- இந்தியாவில், 2022ஆம் ஆண்டுக் கணக்குப்படி, வயதுவந்தோரில் 78% பேர் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறார்கள். வங்கிக் கணக்கு எண்ணிக்கை அதிகரிப்புக்கு, அரசின் நலத்திட்ட உதவிகளை வங்கிக் கணக்குகளோடு இணைக்கும் நடவடிக்கையுடன் ‘பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்ட’மும் முக்கியப் பங்குவகிக்கிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில், 46.2 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன; இதில் 56% பெண்கள்.
தொடரும் சமத்துவமின்மை
- வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுதல் அதிகரித்துள்ள நிலையில், ஆண்-பெண் பாலினச் சமத்துவமின்மையும் 22% குறைந்திருக்கிறது; எனினும் பாலினச் சமத்துவமின்மை நீடிக்கவே செய்கிறது. வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், உலகளவிலேயே, நிதி நிறுவனங்களில், பாலினச் சமத்துவமின்மை பெருமளவில் தொடர்கிறது.
- 2021ஆம் ஆண்டுக் கணக்குப்படி, வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் 23% பேருக்கு வங்கிக் கடன் கிடைக்கிறது; இது இந்தியாவில் வெறும் 13%தான். இதிலும் பாலின விகிதத்தைக் கணக்கிட்டால், இந்தியப் பெண்கள் இன்னும் மோசமான நிலையிலேயே உள்ளனர். வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஆண்களில், 100இல் 15 பேர் வங்கிக் கடன் பெறுகின்றனர்; பெண்கள் 10 பேர் மட்டுமே வங்கிக் கடன் பெறுகின்றனர். வங்கிகளில் வைப்புத்தொகை வைத்துள்ள பெண்களில், 27% பேர் மட்டுமே வங்கிக் கடன் பெற முடிகிறது; இந்தப் பிரிவில் ஆண்களில் 53% பேர் கடன் பெறுகின்றனர்!
- இத்தனைக்கும், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இந்தியாவிலும் உலகளவிலும் பெண்களே முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன (கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் 7.4% வேறுபாடு நிலவுகிறது). இந்தியாவிலும் இதே நிலைதான். இந்தியாவில் நுகர்வோர் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களில் - ஆண்கள் 7%; பெண்களோ 5% மட்டுமே. அதேபோல், முறைசாராக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதிலும் ஒப்பீட்டளவில் பெண்களே முன்னிலையில் உள்ளனர். இன்றைய டிஜிட்டல் உலகில், டிஜிட்டல் தளங்கள் வழியாகக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் அதிகமாக நடக்கிறது. இவ்வகைக் கடன்களை 82% ஆண்கள், உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவதில்லை; இந்த எண்ணிக்கை பெண்களில் 18%தான்.
- வங்கிகளில் இரண்டு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன: 1. முன்னுரிமைக் கடன்; 2. முன்னுரிமை சாராத கடன். இந்த இரண்டு வகையான கடன்களும் பெண்களுக்குக் குறைவாகவே வழங்கப்படுகின்றன. இதனைப் பரிசீலித்த அரசு, வங்கிகள் வழங்கும் நிகர கடன்களில், 5% பெண்களுக்கு வழங்க வேண்டும் என இந்திய வங்கித் துறைக்கு உத்தரவிட்டது. இதன் விளைவாக, பெண்களுக்கு வழங்கப்படும் கடன்களின் அளவு, 2005இல் ரூ.411 கோடியில் இருந்து, 2020இல், ரூ.5,770 கோடியாக அதிகரித்தது; ஆனாலும் இது பெரிய அதிகரிப்பு என்று சொல்லிவிட முடியாது.
காரணங்களும் தடைகளும்
- கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பெண்கள் சிறப்பாகச் செயல்பட்டும், பெண்களுக்குக் கடன் கொடுக்க வங்கிகள் ஏன் மறுக்கின்றன என்பதைப் பரிசீலித்தால், இரண்டு காரணங்களைக் கண்டறிய முடிகிறது: 1. பெண்களின் விண்ணப்பங்களை உரிய முறையில் கவனமாகப் பரிசீலிப்பதில்லை; 2. பெண்களின் வங்கிக் கணக்குகளில் பல செயல்படாமல் இருப்பதும், பெண்களுக்குக் கடன் தர மறுக்க ஒரு காரணியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. பெண்களின் கணக்குகளில் 42% செயல்படாதவையாக உள்ளன. அதே சமயம், ஆண்களின் வங்கிக் கணக்குகளில், 30% மட்டுமே செயல்படாதவையாக உள்ளன. இங்கு கவனிக்க வேண்டியது, செயல்படாத கணக்குகளை வைத்திருக்கும் பெண்கள் வங்கிக் கடன் கேட்கவில்லை. வங்கிகளில் வைப்புத்தொகைகளை வைத்துள்ள பெண்களுக்கேகூடப் போதுமான அளவு வங்கிக் கடன் கிடைப்பதில்லை.
- பெண்களின் வங்கிக் கணக்குகள் செயல்படாமல் இருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. வீட்டுக்கும் வங்கிக்கும் உள்ள தூரம், போக்குவரத்துச் செலவு ஆகியவையும் முக்கியக் காரணிகளாக அமைகின்றன. வங்கிக்குச் சென்றுவர ஒரு முழு நாள் ஆகிவிடும். போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெண்களுக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லாப் பேருந்துப் பயணச் சலுகை, இத்தகைய குறைகளைப் போக்குவதற்கு வாய்ப்பாகவும் அமையலாம். அதுவும்கூட, மலைப்பகுதிப் பெண்களுக்கு இன்னமும் வாய்க்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. அதேபோல், வங்கிகள் இல்லாத இடத்தில் ‘மொபைல் பேங்கிங்’ வசதி செயல்படுகிறது. ஆனால், அதற்கு இணைய இணைப்பு தேவை. இந்தச் சேவையைப் பெறுவதிலும் ஆண்களே முன்னிலையில் உள்ளனர்.
- நிதி நிறுவன சேவை அல்லது நிதி வணிகம் என்பது ஆண்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. பெண்களுக்கு வங்கிக் கடன் குறைவாகக் கிடைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. நிதி நிறுவனங்களை அணுகுவதில், கடன் பெறுவதில், பெண்கள் என்பதாலேயே சமூக-பொருளாதாரத் தடைகள் நீடிக்கின்றன. இது, கடன் பெறவும் நிதி நிறுவனங்களை அணுகவும் குறைவான இடத்தையே பெண்களுக்கு அளிக்கிறது. இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளாகப் பணியாற்றுபவர்களில் பெண்கள் 10%க்கும் குறைவு. இதுவும் பெண்கள் கடன் பெறத் தடையாக இருக்கிறது.
- பெண்கள் இடர் தாங்குபவர்களாக இல்லை. அதுவும் நிதி சார்ந்த முடிவுகளின்போது அதனைத் தவிர்க்கவே பெண்கள் விரும்புகிறார்கள் என்பது பொதுவான ஒரு குற்றச்சாட்டு. பெண்கள், இடர் குறைவான துறைகளிலேயே முதலீடு செய்ய விரும்புகிறார்கள். பெண்கள் படித்திருந்தாலும் தொழில், வணிகம் சார்ந்து பயிற்சி எடுத்துக்கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டுகளையும் பெண்கள் மீது சுமத்திவிட்டு, ஆண்கள் தப்பித்துக்கொள்ளும் சூழல் இருக்கிறது. முன்னுரிமைக் கடன்களை எப்படித் திருப்பிச் செலுத்துகிறார்களோ அதேபோல் முன்னுரிமை இல்லாக் கடன்களையும் பெண்கள் திருப்பிச் செலுத்துவார்கள். வராக்கடன்களை அதிகமாக வைத்திருப்பதும் ஒப்பீட்டளவில் ஆண்களே. முன்னுரிமைக் கடன்களைப் பெண்ணுக்குக் கொடுத்தாலே போதும் என்ற மனநிலையும் நீடிக்கிறது.
நிதிநிலைத்தன்மை
- இந்த நிலையை மாற்ற, நிறைய முன்னெடுப்புகள் அவசியம். கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் சிறப்பாகச் செயல்படுவதால் நிதி நிலைத்தன்மை அதிகரிக்கும். பெண்களுக்குக் கொடுக்கப்படும் கடன்களின் அளவை அதிகரிக்க வேண்டும். முன்னுரிமைக் கடன்கள் நிதி நிலைத்தன்மையை உருவாக்காது. வங்கிகள் பெண்களுக்குக் கடன் கொடுக்கத் தொடங்கினால், பெண்களுக்கு வழங்கும் கடன்கள் பாதுகாப்பானவை என்று வங்கிகள் உணரும்பட்சத்தில், எதிர்காலத்தில் பெண்களுக்குக் கூடுதலாகக் கடன் தர வங்கிகள் முன்வரலாம். வைப்புநிதி அடிப்படையில் கடன்களைக் கொடுக்க முன்வந்தாலும் பெண்களுக்குக் கூடுதலாகக் கடன் தர முன்வரலாம்.
- வங்கிகளில் உள்ள ஆண்-பெண் கடன் சமத்துவமின்மையே வங்கிகளுக்கு அதிக இடரை உருவாக்குகிறது. இதைக் களைய, பெண்களைப் பற்றிய கற்பிதங்களைத் தவிர்த்து, நடப்புப் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன என்பதை வங்கிகள் கணக்கில் கொள்ள வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் மீது காட்டப்படும் இத்தகைய வேறுபாடுகள் களையப்பட வேண்டும். வங்கி கடன் கொடுப்பதில் ஆண்-பெண் பாலினச் சமத்துவமின்மையைத் தவிர்த்தால், அது ஒட்டுமொத்தமாகச் சமூகத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதில் கணிசமான வெற்றி பெற்றுள்ளோம். அவர்களை ஆளுமைப்படுத்தவும், அவர்கள் பெற்ற திறன்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் வருவாயை அதிகரிக்கவும் வங்கிக் கடனில் ஆண்-பெண் பாலினச் சமத்துவம் முன்நிபந்தனையாகக் கருதப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 12 – 2023)