TNPSC Thervupettagam

வங்கித் துறை

December 24 , 2019 1850 days 1101 0
  • வங்கித் துறையின் மோசடிக்கு, அண்மைக்கால எடுத்துக்காட்டு பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி (பிஎம்சி) முறைகேடாகும். இந்த வங்கியில் நிகழ்ந்த முறைகேடால் வைப்புத் தொகை கிடைக்காது என்ற அதிர்ச்சியில் பல வாடிக்கையாளர்கள் உயிரிழந்துவிட்டனர்.

சமீபத்திய உதாரணம்

  • பிஎம்சி வங்கியில் பணத்தைச் சேமித்த வாடிக்கையாளர்கள், ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பும், பல்வேறு இடங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
  • கடந்த 2001-ஆம் ஆண்டு மாதவபுரா மெர்க்கண்டைல் கூட்டுறவு வங்கியில் நிகழ்ந்த முறைகேடுகளுக்குப் பிறகு, இதுபோன்ற கூட்டுறவு வங்கி முறைகேடுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெரிய அளவில் பலன் தராததுடன், வங்கிகளை நம்பும் வாடிக்கையாளர்களுக்கு அவை ஏமாற்றத்தையே பரிசாகத் தருகின்றன.
  • நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை (யுசிபி) 2005-ஆம் ஆண்டில் 1,926-ஆக இருந்தது. 2018-ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை 1,551-ஆகக் குறைந்தது. இதன் மூலம் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் எந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன என்பது தெரிய வருகிறது.
  • இந்த வங்கிகள் எதற்காக நிறுவப்பட்டனவோ, அந்த இலக்குகளில் இருந்து அவை விலகுவது வங்கிகள் வீழ்வதற்கு முக்கியக் காரணமாக உள்ளன. இந்தத் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதன் மூலமே எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க உதவும்.

பலன்கள்

  • பொதுவாக வாடிக்கையாளர்களிடமிருந்து நிரந்தர வைப்புத் தொகை பெறுவது என்பது கூட்டுறவு வங்கிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமல்ல.  எனவே, அந்த வங்கிகளை நிரந்தர வைப்புத் தொகை பெற அனுமதித்து விட்டு முறைகேடுகளைத் தடுக்க வேறு கட்டுப்பாடுகள், விதிகளை உருவாக்குவது என்பது பெரிய அளவில் பலனளிக்காது.
  • எனவே, நிரந்தர வைப்புத் தொகைகளைப் பெற நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை அனுமதிப்பதென்றால், வைப்புத் தொகையாளர்களைக் காப்பதற்கான உரிய விதிகளை ரிசர்வ் வங்கி கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.
  • அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் ஒரு வலுவான வங்கியாகவும், மற்ற வங்கிகளுக்கு முன்மாதிரியாக இருப்பதற்காகவுமே பிஎம்சி தோன்றியது. மும்பையில் ஒரு கிளையுடைய வங்கியாக 1984- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நகர்ப்புற கூட்டுறவு வங்கி, பின்னர் மகாராஷ்டிரம், தில்லி, கர்நாடகம், கோவா, குஜராத், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் 137 கிளைகளைக் கொண்ட வங்கியாக வளர்ந்தது.

மூலதன விகிதம்

  • வங்கிகள் 9 சதவீத மூலதன விகிதத்தைப் பராமரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ள நிலையில், பிஎம்சி அதைவிட அதிகமாக 12.62 சதவீத மூலதன விகிதத்தை வைத்திருந்தது. இவை தவிர, ரூ.11,617 கோடி  வைப்புத் தொகையையும் 2019 மார்ச் நிலவரப்படி ரூ.8,383 கோடி கடனையும் கொண்டிருந்தது. 2018-19- ஆம் ஆண்டில் சுமார் ரூ.100 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. பிஎம்சி-யின் வாராக்கடன் விகிதம் பிற வணிக வங்கிகளைவிடக் குறைவாகவே காட்டப்பட்டது. இந்த வங்கிக்கு தணிக்கையாளர்கள் "ஏ' தரச்சான்று வழங்கியிருந்தனர்.
  • மேலும், சிறப்பாகச் செயல்பட்டதாக பல விருதுகளையும் இந்த வங்கி பெற்றுள்ளது.
    இவை அனைத்தும் வங்கியை நோக்கி பலரையும் இழுக்கும் அம்சமாக மட்டுமே இருந்தன. பின்னர், ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் வாராக்கடன் விகிதம் 70 சதவீதத்துக்கும் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. அந்த வங்கி ஹெச்டிஐஎல் என்ற தனியார் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.4,635.62 கோடி கடன் வழங்கியுள்ளது. இதற்காக 21,049 போலிக் கணக்குகள் மூலம் மோசடி நடைபெற்றுள்ளது.

முறைகேடுகள்

  • ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் நகர்ப்புற கூட்டுறவு வங்கி (பிஎம்சி), இவ்வளவு பெரிய முறைகேட்டில் எப்படி ஈடுபட முடிந்தது என்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. பிஎம்சி வங்கியைத் தேர்வு செய்ததற்காக வாடிக்கையாளர்களைக் குறை கூற முடியாது.  
  • கூட்டுறவு வங்கிகளைப் பொருத்தவரையில் 98,163 கிளைகள் உள்ளன. இதில் 1,551 நகர்ப்புற கூட்டுறவு வங்கிக் கிளைகள் ஆகும். இதில் ரிசர்வ் வங்கியால் பட்டியலிடப்பட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 54, ரிசர்வ் வங்கியால் பட்டியலிடப்படாத வங்கிகள் (சுயமாக இயங்குபவை) 1,497 ஆகும். இவை தவிர கிராமக் கூட்டுறவு வங்கிகள், மாநிலக் கூட்டுறவு வங்கிகள், மாநிலக் கூட்டுறவு விவசாய, கிராம மேம்பாட்டு வங்கிகள் எனப் பல உள்ளன.
  • வைப்புத் தொகையாளர்களின் பணத்தைப் பாதுகாக்கும் வகையில் வங்கிகளுக்கு  பல கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதிக்கிறது. முக்கியமாக, சட்டப்படி ஒரு குறிப்பிட்ட அளவு நிதி இருப்பை (எஸ்எல்ஆர்) வங்கிகள் பராமரிக்க வேண்டும். இது ரொக்கமாகவோ, அரசு - பிற அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் அமைந்த பத்திரமாகவோ இருக்க வேண்டும்.
    இப்போது எஸ்எல்ஆர் விகிதம் 18.5 சதவீதமாக உள்ளது. 1990-இல் இது அதிகபட்சமாக 38.5 சதவீதம் அளவுக்கு இருந்தது.
  • வங்கிகள் பராமரிக்க வேண்டிய இந்த நிதி இருப்பை 40 சதவீதம் அளவுக்கு உயர்த்த ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உண்டு. இது தவிர தங்கள் கையிருப்பின் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கியில் வைப்புத் தொகையாக வங்கிகள் செலுத்த வேண்டும். இது இப்போது 4 சதவீதமாக உள்ளது. 1991-ஆம் ஆண்டில் இந்த இருப்புத் தொகை பராமரிப்பு (சிஆர்ஆர்) 15 சதவீதமாக இருந்தது.

வங்கிகளின் கண்காணிப்பு

  • வங்கிகள் முறையாகச் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி  செயல்படுகிறது. இதற்காக, அந்த வங்கிகளின் மூலதனம் போதுமானதாக உள்ளதா, வங்கிகளின் சொத்துகள் மதிப்புமிக்கவைதானா, நிர்வாகம் சிறப்பாக உள்ளதா, பண இருப்பு சரியாக உள்ளதா என்பவற்றையெல்லாம் ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது.
    பொதுமக்களின் பணத்தை வைப்புத் தொகையாகப்  பெற்று, அவற்றை ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்காக கடன்களை அளிக்கின்றன. அத்தகைய சமூகப் பொறுப்பு வாய்ந்த வங்கிகள் மீது உரிய கவனம் தேவை. ஏனெனில், இது நாட்டின் பொருளாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. இதுதான் வங்கிகளை இந்த அளவுக்கு ரிசர்வ் வங்கி கண்காணிக்கக் காரணம்.
  • பிஎம்சி வங்கியின் தோல்வி மூலம் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வைப்புத் தொகை பெறுவது தொடர வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், கூட்டுறவு வங்கிகளின் நோக்கம் அதுவல்ல. பிரிட்டனில் கடந்த 1844-ஆம் ஆண்டில் 28 நெசவாளர்கள் இணைந்து முதல் கூட்டுறவு வங்கியைத் தொடங்கினர். உறுப்பினர்களின் பரஸ்பர நலன்தான் கூட்டுறவு வங்கியின் பிரதான நோக்கம்.
  • தன்னார்வமாக இணைந்த உறுப்பினர்கள், ஒரு பெரிய குறிக்கோளுக்காகச் செயல்படுவதும், அவர்களுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பும்தான் கூட்டுறவு வங்கிகளாகும். ஆனால், தனது உறுப்பினர்கள் அல்லாதவர்களிடம் கூட்டுறவு வங்கிகள் வைப்புத் தொகையைப் பெற்றுள்ளன. முறைகேடு நடைபெற்ற பிஎம்சி வங்கியில் 2019 மார்ச் மாத நிலவரப்படி 51,601 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், உறுப்பினர்கள் அல்லாத 16 லட்சம் பேரிடமிருந்து இந்த வங்கி வைப்புத் தொகை பெற்றுள்ளது.
    நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகள், சிலர் மோசடிக்காக திட்டமிட்டே இதுபோன்ற வங்கிகளைத் தொடங்குகிறார்களோ என்ற சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.

கூட்டுறவு வங்கிகள்

  • கூட்டுறவு வங்கிகள் என்பது, வங்கித் தொழிலில் ஈடுபட ஒரு கொல்லைப்புற வழியாக அவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், ஒரு வணிக வங்கியை நேரடியாகத் தொடங்கி ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
  • மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசும், ரிசர்வ் வங்கியும் கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி அளிக்கின்றன. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை நிர்வகிப்பவர்கள் விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
  • ஆனால், ரிசர்வ் வங்கி விதிகளின்படி செயல்படுவதாக மற்றவர்களை நம்ப வைப்பதில், இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். வங்கித் தணிக்கை, ஆய்வுகளின்போது அவர்கள் ஏமாற்றி விடுகின்றனர். எனவே, இதுபோன்ற நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வைப்புத் தொகை பெறுவதை ரிசர்வ் வங்கி தடை செய்ய வேண்டும்.

பொறுப்பு

  • பிஎம்சி வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்தியோரின் பணத்துக்கு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். வைப்புத் தொகைக்கான காப்பீடான ரூ.1 லட்சத்துக்கு மட்டுமே உத்தரவாதம் என்பது மட்டும் போதாது. அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திரும்பக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.  
  • ஏனெனில், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும்தான் அந்த வங்கிக்கு உரிமம் வழங்கியுள்ளன. மேலும், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் பணத்தை வைப்புத் தொகையாகச்  செலுத்தியோருக்கு எவ்வித முன்னெச்சரிக்கையையும் அவர்கள் அளிக்கவில்லை. எனவே, பிஎம்சி வங்கி வைப்புத் தொகையாளர்களின்  நலன்களைக் காப்பது ரிசர்வ் வங்கியின் கடமை.
  • முறைகேடுகள், வாராக்கடன் எனப் பல்வேறு சூழ்நிலைகளில் ஒரு வங்கி மூழ்கும் நிலை ஏற்படும்போதெல்லாம், இந்திய ரிசர்வ் வங்கி  (ஆர்பிஐ) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆனால், இதனால் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படாது. இது "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' செய்வதற்கு ஒப்பானதாகும். 

நன்றி: தினமணி (24-12-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories