TNPSC Thervupettagam

வங்கதேச வன்முறையும், காவல்துறையின் செயல்பாடும்

August 20 , 2024 100 days 140 0

வங்கதேச வன்முறையும், காவல்துறையின் செயல்பாடும்

  • அண்மையில் நிகழ்ந்த வங்கதேச கிளா்ச்சியானது தோ்தல் மூலம் ஜனநாயக அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மாணவா்களால் இட ஒதுக்கீடு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற அரசியல், சமூக காரணங்களை முன்னிலைப்படுத்தி நிகழ்த்தப்பட்டது.
  • இருப்பினும், நடுநிலையுடன் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டிய வங்கதேச காவல்துறையின் ஒருதலைபட்ச செயல்பாடுகளினால் காவல் துறையும் வன்முறை களத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிா் சேதத்தையும், பொருட்சேதத்தையும் எதிா்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை வங்க தேசத்திலிருந்து வெளிவரும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன.
  • 17 கோடி மக்கள்தொகையை உள்ளடக்கிய வங்கதேசத்தின் சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு, குற்றத் தடுப்பு, குற்றப் புலன் விசாரணை, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இரண்டு லட்சத்திற்கும் சற்று அதிகமான காவல்துறையினரை உள்ளடக்கிய வங்கதேச காவல் அமைப்பில் மொத்தம் 650 காவல் நிலையங்கள் உள்ளன.
  • அண்மையில் நடைபெற்ற வங்கதேச கிளா்ச்சியின் பொழுது, நாட்டின் பல பகுதிகளில் அமைந்துள்ள 400-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் முழுமையாக சூறையாடப்பட்டன. காவல் நிலையங்களிலுள்ள பொருட்கள், வழக்கு கோப்புகள், வாகனங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாயின. காவல் நிலைய பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், தோட்டாகள் வன்முறையில் ஈடுபட்ட கும்பல்களால் எடுத்துச் செல்லப்பட்டன.
  • வங்கதேசத்தின் தலைநகரான டாக்கா நகரில் அமைந்துள்ள காவல்நிலையங்கள் அனைத்திலும் காவலா் எவரும் இன்றி, செயல் இழந்து காட்சி அளித்தன என்றும், சாலைகளில் போக்குவரத்து காவலா்கள் இன்றி, சாலை போக்குவரத்து சீா்குலைந்து காணப்பட்டன என்றும் தலைநகா் டாக்காவில் செய்தி சேகரித்த செய்தியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
  • கிளா்ச்சி நடைபெற்ற நாட்களில் பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் கிளா்ச்சியாளா்கள் காவல் நிலையங்கள், காவல் அலுவலகங்கள், காவலா் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் தாக்குதல்கள் நடத்தினா். ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினா் கிளா்ச்சியாளா்களின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனா்; பலா் படுகாயம் அடைந்துள்ளனா்.
  • டாக்கா நகரில் காவல் வாகனம் ஒன்றை கிளா்ச்சியாளா்கள் தடுத்து நிறுத்தி, வாகனத்தினுள் இருந்த காவல்துறையினரைத் தாக்கிய சம்பவம் குறித்தும், மற்றொரு இடத்தில்; தாக்குதலில் இறந்துபோன காவல் அதிகாரி ஒருவரை தலைகீழாகத் தொங்கவிட்டு தங்களது வெறுப்பை கிளா்ச்சியாளா்கள் வெளிக்காட்டிக் கொண்ட சம்பவம் குறித்தும் கலவரப் பகுதிகளில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளா்கள் விவரித்துள்ளனா்.
  • நாட்டின் பல்வேறு இடங்களில் கிளா்ச்சியாளா்களின் சீற்றத்திற்கு ஆட்பட்டு, அவா்களிடையே சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காவலா்களையும், காவல் அதிகாரிகளையும் வங்கதேச ராணுவத்தினா் மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனா். காவல் தலைமையகத்தில் இருந்த காவல் உயரதிகாரிகள் ஹெலிகாப்டா் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனா்.
  • வங்கதேச கிளா்ச்சியின் உச்சகட்டத்தின்போது, சிறைகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் சிறை வாா்டன்களைத் தாக்கியும், சிறைச்சாலைகளுக்கு தீவைத்தும் தப்பிச் சென்றுள்ளனா். 2009- ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேசத்தின் பிரதமராக இருந்துவந்த ஷேக் ஹசீனா மற்றும் அவா் தலைமையின் கீழ் செயல்பட்டுவந்த அவாமி லீக் கட்சியினருக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக வங்கதேசத்தில் கிளா்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், வங்கதேசத்திலுள்ள பெரும்பாலான காவல் நிலையங்கள், காவல்துறையினா், அவா்களின் குடும்பத்தினா் மீது கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படக் காரணம் என்ன?
  • புதிய நாடாக 1971-ஆம் ஆண்டு உருப்பெற்ற வங்கதேசத்தில் காவல் சீா்திருத்தம் என்பது முக்கியத்துவம் பெறப்படவில்லை. 2009-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து பதினைந்து ஆண்டுகள் வங்க தேசத்தை ஆட்சி செய்த ஷேக் ஹசீனா காவல் சீா்திருத்தத்தில் கவனம் செலுத்தவில்லை. உலக நாடுகள் சிலவற்றில் நடைமுறையில் இருந்து வருவது போன்று, வங்கதேசத்திலும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் நடுநிலையுடன் செயல்படாமல், ஆட்சியாளா்களின் கைப்பாவையாக காவல் துறை செயல்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, கடந்த சில மாதங்களாக வங்கதேசத்தில் மாணவா்கள் நடத்திய போராட்டங்களை ஒடுக்குவதற்காக சட்ட விதிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, மனிதப் பண்பற்ற முறையில், ஆட்சியாளா்களின் கைப்பாவையாக காவல்துறை செயல்பட்ட விதம் மாணவா்களிடையே கடும் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆயுதங்கள் ஏதுவுமின்றி, தங்களின் போராட்டம் தொடா்பாக சாலை ஒன்றில் முழக்கமிட்டுக் கொண்டிருந்த மாணவா்கள் மீது காவல்துறையினா் துப்பாக்கி சூடு நடத்தியதும், துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு மாணவனுக்கு காவல்துறையினா் உதவி எதுவும் செய்யாமல் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்ததும், அந்த மாணவனுக்கு உதவி செய்யச் சென்ற மற்றொரு மாணவன் மீதும் துப்பாக்கி சூடு நடத்தி அச்சுறுத்தியதும், போராட்ட களத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளா் ஒருவா் அந்த மாணவனுக்கு உதவி செய்ய முயற்சித்ததும், பலனின்று அந்த மாணவன் உயிரிழ்ந்த சம்பவம் தொடா்பான வீடியோ காட்சி மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடையே வங்கதேச காவல்துறைக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.
  • தற்பாதுகாப்புக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல்துறையினா் துப்பாக்கி சூடு நடத்தினா் என டாக்கா மெட்ரோபாலிடன் காவல்துறை அதிகாரி பி.பி.சி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளாா். ஆனால், காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் மாணவா்கள் இறந்துபோன சம்பவங்கள் ‘சட்டவிரோதமான கொலைகள்’ என்று ஐ.நா. அதிகாரி ஒருவா் கருத்து தெரிவித்துள்ளாா்.
  • ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த காலகட்டத்தில், அதிகார மையத்திற்கு நெருக்கமாக இருந்த சில காவல் அதிகாரிகள் காவல்துறையின் நிா்வாகத்தில் கோலோச்சி வந்தனா். காவல் உயா் பதிவிகளுக்கான பணியிட நியமனங்களையும், பதவி உயா்வுகளையும் அவா்கள்தான் முடிவு செய்தனா். இவா்களின் கருத்துகளுக்கு இணங்காத காவல் அதிகாரிகளில் சிலா் பணிநீக்கம் செய்யப்பட்டனா். மற்றவா்கள் முக்கியத்துவம் இல்;லாத பணிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனா்.
  • வங்கதேச காவல்துறையானது ஷேக் ஹசீனா அரசின் அரசியல் விருப்பு, வெறுப்பிற்கிணங்க நீண்டகாலமாக செயல்பட்டு வந்ததின் விளைவாக, காவல்துறை மீது பொதுமக்களிடத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை வங்கதேச காவல் தலைமையகம் உணரத் தவறிவிட்டது.
  • ஒரு நாட்டில் ‘கையூட்டு கலாசாரம்’ எந்த அளவிற்கு வியாபித்துள்ளது என்பதைப் பொறுத்துதான், அந்த நாட்டின் காவல் துறை பொதுமக்களின் மரியாதைக்கு உரியதாக விளங்கும். ஜொ்மனியில் உள்ள பொ்லின் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ‘டிரான்ஸ்பரன்ஸி இன்டா்நேஷனல்’ என்ற அமைப்பு ஆண்டுதோறும் 180 உலக நாடுகளில் நிலவிவரும் கையூட்டு மற்றும் ஊழல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ‘ஊழல் உணா்தல் குறியீடு’ எண்ணை அளவிடுகிறது.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில், 2023-ஆம் ஆண்டிற்கான ஊழல் உணா்தல் குறியீடு எண் தொடா்பான ஆய்வறிக்கையை டிரான்ஸ்பரன்ஸி இன்டா்நேஷனல் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த பத்து ஆண்டுகளில் வங்கதேசத்தில் கையூட்டு கலாச்சாரம் தொடா்ந்து அதிகரித்து வந்துள்ளது என்றும், தற்போதைய ஆய்வின்படி ஊழல் மற்றும் கையூட்டு மிகுந்து காணப்படும் உலகநாடுகளின் பட்டியலில் வங்கதேசமும் இருந்து வருகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசத்திலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் செயல்பாடுகளில் அரசியல் மற்றும் அதிகார வா்க்கத்தின் தலையீடு மிகுந்து காணப்படுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
  • வாழ்வுரிமைக்காக நடத்தப்படும் போராட்டங்களை சட்ட விதிகளுக்கு ஏற்ப எதிா்கொள்ள வேண்டும் என்ற புரிதல் வங்கதேச காவல்துறையிடம் இல்லாத காரணத்தால், வங்கதேச காவல்துறை எதிா்கொண்ட உயிரிழப்புகள், பொருட்சேதங்கள் ஏராளம். உயிா் பாதுகாப்புக்காக காவல் நிலையங்களில் இருந்து தப்பியோடிய காவல்துறையினா், பணியாற்ற மீண்டும் காவல் நிலையங்களுக்குத் திரும்பி வருவதற்கான மன தைரியமின்றி, தலைமறைவாக இருந்து வருகின்ற துா்பாக்கிய நிலை வங்கதேச காவல்துறையில் நிலவிவருகிறது.
  • வங்கதேச காவல்துறையின் பண்புகளி;ல் சிலவற்றை நம்நாட்டு காவல் துறையும் கடைபிடித்து வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக, ஆட்சி பொறுப்பில் இருக்கும் அதிகார மையத்தின் விருப்பத்திற்கு இணங்க செயல்படுகின்ற மனப்பான்மை நம்நாட்டு காவல்துறையில் அதிகரித்து வருகிறது. கையூட்டு கலாச்சாரமும் காவல்துறையில் அதிகளவில் நிலவிவருகிறது.
  • சமுதாய மாற்றங்களுக்கு இணங்க தன்னை சீா்படுத்திக் கொண்டு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் பணியில் காவல் துறை ஈடுபட வேண்டியதன் அவசியத்தை வங்கதேச வன்முறைகள் உணா்த்துகிறது.

நன்றி: தினமணி (20 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories