வகை வகையாய் குடிநோயாளிகள்
- குடிப்பழக்கப் பிரச்சினையிலிருந்து துப்புரவாக மீள்வது என்பது பலருக்கும் சாத்திய மற்றதாகவே இருக்கிறது. விளக்கின் வெளிச்சம் விட்டில் பூச்சிகளை வீழ்த்துவதுபோல் மதுவின் மயக்கம் மனிதர்களை வீழ்த்துகிறது.
- “இன்றிலிருந்து குடிக்க மாட்டேன்; வருடப் பிறப்பிலிருந்து குடியை நிறுத்திவிட்டுப் புது வாழ்க்கை வாழப்போகிறேன்; பிறந்த நாள் ‘பார்ட்டி’ யோடு ‘குவார்ட்ட’ருக்கு குட்பை!” என்றெல்லாம் குடிநோயாளிகள் சபதம் எடுப்பார்கள். ஆனால், சந்தர்ப்பச் சூழ்நிலைகள் மாறும்போது, மறுபடி சபலம் தட்டும். இன்றைக்கும் மட்டும் ஒரு ‘கட்டிங்’ என்று ஆரம்பிப்பார்கள். அப்புறம், குடிபோதையை நோக்கி மாரத்தான் ஓட்டம் ஓடுவார்கள்.
கொடூரமான குடி:
- குடிபோதை எவ்வளவு கொடுமை யானது என்பது பலருக்கும் தெரியும். மதுவின் தீமைகளை, அதன் மோச மான சமூகநலப் பாதிப்புகளை, உடலில் அது உருவாக்கும் நோய்களை, குடிப்பவர் குடும்பங் களின் சீரழிவை, குடி நோயாளிகள் இழந்து வரும் தார்மிக ஒழுக்கங்களை முழுமையாக அறிந்தவர்களுக்குத் தெரியும் குடிப்பது எவ் வளவு கொடூர மானது என்பது.
- இன்றைய தமிழர் வாழ்வில் பெரு நோயாகப் பெருகியிருக்கிறது மதுவுக்கு அடிமையாகிவிட்ட மனநிலை. இந்த மோசமான நோயிலி ருந்து மீண்டெழவே முடி யாதோ எனச் சமூக அக்கறை கொண்டவர்களின் மனங்களையும் அது அலைக்கழிக்கிறது. ஆகவே, ‘குடி’க்கு அடிமையானவர்கள் மீள்வதற்கு மருத்துவரீதியிலான, சமூகரீதியிலான, அறிவியல்ரீதியி லான சில ஆலோசனைகளை முன் வைக்கிறேன்.
குடிநோயாளிகள் - வகைப்பாடு:
- உடல், மனரீதியாகத் தினமும் ‘குவார்ட்ட’ருக்கும் அதிகமாகக் குடித்தே ஆக வேண்டும் என்று மதுவுக்கு அடிமையாகிவிட்டவர்களைக் ‘குடிநோயாளிகள்’ (Alcohol use disorder – AUD) என்கிறோம். இவர்களுக்குக் குடிப்பழக்கம் ஆரம் பித்து, போகப்போக அதிலிருந்து மீள முடியாத அடிமை நோயாக (Addiction) மாறிவிடுவதால் இப்படி அழைக்கிறோம்.
- குடிநோயாளிகளில் மகிழ்ச்சிக் காகக் குடிப்பவர்கள் இருக்கிறார்கள். தினமும் குடிப்பவர்கள் இருக்கிறார் கள்; இடையிடையே குடிப்பதை நிறுத்திவிட்டு, மறுபடியும் ‘மட்டை’ யாகிறவர்களும் இருக்கிறார்கள். இப்படிக் குடிக்கும் விதத்தைப் பொறுத்து உலக அளவில் குடி நோயாளிகளுக்குப் பல்வேறு வகைப் பாடுகள் இருக்கின்றன. இவற்றில் மிகவும் பிரபலமானது, அமெரிக்க உடற்செயலியல் பேரா சிரியர் எல்வின் ஜெல்லினெக் (Elvin Jellinek) சொன்ன வகைப்பாடு. குடிநோயாளிகளில் மொத்தம் ஐந்து வகையினர் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
- இயற்பியல் பாடத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்களைப் படித்திருப்பீர்கள். அந்தப் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டால், ஜெல்லினெக் சொன்ன குடி நோயாளி களின் வகைப்பாடுகளை யும் எளிதில் நினைவில் கொள்ளலாம்.
ஆல்பா மதுப்பழக்கம் (Alpha Alcoholism):
- மனசே சரியில்லை, மனைவியுடன் சண்டை, அதிகாரி திட்டிவிட்டார், வீட்டில் சோகம் போன்ற பல காரணங்களால் மனரீதியில் சோர்வடைந்தவர்கள்/ மன அழுத்தம் உள்ளவர்கள் இந்த வகையில் வருகிறார்கள். தங்கள் புண்பட்ட மனதை ஆற்றிக் கொள்ள இவர்கள் மதுவை நாடுகிறார்கள். கவலையை மறக்க, காதலியை மறக்க, குடும்பப் பிரச்சினைகளை மறக்க அல்லது அவற்றிலிருந்து விடுபட என சாக்குபோக்குகள் சொல்லி குடிப்பவர்கள் இவர்கள்.
பீட்டா மதுப்பழக்கம் (Beta Alcoholism):
- மதுப்பழக்கத்தை ஊக்கப்படுத்தும் சூழ்நிலையில் இருக்கும்போது இந்த வகையினர்குடிக்கின்றனர். உதாரணமாக, நிறுவனங்களின் வார இறுதி பார்ட்டி களில் கலந்து கொள்ளும்போது, சக பணியாளர்களுக்குக் குடிக்க ‘கம்பெனி’ கொடுக்கும்போது இவர்களுக்குக் குடிப்பழக்கம் ஏற்படுகிறது. இதுவே காலப்போக்கில் அளவில்லா மல் குடிக்கும் குடிநோயாக மாறி விடு கிறது. இவர்கள் கல்லீரல் கெட்டுப் போவது, கணையம் அழற்சி ஆவது, நரம்புகள் எரிவது, ஊட்டச்சத்துக் குறைபாடு எனக் கடுமையான உடல் பாதிப்புகளைக் கொண்டிருப்பார்கள்.
காமா மதுப்பழக்கம் (Gamma Alcoholism):
- இந்த வகையில் உள்ளவர்கள் நாள் கணக்கில், வாரக் கணக்கில் குடித்துக் கொண்டே இருப் பார்கள். இவர்களுக்குக் குடியைப் பற்றிய குற்ற உணர்வு கொஞ்சம்கூட இருக்காது. ‘என் காசு. நான் குடிக்கிறேன். எனக்கு யாரும் ஆலோசனை சொல்ல வேண்டாம்’ என்பார்கள். ஒருகட்டத்தில் கையில் இருந்த பணம் காலியாகி, கடன் வாங்கியோ, திருடியோ குடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
- இதனால், குடும்ப உறவு கெட்டுப் போகும். பணி இடத்தில் இவர்களைக் கண்டாலே ஒதுங்குவார்கள். “குடியை நிறுத்திவிடுகிறேன், காசு கொடு!” என்று மனைவியிடம் நச்சரிப்பார்கள். குழந் தையின் மீது சத்தியம் செய்வார்கள். விரதம் இருந்து கோயிலுக்குப் போவார்கள். இவை எல்லாம் கொஞ்ச நாள்களுக்குத்தான். கைக்குக் காசு வந்ததும் மறுபடியும் மது போதையில் மல்லாந்துவிடுவார்கள்.
டெல்டா மதுப்பழக்கம் (Delta Alcoholism):
- தினமும் குளிப்பது, சாப்பிடுவது, உறங்குவது, வேலைக் குப் போவதுபோலவே குடிப்பதையும் ஒரு வாழ்க்கைக் கடமைபோலவே கருதும் கர்ம வீரர்கள் இவர்கள். காலையில் அலுவலகத்துக்குத் தாமதமாகப் போனால்கூட இவர்கள் அவ்வளவு பதறமாட்டார்கள். மாலையில் குடிப்பதற்குக் கொஞ்சம் தாமத மானால் போதும், இழக்கக் கூடாததை இழந்ததுபோல் பதைபதைத்துப் போவார்கள். இவர்கள் குடிப்பழக் கத்தை ஒரு நாள்கூட நிறுத்த முடியாத வகையில் வருபவர்கள்.
எப்சிலான் மதுப்பழக்கம் (Epsilon Alcoholism):
- இந்த வகையில் இருப்பவர்க ளுக்குக் குடித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் கிடையாது; குடியின் மீது ஈர்ப்பும் கிடையாது. குடிப்பதைத் தூண்டும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு இவர்கள் அடிபணிய மாட்டார்கள். அதேவேளை, இவர்கள் குடிக்க ஆரம்பித்தால் இரண்டு மணி நேரத்தில் ஐந்து பீர் பாட்டில்களையும் காலி செய்து விடுவார்கள். குடிப்பதற்கான உந்துதல் இல்லையென்றால், மாதக்கணக்கில் குடிக்காமலும் இருப்பார்கள்.
வகைப்பாடு ஏன்?
- குடிப்பவர்கள் எல்லாரும் குடிநோயாளிகள்தான். “எதற்காக இவர் களை ஐந்து வகையாக மருத்துவ உலகம் பிரித்துவைத்திருக்கிறது?” இந்தக் கேள்வி உங்களுக்கு எழுகிறது அல்லவா? ஒரு குடிநோயாளியானவர் குடிப்பழக்கத்திலிருந்து மீள்வதற்காக ஓர் அங்கீகரிக்கப்பட்ட மது போதை ஒழிப்பு - மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்குச் செல்கி றார் என்றால், மேற்சொன்ன வகைப் பாட்டில் அவர் எந்த வகையில் வருகிறார் என்று அங்கே பிரிப்பார்கள். ஒவ்வொரு வகையினருக்கும் வெவ்வேறு வகையான சிகிச்சை அளிக்கப்படும் என்பதால் குடி நோயாளிகளை இப்படிப் பிரிப்பது அவசியமாகிறது.
- ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், குடிப்பழக்கத்துக்கு அடிமையான வர்களை ஆரம்பத்திலேயே கண்ட றிந்து, தகுந்த மருத்துவ உதவி பெறுவது மிகவும் முக்கியம். அப்போதுதான் மருத்துவ சிகிச்சைகள் முழுமையாகப் பலனளிக்கும். போதை ஒழிப்புக்குரிய அந்தச் சிகிச்சை முறை களை அடுத்த வாரம் பார்க்கலாம்.
இப்படியும் வகை உண்டு
- இவர்கள் சூழ்நிலைக் கைதிகள் (Developmentally cumulative Alcoholism). மது குடிக்கும் மன உந்துதலைக் கொடுக்கிற பணிகளில் இருப்பதால் குடிப்பவர்கள். உதாரணமாக, டாஸ்மாக், நட்சத்திர விடுதி/கிளப், பிரேதப் பரிசோதனைக்கூடப் பணியாளர்கள், கழிப்பறை நீர்த் தேக்கத் தொட்டிகளைச் சுத்தம் செய்பவர்கள். இவர்கள் தொடக்கத்தில் சிறிய அளவில் குடிக்க ஆரம்பித்து, காலப்போக்கில் தினமும் குடிக்கும் குடிநோயாளிகளாக மாறிவிடுகிறார்கள்.
- சின்ன சின்ன சந்தோஷத்துக் காகக் குடிக்க ஆரம்பிப்பவர்கள் இவர்கள் (Developmentally limited Alcoholism). வாரம் ஒருமுறையோ, மாதம் ஒரு முறையோ மட்டும் குடிப்பார்கள். பெரும்பாலும் 17 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருப்பார்கள். ‘களவும் கற்று மற’ என்பதுபோல் குடித்து மகிழ்ந்து, குறிப்பிட்ட வயதில் வாழ்க்கையில் பொறுப்புகள் கூடியதும் குடிப்பதைக் குறைத்துக்கொள்வார்கள் அல்லது நிறுத்திக்கொள்வார்கள். இளைஞர்கள் திருமணத்துக்குப் பிறகு குடிப்பதை அரிதாக்கிக் கொள்வது இந்த வகையில் அடங்கும்.
- தங்களின் குற்ற உணர்வைச் சரிசெய்ய அல்லது தங்க ளின் குற்றச் செயலுக்கு நியாயம் கற்பிக்கக் குடிப்பவர்கள் இவர்கள் (Negative affect Alcoholism). இவர்களில் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் இருப் பார்கள். இந்த வகைப் பெண் குடிநோயாளிகளில் 90% பேர் பாலியல் ரீதியாகப் பாதிக்கப் பட்டிருப்பார்கள்.
குடிநோயாளிகள் – ஒரு புள்ளிவிவரம்
- இந்தியாவில் மொத்தம் 16 கோடி பேர் குடிநோயாளிகள். இவர்களில் 95% பேர் 18 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள். நகர்ப்புறங்களைவிடக் கிராமப்புறங்களில் குடிநோயாளிகள் அதிகம். கிராமப்புறங்களில் 1.6% பெண்களும், 19.9% ஆண்களும், நகர்ப்புறங்களில் 0.6% பெண்களும், 16.5% ஆண்களும் குடிநோயாளிகள். மிக அதிகம் குடிநோயாளிகள் உள்ள மாநிலம் அருணாசலப்பிரதேசம். குடிநோயாளிகள் மிகவும் குறைவாக உள்ள மாநிலங்கள்: லட்சத்தீவு, குஜராத், ஜம்மு & காஷ்மீர், ராஜஸ்தான், மகாராஷ்டிரம்.
- தமிழ்நாட்டில் 1 கோடியே 12 லட்சம் பேர் குடிநோயாளிகள். இவர்களில் 70 லட்சம் பேர் தினமும் குடிப்பவர்கள். ஒரு குடிநோயாளி ரூ.4,312இலிருந்து 6,552 வரை ஒவ்வொரு மாதமும் குடிப்பதற்குச் செலவிடுகிறார். இதனால் மாநில அளவில் குடிநோயாளிகளுக்கு வருடத்துக்கு 67,552 கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்படுகிறது. அதேநேரம், தமிழக அரசுக்கு வருடத்துக்கு சுமார் 25,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ‘ஒன்றை இழந்துதான் மற்றொன்றைப் பெற முடியும்’ என்பதில் அரசுக்கு நம்பிக்கை இருக்கலாம். அதற்காக, அரிதாரம் பூசுவதற்கு ஒரு கலைஞன் ஆடை இழப்பதைச் சம்மதிப்போமா? தமிழக அரசு யோசிக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 03 – 2025)