TNPSC Thervupettagam

வங்கி மோசடிகளைக் குறைக்க...

October 24 , 2019 1990 days 1268 0
  • வங்கிகளை இணைப்பதற்கான கொள்கை அறிக்கையை அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சில நாள்களிலேயே வேறொரு செய்தி வெளியானது.
  • அதில் ஒவ்வொரு வங்கியிலும் நிகழ்ந்துள்ள மோசடிகளின் அளவைப் புள்ளிவிவரமாக அளித்துள்ளனர். அதை மேலோட்டமாகப் பார்த்தாலே அதிர்ச்சி அளிக்கிறது.
  • அதுவும், வங்கிக்குப் போகாமலேயே பற்று அட்டையைக் கொண்டு தொகையும், செல்லிடப்பேசியை வைத்தும் பணப் பரிமாற்றமும் செய்யும் வசதி காரணமாக, புதுப் புது மோசடிகள் உருவாகிய வண்ணம் உள்ளன.
கடன் அட்டை
  • செல்லிடப்பேசியில் வரும் ஏதோ ஒரு குறுஞ் செய்தியை நம்பி அட்டையின் விவரங்களைத் தெரிவிப்பது, பொருள்களை கடன் அட்டை மூலம் வாங்கும்போது கவனக்குறைவாக அட்டையின் பிரதியை மூன்றாம் நபர் எடுக்க வாய்ப்பு தருவது போன்ற தவறுகள் வாடிக்கையாளர்களின் அலட்சியத்தாலேயே நடக்கின்றன.
  • ஏடிஎம் மையத்தில் என் நண்பர் ஒருவருக்கு அண்மையில் ஏற்பட்ட பண இழப்பு அனுபவம் குறிப்பிடத்தக்கது.
  • என் நண்பர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முற்பட்டு பற்று அட்டையை இயந்திரத்தில் நுழைத்து ரகசிய எண்ணை அழுத்தினார்;
  • பணம் வரவில்லை; நண்பர் மீண்டும் ஒரு முறை பற்று அட்டையை நுழைக்கத் தொடங்கியபோது, பின்னால் நின்ற நபர் ஒருவர், பற்று அட்டையை மாற்றி நுழைக்கிறீர்களே எனக் கூறி, அதை வாங்கி தான் தயாராக வைத்திருந்த வேறு ஒரு பற்று அட்டையைக்  கொடுத்துவிட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டு விட்டார்.
  • மாற்றுப் பற்று அட்டைதான் தனது அட்டை என நம்பி அதே அட்டையை பல முறை என் நண்பர் நுழைத்தார்.
  • சில நிமிஷங்களில் என் நண்பரின் செல்லிடப்பேசிக்கு ரூ.6,000 பணம் எடுத்ததற்கான குறுஞ் செய்தி (எஸ்எம்எஸ்) வந்ததும் அதிர்ச்சிக்குள்ளானார். அதாவது, என் நண்பர் முதல் முறை ரகசிய எண்ணை  அழுத்தியபோது அதைக் கூர்மையாக மனதில் பதிய வைத்துக் கொண்டு அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று ரூ.6,000-த்தை எடுத்து விட்டார் குற்றவாளி.
  • இது குறித்து தொடர்புடைய வங்கியிலும் காவல் துறையிலும் புகார் அளிக்க என் நண்பர் விரைந்தார். எனவே, ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் நிலையில் எந்த நபரையும் உள்ளே அனுமதிக்காமல் உறுதியாக இருப்பதே நல்லது.
  • இதே போன்று அடுத்தவர் பற்று அட்டையை வாங்கி அவர்களுக்குப் பணம் எடுக்க உதவுவதன் காரணமாகவும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.
மோசடிகள்
  • இத்தகைய ஏடிஎம் மைய மோசடி உள்பட வங்கிகள் தொடர்புடைய  குற்றங்களை விசாரணை செய்து, குற்றவாளியைக் கண்டுபிடிக்க, பல மாதங்கள்  ஏன், சில ஆண்டுகள்கூட ஆகிவிடுகின்றன.
  • ஓரளவு பாதுகாப்புக்காகச் சில வங்கிகள் ரூ.10,000க்கு-ம் மேலான தொகையை ஏடிஎம்மில் எடுப்பதற்கு செல்லிடப்பேசியில் வரும் ஒரு முறை கடவு எண்ணை (ஓடிபி) குறிப்பிடும்படி வலியுறுத்துகின்றன.
  • அடுத்தது, நகைக் கடன் மோசடி. சோளிங்கரில் அண்மையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்றில் பணம் செலுத்தியும்கூட அடகு வைக்கப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் திரும்ப அளிக்கப்படாததால், வாடிக்கையாளர்கள் அதை முற்றுகையிட்டனர்.
  • நகைகள், ரொக்கப் பணம் ஆகியவற்றை உள்ளே பாதுகாப்பான அறை அலமாரியில் (டபுள் லாக்) வைப்பதற்கு இரண்டு சாவிகள் தேவைப்படும். இவ்விதமிருக்க, அந்த நகைகள் எப்படி மாயமாகும்?  
  • 2017-இல் நிகழ்ந்த குற்றத்தை விசாரித்து வருவதாக முக்கிய அதிகாரி தெரிவித்தவுடன்தான், வாடிக்கையாளர்கள் கலைந்து போனார்கள்.
  • இத்தகையை மோசடிகள் வங்கிகளின் மீதுள்ள நம்பகத் தன்மையைக் குறைக்கும்.
  • வங்கிகளின் நம்பகத்தன்மையைக் குறைக்கும் மற்றொரு விஷயம் வாராக் கடன் வசூல்.
வசூல் ஆகாத கடன்கள்
  • பெரும் பணக்காரர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றோரின் கடன்கள் இன்னும் வசூலாகவில்லை.
  • கடவுச் சீட்டு பறிமுதல், சொத்துகள் முடக்கம், நீதிமன்றத்தில் ஆஜர் போன்ற செய்தித் தலைப்புகள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கின்றனவே தவிர, கடன் தொகையில் கொஞ்சம்கூட வசூலாகவில்லை என்பதுதான் நிஜம்.
  • நிலைமை இவ்வாறிருக்க, ரூ.20 லட்சம் கடன் வசூலில் வங்கி கெடுபிடி காட்டினால் குறிப்பிட்ட சிறு தொழிலதிபர் கடனைத் திரும்பச் செலுத்தக் காலதாமதம் செய்வார்.
  • பெரிய கடன்களை வசூல் செய்து விட்டு எங்களிடம் வா என்ற வாதம் எடுபடாதுதான். ஆனால், வங்கிகளின் போக்கு சரியில்லை என்ற அவப் பெயர் உருவாகிறதே?
  • போலி ஆவணங்களை அடமானம் வைத்துக் கடன் பெறும் தன்மைகளும் பெருகி வருகின்றன.
  • நவீன ஜெராக்ஸ் வசதியில், அச்சு அசலாக மூலப் பத்திரம் போலவே ஆவணங்களைத் தயாரிக்க முடிந்தாலும், கையெழுத்தைக் கூர்ந்து நோக்கினால் தவறு புலப்படுமே?
  • எந்தக் குற்றத்துக்கும் (வாடிக்கையாளரின் அலட்சியம் நீங்கலாக) யாரோ வங்கி அதிகாரி பின்புலமாக இருக்கிறார் என்பது வெளிப்படை.
    பணம் புழங்கும் எந்த இடத்திலும் குற்றங்கள் நடப்பது இயல்புதான்.
  • ஆனால், கோடிக்கணக்கில் பரிவர்த்தனை செய்யும் பொதுத் துறை வங்கிகளின் மோசடிகள், சாதாரண மக்களின் நம்பிக்கையைக் குலைக்கக் காரணமாக அமைகின்றன. 
  • இது போன்ற குற்றங்களைக் குறைக்க, ஆட்குறைப்பு என்ற பெயரில் கிளைகளில் ஊழியர்களை மாற்றக் கூடாது.
அம்சங்கள்
  • விவசாயம், சிறு தொழில் போன்றவற்றில் டெக்னிக்கல் அம்சங்களைச் சீர்தூக்கி, ஆராய்ந்து கடன் வழங்கும் நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க  வேண்டும்.
  • இன்றைய கணினித் தன்மையை நன்கு புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படும் அதிகாரிகளை நியமித்தல் அவசியம்.
    சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தொடர்புடைய நபர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டும்.
  • ஊழியர் சங்கமோ, அதிகாரிகளின் அமைப்போ குறுக்கிடக் கூடாது. வாடிக்கையாளர்களுக்கு கேஒய்சி இருப்பது போன்று, ஊழியர்களுக்கும் கேஒய்ஈ இருந்தால் நல்லது.
  • வங்கித் துறைக்கு மிகவும் தேவையான ஒழுக்கம், நேர்மை போன்றவற்றை வலியுறுத்த சில சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்யலாம். 
  • கணினி அறிவும், வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வும் மேலோங்கியிருக்கும் இந்த காலகட்டத்தில், குற்றங்களைக் குறைக்க பாதுகாப்பான தீவிர நடவடிக்கையை மேற்கொள்வது மிக அவசியம்.
  • வங்கி மோசடிகளைக் குறைக்க ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.

நன்றி : தினமணி (24-10-2019)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top