TNPSC Thervupettagam

லித்தியம் தட்டுப்பாடும் மனநோயாளிகளின் எதிர்காலமும்

November 7 , 2023 428 days 383 0
  • இன்றைக்கு மின் வாகனங்கள், திறன்பேசிகளின் உற்பத்திப் பெருக்கத்தினால் அவற்றின் பேட்டரிக்குத் தேவையான லித்தியம் கனிமத்தின் தேவை, அதன்உற்பத்தியைவிட அதிகரித்து விட்டது. லித்தியம் உலோகமாகக் கிடைப்பதைவிட தாது உப்புப்படிமங்களாக மட்டுமே கிடைக்கும். பல வருடங்களுக்கு முன்புவரை பெரும்பாலும் பேட்டரி தயாரிப்பு, விமானம், சைக்கிள்களுக்கான எடைகுறைந்த அலுமினிய உலோகத் தயாரிப்பு,கண்ணாடிப் பொருள் தயாரிப்பு போன்றவற்றுக்காக லித்தியம் பயன்படுத்தப்பட்டன. கூடவே, மருந்துத் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டது.
  • குறிப்பாக, மனநோய்களில் ஒருவகை தீவிர பாதிப்பான இருதுருவ மனநோய் (Bipolar mood disorder) உள்ளிட்ட மன அழுத்த நோய்களின் சிகிச்சைகளுக்கு லித்தியம் பயன்பாடு அத்தியாவசியமானதாக இருந்துவருகிறது. இதில் லித்தியம் கார்பனேட்’ (Lithium Carbonate) என்கிற தாது உப்பாகவே மனநல மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுவாரசியப் பின்னணி

  • இயற்கையாகவே கிடைக்கும்பல்வேறு கனிமங்களும் தாது உப்புக்களும், உடல் - மனநல ஆரோக்கியத்துக்கு உகந்தவையா என்று பல்வேறு காலகட்டங்களில் பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றன. அதன் விளைவாகப் பலமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதே போல,லித்தியம் உப்புக்களும் 19ஆம் நூற்றாண்டு முதற்கொண்டே பல மருத்துவக் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • பாறை வெடிப்புகளில்இருந்து வெளிவரும் ஆர்டீசியன் நீரூற்றுகளில் உள்ள லித்தியம், பல நோய்களைக் குணமாக்குவதாகக் கருதப்பட்டு, கண்ணாடி பாட்டில்களில்அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ‘லித்தியா பீர் அல்லது கிறிஸ்துமஸ் பீர்என்கிற பெயரில் லித்தியம் உப்புக்களால் செறிவூட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 1940களில் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
  • இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பருகும் செவன்அப்’ (7 UP) என்கிற குளிர்பானம் 1929இல் லித்தியத்தால் செறிவூட்டப்பட்ட எலுமிச்சை சோடா’ (Lithiated Lemon-Lime Soda) என்ற பெயரிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. 1936க்குப் பின்பே அதிலுள்ள லித்தியம் நீக்கப்பட்டு, செவன்அப் என்று சுருக்கப்பட்டது. அதிலுள்ள ஏழு என்பதுகூட லித்தியத்தின் அணுநிறை எண்ணான ஏழு என்கிற எண்ணையே குறிக்கும் என்றும் சொல்லப் படுகிறது.
  • இப்படிப் பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தலித்தியம் உப்புக்கள், மனஎழுச்சி நோயைக் கட்டுப்படுத்தும் அருமருந்தாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான் கேட் என்ற மனநல மருத்துவரால், 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அறிமுகப்படுத் தப்பட்டு இன்றுவரை பயன்படுத்தப் பட்டு வருகிறது.

தற்கொலைத் தடுப்பாளன்

  • இதை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், லித்தியத்தால் செறிவூட்டப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துபவர்களிடையே தற்கொலை எண்ணம் மிகக் குறைவாகவே ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டது. இப்படிப் பல வகைகளில் பயன்படுத்தப்பட்டுவந்த லித்தியம், இருதுருவ மனநோய்க்கு முதல் தேர்வாகவும், மன அழுத்த நோய்க்கு - மற்ற மருந்துகள் போதுமான முன்னேற்றத்தைக் கொடுக்காதபட்சத்தில் - ஆபத்பாந்தவனாகவும் கடந்த 70 வருடங்களுக்கு மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இருதுருவ மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர், தனது வாழ்நாளில் ஓரிரு தடவை முதல் பல தடவைகள் வரை மனஎழுச்சியினாலோ (Mania), தீவிர மனஅழுத்தத்தினாலோ (Bipolar Depression) பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு; எனவே, நோயின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு வருடங்கள் முதல் வாழ்நாள் முழுவதும் லித்தியம் மாத்திரையை எடுத்துக் கொள்ளப் பரிந்துரை செய்யப்படும்.
  • இதனால் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் மனநல பாதிப்பு ஏற்படும் சாத்தியம் தடுக்கப்பட்டு, அவரது வாழ்க்கைத்தரம் பாதுகாக்கப்படுகிறது. லித்தியம் கார்பனேட் தடுப்புமருந்தாக மட்டுமல்லாமல், மனஅழுத்த நோய்களின் ஆபத்தான விளைவான தற்கொலை எண்ணத்தைக் குறைப்பதன் மூலம் தற்கொலைத் தடுப்புமருந்தாகவும் செயல்பட்டு வருகிறது.

தவறான கருத்தும் நிதர்சனமும்

  • மற்ற எல்லா மருந்துகளைப் போல, லித்தியம் கார்பனேட் மருந்தும் பக்கவிளைவுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால், மருத்துவம் பயிலும் மாணவர்களிடம் லித்தியம் பற்றிக் கேட்டாலே அது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துஎன்ற பதில்தான் முதலில் வரும். இது உண்மை என்று சொல்வதைவிட மிகைப்படுத்தப்பட்ட உண்மை என்றே சொல்ல வேண்டும்.
  • பெரும்பாலான தாது உப்புக்கள் உடலிலிருந்து சிறுநீரகம் மூலமாகவே வெளியேற்றப் படுவதைப் போலவே லித்தியம் தாது உப்பும் வெளியேற்றப்படுவதால், இதை உட்கொண்டாலே சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிடும் என்கிற தவறான கருத்து நிலவிவருகிறது. மேலும், பெரும்பாலான மருந்துகளின் அளவு (Dose) உடலின் எடையைப் பொறுத்தே அளவிடப்பட்டுக் கொடுக்கப்படும் சூழலில், லித்தியம் மட்டும் சற்று வேறுபடுகிறது.
  • இதன் நல்விளைவும், பக்கவிளைவும் மாத்திரையின் மில்லிகிராம் அளவைவிட ரத்தத்தில் எவ்வளவு சேர்ந்துள்ளது (Plasma level) என்பதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும்; எனவே, லித்தியத்தை தேர்ந்த மனநல மருத்துவர்களால் மட்டுமே சரியான விதத்தில் பயன்படுத்த முடியும். பிற காரணங்களால் ஏற்படும் சிறுநீரகக் கோளாறுகளுடன் ஒப்பிடும்போது, லித்தியம் மூலம் ஏற்படும் சிறுநீரகக் கோளாறுகளின் விகிதம் மிகக் குறைவு என்பதே உண்மை. ஒருவரது வாழ்க்கைத்தரத்தையே நிர்ணயிக்கும் மருந்து இது.

விலை எழுச்சி

  • இந்நிலையில், லித்தியம் கனிமத்தின் தேவை அதிகரித்திருப்பதன் காரணமாக ஏற்பட்டுஉள்ள தட்டுப்பாடு, பேட்டரி வாகனங்களின் விலையை நிர்ணயித்தது மட்டுமல்லாமல், மனநோய் மருந்துகளின் விலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருதுருவ மனநோய்க்குப் பயன்படுத்தப்படும் மற்ற மாத்திரைகள் எல்லாம் 10 ரூபாய்க்கும் அதிகமான விலையில் கிடைக்கும் நிலையில், மிகவும் மலிவான விலையில், அதாவது 300 மி.கி. லித்தியம் கார்பனேட் மாத்திரை ரூ.3 என்கிற அளவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
  • ஆனால், லித்தியம் கனிமத்துக்கு ஏற்பட்ட கிராக்கியின் காரணமாக, இதன் விலை மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. மூலப்பொருள் தட்டுப்பாட்டின் காரணமாக ஒருசில மருந்து நிறுவனங்கள் லித்தியம் கார்பனேட் மருந்து உற்பத்தியையே நிறுத்திவிட்டன. மக்களுக்கு மலிவான விலையில் கிடைத்துவந்த லித்தியம் கார்பனேட் மாத்திரைகள், இப்போது பெரிய மருந்து நிறுவனங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுவருவதால், இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவின் கையில் எதிர்காலம்

  • இந்தியாவில், நூறில் ஒருவர் இருதுருவ மனநோயாலும், நூறில் 5 பேர் வரை தீவிர மன அழுத்த நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற புள்ளிவிவரங்கள் மூலம் லித்தியம் கார்பனேட் மாத்திரையின் தேவை யைப் புரிந்துகொள்ளலாம்.
  • இந்தத் தட்டுப்பாட்டினால் அரசு, தனியார்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் மனநோயாளிகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. அவர்களின் மருத்துவச் செலவு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. லித்தியம் மூலக்கூறை இறக்குமதி மூலமே இந்தியா பெற்றுவந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மலைப் பகுதிகளில் லித்தியம் பெருமளவு இருப்பதாகத் தற்போது கண்டறியப்பட்டிருப்பது நல்ல செய்தி.
  • ஆனால், அது உடனடியாகப் பயன்பாட்டுக்கு வரவதுசாத்தியமில்லை. எனவே, இந்தச் சிக்கலில், மத்திய - மாநில அரசுகள் தலையிட்டு, லித்தியம் கனிமம் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். கூடவே, இவற்றுக்கு நியாயமான விலை நிர்ணயத்தை உறுதி செய்வது மனநோயாளிகளின் சிகிச்சைக்குப் பேருதவியாக இருக்கும்.

நன்றி : இந்து தமிழ் திசை (07 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories