TNPSC Thervupettagam

வ.உ.சி: சுதேசிப் பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடி

September 5 , 2019 1964 days 1414 0
  • இந்தியா இதழைத் தொடங்கி நடத்திய மண்டயம் சீனிவாசச்சாரியார் சுதேசிக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். அவர் பாரதியாரிடம் தங்களது வீட்டில் சுதேசிச் சாமான்கள் மற்றும் கைத்தறி ஆடைகளை இயன்ற வரை பயன்படுத்திவருவதாகப் பெருமை அடித்துக்கொண்டிருப்பார். ஒருநாள் சீனிவாசச்சாரியார் வீட்டுக்கு வருகை தந்த பாரதியார், “நீங்கள் என்னுடன் வாருங்கள்… ஒரு புதுமையான ஆளுமையை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நீர் சுதேசி சுதேசி என்று பெருமை அடித்துக்கொள்கிறீரே! நம்மையெல்லாம் மீறிய சுதேசியவாதி அவர்” என்று கூறி, அவரை திருவல்லிக்கேணி சுங்குராம் செட்டித் தெருவில் வசித்த வ.உ.சி.யின் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.
  • அங்கு வ.உ.சி. வீட்டின் முன் அறையில் பாய் மீது உட்கார்ந்திருந்தார். அவர் எதிரே மேசை மீது உள்ளூரில் தயாரித்த கரடுமுரடான காகிதம், உள்நாட்டு மைக்கூடு, வாத்து இறகு எழுதுகோல் இதைக் கண்டதுமே அவரைக் காணச் சென்றவர்களெல்லாம் சிரித்துவிட்டனர். வ.உ.சி. அவர்களை வரவேற்று அமரச்செய்தார். வீட்டில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரம் முதல் அனைத்துச் சாமான்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன. எந்த ஐரோப்பிய வாசனையும் இல்லாத வீடாக அது காட்சி அளித்தது.
    பாரதியார், “நாம் சுதேசிகள் என்று சொல்லிக்கொள் வதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சளவில்தான். நம்மிடம் இன்னும் தவிர்க்க முடியாதபடி எவ்வளவோ ஆங்கிலச் சாமான்கள் இருக்கின்றன. அவற்றை நாம் விட்டெறிய முடிவதில்லை. வ.உ.சி.யைப் பாருங்கள். எல்லாச் சாமான்களையும் விட்டெறிந்து குறைவின்றி வாழ்ந்துவருகிறார்” என்றார். நம் நாட்டுச் சாமான்களை உபயோகப்படுத்தினால்தான் நாம் உயர முடியும். வ.உ.சி. வெறுமனே வாய்ப் பேச்சு வீரராக மட்டுமல்லாமல், செயலில் வாழ்ந்துகாட்டிய முன்னோடியாகத் திகழ்ந்தார்.

சிம்ம சொப்பனம்

  • தமிழகத்தில் வ.உ.சி.க்கு முன்பாக ஏகாதிபத்திய எதிர்ப்பு பலப் பல வடிவங்களில் நிகழ்ந்திருந்தாலும் ஆங்கிலேயர்களை பல கோணங்களிலும் திக்குமுக்காடச் செய்த தனித்துவம் மிக்கவர். வெள்ளையர் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மும்முனைப் போர் நடத்தியவர்.
  • ஆங்கிலேய முதலாளிகளை எதிர்த்து கோரல் மில் போராட்டத்தை நடத்தி, முதன்முதலாக எளிய பாட்டாளி வர்க்கத்தைக் கவர்ந்தார். ஆங்கிலேய அதிகாரிகளை எதிர்த்து தேசாபிமானி சங்கம் கொண்டுவந்தார். இதன் மூலம் தர்ம சங்க நெசவுசாலை, சுதேச பண்டக சாலை நிறுவி, உள்நாட்டுப் பொருட்களை வாங்கவும் விற்கவும் ஏற்பாடுசெய்தார். ஆங்கிலேய வணிகர்களை எதிர்க்கும் வண்ணம், சுதேசி நாவாய் சங்கம் கண்டு ஆங்கிலேயர்களை மிரட்டியதோடு மட்டுமல்லாமல், தனது முழு வாழ்வையும் துன்பத்துக்கு ஆளாக்கிக்கொண்டவர். வெள்ளையர்களின் நிர்வாகத்தை எல்லா வழிகளிலும் செயலற்றதாக்கினார். மிரண்ட ஆங்கிலேயர்கள், வ.உ.சி.யை ஒடுக்குவதற்கு நாடு கடத்தப்பட்ட தண்டனை அளிக்க முன்வந்தாலும் வ.உ.சி.யை நினைத்தாலே ஆங்கிலேயர் கலங்கும் அளவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.

வ.உ.சி.யின் சுதேசிப் பிடிப்பு

  • வ.உ.சி. சிறையில் இருக்கும்போதே ஆங்கிலேய நிர்வாகம் சுதேசிக் கப்பல் கம்பெனியை ஒழிக்கப் பல வழிகளில் சதித் திட்டம் தீட்டி வெற்றியும் கண்டது. சுதேசிக் கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களே நட்டம் குறித்து வ.உ.சி.க்கு நோட்டீசு அனுப்பினர். சிறையில் இருந்த வ.உ.சி. பங்குதாரர்களுக்கு வரும் லாபத்திலும் நட்டத்திலும் சமபங்கு உண்டு என்பதை வலியுறுத்தி சிறையில் இருந்தே நட்டத்தை ஈடுசெய்வதாகக் கூறினார். இறுதியாக, எந்த ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல் விடப்பட்டதோ அந்த ஆங்கிலேய கம்பெனியிடமே கப்பலை விற்றுவிட்டார்கள் பங்குதாரர்கள். அச்சமயம், வ.உ.சி. சுதேசி நாவாய் புலம்பல் என்ற மனதைக் கசக்கிப் பிழியும் வெண்பா பாடல் ஒன்றை எழுதினார்:
  • என் மனமும், என்னுடம்பும், என் சுகமும் என்னறமும்/ என் மனையும் என் மகவும் என் பொருளும் – என் மணமுங்/குன்றிடினும் யான் குன்றேன் கூற்றுவனே வந்திடினும்/வென்றிடுவேன் காலால் மிதித்து.
  • பாரதியார், “சிதம்பரம், மானம் பெரிது! மானம் பெரிது! ஒரு சில ஓட்டைக் காசுகளுக்காக எதிரியிடமே கப்பலை விற்று விட்டார்களே. அதைவிட கப்பலைச் சுக்குச் சுக்கலாக நொறுக்கி வங்காள குடாக் கடலில் மிதக்க விட்டாலாவது எனது மனம் ஆறியிருக்குமே” என்று கடுஞ்சினத்துடன் வ.உ.சி.யிடம் முறையிட்டார்.
  • வ.உ.சி.யினுடைய சுதேசிப் பிடிப்பு எந்த அளவுக்கு உயர்ந்தது என்றால், சிறையில் இருந்தபோது, ஜேம்ஸ் ஆலனின் ‘அஸ் அ மேன் ஆஃப் திங்த்’ நூலை ‘மனம் போல் வாழ்வு’ என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதில், ‘இந்தப் புத்தகத்தின் காகிதம், அச்சு, மை, கட்டடம் அனைத்தும் சுதேசியம்’ என்ற குறிப்புடன் வெளிவரச் செய்து பதிப்பித்தார்.

அரசியல் பெருஞ்சொல்

  • 1927-ல் சேலத்தில் நடந்த மூன்றாவது காங்கிரஸ் மகாநாட்டில் ‘அரசியல் பெருஞ்சொல்’ என்ற தலைப்பில் அருமையான சொற்பொழிவை நிகழ்த்தினார். ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டிய சொற்பொழிவு இது. சுய அரசாட்சியின் உலகளாவிய தன்மைகள், அரசு உத்தியோகங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியம், பொதுவுடைமையில் தனியுடைமை கலக்காதிருத்தல், தனியார் உடைமைகளில் பொதுவுடைமை கலக்காதிருத்தல், தமிழுக்கென சர்வகலாசாலை அவசியம், தமிழகத்தின் சித்த வைத்தியம் எளிதாக, இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கச் செய்தல் போன்ற பல்வேறு செய்திகளை சுதேசி நோக்கில் மிக ஆழமாக எடுத்தியம்பினார்.
  • தமிழறிஞர் மு.ராகவையங்கார் எழுதிய, ‘பண்டை கைத்தொழில் வியாபாரங்கள்’ கட்டுரையைப் பாராட்டி வ.உ.சி. நாற்பது வரிகள் கொண்ட கவிதையை எழுதி பாராட்டினார். அக்கவிதையில் “பாரத வருடத்தின் பழைய கைத்தொழில் வியாபாரங்களை விரித்து வரைந்த நின் வியாச மதனை விருப்பொடு படித்தேன்” என்று பாராட்டினார்.
  • காந்திய காங்கிரஸிலிருந்து தான் கொண்ட கொள்கை அடிப்படையில் சற்று விலகியவராகவே வ.உ.சி. இருந்தார். மேலும், காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வ.உ.சி. ஒதுங்கி இருந்த காலம். 1931-ம் ஆண்டு வரதராஜுலு நாயுடு தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். நாயுடு கேட்டுக்கொண்டதால் பார்வையாளராக வ.உ.சி. அக்கூட்டத்துக்குச் சென்றார்.
  • அக்கூட்டத்தில் வ.உ.சி.யைச் சீண்டும் விதமாகப் பேசிய காந்திய காங்கிரஸ் நபரான வேலூர் குப்புசாமி முதலியார், வ.உ.சி. கதர் அணிவதை விட்டுவிட்டதைக் கண்டு வருந்துவதாகக் கூற, வ.உ.சி. மேடையேறி ஆவேசத்துடன், “என்னைப் பற்றித் தெரியாமல் ஏதும் பேசக் கூடாது” என்றார். மேலும், “நான் கதர் சிதம்பரம் இல்லை, சுதேசி சிதம்பரம்” என்றும், “நான் அணிவது இத்தாய்த்திரு நாட்டில் தயாராகும் கைத்தறி ஆடையைத்தான். நான் காந்தி கூட்டத்தைச் சேர்ந்தவனல்லன்” என்ற உள்ளக் குமுறலையும் வெளியிட்டார்.
  • வ.உ.சி. மரணமடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்பாக திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் காரியதரிசி சண்முகம்பிள்ளை தூத்துக்குடி சென்று வ.உ.சி.யைச் சந்தித்தார். அச்சமயம் வ.உ.சி.யின் நண்பர் சண்முகம் பிள்ளையை ‘தீவிர தேசபக்தர், மாவட்ட காங்கிரஸ் செகரட்டரி’ என்று அறிமுகப்படுத்த, சண்முகம் பிள்ளையை வ.உ.சி. ஏற இறங்கப் பார்த்தார். பின்பு, சண்முகம் பிள்ளையிடம், “தேசபக்தி, தேசத்துக்காக உழைப்பது நல்ல விசயம்தான். நாட்டுக்கு உழைப்பதற்கு முன்பாக உங்கள் வருங்காலத்துக்காகவும் உழைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உங்கள் வருங்காலத்தைத் தேசம் கவனிக்காது. உங்களுக்காகத் தேசம் கவலைப்படாது” என்று தெரிவித்தார்.

தமிழர்களின் மறதி

  • 1932-ம் ஆண்டு வ.உ.சி.க்கு அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி அவரைக் கெளரவிக்கும் விதமாகவும், அவரது தேசபக்திக்கு நன்றியறிவிக்கும் விதமாகவும் பணமுடிப்பு வழங்க வரதராஜுலு நாயுடு தமிழ்நாடு பத்திரிகையில் விளம்பரம்செய்தார். ஆனால், போதிய அளவில் பணம் அளிக்க யாரும் முன்வரவில்லை. பின்பு, பணமுடிப்பு முயற்சி கைவிடப்பட்டது. காரணம், அவர் வாழும் காலத்திலேயே தமிழ் மக்கள் அவரது தேசப் பங்களிப்பை மறந்துவிட்டனர்.
  • இன்றைய நவதாராளமய பொருளாதாரச் சூழலில் வ.உ.சி.யின் சுதேசியப் பொருளாதாரச் சிந்தனை கருத்துகள் குறித்து இளைஞர்கள் அறிய முற்பட வேண்டும். வெள்ளையர்களை எதிர்க்க சுதேசிய சிந்தனையைக் கைக்கொண்டு இந்திய சுதந்திர வேள்வியில் தன்னைக் கரைத்துக்கொண்ட பேரான்மாவின் தியாகம் நினைவுகூறப்பட வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (05-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories