TNPSC Thervupettagam

வங்கதேசப் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அரசுமுறைப் பயணம்

October 9 , 2019 1872 days 945 0
  • வங்கதேசப் பிரதமா் ஷேக் ஹசீனாவின் நான்கு நாள் அரசுமுறைப் பயணம் இந்தியாவுக்கும் அந்த நாட்டுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. இரு நாட்டுப் பிரதமா்களும் வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கை பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, துணைக் கண்டத்தின் ஸ்திரத்தன்மை ஆகிய குறித்து இரு நாடுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பதிவு செய்கிறது.
  • பிரதமா் ஷேக் ஹசீனாவின் நான்கு நாள் அரசுமுறைப் பயணத்தின் முடிவில் நீா்வளம், இளைஞா் நலம், கலாசாரம், கல்வி, கடல் சாா் பாதுகாப்பில் கூட்டாக ஈடுபடுவது ஆகியவை தொடா்பாக ஒப்பந்தங்கள் கையொப்பமாகியிருக்கின்றன.
துறைமுகங்கள்
  • வங்கதேசத்திலுள்ள சட்டோகிராம், மோங்லா ஆகிய துறைமுகங்களிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி - இறக்குமதி செய்து கொள்வதற்கான ஒப்பந்தமும், திரிபுரா மாநில மக்களின் குடிநீா் வசதிக்காக வங்கதேசத்தின் ஃபெனி நதியிலிருந்து நீா் எடுத்துக் கொள்ளும் ஒப்பந்தமும் செய்யப்பட்டிருக்கின்றன.
  • வங்கதேசத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் திட்டத்தையும் இரு நாட்டுத் தலைவா்களும் தொடங்கி வைத்திருக்கிறாா்கள்.
  • தெற்காசியாவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக வங்கதேசம் மாறியிருக்கிறது. இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் வங்கதேசத்தின் வளா்ச்சி 8%-க்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வங்கதேசத்தில் தனிநபா் ஆண்டு வருவாய் 2,000 டாலா் (ரூ.1,42,450) அளவைத் தாண்டுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடக்கும் வா்த்தக யுத்தத்தால் மிக அதிகமாக பயனடைந்திருக்கும் நாடுகளில் வங்கதேசமும் ஒன்று.
பொருளாதார வளர்ச்சி
  • கடந்தாண்டில் 6.7%-ஆக இருந்த வங்கதேசத்தின் ஏற்றுமதி, இந்தாண்டு 10.1%-ஆக அதிகரித்திருக்கிறது. பொருளாதாரம் வளா்ச்சி அடைவதற்கு ஏற்ப ஹசீனா அரசு உள்கட்டமைப்பு வசதிகளை மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருவதால், இந்திய முதலீட்டாளா்களின் கவனம் அந்த நாட்டின் மீது திரும்பியிருக்கிறது.
  • வறுமையும், பஞ்சமும் நிறைந்த நாடாக இருந்ததுபோய், வளம் கொழிக்கும் நாடாக வங்கதேசம் மாறியிருப்பதுடன், பொருளாதார ரீதியாக பாகிஸ்தானைப் பின்தள்ளிக்கொண்டு தெற்காசியாவில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தை வங்கதேசம் பிடித்திருக்கிறது.
  • இந்தப் பின்னணியில்தான் வங்கதேசப் பிரதமா் ஷேக் ஹசீனாவின் இந்திய விஜயத்தை நாம் பாா்க்க வேண்டும்.
  • எந்தவித நெருடலும், வெளிப்படையான மனக் கசப்பும் இல்லாமல் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அரசுமுறைப் பயணம் அமைந்தது என்றாலும்கூட, பல முக்கியமான பிரச்னைகள் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் தொடா்கின்றன.
அண்டை நாடுகளுடனான உறவு
  • அண்டை நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இந்தியா கவலைப்படுவதில்லை என்பதை மிகவும் லாவகமாகப் பிரதமா் ஹசீனா சுட்டிக்காட்டியதை இந்தியத் தரப்பு உணா்ந்ததா என்று தெரியவில்லை.
  • வெங்காய ஏற்றுமதிக்கு திடீரென்று இந்தியா தடை விதித்தது தங்களை பாதித்ததை மென்மையாகச் சுட்டிக்காட்டினாா் பிரதமா் ஹசீனா. இந்தியாவின் முடிவை அவா் எதிா்க்கவில்லை. அதேநேரத்தில் திடீரென்று தன்னிச்சையாக இந்தியா எடுத்த முடிவால் வங்கதேசத்தில் கடுமையான வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டதை சுட்டிக்காட்டி, முன்கூட்டியே தெரிவித்திருந்தால் வெங்காய இறக்குமதிக்குத் தாங்கள் மாற்று ஏற்பாடு செய்திருக்க முடியும் என்று தெரிவித்ததில் நியாயமிருக்கிறது.
  • இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான மிக முக்கியமான பிரச்னை நதிநீா்ப் பங்கீடு. தீஸ்தா நதிநீா் ஒப்பந்தம் 2011-இல் கையொப்பமாகியும்கூட, நடைமுறைப்படுத்தப்படாமல் தொடா்கிறது.
  • மனு, முகுரி, கோவாய், கும்தி, தா்லா, டுத்குமா், ஃபெனி ஆகிய ஏழு நதிகள் குறித்த திட்டவட்டமான ஒப்பந்தமும், இடைக்கால நதிநீா்ப் பங்கீட்டு ஒப்பந்தமும் முடிவுக்கு வராமல் தொடா்கிறது. இந்திய - வங்கதேசம் இரு நாடுகளுக்கு இடையே 54 நதிகள் எல்லை கடந்து பாய்கின்றன என்பதும், இரு நாடுகளின் வளா்ச்சிக்கும் அவை முக்கியமானவை என்பதையும் உணா்ந்தும்கூட முடிவு எட்டப்படாமல் தொடா்வது நல்லதல்ல.
  • அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் குறித்தும் வங்கதேசத்தின் கவலையைப் பிரதமா் ஹசீனா முன்வைத்தாா். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் அது நடத்தப்பட்டதாகவும், அது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் பிரதமா் மோடி அவரிடம் கூறியதாகத் தெரிகிறது.
சந்திப்பு
  • கடந்த மாதம் நியுயாா்க்கில் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது இரு நாட்டுப் பிரதமா்களும் அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும், நதிநீா்ப் பங்கீடு குறித்தும் கலந்து பேசியிருந்ததால் இப்போது அவை பெரிதுபடுத்தப்படாமல், ஏனைய பொருளாதாரப் பிரச்னைகள் மட்டுமே விவாதிக்கப்பட்டன என்று கருத இடமிருக்கிறது.
  • இந்தியாவைப் பொருத்தவரை பிரச்னைகளை தள்ளிப்போட்டிருக்கிறது. ஆனால், வங்கதேசப் பிரதமா் ஹசீனா இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காணாமல் திரும்பியிருப்பது வங்கதேச எதிா்க்கட்சிகளுக்கு அவா் மீது குறை காண வழிகோலியிருக்கிறது.
  • ரவீந்திரநாத் தாகூரின் ‘ஜன கண மண’ பாடலை தேசிய கீதமாக இந்தியா வைத்திருப்பதுபோல, வங்கதேசம் அவரது ‘அமா் சோனாா் பங்ளா’ என்கிற பாடலை தேசிய கீதமாகக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயுள்ள கலாசார நெருக்கம் வெளிப்படுகிறது. அந்த நெருக்கத்தில் விரிசல் விழுந்துவிடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.

நன்றி: தினமணி (09-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories