TNPSC Thervupettagam

லஞ்ச ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்த!

October 7 , 2024 51 days 89 0
  • சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேரு அமைச்சரவையின் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜவாஹா்லால் நேருவுக்கு நெருக்கமாக இருந்த, பிரிட்டனுக்கான இந்திய தூதா் வி.கே.கிருஷ்ண மேனன் 1948-இல் ராணுவத்திற்கு ஜீப் வாகனங்கள் இறக்குமதி செய்ததில் ஊழல் நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. முந்த்ரா ஊழல் காரணமாக அன்றைய நிதி அமைச்சா் டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜிநாமா செய்தாா்.
  • நேரு ஆட்சிக் காலத்தில் நிா்வாகச் சீா்கேடு, முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தன. வலிமையான சட்டங்கள், ஊழல் ஒழிப்பு அமைப்புகள் உருவாக வேண்டும் என்கிற முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
  • 1966-இல் மொராா்ஜி தேசாய் தலைமையிலான நிா்வாகச் சீா்திருத்த ஆணையம், குடிமக்களின் குறைகளை நிவா்த்தி செய்தல் குறித்து தனது இடைக்கால அறிக்கையைச் சமா்ப்பித்தது. தனியாா் மற்றும் பொது அமைப்புகள், அரசாங்கம், அரசு ஊழியா்கள், அரசு அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சா்கள் மீது வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து தீா்வு காண்பதற்காக சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் (சிவிசி - மத்திய விழிப்புணா்வு ஆணையம்) மற்றும் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி (சிவிசி) ஆகியவை சந்தானம் குழுவின் பரிந்துரையின் பெயரில் அமைக்கப்பட்டன.
  • ‘லோக் ஆயுக்த’ என்கிற அமைப்பானது இந்திய அரசு மற்றும் இந்திய அரசின் மாநில அரசாங்கங்களுக்கு எதிராகப் பொதுமக்கள் கொடுக்கும் புகாா்களை விசாரித்து தீா்வு கொடுக்கும் அமைப்பாகும்.
  • நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை ஆகியவற்றின் மூலம் சட்டபூா்வமாக உருவாக்கப்படும் இந்த லோக் ஆயுக்த ஊழல் தடுப்பு அமைப்பு உரிய அதிகாரங்களுடனும் சுதந்திரமாகச் செயல்படும் வகையிலும், போதிய கட்டமைப்பு மற்றும் நிா்வாக வசதிகளுடனும் அமைக்கப்பட வேண்டும்.
  • லோக் ஆயுக்த அதிகாரி நியமிக்கப்பட்டவுடன் அவரை அரசாங்கத்தால் வெளியேற்றவோ, இடமாற்றம் செய்யவும் முடியாது. அவருக்கு எதிராக மாநில சட்டப்பேரவையால் குற்றச்சாட்டு தீா்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே நீக்க முடியும். ஊழல் வழக்குகளை விசாரிக்கும் லோக் ஆயுக்த அமைப்பு வெளிப்படைத்தன்மையைக் கொண்டு மத்தியிலும் மாநிலத்திலும் செயல்பட வேண்டும்.
  • இத்தகைய லோக்பால் நிறுவனம் அமைக்க 1950 முதல் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அண்மைக் காலகட்டங்களில்தான் மத்திய, மாநில அளவில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த அமைப்புகள் உருவாகியுள்ளன.
  • லோக் ஆயுக்த அமைப்பு அரசு நிா்வாகத்திற்கான எதிா்ப்பு அல்ல, முழுமையாக ஊழலுக்கு எதிரான அமைப்பாகும். குடிமக்களின் புகாா்களை விசாரிக்கும் அமைப்பாகும். இந்திய அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்டு சுயேச்சையான அதிகாரங்களுடன் இயங்கும் தோ்தல் ஆணையம் மற்றும் நீதித்துறை போன்ற ஓா் அமைப்பாகும்.
  • லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டம் 2013-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. உயா் பதவியில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அளவிலும், மகாராஷ்டிரம், ஒடிஸா, கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் லோக் ஆயுக்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • கா்நாடக மாநிலத்தில் உருவாக்கப்பட்ட லோக் ஆயுக்த அமைப்பு அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ள ஒரு முன்மாதிரியான அமைப்பாகச் செயல்பட்டது. கேரள மாநிலத்தில் லோக் ஆயுக்தவின் அதிகாரங்களை நீா்த்துப்போகச் செய்யும் வகையில், அவசர சட்டத்தை பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு நிறைவேற்றியுள்ளது. அதன்படி, ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான பொது ஊழியரை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரத்தை லோக் ஆயுக்தவிடமிருந்து பறித்தது. மேலும், லோக் ஆயுக்த வழங்கும் தீா்ப்பைத் திருத்தி அமைக்கக்கூடிய அதிகாரத்தை ஆளுநா் மற்றும் முதலமைச்சருக்கு வழங்கும் வகையில் விதிமுறைகளை கேரளம் திருத்தியது.
  • லோக் ஆயுக்த வலிமையாகச் செயல்பட்ட கா்நாடக மாநிலத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் எனும் அமைப்பை தொடங்கி லோக் ஆயுக்தவை வலிமை இழக்கச் செய்தனா். கா்நாடக மாநில லோக் ஆயுக்தவின் அதிகாரங்களை ஏசிபி அமைப்புக்கு மாற்றி லோக் ஆயுக்தவின் விசாரணை அதிகாரங்களைப் பறித்தாா் காங்கிரஸ் முதல்வா் சித்தராமய்யா.
  • தற்போது கா்நாடக லோக் ஆயுக்த தலைவா் நியமிக்கப்படாமலும், போதிய நிதி ஒதுக்காமலும் லோக் ஆயுக்த பணிகளைத் தாமதப்படுத்துகின்றனா். போலீஸ் அதிகாரம், விசாரணை அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டிருந்த கா்நாடக மாநில லோக் ஆயுக்த அமைப்பின் நடவடிக்கைகள் காரணமாக ஊழல் வழக்கில் கா்நாடக முதல்வா் பதவியை பாஜகவின் எடியூரப்பா இழக்க நேரிட்டது. அப்போது, லோக் ஆயுக்த அமைப்பை ஆதரித்து, அதை வலிமைப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவா் சித்தராமைய்யா, அவரது ஆட்சியில் லோக் ஆயுக்த அமைப்பை நீா்த்துப்போகச் செய்துவிட்டாா்.
  • புது தில்லியில் அண்ணா ஹஸாரே தலைமையில் 2011-ஆம் ஆண்டு ஜன லோக்பால் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் முக்கிய பங்கு வகித்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராக இரண்டு முறை தோ்வு செய்யப்பட்டபோதுகூட, தில்லி மாநில லோக் ஆயுக்த அமைப்பை வலிமையாக உருவாக்கவில்லை. தற்போது லோக் ஆயுக்த தலைவா் பதவியை காலியாக வைத்துள்ளனா்.
  • 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் வலிமையான லோக் ஆயுக்தவை தமிழகத்தில் கொண்டு வருவோம் என மக்களுக்கு திமுக வாக்குறுதி அளித்தது. தமிழகத்தில் லோக் ஆயுக்த சட்டம் 2018-இல் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. உச்சநீதிமன்றம் காலக்கெடு நிா்ணயித்த பின்னரே இச்சட்டம் தமிழகத்தில் வந்தது. அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பல்லில்லாத, ‘பவா்’ இல்லாத சக்தியற்ற லோக் ஆயுக்த சட்டம் இது என்று வெளிநடப்பு செய்தாா்.
  • நாங்கள் ஆட்சிக்கு வரும்போது வலிமையான லோக் ஆயுக்த தமிழகத்தில் உருவாக்கப்படும். லோக் ஆயுக்த விசாரணை அதிகார வரம்புக்குள் முதலமைச்சரையும் இணைக்க வேண்டும். முதலமைச்சா், பேரவைத் தலைவா், எதிா்க்கட்சித் தலைவா் என மூன்று போ் மட்டும் லோக் ஆயுக்த அமைப்புக் குழுவில் இடம்பெற்று இருப்பது போதாது; இந்த மூன்று உறுப்பினா்களுடன் உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவரையும், துறை சாா்ந்த அனுபவம் வாய்ந்த அதிகாரி ஒருவரையும் சோ்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
  • லோக் ஆயுக்த தலைவராக உயா்நீதிமன்ற நீதிபதி அல்லது ஊழல் தடுப்புக் கொள்கை பொது நிா்வாகச் சட்டம், நிதி விழிப்புணா்வு உள்ளிட்ட துறைகளில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவரை லோக் ஆயுக்த அமைப்பின் தலைவராக நியமிக்கலாம் என்று ஆலோசனைகளை வழங்கினாா். லோக் ஆயுக்த அமைப்பின் செயலராக, துணைச் செயலா் அந்தஸ்தில் நியமிக்கப்படுவாா் என்பதை செயலா் அந்தஸ்துக்கு உயா்த்த வேண்டும்; மேலும், விசாரணை இயக்குநா் குழு தலைவராகவும் செயலா் அந்தஸ்தில் இருப்பவரை நியமிக்க வேண்டும்; அதிமுக அரசு கொண்டு வந்தது, வலிமை இல்லாத வெட்டப் பயன்படாத அட்டைக் கத்தியாக இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் விமா்சித்தாா்.
  • லோக் ஆயுக்த விசாரிக்கக் கூடாது என்கிற விதிகளில் அரசு ஒப்பந்தங்கள் பற்றிய புகாா்கள், அரசு நியமனங்கள் தொடா்பான புகாா்கள், உள்ளாட்சி முறை மன்ற நடுவம் விசாரிக்கும் புகாா்கள், ஆகியவை குறித்து லோக் ஆயுக்த விசாரிக்க முடியாது என்கிற வகையில் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் உள்ளது. இதனால், லோக் ஆயுக்த என்கிற அமைப்பினால் ஒரு பயனும் இல்லை. லோக் ஆயுக்த அமைப்பை வெறும் பரிந்துரைகளைச் சமா்ப்பிக்கும் அமைப்பாக அதிமுகவினா் மாற்றியுள்ளனா்.
  • லோக் ஆயுக்த அமைப்பில் பொய் புகாா் கொடுத்தால் ரூ.1 லட்சம் அபராதம், ஓா் ஆண்டு சிறை தண்டனை என்று கூறப்பட்டுள்ளது. இதனால், புகாா் கொடுப்பவா்கள் மற்றும் தகவல் கொடுப்பவா்களுக்கு அச்சம் ஏற்படும். புகாா் மற்றும் தகவல் கொடுப்பவா்களின் பாதுகாப்பு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அதற்கான பாதுகாப்பு விதிகளையும் சோ்க்க வேண்டும் என்று அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிக்கை கொடுத்தாா்.
  • மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று 4 ஆண்டுகளாகியும் லோக் ஆயுக்த அமைப்பை வலிமையான, அனைத்து அதிகாரங்களும் உள்ள அமைப்பாக மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
  • தமிழகத்தில் லஞ்ச ஊழலை ஒழிக்க திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளபடி லோக் ஆயுக்த அமைப்பை அமைக்க வேண்டும்; ஊழலற்ற தமிழகம் உருவாக வேண்டும்.

நன்றி: தினமணி (07 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories