TNPSC Thervupettagam

வ.உ.சி.யின் குறள் முகம்

November 18 , 2019 1887 days 1215 0
  • வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிய திருக்குறள் உரை வெகு பிரசித்தம். அதை வெளியிடுவதற்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் அரங்கேற்றியுமிருக்கிறார். திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் இரு கண்களாகக் கருதி வ.உ.சி. போற்றியிருக்கிறார்; இரண்டையும் கற்றுத்தேர்ந்து, அதன் உரைகளின் இயல்புகளை மதிப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார்.
  • வ.உ.சி. சிறையில் இருந்தபோது அவரைச் சந்திக்கவந்த நண்பர் சுவாமி வள்ளிநாயகத்திடம், “தமிழர்கள் எல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1,330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும் என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களேயாயினும், யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை” என்றிருக்கிறார். திருக்குறள் மீது வ.உ.சி. கொண்டிருந்த அளவுகடந்த பெருமதிப்புக்கு இந்த வரிகள் ஓர் உதாரணம்.
  • இந்தப் பெரும் பற்றின் காரணமாகத்தான் ப.ஜீவானந்தம், ‘திருக்குறள் பித்தர்’ என்று வ.உ.சி.யை அன்பு பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். ‘திருக்குறள் அன்பர்’ என்று வ.உ.சி. தன்னைத் தானே அழைத்து மகிழ்ந்துகொண்ட நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது. வள்ளுவத்துக்கும் வ.உ.சி.க்குமான தொடர்பு உயிரும் உடலுமானதாக இருந்தது.

திருக்குறள் உரைகள்

  • திருக்குறள் உரைகளிலேயே மணக்குடவர் உரை வ.உ.சி.யை வெகுவாகக் கவர்ந்தது. அதனால், மணக்குடவர் உரைச் சுவடியை முதன்முதலாக அச்சிட்டு மகிழ்ந்தார். அறத்துப்பாலை மட்டும் கொண்ட முதல் பகுதியை 1917-ல் வெளியிட்டார். வ.உ.சி. பதிப்புத் துறையில் ஈடுபட்டுப் பதிப்பித்த நூல்களுள் திருக்குறள் மணக்குடவர் உரை மிக முக்கியமானதாகும்.
  • திருக்குறளைப் புரிந்துகொள்ள பரிமேலழகர் உரை ஏற்றதாக இருக்கவில்லை என்பதை வ.உ.சி. பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். 1926-ல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றிருந்த எஸ்.வையாபுரிப்பிள்ளை, அக்காலத்தில் இந்துமத பரிபாலன சபையின் கமிஷனராக இருந்த டி.கே.சிதம்பரநாத முதலியாரைச் சந்திப்பதற்காக நண்பர் பி.ஸ்ரீ.ஆச்சாரியாரை அழைத்துக்கொண்டு, சென்னை மயிலாப்பூர் இல்லத்துக்குச் சென்றிருக்கிறார்.
  • டி.கே.சி. வீட்டில் தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த வ.உ.சி.யும் அங்கு இருந்திருக்கிறார். மூவரும் வெகுநேரமாகப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். மூவரின் பேச்சும் திருக்குறளின் உரையைப் பற்றியதாக அமைவதற்கு வ.உ.சி. காரணமாக இருந்திருக்கிறார். பரிமேலழகர் உரை பல இடங்களில் பிழையாயுள்ளது என்றும், முதல் நான்கு அதிகாரங்கள் வள்ளுவர் இயற்றியன அல்ல என்றும் வ.உ.சி. தமக்கு இயற்கையாயுள்ள ஆவேசத்தோடு பேசியிருக்கிறார்.

உ.வே.சா.வும் வ.உ.சி.யும்

  • திருக்குறளையும் அதன் பழைய உரைகளையும் நன்கு கற்று, ஆராய்ந்து, தெளிந்து, புதிய உரை எழுதி வெளியிட வேண்டும் என்ற எண்ணம் கோவை சிறையில் இருந்த காலத்திலேயே வ.உ.சி.க்கு ஏற்பட்டிருக்கிறது. 1908 மார்ச் 12-ல் வ.உ.சி. கைதுசெய்யப்பட்டுச் சிறைக்குச் சென்ற பின்னர், ஆறு மாத காலம் கழித்து, 1908 செப்டம்பர் 14 அன்று திருக்குறளில் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைக் கேட்டுத் தெளிந்துகொள்ளும் வகையில், உ.வே.சாமிநாதையருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
  • 1940-ல் சென்னை மாநிலக் கல்லூரி நூற்றாண்டு விழா மலருக்கு எழுதிய ஒரு கட்டுரையில் உ.வே.சா. அவற்றைக் குறிப்பிட்டு நினைவுகூர்ந்திருக்கிறார். உ.வே.சா.வுக்கு வ.உ.சி. கடிதம் எழுதிய காலத்தில் பிரஸிடென்ஸி கல்லூரியில் ஜே.எச்.ஸ்டோன் என்ற ஆங்கிலேயர் முதல்வராக இருந்திருக்கிறார். சிறையில் இருந்த வ.உ.சி.க்குக் கடிதம் எழுதுவது ஏற்றதாக இருக்குமா என்று ஸ்டோன் துரையை சாமிநாதையர் கேட்டிருக்கிறார்.
  • “அவசியம் எழுத வேண்டும். சிறைச்சாலைக்குள் ஒருவருடைய பழக்கமும் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நாம் உதவுவது அவசியம். ஆனால், கடிதத்தை நீங்கள் நேரே அனுப்ப வேண்டாம். எழுதி என்னிடம் கொடுங்கள்; நான் சிறையதிகாரி மூலம் அவருக்கு அனுப்பிவிடுகிறேன்” என்று ஸ்டோன் சொல்லியதற்கேற்ப சாமிநாதையர் செய்திருக்கிறார்.

உரைகள் ஒப்பீடு

  • பரிமேலழகர் - மணக்குடவர் உரைகளை ஒப்பிட்டு நோக்கி ஆராய்ந்தறிந்த பின்னர், மணக்குடவரும் பரிமேலழகரும் அதிகார முறையில் சிறிதும், குறட்பாக்களின் முறையில் பெரிதும் வேறுபட்டிருப்பதுடன், பல குறள்களில் வெவ்வேறு பாடங்கள் கொண்டிருப்பதும், பல குறள்களுக்கு வெவ்வேறு பொருள் உரைத்திருப்பதும் வ.உ.சி.க்குப் புலப்பட்டன. குறளுள் புகுந்துள்ள வேறுபாடுகளைக் காண்பவர்கள் திருக்குறளின் பெருமையையும் அதன் மூலபாடங்கள் வேறுபட்டுள்ள தன்மையையும் நன்கு அறிந்துகொள்வதுடன், குறள்களுக்கு இருவரும் உரைத்துள்ள பொருள்களைச் சீர்தூக்கிப் பார்க்கவும் புதிய பொருள்கள் உரைக்கவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பியே மணக்குடவர் உரையை அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்.
  • தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்தியர்கள் பலர் வ.உ.சி.யின் பதிப்புப் பணிக்குப் பெருமளவு பொருளுதவி புரிந்திருக்கிறார்கள். 1917-ல் வெளிவந்த திருக்குறள் மணக்குடவர் உரைப் பதிப்பின் இறுதிப் பகுதியில் அவர்களின் பெயர்களை ‘இந்திய சகோதரர்கள்’ என்று பெயரிட்டு நன்றியுணர்வு மீதூறப் பதிவுசெய்து போற்றியிருக்கிறார். அவற்றுள் ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட தென்னாப்பிரிக்க அன்பர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தனித்துவமான வ.உ.சி. உரை

  • திருக்குறள் முழுவதற்கும் உரையெழுத வேண்டும் என்று வ.உ.சி. திட்டமிட்டு, அறத்துப்பால் உரைப் பகுதியை முதலாவதாக 1935-ல் வெளியிட்டிருக்கிறார். திருக்குறளுக்குரிய நவீனகால உரைகளுள் வ.உ.சி.யின் உரை தனித்து நோக்கத்தக்கதாகும். இந்த உரைப் பதிப்பில் ‘காகிதம், மை, கட்டுநூல் முதலியனவெல்லாம் சுதேசியம்’ என்று பதிவுசெய்து தம் சுதேசிய உணர்வைப் பறைசாற்றிப் பெருமைகொண்டிருக்கிறார் வ.உ.சி.
  • திருக்குறளின் அறப்பால், பொருட்பால், இன்பப்பால் (இப்படி அமைப்பது வ.உ.சி. வழக்கு) மூன்று பகுதிகளையும் ஒரே புத்தகமாக வெளியிட வேண்டுமென்று அவர் விரும்பியபோதும், பக்க மிகுதியைக் கருத்தில்கொண்டு அறப்பால் பகுதியை மட்டும் முதலில் வெளியிட்டிருக்கிறார். முதல் பகுதி வெளிவந்த அடுத்த ஆண்டு அதாவது 1936-ல் வ.உ.சி. காலமாகிவிட்டதால் ஏனைய பகுதிகள் வெளிவராமல்போயின. ‘குறளின் ஏனைய இரு பகுதிகளுக்கும் வ.உ.சி. உரை எழுதினாரா, இல்லையா?’ என்ற ஐயமும் பலருக்கு இருந்துவந்த நிலையில், பேராசிரியர் மா.ரா.அரசு எழுதிய ‘வ.உ.சிதம்பரனார்’ என்ற நூலில் (2005) பொருட்பால், இன்பப்பால் பகுதிக்குமான வ.உ.சி.யின் உரை இருப்பது குறித்து எழுதினார்.

எல்லோருக்குமான வள்ளுவர்

  • வ.உ.சி. திருக்குறள் பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களான கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருவள்ளுவரால் இயற்றப்பட்டவையல்ல என்றும், அவை திருவள்ளுவர் காலத்துக்குப் பிற்காலமும் முந்தைய உரையாசிரியர்கள் காலத்துக்கு முற்காலமுமாகிய இடைக்காலப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப்பட்டவை என்றும் முடிவு செய்கிறார்.
  • அதனால், இடைக்காலத்தில் வந்துசேர்ந்த பாயிரமென்று கருதி, அனைவரும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றுக்கு இடைப்பாயிரம் எனும் பெயர் கொடுத்து, அதற்கும் உரை எழுதியமைத்துப் பதிப்பித் திருப்பது முக்கியமானதாகும். திருக்குறளை சமயம் கடந்து பொதுத்தன்மையில் முன்னிறுத்த வ.உ.சி. மேற்கொண்ட இந்த முயற்சி பெருந்தமிழ்ப் பணியாகக் கொள்ளத்தக்கது.
  • இன்னோரிடத்தில், “பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய திருக்குறள் என்று வழங்கும் முப்பால் திருவள்ளுவரால் இயற்றப்பெற்றது. அது மக்கள் அடைதற்குரிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும், அவற்றை அடையும் நெறிகளையும் ஞாயிறுபோல விளக்குகிற ஓர் அருமையான நூல். அதன் ஒப்புயர்வற்ற பெருமை, அதனை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமய நூலென்றும், அதன் ஆசிரியரைத் தத்தம் சமயத்தவர் என்றும் கூறிவருகிறதொன்றாலேயே நன்கு விளங்கும்” என்று வ.உ.சி. குறிப்பிட்டிருக்கிறார்.
  • 1935 மார்ச் 6-ல் நடைபெற்ற உ.வே.சா.வின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சாமிநாதையரை வாழ்த்தி வ.உ.சி. எழுதியனுப்பிய வாழ்த்துப் பாடலின் இறுதிப் பகுதியில் ‘தூத்துக் குடிவாழ் ஒட்டப் பிடாரம், சிதம்பரம் என்னும் திருக்குற ளன்பனே’ என்று எழுதியிருக்கிறார். வ.உ.சி. திருக்குறள் மீது கொண்டிருந்த ஈடுபாட்டுக்கு இது மிக முக்கியமான சான்று.
  • நெல்லை வட்டாரப் பகுதியிலிருந்துகொண்டு திருக்குறள் ஆய்வுகளைச் செய்துவந்த திருக்குறள் ஆராய்ச்சியாளர் ஜெகவீரபாண்டியனார், வ.உ.சி. இறக்க நேர்வதற்கு ஒரு வாரம் முன்னர், தூத்துக்குடி சென்று சந்தித்திருக்கிறார். திருக்குறள் குறித்து நெடுநேரம் இருவரும் பேசியிருக்கிறார்கள். வ.உ.சி. அவரிடம், “ஒரு குரல் (குறள்) போகப்போகிறது, ஒரு குரல் (குறள்) இருக்கப்போகிறது” என்று சொல்லியிருக்கிறார். இறப்பை எதிர்கொண்ட இறுதிக் காலத்திலும் ‘குறள்’ குறித்த சிந்தனையிலேயே மூழ்கியிருந்தார் வ.உ.சி.!

நன்றி: இந்து தமிழ் திசை (18-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories