- வங்கிகளை இணைத்து, அரசுடைமை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்கிற முடிவை, அருண் ஜேட்லி நிதியமைச்சராக இருக்கும்போதே நரேந்திர மோடி அரசு எடுத்துவிட்டது. அதன் நீட்சியாகத்தான் இப்போது, பத்து அரசுடைமை வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக்குவது என்கிற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பை நாம் பார்க்க வேண்டும்.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 27-ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை இனிமேல் 12-ஆக மட்டுமே இருக்கும்.
- அரை நூற்றாண்டுக்கு முன்பு அன்றைய இந்திரா காந்தி அரசு, 14 தனியார் வங்கிகளை நாட்டுடைமையாக்கியபோது அதற்கு வலுவான பல காரணங்கள் இருந்தன. அப்போது அந்த முடிவு எடுக்கப்படாமல் இருந்திருந்தால், இன்று கிராமப்புறங்கள் வரை வங்கி சேவை சென்றடைந்திருக்காது. வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டதால்தான் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்தன என்பது மறுக்க முடியாத உண்மை.
தனியார் வங்கிகளும் பன்னாட்டு வங்கிகளும்
- இன்றளவும், தனியார் வங்கிகளும், பன்னாட்டு வங்கிகளும் நகர்ப்புறங்களில் மட்டுமே செயல்படுகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இரண்டாண்டுகளுக்கு முன்பு, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் ஐந்து கிளை வங்கிகளும், பாரதிய மகிளா வங்கியும் இணைக்கப்பட்டன.
- கடந்த ஏப்ரல் மாதம் விஜயா வங்கியும், தேனா வங்கியும் பாங்க் ஆஃப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. தென்னிந்தியாவில் விஜயா வங்கியும், மேற்கு இந்தியாவில் தேனா வங்கியும் பல கிளைகளைக் கொண்டிருந்தன. அவை பாங்க் ஆஃப் பரோடாவுடன் இணைந்தபோது, பாங்க் ஆஃப் பரோடாவின் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்தது மட்டுமல்ல, அது செயல்படும் பகுதிகளின் பரப்பும் விரிந்தது. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வங்கி இணைப்புகள் அப்படிப்பட்டதல்ல.
- கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் கர்நாடக மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டவை. அவை பெரும்பாலும் தென்னிந்தியாவில்தான் அதிகமான கிளைகள் கொண்டிருக்கின்றன. அதேபோல, பஞ்சாப் நேஷனல் வங்கியும், ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸும் வடக்கு, மேற்கு இந்தியாவில் மிக அதிகமான கிளைகளுடன் ஒரே பகுதிகளில் இயங்கி வருபவை. இப்போதைய இணைப்பால் பல கிளைகள் மூடப்பட வேண்டும்.
வங்கிகளின் எண்ணிக்கை
- ஊழியர்களுக்கு மாற்றுப் பணியிடங்களை எவ்வாறு வழங்கப் போகிறார்கள்? இது குறித்த எந்தத் தெளிவும் இல்லாத நிலையில் அறிவிப்பு வந்திருக்கிறது.
வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பதும், வங்கிகளை இணைத்துப் பெரிய வங்கிகளாக்குவது என்பதும் கால் நூற்றாண்டுக்கு முன்பே எம். நரசிம்மன் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவைதான்.
- இழப்பில் இயங்கும் வங்கிகளைப் பெரிய வங்கிகளுடன் இணைப்பதல்ல நரசிம்மன் குழுவின் பரிந்துரை. இழப்பில் இயங்கும் சிறிய வங்கிகளை மூடுவது என்பதும், பெரிய வங்கிகளை இணைத்து நான்கு அல்லது ஐந்து வங்கிகள் மட்டுமே இயங்குவது என்பதும்தான் அந்தக் குழுவின் பரிந்துரை.
- சர்வதேச வங்கிச் செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய வங்கிகள் அளவில் சிறியவை. சர்வதேச அளவில் இயங்குவதற்கான மூலதனம் இல்லாதவை. அதைக் கருத்தில் கொண்டுதான் வங்கிகள் இணைப்பை நரசிம்மன் குழு பரிந்துரைத்திருந்தது. பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்தில் அடிப்படை மாற்றம் ஏற்படாமல், அரசின் (ஆட்சியாளர்கள்) தலையீடு முற்றிலுமாக அகற்றப்படாமல், வல்லுநர்களின் கட்டுப்பாட்டில் இயங்காத வரையில், இணைப்புகளால் மட்டுமே வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்திவிட முடியாது.
கடன் சுமை
- பொதுத்துறை வங்கிகள் ரூ.8.08 லட்சம் கோடி அளவிலான வாராக் கடன் சுமையுடன் இயங்குகின்றன. இவையெல்லாம், பொது மக்களின் வரிப் பணம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வாராக் கடனின் பெரும் பகுதிக்குக் காரணம் பெரிய கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வங்கி மோசடியால் ஏற்பட்டிருக்கும் இழப்பு ரூ.71,452 கோடி. கடந்த ஆண்டில் ரூ.41,167 கோடியுடன் ஒப்பிடும்போது, 2018 நிதியாண்டில் வங்கி மோசடி 73.8% அதிகரித்திருக்கிறது.
- வாராக் கடனுக்கும் வங்கி மோசடிக்கும் பின்னால், வங்கி அதிகாரிகளின் கவனக் குறைவும், திறமையின்மையும், அரசு ஊழியர் மனப்பான்மையால் ஏற்படும் மெத்தனமும் காரணம். அல்லது, வாடிக்கையாளர்களுடன் இணைந்து வங்கி அதிகாரிகளும் மோசடியில் ஈடுபட்டது காரணம். அவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தை அரசு ஏன் வெளியிடுவதில்லை?
- வீட்டுக் கடனும், வாகனக் கடனும் வாங்கியவர்களும், சிறு, குறு, நடுத்தர தொழிலில் ஈடுபடுவோரும் சில லட்சம் ரூபாய் கடன் பாக்கிக்காகப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுவதுபோல, பல கோடிகளை விழுங்கிய கார்ப்பரேட் முதலாளிகளும், அவர்களுக்கு உதவிய அதிகாரிகளும் ஏன் அடையாளம் காட்டப்படுவதில்லை?
- இழப்பில் இயங்கும் வங்கிகளை, லாபத்தில் இயங்கும் வங்கிகளுடன் இணைப்பதால் பயனில்லை என்பதை 1993-இல் நடத்தப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியுடனான நியூ வங்கியின் இணைப்பு உறுதிப்படுத்துகிறது. விஜயா வங்கியும், தேனா வங்கியும் இணைந்ததன் விளைவாக, பாங்க் ஆஃப் பரோடாவின் பங்குகள் ரூ.150-லிருந்து ரூ.92-ஆக சரிந்தன. இழப்பில் இயங்கும் வங்கிகளைப் பெரிய வங்கிகளுடன் இணைத்து, இழப்பை ஈடுகட்ட அரசு மேலும் நிதியுதவி அளிப்பதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?
- ஆமதாபாத் ஐ.ஐ.எம். பேராசிரியர் டி.டி. ராம் மோகன் கூறுவதுபோல, இரண்டு நாய்கள் ஒரு புலியாகி விடுவதில்லை!
நன்றி: தினமணி(03-09-2019)