- லேப்டாப்கள், டேப்லெட்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) ஹார்டுவேர் சாதனங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக கடந்த 3-ம் தேதி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் திடீரென அறிவித்தது. இது உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
- எனினும், அடுத்த நாளே இந்த கட்டுப்பாடுகள் நவ.1-ம் தேதி முதல்அமலுக்கு வரும் என வெளிநாட்டு வர்த்தகஇயக்குநரகம் (டிஜிஎப்டி) கடந்த 4-ம் தேதிஅறிவித்தது. எவ்வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
- மத்திய அரசின் அறிவிப்பின்படி, புதிய சட்டங்களின் கீழ் லேப்டாப்கள், டேப்லெட்கள் கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் உட்பட எச்எஸ்என் 8741 பிரிவின் கீழ் வரும் ஐ.டி. ஹார்டுவேர் சாதனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டியது அவசியம். இதன்மூலம் சர்வதேச நிறுவனங்கள் புதிய வகை லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை உலக சந்தையுடன் சேர்த்து ஒரே நேரத்தில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த முடியாது.
- வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்புவோர் சில பொருட்களை தங்கள் பைகளில் கொண்டு வருவதற்கு விதிகளுக்குட்பட்டு (அவ்வப்போது மாற்றப்படும்) அனுமதிக்கப் படுகிறது. இந்த விதிகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது.
- ஒரே ஒரு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரை இணையதள வணிக நிறுவனங்களிடமிருந்து கொரியர் அல்லது அஞ்சல் மூலம் வாங்குவோருக்கு இறக்குமதி உரிமத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதற்கு உரிய இறக்குமதி வரி செலுத்த வேண்டும்.
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மதிப்பீடு, பழுதுபார்த்தல் மற்றும் மறு ஏற்றுமதி உள்ளிட்ட சில காரணங்களுக்காக 20 லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர்கள் வரை இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எந்த நோக்கத்துக்காக இறக்குமதி செய்யப்பட்டதோ அந்த நோக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த பொருட்களை விற்கக் கூடாது. மேலும் அந்த நோக்கம் நிறைவேறியதும் மீண்டும் ஏற்றுமதி செய்துவிட வேண்டும்.
- கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி‘உள்நாட்டில் தயாரிப்போம்' (மேக் இன் இந்தியா) திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்தது. இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (ஜிடிபி) உற்பத்தித் துறையின் பங்கை 2022-ல் 25% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் இலக்காக உள்ளது.
- இதையடுத்து, இந்த திட்டத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு முதலில் இறக்குமதி வரியை அதிகரித்தது. இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்கின. அடுத்தகட்டமாக உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020-ம்ஆண்டு அறிமுகம் செய்தது.
- இது வாகனம், ரசாயனம், மின்னணு சாதனங்கள் உட்பட 14 துறைகளுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி பதிவு செய்துகொள்ளும் நிறுவனங்களுக்கு அதன் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4 முதல் 6% வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதனால் மேலும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலையை தொடங்கின.
- இந்த பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் உற்பத்திக்காக 5 ஆண்டுகளுக்கு ரூ.41 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 32 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சீனாவைச் சேர்ந்த முன்னணி செல்போன் நிறுவனங்கள் பிஎல்ஐ திட்டத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் உற்பத்தியை தொடங்கின. இதன்மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பிலான செல்போன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டன. இதுபோல சிப் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களும் கணிசமான அளவில் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க முன் வந்துள்ளன.
- கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் டிவி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து ஸ்மார்ட் டிவி உற்பத்தியும் இந்தியாவில் அதிகரித்தது.
- அந்த வகையில் கம்ப்யூட்டர் தொடர்பான சாதனங்கள் உற்பத்திக்காக பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ரூ.16,900 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி வரும் 30-ம் தேதி ஆகும். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இத்துறை சார்ந்த நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணையவில்லை என கூறப்படுகிறது.
- இதனிடையே, கடந்த 2022-23 நிதியாண்டில் கம்ப்யூட்டர் தொடர்பான இறக்குமதி ரூ.84 ஆயிரம் கோடியாக இருந்தது. இதில் கம்ப்யூட்டர், லேப்டாப் இறக்குமதி மட்டும் ரூ.44 ஆயிரம் கோடி ஆகும். இதில் சுமார் 75% சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இது ஆண்டுதோறும் 6% அளவில் அதிகரித்து வருகிறது.
- இந்நிலையில்தான் லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்ததாகக் கூறப்படுகிறது.
- மின்னணு சாதனங்கள் மற்றும் செயலிகள் மூலம் வேவு பார்த்தல், தகவல் திருட்டு உள்ளிட்ட இணையதள குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்ததற்கு பாதுகாப்பு அம்சமும் ஒரு முக்கிய காரணம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசின் புதிய உத்தரவுக்குப் பிறகு 44 வன்பொருள் (ஹார்டுவேர்) நிறுவனங்கள் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க விண்ணப்பம் செய்துள்ளன.
தட்டுப்பாடு ஏற்படும்
- பண்டிகை கால விற்பனை தொடங்க உள்ள நிலையில் மத்திய அரசு இந்த திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் லேப்டாப், கம்ப்யூட்டர்களுக்கு குறுகிய காலத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். குறிப்பாக உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம் என்றால் தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவ உரிய அவகாசம் தர வேண்டும் என்பது இத்துறை சார்ந்தவர்களின் கோரிக்கை ஆகும்.
- இந்நிலையில், இந்த காலக்கெடுவை 9 மாதங்கள் முதல் ஓராண்டு வரை தள்ளி வைக்கவேண்டும் என டெல், எச்.பி., லெனோவோ, சாம்சங், ஏசர், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் மத்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
- இந்த நிறுவனங்கள் இந்திய சந்தையை தக்கவைத்துக் கொள்வதற்காக உள்நாட்டில் உற்பத்தியை தொடங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் இங்கு வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன் இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
அந்நியச் செலாவணி மிச்சமாகும்
- சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை கடந்த 2022-23 நிதியாண்டில் ரூ.6.9 லட்சம் கோடியாக இருந்தது. இந்நிலையில், அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது குறையும்போது வர்த்தக பற்றாக்குறை குறையும். இரண்டாவதாக, இறக்குமதிக்காக செலவிடப்படும் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணி பெருமளவில் மிச்சமாகும்.
- மூன்றாவதாக, உலகின் மிகப்பெரிய தகவல்தொழில்நுட்பத் துறை வன்பொருள் உற்பத்தி சந்தையாக இந்தியா உருவெடுக்கும். நான்காவதாக, வரும் 2025-26-ல் உள்நாட்டு மின்னணு சாதன உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதுடன் வரும் 2026-ல் நாட்டின் மின்னணு சாதன பொருட்கள் உற்பத்தி மதிப்பை ரூ.25 லட்சம் கோடியாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதில் இந்த கட்டுப்பாடுகள் பெரிதும் உதவும் என்று மத்திய அரசு கருதுகிறது.
நன்றி : இந்து தமிழ் திசை (21– 08 – 2023)