச்ஸ்டிராம் கிகா பிரண்டர்களும்’ சேர்ந்திருக்கிறது. விரும்பிய வடிவமைப்பில் வீட்டிலேயே பொருள்களை அச்சிட வழிசெய்யும் இந்த 3டி பிரிண்டரை, எலிகூ (elegoo.com) நிறுவனம் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் பயனாளிகள் ஆதரவோடு உருவாக்கியுள்ளது.
  • கிட்டத்தட்ட ஓர் ஆள் அளவுக்கு நீள அகலம் கொண்ட இந்த பிரிண்டர், டெஸ்க்டாப்பிலிருந்து தொழில்துறை தரத்திலான பொருள்களை அச்சிடக்கூடியது. சீனாவிலிருந்து சர்வதேச அளவில் வெற்றி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக எலிகூ திகழ்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories